பச்சாத்தாபம்




(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சீதை அசோக வனத்தில் பல இரவுகள் கண் விழித்து, ஒருநாள், தானும் அறியாமல், பாவம். தூங்கி விட்டாள்.

அசோக வனத்தில் தவித்துக்கொண்டிருந்த காலத்தில் சீதைக்கு அடிக்கடி லக்ஷ்மணனுடைய ஞாபகமே வரும். என்ன காரணமோ, எப்போதும் இராமனை நினைத்துக் கொண்டிருந்தாலுங்கூட அடிக் கடி லக்ஷ்மணன் வந்து அவள் முன் நிற்பது போலும். கண்களில் நீர் ததும்ப, ‘மன்னி இப்படி நீ என்னைச் சொல்லலாமா? என்று பார்வையினாலேயே சொல்லு வதுபோலும் தோன்றும். இதை அவளால் சகிக்க முடியவில்லை. சிறைப்பட்டுக் கிடக்கும் துக்கத்தைவிட இது அவளை அதிகமாக வருத்திற்று. “ஐயோ தம்பியைச் சொல்லக்கூடாத சொல்லைச் சொல்லி ஒரு குற்றமும் அறியாத அவன் மனதை நோகச் செய்தேனே! அரக்கன் என்னைத் தூக்கி வந்த பாவத்தை விட, தம்பிக்கு நான் செய்த பாவமே பெரிது” என்று எண்ணி யெண்ணிப் பரிதபிப்பாள்.
இவ்வாறு நினைந்து நினைந்து வருந்தி வந்தபடியால் அவள் அன்று கண்ணயர்ந்தபோது கனவில் திடீர் என்று லக்ஷ்மணன் அசோகவனத்தில் வந்து குதித்ததுபோல் கண்டாள்.
லக்ஷமணனைக் கண்டதும் சீதைக்கு ஒரே சந்தோஷ பரவசம், தாங்க முடியவில்லை.
‘ஆ! வந்தாயா, தம்பி? நான் பட்ட கஷ்டமெல்லாம் கனவா?” என்று ஆனந்த பாஷ்பம் சொரிந்தாள்.
‘வந்துவிட்டேன், மன்னி! இனிப் பயமில்லை. துயரமில்லை. நான் உன்னை விட்டுப் போனது பெரும் பாவம். நீ என்னை மன்னிக்க வேண்டும்’ என்றான் லக்ஷ்மணன்.
பிறகு சிரித்துக்கொண்டு, “ஆனாலும் மன்னி! நீ என்ன மூர்க்கத்தனம் செய்துவிட்டாய், எவ்வளவு ஆபத்தாயிற்று” என்றான்.
லக்ஷமணன் அப்போது சிரித்த சிரிப்பு காலைப் பனிமேல் சூரிய கிரணம் படும் காட்சியாக இருந்தது. துக்கமும் கண்ணீரும் சிரிப்பும் சந்தோஷமும் கலந்த அந்த சிரிப்பின் அழகை எப்படி எழுத முடியும்?
“நான் செய்தது தவறுதான். தம்பி . ஆனால் நீ என்னை அப்படித் தனியாய் விட்டு விட்டுப் போக லாமா? நான் என்னதான் திட்டினாலும், நீ அண்ண னுக்குச் செய்த பிரதிக்ஞை தவறலாமா? நான் தான் புத்தி கெட்டுப்போய் வாயால் சொல்லக்கூடாத பேச்சைச் சொன்னேன். அதற்காக நீ உன் அண்ணனுக்குக் கொடுத்த வாக்கை மீறலாமா?’ என்றாள் சீதை.
“என்ன வாக்கு? எந்தப் பிரதிக்ஞை ? இராமனுக்கு ஏதாவது நீ வாக்குத் தந்ததுண்டா? நான் கேள்விப்படவில்லையே?’ என்றார் நாரதர்.
[‘நாரதர் இப்போது எங்கே வந்தார்? அவரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?’ என்று வாசகர் கேட்கலாம். கனவில் நடக்கும் சம்பவங்களைப்பற்றி இவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. நாரதர் எப்படியோ வந்து சேர்ந்தார். அது அவருடைய வழக்கம். இது புராணம் படித்தவர்களுக் கெல்லாம் தெரியும்.]
‘வாக்குக் கொடுக்கவில்லையா? இதென்ன இப்படிப் பெரியவர் நீரும் பேசுகிறீர்?” என்றாள் சீதை. உலக மாதாவான சீதைக்கு நாரதரைக் கண்டால் என்ன பயம்?
