பள்ளியைக் கோயிலாக்கியவன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 3,560 
 
 

பாட்டுக்கொரு புலவன் எனப் போற்றப்பட்ட பாரதிக்குத் தனிக்குணங்கள் பல உண்டு. அந்தச் சிறப்புக் கூறுகள் என்றென்றும் ஒளிர்வதற்கு அவருடைய எழுத்துகளைப் படிக்கும் நேரங்கள்தோறும் அவை புதியபுதிய செய்திகளைப் பரிமாறுவதுதான் காரணம்.

‘கவிஞர் பரம்பரை’ எனப் புதியதான ஓர் இலக்கியப் பாதை பாரதியாரிடம்தான் தொடங்குகின்றது. அப்படிப்பட்ட பாரதி செதுக்கிய “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்ற பா வரிக்குள் ஓர் அடர்த்தியான பொருள் அமைந்துள்ளது.

பாரதியின் குலத்தைப் பிடிக்காதவர்களும் பாரதியையே ஏற்காதவர்களும் இந்த வரிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத விளக்கம் கூறுவர். கரும்பலகை, நூல்கள் பாடம், கேள்வி பதில் என அமையும் கல்விக்கூடங்களை மாற்றிக் கற்பூர ஆராதனை, மந்திரம், பூசை, காணிக்கை என ஆலயங்களாக மாற்றச் சொல்கிறான் பாரதி என்பது அவர்களின் வாதம். ஆசிரியரை விட்டுவிடவும் அர்ச்சகருக்குக் குரல் கொடுக்கவும் பாரதி அழைப்புவிடுவதாகக் கூறும் அவர்களின் வாதம் திரிபுவாதம். பட்டிமன்றப் பேச்சின்போது தமக்கு ஆதரவான தரவுகளை முன்நிறுத்தும் பேச்சாளர்கள், எதிரணிக்கு வாய்ப்பான கருத்துகளைப் புறந்தள்ளிவிடுவர். அப்படி இருட்டடிப்புச் செய்வதாகத்தான் மேற்காட்டிய நபர்களைக் கருத வேண்டும். பாரதியின் வைரவரிகளில் குறிக்கத்தக்க வரிகளான,

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்ற பகுதி வேண்டுமென்று தவிர்க்கப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு தனி மனிதனுக்கான கல்விப்பணி பத்தாயிரம் கோவில்களுக்குச் சமமானது என்னும் பாரதியின் கொள்கை அழுத்தமானது, அழகானது.

பாரதியின் கையைப்பற்றிக்கொண்டு அவருடைய எழுத்துப் பாதையில் பயணம் செய்ய வேண்டும். “”ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்பது பாரதிமொழி. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது பழந்தமிழ்ப் பயில்மொழி. எனவே எழுத்தறிவிக்கும் இறைவனான ஆசிரியர் உறையுமிடமான பள்ளியைக் கோயில் என அழைப்பதில் என்ன தவறு காணமுடியும்? மேலும், ஆசானைச் சாதாரண மனிதனாகக் கருதும் பள்ளிகள் தேவையில்லை என்பதே அவரின் முன்வைப்பு. ஆசானே இருள்நீக்கி ஒளிதருபவர் என்பதால் அவர் பணி இறை செய்யும் பணியாகிறது. இடமும் பள்ளி என்பது கோவிலாக மாறுகிறது.

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்”

மன்னர்கள் எல்லோரும் இறையாகிவிட முடியாது, முறை செய்தாற்மட்டுமே இறைக்கு நிகராவதென்பது வள்ளுவம். அந்த அளவுகோலைப் பாரதியிடம் பொருத்திப் பார்க்க வேண்டும். உரிய முறையில் உரிய கல்வியை வழங்குபவர் ‘வாத்தியாராக’ இல்லாமல் வாலறிவன் ஆக உருமாறுகிறார். ஆனால் அப்பேர்ப்பட்ட அறிவுத்தெய்வம் பங்காற்றுமிடத்தைக் கோயில் எனச் சொல்லுக என்பதுவே பாரதியின் கருத்தாகும்.

வாய்ப்பு வருமிடங்களில் எல்லாம் பள்ளிகள் பற்றியே பாரதி பேசியுள்ளதைக் கணக்கிலெடுக்க வேண்டும். “உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்தியமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள்” எனக் கட்டுரையொன்றில் நெய்து தந்திருப்பவர் பாரதி. அங்கே சாதியில்லை, மொழியில்லை, வட்டாரப் பிளவுகள் இல்லை. அதுபோலத்தான் பள்ளிகளில் ஆசிரியிருக்கு முன்பும் சாதியில்லை, மதமில்லை, வேறு பிரிப்புகள் இல்லை. ஏனென்றால் பாரதியைப் பொறுத்தவரை “எல்லோரும் ஓர் நிறை; எல்லோர் ஓர் விலை”. எனவேதான் பாரதிக்குக் கோவில் கருவறையாகவே பள்ளியின் வகுப்பறை காட்சி தருகின்றது.

பாரதியின் வேறொரு கட்டுரை தரும் செய்தியாவது: “பாடசாலை வைப்பதற்குத் தக்க இடங்கள் செல்வர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இது ùஸüகர்யப்படாத இடங்களில் கோயில்கள், மடங்கள் முதலிய பொது ஸ்தலங்களிலே பாடசாலை நடத்தலாம்”. அன்றாட வழிபாடு (நித்தியபூசை) நிகழும் ஆலயத்தில் அன்றாடம் கல்விப்பணி அமையலாம் என்பது இரண்டையும் ஒன்றாகக் கருதும் பாரதியின் மனநிலையை வெளிப்படுத்தும்.

“பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்று நினைத்த பாரதியின் உரத்த சிந்தனை பள்ளிகளைக் கோயிலாக்கும் திருப்பணிக்கு வித்திட்டது. இரண்டு இடங்களிலும் பொதுமைத்துவம் நிலவ வேண்டுமென்பது அவர் அவா. தாழ்த்தப்பட்ட குலத்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரை உடன் அழைத்துக்கொண்டு திருக்கோயில்களில் வலம்வந்த திருஞானசம்பந்தரை இங்கே நினைவுகூர வேண்டும். பள்ளியில் “குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்’. இது கோயிலுக்கும் பொருந்தும். அதனால்தான் “பார்ப்பானை ஐயரென்ற காலம்” போன கட்டத்தில் “நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்” எனப் பாரதியால் முழங்க முடிந்தது.

ஆலயத்தில் பக்தர்களிடையே இடம்பெற வேண்டிய சமத்துவம் பள்ளியில் வெளிப்படையாக இடம்பெற வேண்டும். பாரதி அதனாலேதான் “பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் பிரத்யேக உடமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியனபோல் கிராமத்தனைவரும் பொது உடமையாகக் கருதி நடத்த வேண்டும்” என்று “குணமது கைவிடேல்’ என்ற கட்டுரையில் வரைகின்றார்.

இசுலாமியரான மிர்ஜா ஸமிஉல்லா பேக் “ஜாதிமத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலே எழமாட்டார்களென்று பிறர் கூறும் அவச் சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால் தேசியக் கல்விக்குத் துணை செய்யுங்கள்” என்று கூறிய கருத்தைப் பாரதியார் வழிமொழியக் காணலாம்.

“சாதிகள் இல்லையடி பாப்பா’ என ஓதும் வகுப்பறையும் சாதிவேறுபாடு கருதாத இறைச் சன்னதியும் ஒன்றேயல்லால் பிறிதில்லை என்பது பாரதியம்.

படிக்காத பாமரன் ஒருவனை எதிரில் நிற்கவைத்து விளக்கம் தரும் ஒரு நல்லாசிரியரைப் போலப் பாரதியார் ஓரிடத்தில் பேசுகின்றார். அப்போது அவர் தரும் விளக்கத்தில் “”பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்” என்ற மணிவரிக்குரிய பொருள் முழுமையாகக் கிடைக்கும். எது பூசை எனவும் எவ்விடம் இறை உறையுமிடம் எனவும் அவர் “சரசுவதி தேவியின் புகழ்’ என்ற பாடலில் புலப்படுத்தும் பாங்கே புதுமையானது. அவ்வரிகள்:

“மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கியதன்மேல்
சந்தனத்தை மலரையிடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்…
வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியிலாத ஓர் ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடுதீர்க்கும் அமுதவன் அன்னை
கேண்மை கொள்ள இவை கண்டீர்”

எனவே நினைக்கத் தகுந்த பாரதியின் நினைக்கத்தக்க அறவுரை இதுதான்: ஊர்தோறும் பள்ளிகள், பள்ளிகள்தோறும் சமத்துவம், சமத்துவம் காட்டும் கோயில்களாகப் பள்ளிகள்.

– நவம்பர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *