பரிவர்த்தனை




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ராஜா சுந்தரநாதரைச் சுற்றி ஒரே புகை மண்டலமாக இருந்தது. அவருடைய பாரமான உடலத்தைச் சுமந்துகொண் டிருந்த வில் நாற்காலி இரண்டு விநாடிக்கு ஒரு தடவை ‘கிரீச்’ என்று சத்த மிட்டுத் தன் பிரம்மாண்டமான பொறுப்பின் சிரமத்தை விளம்பரம் செய்துகொண் டிருந்தது. சுந்தரநாதரின் கனத்த சரீரத்தைத் தாங்குவதென்றால் எப்படிப்பட்ட உறுதியான நாற்காலி ஸோபாக்களும் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் தீரும். அதிலும் ராஜா சாகேப் அவர்கள் சிகரெட்டை வாயில் பற்றவைத்துச் சிந்தாக்கிராந்தராய்ப் புரள ஆரம்பித்துவிட்டால் அகில லோகமுமே நெளியாமல் ஸ்திரமாக இருப்பது ஆச்சரியமாகத் தோன்றும். சுந்தரநாதரின் உடம்பு உண்மையிலேயே ராஜசரீரம்; மலைபோன்றது.

சாயங்கால சூரியனின் மனோகரமான கிரணங்கள்,. சாரளங்களின் பலவர்ணக் கண்ணாடிகளினூடே பாய்ந்து குளிர்ச்சியுடன் அங்குமிங்கும் அலங்கரித்துக் கொண்டிருந்தன. அந்த வர்ணக் கதிர்களுடன் இசை பயில்வதுபோல் சின்னஞ்சிறு படிக மலையருவியை ஒத்த சங்கீத நாதம் ஒன்று ஆற்றலாய் அடக்கமாக ஓடிக்கொண்டிருந்தது.
கனவிலிருந்து எழுந்தவர்போல் தலையை உயர்த்திச் சிலிர்த்த சுந்தரநாதர், “என்ன இழவு!” என்று முகத்தைச் சிணுங்கி, “உம்; பம்பாய் அழுது வழிகிறதே? கல்கத்தாவைப் போடும் பார்ப்போம்'” என்று ஆக்ஞாபித்தார்.
குமாஸ்தா ரேடியோவின் குமிழிகளைத் திருகினார். அது பல ஊதல்கள் /ஊதி. பிரஞ்சு, சிங்களம். மலாய் ஆகிய பல்வேறு பாஷைகள் பேசிப் பாடி- இறுதியில் கல்கத்தாவைப் பிடித்தது.
சனியன்; இந்தப் பழைய ஸிஸ்டத்தைத் தொலைத்துப் புதிய செட் வாங்க வேண்டும்- கல்கத்தாவுந்தான் அழுது வழிகிறது. நமது மெட்ராஸ் கார்ப்பொரேஷனையே போடும் சுற்றிச் சுற்றிக் கடைசியில் மெட்ராஸில் வந்து விழ வேண்டியிருக்கிறது – இன்று கிராமபோன் பிளேட்டு இல்லையே – யார் பாட்டு? என்ன ஐயா, முழிக் கிறீரே?…” என்று பொரியலானார் சுந்தரநாதர்.
குமாஸ்தா வெகு சாவதானமாக “டாக்கி அரசி மீனாபாய் பாட்டு” என்றார்.
”மீனாளா?….அந்தக் கழுதையா?… எப்போது திரும்பி வந்தாள்?…படம் முடிந்து கல்கத்தா விலிருந்து வந்துவிட்டாளா?…விளம்பரத்தையே
காணவில்லையே. நாசமாய்ப் போகிற படம் வந்திருக் கிறது.. நான் மாத்திரம் சமஷ்டி அரசியலில் மந்திரிப் பதவி ஏற்றால் இந்தப் படங்களை ஒரு கை பார்த்துத் தான் விடுவேன். உஸ்!….அந்தச் சனியனை நிறுத்தும் …மீனாள் குரல் இப்படிப் போய்விட்டதா என்ன?…. போகாமல் எப்படி வாழும்? ஒரே குழறலாக இருக்கிறதே.. நிறுத்தும் ஐயா!” என்று, படப வென்று பொரிந்தார் சுந்தரநாதர்.
ரேடியோ நின்றது.
சுந்தரநாதர் மறுபடியும் புகை மண்டலத்தைச் 1 சிருஷ்டித்து, அதனுள் ஆழ்ந்த யோசனையில் இறங்கி விட்டார்.
சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, கமலதாஸை உடனே அழைத்து வரும்படி, குமாஸ்தாவுக்குச் சுந்தரநாதர் கட்டளையிட்டார்.