சீதை கேட்டதற்கு. நாரதர் . “உன் பேச்சைக் கேட்டு. தம்பியை இங்கே இரு என்று சொல்லிவிட்டு இராமன் ஒரே ஓட்டமாய் மானைத் தொடர்ந்து போய் விட்டான். தம்பி என்ன சொல்லுகிறான் என்பதையும் கூட நின்று கேட்காமல் ஓடினானே . லக்ஷ்மணன் தன் வாயால் ஒரு பிரதிக்ஞையும் செய்யவில்லையே” என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த லக்ஷமணன் சிரித்தான். “இப்படியெல்லாம் வாதிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இது ஒரு வேளை ரிஷிகளுக்குச் சரியாயிருக்கலாம். நான் க்ஷத்திரியன். எனக்குப் பொருந்தாது. இரு என்று அண்ணன் சொல்ல. நான் குடிசை வாயிலில் நின்றதே பிரதிக்ஞை” என்றான் லக்ஷ்மணன்.
“இவனை நம்பியல்லவோ, அவர் போய்விட்டார்?” என்றாள் சீதையும்.
“நீங்கள் இருவரும் இவ்வளவு சுலபமாக ஒப்புக் கொண்டால் எனக்கென்ன ஆட்சேபணை? உங்கள் பாடு’ என்றார் நாரதர்.
“நான் திட்டி விட்டால் உனக்கு என்ன நேர்ந்து விட்டது?” என்றாள் சீதை : ”ஏன் ஊரைவிட்டு அரண்மனையை விட்டுக் காட்டுக்கு வந்தோம், சத்தியத் திற்குப் பயந்து அல்லவா? பரதன் சொன்னதையும் மறுதளித்து. ஊரார் சொன்னதையும் நிராகரித்து வனவாசம் கொண்டது பிரதிக்ஞையைக் காப்பாற்ற வல்லவா? என்றாள்.
“பொறுக்க முடியாத சொல்லைச் சொல்லி என் இதயம் துடிக்கச் செய்தாயே? என்றான் லக்ஷ்மணன். கொஞ்ச நேரம் பொறுத்து.
“ஊரெல்லாம் திட்டினாலும் நீ இடத்தைவிட்டு நகரலாமா?” என்றாள் சீதை.
“ஆம். மன்னி. நீ சொல்வது சரியே. அன்று உன்னை விட்டுப் போய்ப் பாதி வழி நடந்ததும் எனக் கும் அப்படித்தான் தோன்றிற்று. மன்னி திட்டினால் அது என்னை என்ன செய்யும்? அண்ணனுக்குக் கொடுத்த வாக்கல்லவோ பெரிது என்று திரும்பி னேன். பத்து அடி குடிசையை நோக்கிச் சென்றேன்…”
பாணகுடியில் சன்னியாசி வேஷம் தரித்த இரா வணன், சீதை அளித்த பழத்தைச் சாப்பிட்டுக்கொண் டிருந்தவன், திடீர் என்று நடுக்கம் கொண்டான். அப் போதுதான் லக்ஷ்மணன் திரும்பப் பார்த்த சமயம். அவன் இடது கண்ணும் இடது கையும் துடித்தன. பழத்தை இலையில் வைத்து, வாசலை நோக்கிப் பார்த் தான். லக்ஷ்மணன் வந்து விடுவான். ஓட்டம் பிடிக்க வேண்டும் என்று பயந்தான்.
“பயப்படாதே” என்றார் நாரதர். இந்தப் பொல்லாத ரிஷி மறுபடியும் அங்கே எப்படியோ வந்து கலந்து கொண்டார்.
(இதென்ன, கதை புதுத் தினுசாக இருக்கிறது. கோர்வையில்லாமல் உளறலாக இருக்கிறது, அசோகவன மெங்கே , பாணகுடி எங்கே?… ஆட்சேபிக்க வேண்டாம். கனவு, அதிலும் மகாசோகத்தில் மூழ்கியிருந்த சீதையின் கனவு. அதற்கு வரையும் முறையும் கிடையாது.)
“பத்து அடி நடந்தேன். குடிசைக்குத் திரும்பிப் போக. மறுபடி மன்னி. கோபத்தால் சிவந்த உன் கண்களும், சுருங்கிய நெற்றியும் என் கண் முன் வந்து நின்றன. ஆ! போகாமல் வந்துவிட்டாயா. துஷ்டா” என்று காளியின் அவதாரமாக நீ சீறிப் பாய்ந்தது போல் கண்டேன். மறுபடி திரும்பினேன். அண்ணனுக்குக் கொடுத்த பிரதிக்ஞை தூர ஓடிப்போய்விட்டது. நீ சொன்ன வார்த்தைகளும், என்னுடைய அகங்காரமும் புத்தியை மயங்கச் செய்தன. எவ்வாறாயினும் ஆகட்டும், மானமல்லவோ பெரிது என்று பல்லைக் கடித்துக்கொண்டு, மாயமான் குரலைத் தொடர்ந்து சென்றேன்.”
“ஐயோ!” என்றாள் சீதை. “அப்போது நீ வந்திருந்தால் நான் பிழைத்திருப்பேனே!” என்றழுதாள்.
“நடந்தது நடந்துவிட்டது. இப்போது கிளம்பு. போவோம்! இனிப் பழைய துக்கம் என்னத்திற்கு? நான் தான் வந்துவிட்டேனே” என்றான் லக்ஷ்மணன்.
“தம்பி! உனக்கு எவ்வளவு பெரிய அநியாயம் செய்தேன்! இதற்கு எவ்வாறு பிராயச் சித்தம்” என்று பரிதபித்தாள் சீதை.
“கிளம்பு, கிளம்பு” என்று லக்ஷ்மணன் சீதை யைத் தட்டினான்.
கனவில் இவ்வாறு தட்டினதும் சீதை விழித்துக் கொண்டாள். லக்ஷ்மணனுமில்லை. நாரதருமில்லை, சுற்றிலும் அரக்கிகள்! அவர்களில் ஒருத்தி. “ழு எழு! என்ன உறக்கம்? இராவணேசுவரன் வரு கிறான். அதோ ஒலிக்கிறது சங்கு! அவன் சொல்லுகிறபடி செய். மூர்க்கத்தனம் பண்ணாதே! இராமனும் லக்ஷ்மணனும் கடலுக்கு அப்பால் அலைந்துகொண் டிருக்கிறார்கள். அவர்கள் இவ்விடம் வர ஒரு நாளும் முடியாது. நீ இராவணன் மனைவிதான் சந்தோஷமாய் ஒப்புக்கொள். வந்த சௌபாக்கியத்தை ஏன் வேண்டாம் என்று தள்ளி வாழ்நாளை வீணாக்கிக் கொள்ளுகிறாய்?” என்றாள்.
“ஆ!” என்று கதறினாள் சீதை. மரமும் செடி யும் பெருமூச்சுவிட்டன.
இதற்கு மறுநாள் தான் அனுமான் கடலை ஒரே தாண்டாகத் தாண்டி இலங்கை வந்து சேர்ந்தான். அனுமான் வருவதற்கு முன் சூசனையாக இந்தக் கனவைச் சீதை கண்டாள். இம்மாதிரிச் சில சமயம், வரும் சம்பவங்களைக் கனவில் முன்னால் காண்பது உண்டல்லவா? சீதைக்கு அப்போது அனுமானைத் தெரியா தாகையினாலே அனுமானுக்குப் பதில் தன் கனவிலே லக்ஷ்மணனைக் கண்டாள்.
பிறகு அசோகவனத்தில் நடந்த கதை எல்லாருக்கும் தெரியும். அனுமான் யார் என்பது தெரிந்ததும். சீதை முதல் முதலில் கேட்ட கேள்வி, “லக்ஷ்மணன் சௌக்கியமா?” என்று. அதன் பிறகுதான் புருஷனைப் பற்றி க்ஷேம சமாசாரம் கேட்கலானாள்.
தான் லக்ஷ்மணனுக்குச் செய்த அநியாயத்திற்காகச் சீதை வருத்தப்பட்டது. அவளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. யாரிடமும் சொல்ல முடியாத வருத்தமே கொடிய வருத்தம் அல்லவா?
சீதை பட்ட துக்கத்தையெல்லாம் நினைத்து, நாமும் ஓரளவு நம்முடைய துக்கங்களை மறக்கலாம். அனுமான். ‘சிரஞ்சீவி’ என்கிறார்கள் பெரியோர்கள். அதாவது, இப்போதும் எங்கேயும் நமக்கு உதவக்காத் திருக்கிறான். துக்கம் ஏற்பட்டால், ராம, ராம என்று சொல்லிக்கொண்டு பொறுப்போம். அனுமான் வந்து நிவாரணம் செய்வான் என்பதில் சந்தேகமில்லை.
– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி