நேரில் கடவுள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,526
அறை வாசலில் நிழலாட ‘யாரது?” படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா.
நடுத்தர வயதுக்காரனொருவன். ‘அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?” கேட்டபடி உள்ளே வந்தான்.
‘ஆமாம் நீ யாரு?”
‘நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர்றேன், கலெக்டர் கோபிநாத் அய்யா அனுப்பிச்சார். போன வாரம் அவர் இந்த முதியோர் இல்லத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தப்ப உங்களைப் பார்த்தாராம்,பேசினாராம். அவர் உங்க கிட்டப் படிச்சவராமே? .அவர் இங்க வந்தப்ப நீங்க தங்கியிருக்கற இந்த அறையையும் வந்து பார்த்திருப்பார் போலிருக்கு. இங்க இருக்கற வசதிக்குறைவுகள் அவரை ரொம்பவே பாதிச்சிடுச்சு போல அதான் உங்க வசதிக்காக உங்க சந்தோஷத்துக்காக வாட்டர் ஃபில்டர், ஃபேன், ஃபிளாஸ்க் இன்னும் கொசு வலை எமர்ஜென்ஸி லைட்டு பெட்ஷீட்டு, தலையணைக!..ன்னு…எல்லாம் வாங்கி அனுப்பிச்சிருக்கார் வேற ஏதாவது வேணுமின்னாலும் கேட்டுட்டு வரச் சொல்லியிருக்கார்”
படுக்கையிலிருந்து எழுந்து வந்து வெளியே எட்டிப் பார்த்த ரங்கசாமி அய்யா, வராண்டா முழுவதும் கலெக்டர் அனுப்பி வைத்த பொருட்கள் நிறைந்திருக்க மெலிதாய்ப் புன்னகைத்தார்.
‘அப்ப .உள்ளார கொண்டு வந்து வெச்சிடட்டுமா?” அந்த அரசாங்க சிப்பந்தி அவசரப்பட,
‘ம்ஹ_ம் .வேண்டாம் .இதையெல்லாம் அப்படியே திருப்பி எடுத்திட்டுப் போயி உங்க கலெக்டர்கிட்டயே குடுத்துடுங்க” சொல்லி விட்டு அவனை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் அறைக்கு வெளியே அனுப்பி கதவை ஓங்கிச் சாத்தினார் தமிழாசிரியர்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு. அறைக் கதவு தட்டப்பட தள்ளாட்டமாய் எழுந்து போய்த் திறந்தார். கலெக்டரும் அவருடன் அந்த முதியோர் காப்பக சிப்பந்திகள் சிலரும் நின்றிருந்தனர்.
‘அய்யா! நான் அனுப்பிய பொருட்களை நீங்க திருப்பி அனுப்பிட்டதா வந்து சொன்னாங்க. ஏன்?..என்ன காரணம்? நான் தெரிஞ்சுக்கலாமா?” மிகவும் பவ்யமாகக் கேட்டார் மாவட்டக் கலெக்டர் கோபி நாத்.
‘கலெக்டர் தம்பி. ஒண்ணு நல்லாத் தெரிஞ்சுக்க! ..நீ பார்க்கிற இந்தக் கலெக்டர் உத்தியோகம் ஒரு பொது நலம் பேணுற உத்தியோகம். அப்பேர்ப்பட்ட பதவில இருந்துக்கிட்டு தனி மனித நலனை மட்டும் பார்க்கக் கூடாது. இப்ப இன்னிக்குத் தேதில இந்த முதியோர் இல்லத்துல கிட்டத்தட்ட அறுபது அறுபத்தி அஞ்சு முதியோர்க இருக்காங்க அவங்க எல்லோருமே என்னைய மாதிரி இந்த வசதிக்குறைவுலதான் இருக்காங்க. அவங்கெல்லாம் அப்படியிருக்கும் போது நான் மட்டும் நீ அனுப்பிச்ச பொருட்களோடு வசதியா சந்தோஷமா இருக்கலாமா? இருக்கத்தான் முடியுமா? அது மட்டுமில்லை அவங்க மனசுல ‘இந்தக் கலெக்டர் பாரு தன்னோட பழைய ஆசிரியருக்கு மட்டும் எல்லா வசதியும் செஞ்சு குடுத்திருக்காரு” ன்னு நெனைச்சிட்டாங்கன்னா. அது உனக்கும் கேவலம் உன்னை ஆளாக்கிய ஆசிரியரான எனக்கும் கேவலம். அதான் திருப்பியனுப்பிச்சேன்.. வேணா இப்படிச் செய்வோம் இங்கிருக்கற அத்தனை பேருக்கும் அதே மாதிரிப் பொருட்களை அனுப்பி வை எல்லோருமே சந்தோஷமா நன்றியோட ஏத்துக்கறோம்”
நெகிழ்ந்து பான கலெக்டர் தன் பழைய ஆசிரியரின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘அய்யா நீங்க இன்னும் மாறவேயில்லை. அதே சுயநலமில்லாத மனசு அதே பொது நலம் பேணுற பேச்சு”
‘தம்பி. இது அந்தக் கால பழைய மனசு. பரந்த மனசு. எந்தச் சூழ்நிலையிலும் அது மாறாது மாற்றவும் முடியாது”
அடுத்த இரண்டு நாட்களில் அந்த முதியோர் இல்லத்தின் எல்லா அறைகளும் சகல வசதிகளோடு ஜொலித்தன.
– ஆகஸ்ட் 2012