சொத்தோ பதவியோ தொழிலோ வியாபாரமோ இல்லாமலே, ஆனாலும் சர்வ போகங்களுடன் சுதந்தர மாக வாழும் மகா புருஷர்களுடைய கோஷ்டி ஒன்று உலகில் உண்டல்லவா? அதில் சேர்ந்தவர் கமலதாஸ். காலும் கையும் அற்று, முடமும் நொண்டியுமாகக் கெஞ்சும் பிச்சைக்காரனைத் தட்டிவிட்டுப் போய்விட, எந்தக் கனவானும் அஞ்ச வேண்டியதில்லை; உடுப்பிலும் தோற்றத்திலும் கம்பீரமான கமலதாஸ் அதிகாரமாக எந்தக் கனவானிடமேனும் பணமோ பணமதிப்புப் போடக்கூடிய வேறு சாமானோ கேட்கும்போது, இல்லையென்பது எந்தக் கனவானுக் குத்தான் அழகாகும்? கௌரவந்தான் குறைந்து போகாதா? யாரும் மறுக்கமாட்டார்கள். இரண்டணா முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையில், அவரவர் அந்தஸ்துக்கும் சமய சந்தர்ப்பத்துக்கும் ஏற்றபடி, கமலதாஸ் கனவான்களிடம் தண்டிக்கொள்ளுவார். அது கடன் அல்ல; யாசகம் அல்ல; வரியும் அல்ல. பின் என்ன? பின் என்ன என்பதை யாரும் யோசித்துப் பார்த்ததே இல்லை.
கமலதாஸுக்கு அபிஸீனியா தெரியும்; இத்தாலி தெரியும்; ஐரோப்பா தெரியும்; அமெரிக்கா தெரியும்; பூகோள சாஸ்திரம் முழுதும் தெரியும். அரசியல், பொருளாதாரம், சமுதாயம் – அந்தச் சங்கதிகளும் அவர் அறிவார். பொது உடைமைத் தத்துவத் திலிருந்து, பாஸிஸ்டுக் கொள்கை வரைக்கும் எந்த ராஜீய தத்துவத்தை வேண்டுமானாலும் விளக்கிச் சொல்ல. அது முடியாவிட்டால் விவாதித்து எதிரியை வெருட்டிவிட, சக்தியும் படிப்பும்அவருக்கு உண்டு.
மகாத்மா காந்தி, முசோலினி, பால்டுவின். ஹிட்லர், லவால், ரூஸ்வெல்ட், மாஜி கெய்ஸர் எவரைப்பற்றியேயானாலும் வெகு அலட்சியமாகப் பழித்துப் பேசுவார்; அல்லது அபாரமாகத் தாங்கிப் பேசுவார். நீங்கள் மகாத்மாவை முதல் வாக்கியத்தில் ஆதரித்தால், இரண்டாவது வாக்கியத்தில் அவர் எதிர்ப்பார். மகாத்மா எங்கேயோ இருக்கிறார், சிறிது நேரம் கமலதாஸுடன்தான் சேர்வோமே என்று நினைத்து, மூன்றாவது வாக்கியத்தில் நீங்களும் மகாத்மாவைக் கண்டித்தீர்களானால், நான்காவது வாக்கியத்தில் மகாத்மாவுக்கு அதிருஷ்டம் அடித்து விடும்; அதாவது மகாத்மாவைக் கமலதாஸ் பலமாக ஆதரிப்பார்.மொத்தத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் கமலதாஸ் எதிர்ப்பார். அவர் முன்னிலையில் நீங்கள் எதைப்பற்றி என்ன அபிப் பிராயம் கூறினாலும் விவாதமில்லாமல் தப்பித்துக் கொள்ள முடியாது. அபிப்பிராயம் கூறாமலே தப்பித் துக்கொள்ளலாம் என்றால், அப்படியும் தப்பித்துக் கொள்ள முடியாது; அவர் உங்களை ஏதாவது கிளறிக் கொண்டே இருப்பார். இத்தனையும் ஒருபுறம் இருக்கட்டும். கமலதாஸ் சாதுதான்; சாது என்றால். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? வாழ்க்கைக் கடலில், ஒரு நோக்கத்தையும் உண்மையையும் காண விரும்பி ஆழ்ந்து துழாவும் மனிதர்கள், திக்குத்திசை தெரியா மல் தவித்து, வழிகாணப் போராடுவார்கள் என்று இருந்தாலும் அவர்கள்தான் ஆபத்தான மனிதர்கள். வாழ்க்கைக் கடலில் வெட்டி எறிந்த மரச்சில்லைப் போல் மிதந்து, அற்ப சுகத்தோடு திருப்தியடையும் மனிதர்கள் மிஞ்சினால் கெஞ்சுவார்கள்; கெஞ்சினால் மிஞ்சுவார்கள். கமலதாஸ் இந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர். ஆனால், இது எல்லாருக்கும் எப்படித் தெரியும்?
