கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,761 
 
 

“இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’

ஆசையோடு கேட்டான் அமுதன்.

“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா…கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா, என் மனைவி.

அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க…. உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.

“வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன்.

“என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்.

“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்.

“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் அமுதன். “என்னடா சந்தேகம்?’

“தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை…உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே?’

என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்.

– பட்டுக்கோட்டை ராஜா (ஜனவரி 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *