பகுத்தறிவாளன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 7,785
என் நெருங்கிய நண்பன் அறிவுச்சுடர். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவன்.மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக பிறவி எடுத்தவன் போல் நிறையப் பேசுவான்..
பல வருடங்களுக்குப்பிறகு அவனுக்கு குழந்தை பிறந்திருந்தது. நானும் குழந்தையைப் பார்க்க மருத்துவ மனைக்கே போயிருந்தேன்.
நிறைய உறவுப் பெண்கள் குழந்தையைப் பார்க்க வந்திருந்தார்கள். வந்த பெண்களில் ஒருத்தி குழந்தையை எடுத்து கொஞ்சிக் கொண்டே, குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிரித்து அதில் ஒரு இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து விரல்களை அழுத்திப் பிடித்துக் கொண்டே,
”டேய்!…..அறிவு….உன் குழந்தை உன்னை விட ரொம்ப புத்திசாலியாக வருவான்…..பணத்தைக் கொடுத்தவுடன் எப்படி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் பார்!….”என்று பெருமையாகச் சொன்னார்கள்.
அதை அறிவுச்சுடரும் சிரித்துக் கொண்டே ரசித்தான்.
அதைப் போலவே வந்திருந்த எல்லாப் பெண்களும் அவரவர் தகுதிக்கேற்ப பணத்தை குழந்தையின் பிஞ்சு விரல்களில் வைத்துக் கொடுத்தார்கள்.
கட்டிலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, அறிவுச்சுடர் அந்த நோட்டுக்களை பெருமையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
கொங்கு நாட்டில் பிறந்த குழந்தையைப் பார்க்க வருபவர்கள், குழந்தையின் கைகளில் பணம் வைத்துக் கொடுத்துப் பார்ப்பது நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் தான்!
எல்லோரும் போன பிறகு நான் மட்டும் அறிவுச்சுடர் பக்கத்தில் இருந்தேன்.
“டேய்!….அறிவு…குழந்தைக்கு இரண்டு நாள் தான் ஆகிறது….பச்சை குழந்தையிடம் நோய் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும்….இந்த நோட்டுக்கள் கொஞ்ச நேரத்திற்கு முன்பு எந்த நோயாளியின் கைகளில் இருந்ததோ!.உனக்குத்தெரியாதது ஒன்றும் இல்லை…..பணம் என்று வரும் பொழுது நீ கூட அரசியல் வாதிகளைப் போல் உன் கொள்கைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டாயே!..”.என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.
பாவம் அறிவுச்சுடரால் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்!