இப்போது பல நாளாக, ராஜா சாகேப் சுந்தர நாதருக்குக் கமலதாஸ் வலது கையாக இருந்து வருகிறார். “இந்தச் சுந்துவை யார் மதித்தார்கள்? எல்லாம் நான் பண்ணிவிட்ட வேலைதான். இன்று சுந்து மந்திரிப் பதவிக்கும் போட்டி போடுகிறான் என்றால், ஒரு கமலதாஸ் பின்னால் இருந்து பெரும் விசையை முடுக்கி வைத்திருக்கிறான் என்று நினை யுங்கள்’ என்று கமலதாஸ் சர்வ சாதாரணமாக, சர்வ சாதாரணமான நண்பர் கோஷ்டியில் கூறி ஒரு வேளைக் காபி தட்டிவிடுவார். ஆனால் அதில் ஓரளவு உண்மை உண்டு. சுந்தரநாதர் திடீரென்று அரசியலில் முன்னணிக்கு வந்ததற்குக் கமலதாஸின் தூண்டுதலும், பத்திரிகைச் சண்டைகளும், பின்னணிக் காரியங்களும் பெரிதும் காரணந்தான். சுந்தரநாதருக்குச் சிக்கலான என்ன பிரச்னைகள் தோன்றினாலும் உடனே கமல்தாஸை அழைக்கும் நிலைக்கு வந்து வெகுநாளாயிற்று.
ராஜா சாகேபு சுந்தரநாதர் இன்னும் நாற்காலி யில் சாய்ந்தபடியே இருக்கிறார். புகைப்படலமும் இன்னும் அவரைச் சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், சூரிய கிரணங்களும் ரேடியோ சங்கீதமும் போய்விட்டன. மின்சாரத் தீபங்கள் ஜொலிக் கின்றன. கமலதாஸ் வந்து எதிரே ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார்.
“இன்னும் நாம் தேர்தல் அறிக்கை தயார் செய்யாமல் இருக்கலாமா?” என்றார் ராஜா சாகேபு.
“அதற்கு எத்தனை நாழிகை ஆகப் போகிறது? டைபிஸ்ட் இருக்கிறாரல்லவா? அவரை இரண்டு மணிநேரம் கொடுங்கள். அறிக்கை தயார்” என்று அநாயாசமாகப் பதிலளித்தார் கமலதாஸ்.
“அறிக்கையில் என்ன விஷயங்களைக் கூறப் போகிறீர்கள்?” என்று கேட்டார் ராஜா சாகேபு.
“சகல விஷயங்களையுந்தான் சொல்லிப் போட வேண்டும்” என்று அழுத்தந் திருத்தமாக உரைத்த கமலதாஸ், மேலும் சொன்னார்: “வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது; ஜனங்களுக்கு வெகு சுலபமாக ஏராளமான பணம் கிடைப்பதற்கு வழிகள் கண்டுபிடிப்பது; வரியையெல்லாம் அடியோடு குறைத்து விடுவது; சுதேசித் தொழில்களை வளர்ப்பது; சுதந்தரம் பெறுவதற்காக ஸகலமான தியாகமும் செய்து, சட்ட வரம்புக்கு உட்பட்ட பல் வேறு வகையான போராட்டங்களை, இந்தப் பிரிட்டீஷ் சர்க்காரோடு தீவிரமாய் நடத்துவது; ஓர் ஐந்து வருஷத் திட்டம் போடுவது- நடத்துவதல்ல, போடுவது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இந்த, மாதிரி இன்னும் இல்லையா, அது இது எல்லாவற்றை யும் குறிப்பிட வேண்டியதுதான்.”
இப்படிக் கண்டபடியெல்லாம் ஜனங்களுக்கு வாக்குக் கொடுத்தால் பின்னுக்குக் கஷ்டமாகுமே என்று ராஜா சாகேபு சற்றுத் தயங்கினார்.
கமலதாஸ் கூறிய சமாதானம் இது: “நம்மைக் கண்டது யார், பின்னைக் கண்டது யார்? பொதுஜனங் களுக்கு ஞாபகசக்தி மிகவும் குறைவு. அன்றன்று நடப்பதன் நன்மை தீமைகளையே அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளுவதில்லையே. பொதுஜனங்கள், சென்ற சரித்திரத்தை அலசி ஆராய்ந்து நிதானமாக யோசித்து எந்தக் காரியமும் செய்வதில்லை. அந்த அந்த நிமிஷத் தில் உண்டாகும் பரபரப்பில் மிக அற்ப விஷயங் களால் உணர்ச்சியடைந்து, செயல் செய்கிறார்கள்; அவ்வளவுதான். ஆகையால், அந்த அந்தச் சமயத் துக்கு ஏதாவது ‘டானிக்’ கொடுத்துக்கொண்டே காலத்தை ஓட்டுபவர்களே சிறந்த அரசியல்வாதி களாகப் பிரகாசிக்க முடியும்.”
ராஜா சாகேபு புன்முறுவல் பூத்தார்.
“எப்படியிருந்தாலும் சரி; அறிக்கை ஜனங்களின் உள்ளங்களைக் கிளற வேண்டும்; உணர்ச்சி ததும்ப வேண்டும். விஷயம் அவ்வளவு முக்கியமல்ல” என்றார் ராஜா சாகேபு.
“ஆகட்டும்” என்று கம்பீரமான குரலில் பதில் அளித்த கமலதாஸ், ராஜா சாகாபையே அறிக்கை உருக்கிவிடும் என்று உறுதி கூறுவதுபோல் இருந்தது.
“கமலதாஸ். இன்னொரு விஷயம்” என்று, எங்கேயோ பார்த்தபடி, மெல்லிய, குளுமையான, வெகு அமைதியான குரலில் சொன்னார் ராஜா சாகேபு. அவர் முகத்திலே ஓர் அசட்டுச் சிரிப்பு நர்த்தனம் செய்தது.
கமலதாஸும் சிரித்த முகத்துடன், “என்ன?” என்று கேட்கும் பாவனையில் தலையை மேலும் கீழும் அசைத்தார்.
“ஒன்றும் இல்லை. உங்கள் தம்பி என்னவோ ‘டாக்கி’யில் நடிக்கப் போகிறானாமே…” என்ற சுந்தர நாதர் முடிக்கவில்லை.
“ஆமாம்; தறிதலை” என்று இடைமறித்துச் சொன்ன கமலதாஸ், “அதுதான் எங்கும் முழக்கமாக இருக்கிறதே!…” என்று சட்டென்று என்றார்.
“அதில் – சரி – பூபாலகன் – உம் தம்பி பெயர் பூபாலகன் தானே? – அவன் வந்துவிட்டானோ?” என்றார். சுந்தரநாதர்.
“ஆஹா! எல்லாம் உங்கள் போட்டி ஜமீன்தாரின் வேலைதான். என்னவோ சினிமாக் கம்பெனி என்று சொல்லி யாரோ ஒருத்தியைக் கல்கத்தாவுக்கு இழுத் துக்கொண்டு போனார். பெரிய இடங்களில் எங்கும் இதே புரளி தான்” என்ற கமலதாஸின் முகத்தில் ஒரு விஷமப் புன்சிரிப்புத் தென்பட்டது.
ராஜா சாகேபின் முகம் வாட்டமடைந்தது.
“சரி; அறிக்கை நாளைக் காலையில் தயார் ஆகி விடுமா?”
”ஆகிவிடும்’ என்றார் கமலதாஸ்.
“காலையில் மறுபடியும் சந்திக்கலாமா?” என்று ஜாடையாக விடைகொடுத்தார் ராஜா சாகேப்.
“பேஷாக” என்ற கமலதாஸ் அசையாமல் உட் கார்ந்திருந்தார்.
சற்றுநேரம் பேசாதிருந்த சுந்தரநாதர், “ஏதாவது வேறு விசேஷம் உண்டா?” என்று கேட்டார்.
ராஜாசாகேபின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “என்னிடத்தில் தாங்கள் எந்த விஷயத்தையும் ஒளிக்க வேண்டியதில்லை. தங்கள் தம்பிபோலவே என்னைப் பாவியுங்கள்” என்று உடம்பையெல்லாம் தளுக்கிக் குலுக்கிக் கொண்டே கூறிய கமலதாஸ், “அதனால்- உங்களுக்கு.- நிச்சயம் நன்மையே உண்டாகும்” என்றார்.
“ஏதோ புதிர் போடுவதுபோல் பேசுகிறீரே?”
“கோபமானால் நான் போகிறேன்” என்ற கமல் தாஸ், “அந்த – அந்த மீ — சரி, நாளைக் காலை அறிக்கையோடு – வரட்டுமா?” என்று போட்டிப் பந்தய வாசகம்போல், பேச்சை விழுங்கி, ஆனாலும் கம்பீரமாக முடித்தார்.
சுந்தரநாதருக்குக் கோபமோ, கலக்கமோ, அச்சமோ, வெறியோ, என்ன உண்டாயிற்றோ தெரிய வில்லை. குதித்து எழுந்து நின்றார்.
“அது வாஸ்தவந்தான். யார் என்ன செய்ய முடியும்? நீர் நையாண்டியாகக் குத்தலாகப் பேச வேண்டியதில்லை. எனக்கும், ஜமீன் தார்- ஜமீன் தார் என்னவேண்டியிருக்கிறது, ஜமீன் தார் – எனக்கும் அந்த ராஜுவுக்கும் விரோதம் வந்ததற்குக் காரணம் அவள்தான்; அந்த மீனாள்தான்” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினார் சுந்தரநாதர்.
“அதைப்பற்றி நான் ஒன்றும் குற்றமாகச் சொல்லவில்லையே” என்று ஈனசுரத்தில் இழுத்துச் சொன்ன கமலதாஸ், “அந்த மீனாள் நாம் இழுத்த இழுப்புக்கு வரக்கூடிய நிலைமை இப்போது ஏற்பட் டிருக்கிறது. அதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்றுதான் விரும்பினேன். கொஞ்சமாவது மாறான எண்ணம் கொண்டு இதை நான் சொல்ல வில்லை. என்னவோ அந்தரங்கமாகப் பழகிவிட்டோம். இனிமேல் வெளிவேஷம் போடுவது சரியல்ல. அந்நி யோந்நியமாக நடந்துகொள்ள வேண்டும். தர்மம், ஒழுக்கம்,வேதாந்தம் எல்லாம் ஊரரருக்கு சிநேகிதர் களுக்குள் அந்தப் பாசாங்கெல்லாம் எதற்கு? சிநேகி தர்களுக்குள், மனங் கரவாத பூர்ணவாஞ்சை, நன்மையிலும் தீமையிலும், அறாது இருந்துவர வேண்டும். இதுவே என் அபிப்பிராயம்” என்று அடுக்கினார்.
