பலன் – ஒரு பக்க கதை





‘’ஊரு பாதிக்கப்படுதேன்னு கவலைப்படாம எம்.எல்ஏ தன்னோட கெமிக்கல் ஃபாக்டரி கழிவை எல்லாம் ஆத்துல திருப்பி விடுறாரு. இதுக்கெல்லாம் நிச்சயம் தண்டனை கிடைக்கத்தான் போகுது!’’ கோபமாய்ச் சொன்னான் முருகன்.
‘’நம்ம ஊருக்கு நல்ல ரோடு வசதி இல்லை. குடிதண்ணீர் வசதி இல்லை. ஓட்டு கேட்க வந்தவர் அப்புறம் ஊர்ப்பக்கம் வரவேயில்லையே. எல்லாத்தையும் தெய்வம் பாத்துட்டுத்தான் இருக்குது!’ ஆவேசமாய் சொன்னான் கணேசன்
‘’நாம இன்னைக்கும் அன்றாடம் காய்ச்சியாத்தான இருக்கோம். அவரு நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்துட்டாரு…அவர் செய்யற பாவத்துக்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்!’’ தன் பங்குக்கு சொன்னான் ராமசாமி.
எல்லோரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் சுப்பையா, ‘எம்.எல்.ஏ செய்யற பாவத்துக்கான பலனை அனுபவிப்பார்னு சொல்றீங்களே… இரண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு தப்பான ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டீங்களே…அதுக்கான பலனைத்தான் இப்போ நீங்க அனுபவிக்கிறிங்கன்னு உங்களுக்குப் புரியலையா?’’ என்றதும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டனர் எல்லோரும்..
-கீர்த்தி (29-12-10)