பக்ஷிகளின் தேசம்




ஆற்றங்கரையில் அன்று அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சகோதரர்கள் பயிர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான நிலத்தில் உழைத்து களைத்து களித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அவர்கள் வழிபடுவதெற்கென எந்த தெய்வத்தையும் அவர்களின் முன்னோர்கள் கை காட்டிச் செல்லவில்லை.
இப்படியாக இருந்த காலத்தில் வடக்கிருந்து வீசிய காற்றில் சில விஷப் பக்ஷிகள் அங்கே பறந்து வந்தன.
முன் நெற்றியில் சிறு கோடுகளும் கூறிய மூக்கும் கொண்ட அப்பறவைகள் நோட்டம் விட்டன.ஆங்காங்கே இருந்த குன்றுகளின் மீது அமர்ந்து கொண்டன .யாரிடமும் அவர்கள் அடிமைப் படாமல் மண்டியிடாமல் வாழ்ந்தமை கண்டு குறுகுறுத்தன.மேய்ப்பனாகவும் விளைப்பனாகவும் இருந்த அவர்களை மேய்க்கத் துடித்தன.உயரத்தில் அமர்ந்ததால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று தாமாகவே சொல்லிக் கொண்டன.
குன்றின் மீது அமர்ந்து கொண்டு அவை மேய்ப்பனுக்கும் விளைப்பனுக்கும் குறி சொல்லத் துவங்கின.பிறப்பால் தம்மை அறிவு ஜீவிகளாகவும் தங்களின் பாஷையை கடவுளின் மொழியாகவும் பிரகடனம் செய்தன.
மேய்ப்பனும் விளைப்பனும் வியந்து பார்த்தான்.தன்னை நொந்தான் தன் மொழியை வெறுத்தான்.கையை உயர்த்தி பக்ஷிகள் கால்களில் வீழ்ந்தான்.காணிக்கை படைத்தான்.பக்ஷிகள் மெதுவே கீழே இறங்கின.மேய்ப்பனின் மாடுகள் மீது அமர்ந்து கொண்டன.அவற்றின் காதைக் கொத்தி காயம் செய்தன.விளைப்பனின் தானியம் சுரண்டி செல்வம் சேர்த்தன.வடக்கு தெற்கென கிழக்கு மேற்கென உழைப்பவன் திசைகளில் பெரு நிலமெங்கும் அவை அலைந்து திரிந்தன.மேய்ப்பனும் விளைப்பனும் ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழி பேச, திணறத் தொடங்கின விஷமப் பக்ஷிகள்.அவை குன்றுகள் மீது அமர்ந்தவாறு ஒன்றாய்க் கூடி ஒரு சூழ்ச்சியைச் செய்தன.
இப்பெரு நிலம் முழுவதும் இனி ஒரு தேசம் என்றன.தேசம் முழுவதும் ஒரு மொழி வேண்டும் என்றன.அதனைக் காடு மேடெல்லாம் எச்சமிட்டன.மேய்ப்பனும் விளைப்பனும் கொதித்துக் கிளம்பினான்.அவர்கள் தோளின் மீது அமர்ந்த பக்ஷிகள் காதில் இறையாண்மை என்றொரு பாடம் புகட்டின.மேய்ப்பனும் விளைப்பனும் அடங்கிப் போக பக்ஷிகள் தேசம் நீண்டு பரந்து கிடந்தது.