சுந்தரநாதரின் காதில் இதெல்லாம் அரையும் குறையுமாகத்தான் விழுந்தது. ஆனாலும்,கமலதாஸ் வஞ்சகமற்றுப் பேசுவதாக, அவரது முழு அபிநயமும் தொனியும், சுந்தரநாதருக்குத் தோன்றின.
“கமலதாஸ்” என்று உரக்கக் கூவிய அவர், “உம்மை நம்புகிறேன்.நீர் இதில் பொய் சொன்னா லும் என் தலை ஒன்றும் போய்விடப் போவதில்லை என்று சற்றுக் கனைத்துக்கொண்டார். “நீர் சொல்லு வது நிஜமானால். அந்த விவரத்தைக் கேட்பதில் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை” என்று என்னவோ சுற்றிவளைத்துக்கொண்டு, தமது பதிலை முடித்தார்.
கமலதாஸுக்குத் தெம்பு உண்டாயிற்று. பேச்சை வளர்த்தாமல், தமது யோசனையை நறுக்குத் தெறித்ததுபோல் சொன்னார்.
மீனாபாய் அயன் ஸ்திரீபார்ட் போட்ட அதே படத்தில், கமலஸின் தம்பி பூபாலகன் அயன் ராஜ பார்ட் போட்டு நடித்ததால், இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. பூபாலகனைக் கொண்டு, மீனாபாயை மறுபடியும் ‘மடக்கி’ ராஜாசாகேபின் கையில் கொண்டுவந்து சேர்ப்பது வெகு சுலபம் என்று கமலதாஸ் கருதினார். அந்தக் கருத்தை ராஜா சாகேபிடம், கமலதாஸ், வெகு அழகாகவும், மனங் கவர் முறையிலும், அதே சமயத்தில் வெகு சுருக்க மாகவும் சொல்லி முடித்தார்.
இந்த இங்கிதத் தகவலைக் கேட்ட ராஜாசாகேபு, தமது சந்தோஷத்தை காட்டாமல், வெளிக்குக் “வேறொன்றும் இல்லை, கமலதாஸ். அந்த ராஜுவின் திமிரை அடக்கவேண்டும். அவ்வளவுதான் என் விருப்பமெல்லாம்’ என்று சொல்லி, “நாளைக்குச் சாத்தியமானால் பூபாலகனை இங்கே — வேண்டாம். உம் உசிதப்படி நடவும்” என்று முடித்தார்.
ராஜா சுந்தரநாதர் பரம்பரைப் பிரபல வம்சத் தைச் சேர்ந்தவர். மிகப் புராதனமான ராஜவம்சம் என்றுகூடப் பிரஸ்தாபம். அவருக்கு ஒரு பெரிய ஜமீன் இருக்கிறது. வருஷந்தோறும் லட்சரூபாய் வரையில் வரும்படி வருகிறது ஆனால், அது அரண் மனைச் செலவுக்குக் கட்டவில்லை. ஜமீன் பணவரு வாய் குதிரைப்பந்தயம் கட்டுவதற்குக்கூடப் போத வில்லை யென்றால், அப்புறம் என்ன சொல்லக் கிடக் கிறது! இப்போது ராணி வேறே பத்திரிகைச் சித்திரப் போட்டிப் பந்தயங்களில் இறங்கி யிருப்பதால், அரண்மனையின் செலவினம் மிகவும் மிகவும் பெருகி விட்டதாம்.
வருஷத்துக்கு ஒரு கவர்னர் விருந்து, மூன்று கலெக்டர் விருந்து ஆகிய பிரம்மோத்ஸவங்களை நடத் தாமல் இருக்கத்தான் முடியுமா? ஜமீனையே அடகு வைத்து அவர் ஏதோ கடன் வாங்கியிருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலர் அதெல்லாம் நிஜம் அல்ல என்றும், அவர் வீட்டுத் தோட்டத்தில் ரகசியமாகப் புதைத்து வைத்திருக்கும் தங்கமே இன் னும் ஏழெட்டுத் தலைமுறைகளுக்குக் காணும் என்றும் சொல்லுகிறார்கள் இருக்கலாம்; பெரிய இடத்து. ரகசியத்தைக் கண்டது யார்?
ஜமீன்தார் காமேசுவர ராஜு, வம்ச பரம்பரை ஜமீன்தார் அல்ல. பணங்கொடுத்துச் சம்பாதித்த ஜமீனுக்கு உரியவர். லேவாதேவிக்காரருடைய குமாரர் ஆகையால், லேவாதேவிக் கடைகள் பல அவருக்கு உண்டு. இளைஞர். அவரை ராஜீயத்தில் ஒரு பிரபலஸ்தராக்கிய பெருமை உண்மையிலேயே சுந்தர நாதரைச் சேர்ந்ததுதான். நான்கு மாதங்களுக்கு. முன்வரையில் ஜமீன்தார் ராஜு. ராஜாசாகேபு சொன்னபடி ஆடிவந்தார். இருவரும், தேசோத் தாரணக் கட்சியைச் சேர்ந்தவர்கள். சேர்ந்தவர்க ளாவது? இவர்கள் தான் அந்தக் கட்சி; இவர்களுக்காகத்தான் அந்தக் கட்சி. இப்போது, இந்த இரு வருக்கும் வருத்தம் நேரிட்டிருக்கிறது. ஏதோ பெரிய அரசியல் அபிப்பிராய பேதம் ஏற்பட்டுவிட்டதாகப் பத்திரிகை நிருபர்கள் எழுதிவிட்டார்கள்; எல்லாம் தங்களுடைய க்ஷேமத்தை உத்தேசித்தே இந்த மாபெருந் தலைவர் இருவரும் வருத்தப்படும்படி நேரிட்டதாகப் பெரும்பாலான ஜனங்கள் நம்பி இருவர் கட்சியும் பேசிவந்தார்கள்; விஷயம் அறிந்த மிகச் சில ‘பெரிய’ மனிதர்கள் மட்டில் இவர்கள் வருத்தத்தின் காரணத்தைப்பற்றித் தமாஷாகப் பேசிக் கண்ணடித்து வந்தார்கள்.
அந்த ‘டாக்கி அரசி’ மீனாபாய் சமீபத்தில்தான் ‘டாக்கி அரசி’ யானாள். அவள் பிறப்பு வளர்ப்பு யாருக்கும் தெரியாது. ஆனால் தெரிந்தவர்போல் பேசுவோர்க்கு எங்கும் குறைவில்லை. அவளைப்பற்றிய வம்புகளோ அநந்தம். அவள் சம்பந்தமான மனஸ் தாபங்களும் சில பெரிய இடங்களில் குடிபுகுந்தன. நாடகமேடையில் அவளுக்குக் கீர்த்தி வந்தது முதல் அவள் பல கனவான்களுக்குத் ‘தூரத்துப் பச்சையாக இருந்து வருகிறாள். ஒரு பெண்ணுக்கு அழகும் கீர்த்தியும் சுயேச்சையும் சேர்ந்து கொண்டால், கோர மனத்தைப் படைத்த துஷ்ட நாவுகளுக்குக் கேட்க வேண்டுமா? ஆனால், உண்மையில் மீனாள் விஷயம் என்ன? அதை எப்படிச் சொல்லுவது, என்ன சொல்லுவது? பாவ புண்ணியத்துக்குத் திட்டமான லட்சணம் சொல்லும் துடுக்குத்தனம் படைத்த மனிதர்களுக்கு நடுவே அவள் வாழ்கிறாள். அவள் ஸ்திரீ; திக்கற்ற ஸ்திரீ. எத்தனைத்தான் பொருளும் வசதியும் பெற்றிருந்தாலும் அவள் திக்கற்ற ஸ்திரீ தான். அதை அவளும், அவளைப் படைத்த ஆண்டவன் இருந்தால் அவனும் அறிவார்கள். அவள் சிலருக்கு மாயமான்; ஆனால், மாரீசன் அல்ல. தூரத்தே இருப்பவர்களைக் கிட்ட இழுப்பாள்; கிட்ட வந்தவர் களுக்கு எட்டாமல் இருப்பாள்.
இந்த மீனாளை,சுந்தரநாதரின் மனம் நாடிற்று. அது மந்திரிப் பதவியில் நாட்டங்கொண்டால், மற்றெதிலும் நாட்டங்கொள்ளலாகாதா என்ன? தேச வெறி படைத்த ஒரு ஹிட்லர் பிரம்மச்சாரியா யிருக்கலாம். பூமியிலே சொர்க்கத்தை ஸ்தாபித்து விடும் பித்துப்பிடித்த ஒரு காந்தி ஏழையாய் வாழலாம். எல்லாரும் அப்படியே இருக்க முடியுமா?
காமேசுவர ராஜு ஒரு ‘டாக்கி’த் தொழில் ஆரம்பித்தார். இப்பொழுது ‘டாக்கி’ தானே ஓங்கி வரும் தொழில்? காலும் அரையுமாய் வட்டிவாங்கிப் பணம் சேர்ப்பதற்குள், நூற்றுக்கு நூறு, இருநூறு, முந்நூறு விகிதம் லாபமளிக்கும் ‘டாக்கி’த் தொழிலில் அவருக்கு ஆவல் விழுந்தது ஆச்சரியமா? மீனாள் அந்த ‘டாக்கி’யில் ஆடப் போய்விட்டாள். மீன்தாரும் கூடவே போனார். அப்புறம் ஊரிலே என்ன பேச்சு நடக்கும்? கிரமமாய் நடக்க வேண்டிய பேச்சுத்தான். சுந்தரநாதரின் மனம் குமுறியது. அவர் தேசோத்தாரணக் கட்சியை விட்டு ராஜிநாமாச் செய்தார்.நண்பர்கள் வற்புறுத்தியதன்மேல் ராஜீ நாமாவை வாபஸ் வாங்கிக்கொண்டார். சென்னைச் சட்ட சபைக்குத் தேர்தல் வந்துவிட்டது. ராஜா சாகேபும் ஜமீன் தாரும், கட்சி அபேட்சர்களில் இருவர். என்றாலும் இருவரும் தம் பாட்டைப் பார்த்துக்கொண்டார்களே தவிர, மற்றவருக்கு உதவி செய்யவில்லை.
கமலதாஸுக்கு இப்போது இரட்டிப்பு வேலை. ஒன்று தேர்தலில் சுந்தரநாதருக்கு வெற்றி கிடைப் பதற்கு வேண்டிய முயற்சி; மற்றது, ‘டாக்கி’ அரசி மீனாளை ராஜாசாகேபின் அந்தப்புரத்தில் கொண்டு வந்து சேர்ப்பது.
இரண்டாவது விஷயத்தைப்பற்றித் தம்பி பூபாலகனிடம் பிரஸ்தாபித்தார்; அவன் திட்டை வாங்கிக் கட்டிக்கொண்டார். ஆனாலும், முயற்சியைக் கைவிடவில்லை. வெற்றி தோல்விகளைச் சமமாகப் பாவித்து, கடமையை ஆற்றும் ‘வீரர்’ கமலதாஸ்.
தேர்தல் முடிவடைந்தது. ராஜா சாகேபு வெற்றி பெற்றார்; ஐமீன்தாரும் வெற்றி பெற்றார். தேசோத் தாரணக் கட்சிக்கு எதிர்க்கட்சியல்ல. சர்க்காருக்கே எதிர்க்கட்சியான தீவிர முன்னேற்றவாதிகளே மிகப் பெரும்பான்மை பெற்றார்கள். என்றாலும், கவர்னரின் கருணையும், இந்திய ராஜீய வாழ்வின் நெருக்கடியும் ஒன்று சேர்ந்து, மந்திரிப் பதவி வகிக்கும் பாக்கியத் தைத் தேசோத்தாரணக் கட்சிக்கே தரும் போன்ற நிலைமை ஏற்பட்டது. ஆனால், ஜமீன்தாரும் ராஜா சாகேபும் சேர்ந்தாற்போல் மந்திரிப் பதவிகள் வகிக்க முடியாதென்று கூறிவிட்டார்கள். இருவருக்கும் முதல் மந்திரி ஸ்தானத்தில் விருப்பம். ஒருவர் முதல் மந்திரி ஸ்தானம் வகித்தால், மற்றவர் மந்திரிப் பதவியே வகிக்க முடியாதென்று பிடிவாதம் செய்து வருகிறார்கள். அந்தச் சிக்கலான நிலைமையில் கமலதாஸ் பிரமாதமாய் யோசித்துக்கொண் டிருந்தார். அவருக்கு ஒரு யுக்தி பளிச்சென்று உதயமாயிற்று. அந்தரங்கமாய், ஜமீன்தார் காமேசுவர ராஜுவைப் பேட்டி கண்டு பேசப் புறப்பட்டார்.
அன்று மாலை, தேசோத்தாரணக் கட்சிப் பிரபல தினசரி யொன்றின் அரசியல் நிருபர் வெளியிட்ட செய்தியாவது: “கடைசியாகச் சமரசம் ஏற்பட்டு விட்டது. பொதுஜனங்களின் நன்மையையே குறிக் கோளாகக்கொண்ட ராஜா சுந்தரநாதர், தீவிர முன்னே ற்றக் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் தேசத்துக்கு ஆபத்து நேரிடும் என்ற காரணத்தால், தமது மந்திரிப் பதவியையும் விட்டுக்கொடுத்து, தேசோத்தாரணக் கட்சியைப் பலப்படுத்தி, அது மந்திரிப் பதவி ஏற்கும்படி செய்தார். ராஜா சாகேபு சட்டசபைப் பதவியையே ராஜீநாமாச் செய்துவிடப்- போவது நிச்சயம். ராஜா சாகேபின் இந்தப் பெருந் தியாகத்தை அரசியல் கோஷ்டிகள் பெரிதும் புகழ்ந் துரைக்கின்றன.”
இந்தச் செய்தியை அந்தத் தினசரி, “ராஜா சாகேபுக்கு ஜே!’ என்ற கொட்டையெழுத்துத் தலைப்போடு பிரசுரித்தது.
இந்தச் செய்தியைப் படித்த அநேக வாசகர் ராஜா சாகேபின் பெருமையை வியந்துரைத்ததாகவும் கேள்வி.
“ராஜா சாகேபு இந்த நெருக்கடியான நிலைமை யில் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்து கட்சி ஒற்றுமைக்கு அடிகோலியது பொன்னெழுத்தில் பொறிக்கத்தக்க அருஞ்செயலாகும்” என்று சில பத்திரிகைகள் அவர் புகழ்பாடின.
இரவு ஒன்பது மணி இருக்கும். புரசைவாக்கம். ‘மீனா விலாஸ் வாசலில் ஓர் அழகான புதிய மோட்டார் கார் வந்து நின்றது. சர்வாலங்கார பூஷிதராக ஒரு ‘பெரிய’ மனிதர் வண்டியைவிட்டு இறங்கி உள்ளே போனார்.
மீனாபாய் கூடத்திலே, அவரை மரியாதையாய் வரவேற்றாள்.
‘பெரிய மனிதர்’ மனிதர்’ சுற்றுமுற்றும் பார்த்தார். எட்ட நிற்கும் வேலைக்காரிகள் இருவரையும் கவனித்து, சிறிது நேரம் மௌனமாயிருந்தார்.
பிறகு, “மீனா, மந்திரிப் பதவி ஒன்றும் பிரமாத மானதல்ல” என்றார்.
“எனக்கு ராஜீய விஷயம் எதுவும் தெரியாது” என்று பணிவுடன் சொன்ன மீனாள், “ஏதோ தொழில் விஷயமாய்த் தாங்கள் என்னிடம் பேசு விரும்பியதாக, ஜமீன்தார் ராஜு அவர்கள் தெரிவித் தார்கள். அது என்னவோ?” என்றாள்.
சுந்தரநாதர் சற்றுநேரம் திகைத்து நின்றுவிட்டு, “எனக்கும் ராஜுவுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது” என்றார்.
“பெரிய மனிதர்களுக்குள் எத்தனையோ இருக்கும். என்னிடம் வந்த விஷயத்தைத் தெரிவிப் பீர்களா?’ என்றாள் மீனா.
“உன் விஷயமாகத்தான் ஒப்பந்தம்” என்று சற்று இழுத்த குரலில் சொன்னார் சுந்தரநாதர். ”சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“நீ ஒரு மந்திரிப் பதவிக்குச் சமானம்” என்றார் சுந்தரநாதர்.
சந்தேகம் நிறைந்த மீனாபாய் எழுந்து அப்பால் போய்விட்டாள்.
வேலைக்காரி ஒருத்தி ராஜா சாகேபிடம் வந்து, மரியாதையாக, அவரை வெளியே அனுப்பிவிட்டாள்.
உடனே மீனாள், ஜமீன்தார் ராஜுவுக்குச் சொல்லியனுப்பினாள்.
ராஜுவும் தட்டாமல் வந்து சேர்ந்தார்.
“ஜமீன்தார் அவர்களே, தாங்கள் இப்போது ஏதோ புதிய வர்த்தகத்தில் இறங்கியிருக்கிறீர்கள் போல் இருக்கிறதே” என்றாள் மீனாள்.
ஜமீன்தார் அசட்டுப் புன்சிரிப்புடன், “அதென்ன?” என்றார்.
“சற்றுமுன் சுந்தரநாதர் இங்கே வந்தார்” என்ற மீனாள், “லேவாதேவி, டாக்கி உற்பத்தி இரண்டும்போதாது என்று அடிமை வர்த்தகம் ஆரம்பித்திருக்கிறீர்களோ?” என்று படபடப்புடன் வினவினாள்.
“ஆத்திரப்படாமல் நிதானமாய்ப் பேசு; விஷயம் என்ன?”
“நீங்கள் ஒரு மந்திரி!” என்று கடினமாய் உச்சரித்த மீனாள், “ஆனால் என் விலை ஒரு மந்திரிப் பதவியல்ல. இதை நீங்கள் அறியவேண்டும்” என்றாள்.
“அரசியலில் என்ன என்னவோ நடக்கும். ஆனால், நீ உன் இஷ்டம்போல் நடந்துகொள்ளேன்” என்று வெகு அநாயாசமாகக் கூறினார் ஜமீன்தார்.
“எனக்கு அரசியல் தெரியாது. ஆனால், அரசியல் வாதிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் மார்க்கத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இனி, தாங்கள் முன்போலக்கூட என்னிடம் நெருங்கிப் பழக முடியா தென்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்’ என்று உதடு அசையாமல் சொன்ன மீனாள் ஒரு கடிதத்தை அவரிடம் நீட்டினாள்.
பூபாலகனுக்கும் மீனாபாய்க்கும் நடந்த ரெஜிஸ்டர் மண அத்தாட்சிச் சீட்டு அது.
முதல் மந்திரி, சந்தடியில்லாமல், மெல்ல எழுந்து, தமது தேசோத்தாரண காரியத்தைக் கவனிக்க வெளிக் கிளம்பிவிட்டார்.
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க... |