பதினாறுகால் மண்டபம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 374
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வரவர நம்பிக்கை குறைந்துவிட்டது – உலகத்திற்கென்று சொல்லவரவில்லை அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே! எனக்குத்தான் சொல்லுகிறேன். எதிரில் இருக்கும் பதினாறுகால் மண்டபத்தை இரவும் பகலுமாய்ப் பார்த்துக்கொண் டிருக்கிறேன். நம்பிக்கைக்கு அங்குரம் போல் ஊக்கமளிப்பதற்குப்பதிலாகக் குறைத்துக் கொண்டே போகிறது. சன்னதி வீதி முழுவதும் தாழ்ந்த ஓட்டு வீடுகள் நிறைந்திருக்க இந்த மண்டபம் மட்டும் ஆகாயத்தை எட்டிப் பிடிப்பதுபோல் உயர்ந்திருப்பதற்கும் பொருள் இருக்க வேண்டாமா? கட்டினவன் ஆன்மா வுக்குத் திருப்தியும் வானத்தில் ஓர் இடமும் தருவதாக இருக்கலாம்! ஆனால் அதை யார் கண்டது? இருந்தாலும் அந்தப் பேர்வழியின் பக்தியை என்னால் எண்ணாமலும் போற்றாமலும் இருக்க முடியவில்லை, செலவு பத்து நூறு ஆகி இருந்தால் அதை யார் சீண்டப் போகிறார்கள்? பத்தாயிரக் கணக்கில் மண்டபம் விழுங்கி இருக்குமே! புண்ணிய புருஷன்!
மண்டபம் வெகு அழகாக இருக்கிறது. பதினாறுகால்! தூண்கள் எல்லாம் யாளிகள் தலையினின்று முளைத் திருக்கின்றன. தூண்களின் நுனியோ பாயும் சிங்கங் களாகக் கிளைத்து மண்டபத்தின் மேல்பரப்பைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. மண்டபத்தின் மேல் விழும் மழை ஜலத்தை வாங்கிவிட நாலு பக்கமும் நாலு வாய்கள். தூண்களில்தான் என்ன வேலைப்பாடு! என்ன சிற்பங்கள்! பிறந்த மேனிக்கு நின்றாலன்றிக் கடவுளின் அருளை அடைய முடியாது என்பதைக் காட்டும் கோபிகா வஸ்திராபஹரணம்! சிவத்தின் தோல்வியைக் காட்டும் காம தகனம்! போதாக்குறைக்குக் கொக்கோகத்தின் சிற்ப உரை! இன்னும் பல மாதிரியான உருவங்கள் மலர்கள், கொடிகள்!
மண்டபம் கட்டிய புண்ணிய புருஷனைப் பற்றிய விவரம் நான்கு நாளைக்கு முந்தித்தான் தெரிந்தது. ஒரு சவுகார் கட்டினானாம்; சவுகார் என்றால் வடக்கத்தியான் அன்று. நம் நாட்டு லேவாதேவிக்காரன்தான்! அந்த விவரம் தெரிந்த சமயத்தில் லேசான மழை பெய்துகொண் டிருந்தது. அந்த விசித்திரம் என்ன வென்றே புரியவில்லை! விவரத்தைக் கேட்டவுடன் அந்த மண்டபம் மறைந்து போய்விட்டது. ஆனால் அந்த இடத்தில் மண்டபத்திற்கு அஸ்திவாரம் எடுக்கப் பட்டிருந்தது. சரிகைத் தலைப்பாகையுடன் ஓர் ஆள் உட்கார்ந்து ஒரு ரூபாயை விதைத்துக்கொண் டிருந்தான். ஒவ்வொருவராக ஆண்களும் பெண்களும் கூலி ஆட்களு மாக அவனிடம் வந்து பாத்திரங்களையும் நகை நட்டு களையும் கொடுத்துவிட்டுச் சென்றுகொண் டிருந்தார்கள். அவைகளெல்லாம் அந்த ஆள் கை நீட்டி வாங்கிய மறு நிமிஷமே நீராக மாறிப்பண விதைகளின் மேல் விழுந்தன.
லேசாகப் பெய்துகொண்டிருந்த மழையில் வேகமான காற்றொன்று திடீரெனப் புகுந்து அடிக்கத் தொடங்கியது. ஒரே கணத்தில் வெள்ளி அணுக்களாக வெளி முழுவதும் நிறைந்துவிட்டது. அப்பொழுதுதான் மழைத்துளியைக் காற்றுப் பிளந்து காட்டும் விஞ்ஞான விந்தை! மறு கணத்தில் கண்ணுக் கெதிரே ஒரு பெரிய மரம் காற்றில் ஆடிக்கொண் டிருந்தது. மரக் கிளைகளில் கணக்கெழுதும் குமாஸ்தாக்கள் மாதிரி பலர் இருந்தார் கள். ஒரு குமாஸ்தா மட்டும் ஒன்றும் எழுதவில்லை. கையை நீட்டி நீட்டி எதெதையோ வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான். இப்படி நடந்துகொண் டிருக்கும் பொழுதே மழையும் காற்றும் நின்று விட்டன. மறைந்து போன மண்டபம் மறுபடியும் கண்ணில் பட்டது.
அப்பொழுதுதான் சவுகாரின் சரித்திரத்தை மனம் படமாக்கிப் பார்த்துக்கொண் டிருந்த உண்மை விளங் கிற்று. சடப்பொருளைக் குட்டி போடச் செய்யும் மந்திர வாதி ஏன் மண்டபம் கட்டவேண்டும்? பணத்தில் ஆசை வைத்துப் பெருக்கியவன் பிறகு அதை ஏன் கரைத்துக் கல்லாக்க முயலவேண்டும்? பணம் ஓரளவு குவிந்த பிறகு நெஞ்சில் குடைச்சலை உண்டுபண்ணி விடுகிறதா என்ன? பணம் கனக்க ஆரம்பித்தால் அதற்கொரு சுமைதாங்கி வேண்டுமா? அல்லது பணப் பெருக்கத்தினால் பெருமை ஏற்பட்டு விடுவதில்லை என்பதை உணர்ந்து தற்பெருமையைத் தேக்கக் கல்லை ஏவி விட்டுவிடுகிறார் களா? அல்லது லேவாதேவியில் பணத்துடன் கிடைத்த பாவத்தை மழை ஜலம் அடித்துக்கொண்டு போகட்டும் என்று மண்டபம் கட்டி உச்சியில் அந்தப் பாவத்தை வைத்துவிடும் யோசனையா என்ன? கட்டினவன் என்ன நினைத்தால் என்ன? சுவாமி புறப்பட்டால் அங்கே தங்குகிறார். வெயிலுக்கு நிழலைத் தந்தால் விழலுக்கு இறைத்த நீரைப்போலா ஆகிவிடும்? கடவுளின் கடைக்கண் பார்வையேனும் விழும் என்று நம்பித் தானே ஆகவேண்டும்!
இந்த மாதிரி சந்தர்ப்பத்தை உத்தேசித்துச் சவுகார் மண்டபம் கட்டினானே ஒழிய இதர காரியங்களுக்கும் உபயோகமாகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டான். பகல் வேளையில் அந்த மண்டபத்தைப் பார்க்க வேண்டும்! முறுக்கு, மசால்வடை, சுண்டல் விற்கும் கிழவி ஒருபுறம்! ‘பிளாச்சுளை’யுடன் ஈயையும் விற்கும் கிழவி மற்றொரு புறம்! சர்பத் என்று கலர்த் தண்ணீரை விற்கும் அரை மீசைக்காரன் ஒருபுறம். வண்டிக்காரர்கள் வம்பிகளுடன் நடத்தும் பேச்சும் பரிகாசமும் மற்றொரு புறம்! அயர் விலும் நோயிலும் அடிபட்டு விழுந்துகிடக்கும் அநாதை கள் ஒருபுறம். மஞ்சள் குங்குமம், தேங்காய், பழம் விற்பவன் மற்றொருபுறம்!
இவ்வளவுக்கும் அது வியாபார ஸ்தலம். மண்டபத் தைக் கட்டியவன் நினைப்பு ஒருபுறம் இருக்க, மண்டபத்தி லுள்ள வியாபாரிகளைப் பற்றிய வியப்பை அடக்க முடியவில்லை. அரையணாவுக்குத் திருட்டுத் தேங்காயை வாங்கி மூன் றணாவுக்கு விற்கும் ஏழைக் கடைக்காரியின் திறமைக்கு ஆச்சரியப்படுவதா! மைதா மாவில் வர்ணத் தைக் கலந்து குங்குமம் என்று பெயரிட்டு. விற்கும் குங்குமத்துடன் குட்டிப் பொட்டலம் ஒன்றையும் மங்கல வாழ்த்துக்களையும் அளித்து ஒன்றுக்குப் பத்தாகப் பணம் சம்பாதிக்கிறானே அவனுடைய மனத்தத்வ சாஸ்திர அறிவை வியப்பதா! விலையற்ற பொருளாகிய தண்ணீருக்கு விலைவைத்து விற்கிறானே ஷர்பத் கடைக்காரன் அவனை வியப்பதா! இவ்வளவு தகிடுதத்தங்களையும் நேரே பார்த்துக்கொண்டு மோனம் சாதிக்கும் சிவலிங்கத்தை வியப்பதா!
பகலில் மண்டபத்தின் நிலையைச் சொன்னேன்; இரவில் சொல்ல முடியாது. ஏனென்றால் அக்காட்சிகளைப் பார்க்க முடியாது மண்டபத்தில் அவ்வளவு இருட்டு! நகரசபையினர் கஜக் கணக்கைப் பாராட்டாமல் தெருவில் வெளிச்சம் போட்டிருந்தால் அந்த இடத்தில் விளக்கு இருக்கும். ஆனால் ஒன்று. இருட்டினால் ஒன்றும் முழுக்கக் கெட்டுவிடவில்லை. பார்க்க முடியாவிட்டால் கேட்கமுடிகிறது! பார்ப்பதும் கேட்பதும் ஒன்றுதானே!
நேற்றிரவு ஒரு காட்சியைக் கேட்டேன். நக்ஷத்திரங் களும் மையிருளும் கேட்டிருக்கும். சுவாமி பார்த்தும் இருப்பார்; கேட்டும் இருப்பார். அவருக்குக் கண், காது தேவையா என்ன? மண்டபத்தில் ஒரு பெண்ணின் பேச்சுக் குரல் கேட்டது, இல்லை, ஒரு ஸ்திரீயின் குரல் கேட்டது. அத்துடன் ஒரு புருஷனுடைய குரலும் கலந் திருந்தது. மின்னலும் உருண்டோடும் இடியும் என் நினைவுக்கு வந்தன, கொஞ்சநேரம் வரையில் இருட்டு, மோனம், நக்ஷத்திரங்களின் கண்ணிமைப்பு, காற்றின் பாம்புமூச்சு/பிறகு சில்லறைக் காசுகளின் ஓசை! சமூக நெறியையும் சவுகாரின் கனவையும் உடைத்தெறியும் பாவிகள் யார் என்று அறிய ஆசைதான். ஆனால் பாவி களுக்கும் பரிவுகாட்டி இருட்டை இயற்கை அனுப்புகை யில் உறுமுவதற்கு நான் யார்!… அதற்குப் பிறகு ஒன்றும் காதில் விழவில்லை. நானும் தூங்கி விட்டேன்.
பாதி ராத்திரியில் பளீர் என்று அடி விழுந்தது. எனக்கல்ல. இருந்தாலும் விழித்துக்கொண்டு விட்டேன். அடி யாருக்கு விழுந்ததென்று மறு விநாடிக்குள் தெரிந்து விட்டது.ஏனென்றால் இருளை இரு கூறாக்க முளைத்து, வானை நோக்கி வளரும் கத்தியைப்போல் ஒரு பெண் குழந்தையின் அழுகைக்குரல் தொடர்ந்தாற்போல் எழுந்தது. தூக்கக் கலக்கமாக இருந்தபோதிலும் யார் யாரை ஏன் அடிக்கிறார்கள் என்பது எனக்கு எப்படியோ புரிந்துவிட்டது. தவிர அவரை போட்டால் துவரை முளைக்குமா? என்ற பழமொழியின் ஞாபகம். பாவத்தைப் போட்டுப் புதைத்து எழுப்பிய மண்டபத்தில் சன்மார்க் கம் எப்படிப் பூக்கும் என்ற அலட்சியம். ஆகையால் எழுந்திருந்து பார்ப்போம் என்று தோன்றவில்லை.
இந்த மாதிரியான அரைத் தத்துவ தரிசனத்தி லிருந்தே பழைய தூக்கத்துக்குள் புகுந்துவிட்டேன்.
மறுநாள் அமாவாசை. மண்டபத்தின் கடைகளுக்கு விடுமுறை. யாருமே இல்லை, யாரோ ஒரு ஸ்திரீ படுத்துக் கிடந்தாள். அவளுக்கு எட்டாத தூரத்தில் பறட்டைத் தலையுடன் ஒரு பெண் குழந்தை அம்மணமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. மணி எட்டாகியும் அந்த ஸ்திரீ தூங்கிக்கொண் டிருந்தாள். அவள் யாரென்று எனக்குத் தானாகவே விளங்கிவிட்டது. போரடி வைக்கோலைப் போல் கிடந்தாள். அவளைப் பிச்சைக்காரி என்று சொல்ல முடியாது.வயது சென்றவள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் யௌவனம் அன்று. அவளருகில் ஒரு தகரக் குவளையும் கந்தல் புடைவையும் தவிர வேறொன்றும் இல்லை.
பகலில் நான் வீட்டைவிட்டுக் கிளம்பிய பொழுதும் அவள் மண்டபத்தில்தான் இருந்தாள். ஆனால் அப் பொழுது தூணிலுள்ள சிங்கத்தின்மேல் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை கூழாங் கற்களை வைத்து விளையாடிக்கொண் டிருந்தது. ஸ்திரீயின் கண்கள் குழிவிழுந்து மங்கி இருந்தன. இருந்தாலும் நிமிஷத்திற் கொருதரம் அப்புறமும் இப்புறமும் ஆவலுடன் பார்த்துக்கொண் டிருந்தாள்.
ஒரு வேளை பசியோ? பசியில் பலவிதமாச்சே! எந்த விதமான பசியோ! ஆனால் யார் பசியை யாரால் ஆற்றமுடியும்? ஒரு நாள் இரண்டு நாள் என்றால் அன்னதானம் செய்துவிடலாம். அன்னதானத்துக்கு மேலான தானம் இல்லை என்று அவுட்வாணம் விட்டுக்கொண் டிருக்கலாம். பாதி ஜனங்களுக்கு மேற்பட்ட நபர்களுக்கு நிரந்தரமாகச் சாப்பாடு போடுவதென்றால்? இவள் ஒருத்திதானா?…. அவளுக்குப் பசி, குழந்தைக்கும் பசி. அதற்காக நான் எனன செய்யமுடியும்? தத்துவ விசாரணைதான் செய்யலாம். இதை எல்லாம் நினைத்துக் கொண்டே வீட்டை விட்டுக் கிளம்பினேன்.
ஊர் சுற்றிவிட்டுத் திரும்பியபொழுது எனக்குப் பசி. மண்டபத்தைக் கவனிக்கவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு மேல்மாடிக்குச் சென்றேன். மண்ணுடன் எவ்வளவு நேரம் உறவாடுகிறோமோ அவ்வளவு நேரத் தில் கால் பங்காவது வெறும் வெளியுடன் உறவாடா விட்டால் எனக்கு அமைதி இருக்காது. பதினாறுகால் மேல்கட்டு எங்கள் மாடிக்கும் மேல் நின்றுகொண்டு என்னைப் பார்த்து இளித்தது; மாடியில் உலாவிக் கொண்டே மண்டபத்தைப் பார்த்தேன்.
அப்பொழுதும் அவள் உட்கார்ந்துகொண்டுதான் இருந்தாள். குழந்தை அவள்மீது சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தது. பசி என்னும் உணர்ச்சியைச் சித்திரிக்க விரும்பும் சிற்பியாக இருந்தால், நான் அந்தக் காட்சியைத்தான் ஆஸாகக் கொள்வேன். அந்தக் காட்சியைக் கண்ட பிறகு என் புத்தி வேறெதிலும் செல்லவில்லை. கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றேன். தெரு ஓசைகளெல்லாம் அடங்கிவிட்டன. நிழல்கள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடமாடின.
‘படுபாவி, படுபாவி!’ என்ற வசவு காதில் விழுந்தது. அவள் தான் யாரையோ வைதுகொண்டிருந்தாள். மறு நிமிஷம் எழுந்திருந்து மண்டபத்தில் வளைய வளைய வந்தாள். ஓர் இடத்தில் நின்று புடைவையைத் திருத்திக் கட்டிக்கொண்டாள். திரும்ப உட்கார்ந்துவிட்டாள்; தொப்பென்று விழுந்தாள் என்று சொல்வதுதான் பொருத்தம்.
பிரமை பிடித்தவன்போல் மண்டபத்தையே பார்த் துக்கொண் டிருந்தேன். அரைமணி கழிந்தது. குவளையும் மண்டபத்தில் நுழைந்தான். கையுமாக ஒரு பையன் அவனைக் கண்டதுதான் தாமதம்; ஈசலின்மேல் பல்லி பாய்வதுபோல் அவள் பையன் மேல் பாய்ந்து சிண்டைப் பிடித்துக்கொண்டாள். “களவாணிக் கயிதே! காத்தாலே ஆறுமணிக்குப் போனவன்….!”
அவன் அழவில்லை, சிணுங்கக்கூட இல்லை.
‘என்னை அடிக்கத்தானே போறே..அடி, அடி, சும்மா அடி..! எத்தினி வீடு ஏறி இறங்கினேன்னு தெரிஞ்சா அடிப்பியா?”
அவன் கையிலிருந்த குவளையை வெடுக்கென்று பிடுங்கினாள்; ஒருதரம் குவளையைப் பார்த்தாள்.
“ஒரு நாய்க் குட்டிக்குக்கூடப் போதாதே! இந்தச் சோத்தைச் சம்பாரிக்கவா முப்பத்தஞ்சு நாழி போறல்லே!” என்று கூச்சல் இட்டுக்கொண்டே குவளை யைக் கீழே போட்டாள். அதிலிருந்த சோறு நாலா பக்க மும் சிதறி விழுந்தது. குவளையை எறிந்த கையாலேயே பையனை ஓர் அறை அறைந்தாள். பிசாசு அறையும் என் கிறார்கள். இப்படித்தான் இருக்கலாம். சின்னக் குழந்தை யின் கவனம் சோற்றைத் தின்பதில் திரும்பிவிட்டது. அதைப் பார்க்க அவள் திரும்பியபொழுது பையன் திமிறிக் கொண்டு ஓடிவிட்டான். எட்டப்போய் விளக்கடியில் நின்றுகொண்டு நாய் குரைப்பதைப்போல் கத்தினான்.
“உனக்கு இதுனாச்சி கிடைச்சுதே! என் வவுத்தைப் பாரு’ என்று சொல்லி வயிற்றில் அறைந்து காட்டினான்,
ஒட்டிய வயிற்றைக் காண்பிப்பதாக அவன் நினைப்பு.
“வயிற்றைப் பாரு வண்ணான் சால்மாதிரி! எவ்வளவு டத்திலே வளைச்சுத் தின்னூட்டுப் போதெப் போக் கிட்டு வந்தியோ?”
“ஆமா, ஆமா, வண்ணான் சால்தான்! கொழுப்பு! என்னெப்போல நாலு வீட்டிலே ஏறி இறங்கினாத் தெரியும்! எத்தினி ஊட்டிலே தலையிலே தண்ணியைக் கொட்டி விரட்டி அடிச்சாங்கன்னு எல்லையம்மனுக்கல்ல தெரியும்! மண்டபத்திலே குந்திக்கிட்டு மகாராணி மாதிரி முறுக்கறே!’
அதுவரையில் தூண் மாதிரி நின்றுகொண் டிருந்த வள் அவனை நோக்கிப் பாய்ந்தோடினாள். இருளென்னும் நாட்டில் பசி என்னும் விலங்கு வேட்டையாடப் புறப் பட்டால் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் அந்தப் பையனைப் பிடிக்க முடியவில்லை. அடிபட்ட மிருகம் சாவதற்கென்றே குகைக்குத் திரும்பிவிடுவதுபோல் அவள் மண்டபத்கில் சுருட்டி மடக்கிப் படுத்துக்கொண்டு விட்டாள். சின்னக் குழந்தை சிதறிக் கிடந்த பருக்கை களைத் தின்றுவிட்டுக் குவளையைக் காலி செய்து கொண்டிருந்தது.
படுத்தவள் விம்மி அழும் ஓசை மிதந்து வந்தது. இடையில் சில வார்த்தைகள் காதில் விழுந்தன.
“அந்தக் கம்மனாட்டிப் பயல் சொன்னானே-ஒருநாள் நான் இல்லாமலே அந்தக் கழுதைங்களைக் கட்டி மேச்சுடு வியா இன்னு.. சரியாப் போச்சே!… சம்பாரிச்சுப்போட வக்கில்லே – ஓடத் தெம்பில்லாத குதிரை வண்டியை உதைக்கிறாப்போல வார்த்தை மாத்திரம் சொல்லிட்டான்! அந்தக் கம்மினாட்டிக்குப் பொறந்ததுங்க தானே! எப்பிடி இருக்கும்!”
புலம்பலும் விம்மலும் பிறகு ஓய்ந்து விட்டன. விதி, பசி, புண்ணியம், நெறி இவைகளைப் பற்றி அயர் வடையும் வரையில் சிந்தித்துக்கொண்டே தூங்கி விட்டேன்.
இப்பொழுதெல்லாம் பதினாறு கால் மண்டபம் முன் போல அழகாக இல்லை. அதற்கு ஆட்டங் கண்டு விட்டது.வாழ்க்கை நெறியே ஆட்டங்கண்டு விட்டதே! மண்டபம் மட்டும் வாழுமா?
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.