பள்ளி வகுப்பறையிலுமா அரசியல்வாதிகள்?…..
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 6,658
அது பெரிய இடத்து குழந்தைகள் படிக்கும் ஒரு தனியார் பள்ளி. அங்கு காலை நேரத்தில் வித விதமான கார்களில் பள்ளி மாணவர்கள் வந்து இறங்கும் காட்சியே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்! அந்த பத்தே நிமிடத்தில் இந்தியாவில் எத்தனை வகை கார்கள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்!
பள்ளிக்குள் எந்த இடத்தைப் பார்த்தாலும் செல்வச் செழிப்பு தெரியும்! சரவணனுக்கு அங்கு வேலை கிடைத்தது அவனுடைய அதிர்ஸ்டம்!
சரவணனுக்கு இருபது வயசாகிறது. பத்தாவது வரை படித்திருக்கிறான். அவனுடைய அம்மா செல்வாக்குள்ள ஒரு பணக்காரர் வீட்டில், வீட்டு வேலை செய்கிறாள்..
அந்த செல்வந்தர் சிபாரிசில் தான் அவனுக்கு அந்தப் பள்ளியில் பியூன் வேலை கிடைத்தது. அவன் எதிர் பார்த்ததை விட நல்ல சம்பளம்!
அன்று பகல் உணவுக்குப் பிறகு பள்ளி தொடங்கியது. முதல் பிரியட்டுக்கான மணியடித்து பத்து நிமிடங்களாகி விட்டது ஒரு ஆட்டோவில் அவசர அவசரமாக மலர் விழி டீச்சர் வந்து இறங்கினார்கள்! காலையில் அலுவலக வேலையாக கல்வித்துறை இயக்குநரைப் பார்க்கப் போயிருந்தார்கள்!
சரவணனைப் பார்த்ததும், “சரவணா! டென்த் ஸ்டேண்ட்டு ஏ செக்ஸனுக்குப் போய், நான் வந்து விட்டேன்! பிரின்ஸ் ரூமிற்குப் போய் விட்டு ஐந்து நிமிடத்தில் வருகிறேன்! அதுவரை…எல்லோரையும் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்!..” என்று சரவணனிடம் சொன்னார்கள்!.
சரவணன் தயங்கிக் கொண்டு நின்றான். “நீ சீக்கிரம் போப்பா!….அதற்குள் அங்கு மேயர், மாநகராட்சி உறுப்பினர்கள், மந்திரிகள் எல்லாம் கூட அந்த கிளாஸ் ரூமிற்கு வந்து விடுவார்கள்!….”என்று சொல்லி விட்டு வேகமாக பிரின்ஸ் ரூமிற்கு ஓடினார்கள்!
அன்று பள்ளியில் எந்த விழாவும் நடப்பதற்கான செய்தி இல்லை! இந்த மலர்விழி டீச்சர் சாதாரணமாகப் பேசினாலே என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்று புரியாது! சந்தேகம் கேட்டால் “ அது கூடவா புரியலே?…” என்று கோபமாக கத்துவார்கள்! அதனால் சரவணன் புரியாமல் விழித்துக் கொண்டே ‘டென்த் ஸ்டேண்டு’ நோக்கிப் போனான்!
சரவணன் அங்கு போகும் பொழுது, வகுப்பறையில் பலர் எதிர் எதிராக நின்று கொண்டு கைகளை நீட்டிக் கொண்டு காரசாரமாக திட்டிக் கொண்டிருந்தார்கள்!
இரண்டு பேர்கள் தலைக்கு மேல் நாற்காலிகளைத் தூக்கி வீசுவது போல் நின்று கொண்டிருந்தார்கள்! ஒருவன் நாற்காலியை மற்ற மாணவன் மேல் வீசியே விட்டான். இன்னொருவன் அவனை அடிக்க நாக்கைத் துருத்திக் கொண்டு பாய்ந்தான்!
சரவணனுக்கு வந்த வேலை மறந்து போய் விட்டது! ஆனால் மலர் விழி டீச்சர் சொன்னதின் அர்த்தம் மட்டும் புரிந்து விட்டது!
– பிப்ரவரி 6-12 2015 பாக்யா இதழ்