பணக்காரப் பிச்சைக்காரன்
எந்த மதத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், மெய்ஞானிகள் மற்றும் யோகிகளாயினும், அவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஈடுபாடு இருக்கும். பணத்தின் மீதோ, பிற லோகாயத விஷயங்களிலோ நாட்டம் இருக்காது. சூஃபி ஞானிகளும் அப்படித்தான்.

தர்வீஷ்கள் (சூஃபி மார்க்க யோகிகள்) பொதுவாக ஏழைகளாகவே இருப்பர். ஆன்மிகம் மற்றும் மெய்ஞானத்திலேயே அவர்கள் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுவர். பணம், சொத்து – சுகங்கள், அதிகாரம் அரசியல் ஆகியவற்றை விரும்ப மாட்டார்கள். வெற்று மற்றும் தவறான சமய நம்பிக்கைகள், மதவாதம், அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை ஏற்கவும் மாட்டார்கள். சூஃபிகளில் ஃபக்கீர் எனப்படும் நாடோடி யாசகத் துறவிகளும் உள்ளனர்.
ஒரு தர்வீஷ் அமைதியாக பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே இருந்த பணக்கார வியாபாரி ஒருவர், தர்வீஷின் பக்தி சிரத்தையை கவனித்து அதில் மனம் கவரப்பட்டார். அவருக்குப் பண உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது.
தர்வீஷ் பிரார்த்தனை முடிந்து வந்ததும் அவரிடம் நூறு தங்கக் காசுகள் கொண்ட ஒரு பையைக் கொடுத்து, “நீங்கள் ஒரு சிறந்த பக்திமான் என்பது தெரிகிறது. இந்த செல்வத்தை இறைப் பணிக்காக உபயோகித்துக்கொள்ளுங்கள்!” என்றார்.
தர்வீஷ் அதை வாங்கவில்லை. “சற்றுப் பொறுங்கள்! நீங்கள் சொல்கிறபடி உடனடியாக இதை என்னால் பெற்றுக்கொள்ள இயலாது. நீங்கள் எங்களுக்கு தானம் கொடுக்கிறீர்கள் என்றால், பணக்காரர்தானா? உங்களது வீட்டில் இன்னும் நிறைய செல்வம் இருக்கிறதா?”
“ஆம், நான் ஒரு பணக்கார வியாபாரி. என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது!”
“எவ்வளவு இருக்கும்?”
“ஆயிரம் பொற்காசுகள்!”
“மேலும் ஆயிரம் பொற்காசுகளை சம்பாதிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?”
“ஆம்! நான் வியாபாரி என்பதால் தினமும் கடுமையாக உழைக்கிறேன். கடவுளிடம் நிறைந்த செல்வத்தைத் தரும்படி தினமும் பிரார்த்திக்கிறேன். அதனால் எனக்கு நிறைய வருமானம் வந்துகொண்டிருக்கிறது.”
“அப்படியானால், மேலும் ஆயிரம் பொற்காசு கிடைத்ததற்குப் பிறகும் செல்வம் வேண்டுமென்று விரும்புவீர்களா?”
“ஆம்! தொடர்ந்து மேலும் மேலும் பணம் சேர்த்துக்கொண்டு இருப்பதுதானே பணக்காரர்களின் வேலை! எனவே, நானும் தொடர்ந்து பணத்தைப் பெருக்கிக்கொண்டே இருப்பேன். கடவுளிடம் அதற்காக எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டும் இருப்பேன்!”
“அப்படியானால் உங்களுடைய இந்த வெகுமதியை என்னால் பெற்றுக் கொள்ள இயலாது. நான் பெரும் பணக்காரன். பணக்காரர்கள், பிச்சைக்காரர்களிடமிருந்து தானம் பெறுவதில்லை!”
அதைக் கேட்டு வியாபாரிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. “என்னைப் பார்த்து நீங்கள் எப்படி பிச்சைக்காரன் என்று சொல்லலாம்? நான் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் தெரியுமா?” என்று ஆவேசமாக சத்தம் போட்டார்.
“கடவுள் எனக்கு அளித்திருப்பதில் நான் மிகுந்த திருப்தியும், மன நிறைவும் கொண்டவன். எனவேதான் என்னைப் பணக்காரன் என்று சொல்கிறேன். ஆனால் நீங்களோ, போதும் என்ற மனம் இல்லாதவர். உங்களுக்கு அளவுக்கு அதிகமான சொத்து சுகம் இருந்தும் கூட, மேலும் மேலும் செல்வம் சேர்க்கவே பாடுபடுகிறீர்கள்; அதற்காகவே கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டும் இருக்கிறீர்கள். அதனால்தான் உங்களைப் பிச்சைக்காரன் என்று சொல்கிறேன்!”