நேசம்




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தொடையில் புல்லாங்குழலைத் தட்டியபடி, பையன், உள்ளே நுழைந்தான்.
அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

அம்மா தையல் மெஷினை ஆட்டிக்கொண்டிருந்தாள். ‘கொடக் கொடக்’ –
தாத்தா, ஜன்னலுக்கு வெளியே, செடியில், பெருமை யாக ஆடிக்கொண்டிருந்த ஒற்றைச் செம்பருத்திப் பூவைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
“நான் இன்னிக்கு ஒரு பாம்பு பார்த்தேனே!” பையன் பொதுவாகக் கூடத்தில் தாயம் உருட்டிவிட்டான். ஆனால் யாரும் எடுக்கவில்லை.
‘நான் இன்னிக்கு ஒரு பாம்பு பார்த்தேனே!” என்றான் மறுபடியும். மாலை மஞ்சள் வெயில், அவன் தலையைத் தங்க ப்ரபையாக்கிற்று. குரலில் இளநீர் விதிர்விதிர்த்தது. பேச்சிலேயே ஒரு மழலைக் கொழகொழப்பு.
ஆ! என்றார் அப்பா. அவர் கைகளிடையே, பொறுமையிழந்து, பேப்பர் மொடமொடத்தது. இந்த ஃபாக்லண்ட்ஸ் விவகாரம் – பசங்க சண்டை போடறான் களா? கோலாட்டம் போடறான்களா?
தாத்தா அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.
“தாத்தா,நான் ஒரு பாம்பு பாத்தேனே! ஓடத்தின் உள்வளைவு போல் குரல் தோய்ந்து மேல் ஏறிற்று.
அம்மா அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தாள்; “என்னடா சொல்றே , பாம்பா? ஐயோ. கடிச்சுடுத்தா? சொல்லேண்டா!”
“அடாடா, என்ன நடிப்பு! என்ன நடிப்பு! சந்திரமதி தோத்தாள் போ!” பேப்பர் பின்னிருந்து.
“உங்களுக்கென்ன இந்த சுடுகாட்டில் வெச்சுட்டு ஆபீசுக்குப் போயிடறேள்! அடிச்சுப் போட்டால் கூட கேட்க ஆள் கிடையாது! கரையான், தவளை, நண்டு, தேள்- பாம்பு ஒண்ணுதான் குறைச்சலா இருந்தது.”
“ஆரம்பிச்சாச்சா?”
“நான் சொல்றேன், பேசாமே இங்கேயே ஒரு மரத்தடியில் என்னை உசிரோடே பொசுக்கிடுங்கோ”. குரல் பலப்பம்போல் கிறீச்சிட்டுக்கொண்டே போய் உச்சத்தில் ‘பட்’டென்று உடைந்தது.
ஹிஸ்டீரியா கேஸ். பேச்சைக் கொடுத்தால் மாட்டிண் டேன். பேப்பர் தன்னை இன்னும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டது. தெரிஞ்சு பேசறாளா? தெரியாமல் பேசறாளா? ஸிட்டிக்குள்ளே ஒரு ரூமும் தாழ்வாரமும், அதனுள்ளேயே இதர வாணவேடிக்கை – 300 ரூபாய் கேக்கறான். தவிர அட்வான்ஸ் மூணு கழியிலே மூணு. எங்கே போறது? அதுக்கே ஊசிகுத்த இடமில்லை.
இவா நாய்ச்சண்டைக்கு சாட்சி வைக்கத்தான் ஊரிலிருந்து என்னை வரவழைச்சானா? ஒரு பிள்ளைன்னா சொன்னபடி ஆடியாகனுமா? நம் மரியாதையை நாம் காப்பாத்திக்கணும்னா, நாம் தூரத்துப் பச்சையா இருந்துடணும். வளரும் பச்சைக்கு நல்ல சூழ்நிலையப்பா இது!
“இங்கே வாடா பையா, என்கிட்டே சொல்லு!”
பையன் உற்சாகத்துடன் வந்தான். அவன் பேச்சு இங்கே எடுக்கும்.
“என் மடியிலே உக்காந்துக்கோ. ஏலே, லேசா! நல்ல கெட்டிதாண்டா நீ!பார்த்தால் சித்துளியாட்டம் இருக்கே!”
வேகமாகச் சாய்ந்துகொண்டிருந்த சூரிய தூலத்தை இசைகேடாக வாங்கிக்கொண்ட கோணத்தில் அவன் விழிகளில் ஒரு தகதகப்பு வீசிற்று. லேசாகக் கொடுக்கு. தூக்கின மூக்கு நுனி, முக்கோணத்தில் மடித்த பீடாப் போல், அந்த மோவாய்க் கூர், கன்னத்தில் இன்னும் கொஞ்சம் சதை பிடிச்சால் அவளேதான் அச்சு. பருப்பும் நெய்யும் இன்னும் ரெண்டு பிடி கூடப் பிசைஞ்சாகணும். ஆனால் இவா என்ன செய்வா? இவா பாடே தினம் குழம்பத் தானாயிருக்கு! நமக்கேன் பாடு?’எங்கே பார்த்தே?”
“தாத்தா! தாத்தா!” மடியில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டான். “இங்கேருந்து இப்டீ நடந்து நேரே போனோமா? ரொம்ப தூரம் போனா, அங்கே ஒரு பெரிய இடம் இருக்கும். நானே கண்டுபிடிச்சேன் தாத்தா! இர்ருமாதிரி இன்னும் ரெண்டு மூணு கண்டுபிடிச்சு வெச்சிருக் கேன்! நேக்கு மட்டும்தான் தெரியும். இந்த இடம் போய் முனை கூரிச்சுக்கும். நெண்டு ஸைடும் ஒரு பக்கம் பள்ளம், ஒரு பக்கம் பாறாங்கல் பெரிஸ்ஸும் சின்னதுமா நிறையக் கிடக்கு.
“ஆ!”
“அங்கே நடந்தால், காலுக்கடியில் சரக் சரக், ரொம்ப தமாஷ் ! நிறைய பிள்ளையார் கண் வாரி இறைஞ்சு கிடக்கு. ஒரே கண்மணியா கொட்டிக்கிடக்கு! அங்கே மானம் மிதக் கிறது, கைக்கு எட்டற மாதிரி.”
“தொட்டையா?'”
“எட்டமாட்டேன்கறது தாத்தா! தொட்டனால், ஒரு கதவு திறந்தால், பாட்டி வாசற்படியிலே நிற்கமாட்டா? என்ன தாத்தா முழிக்கிறே கோவமா? நீங்கதானே சொன்னேள், பாட்டி மானத்துக்குப் போயிட்டான்னு!”
தாத்தா மூக்கைப் பலமாக உறிஞ்சிக்கொண்டார். “கோவமில்லே சொல்லிண்டு போ” அவர் முகம் திடீரென மிக்கச் செவேல்,கழுத்து, பிடரி வரை.
“அங்கே ஒரு முள்ளு மரம் ஒத்தையா நிக்கும். அதன் கீழே உக்காந்துண்டுதான் நான் வாசிப்பேன்.”
“பாடமா?”
“அட போ தாத்தா! புல்லாங்குழல்!” அவர் முகத் தெதிரே அதை ஆட்டினான்.
“ஏது இது?”
“தொல்ல மறந்துத்தேனே! பத்து நாளைக்கு முன்னாலே அதே மரத்தடியிலே கிடந்தது.”
”உனக்கு முன்னாலேயே வாசிக்கத் தெரியுமா? யார் கத்துக் கொடுத்தா?”
“நானேதான்.”
“ஓஹ்ஹோ? மாலி!” பேப்பர் பின்னாலிருந்து.
“மொதல்லே வயித்தை உப்பி ‘தம்’ புடிச்சி ஊதி ஊதி முடியல்லே. சத்தமேவல்லே. அப்புறம் அலுத்துப்போய் ஒரு பெருமூச்சு அதுலேபட்டு உள்ளேருந்து கொஞ்சிண்டு ஒரு குரல் வந்தது. பாருங்கோ ஓ! அப்படியா சமாச்சாரம்னு தெரிஞ்சுடுத்து. உப்பி உப்பி ஊதக்கூடாது. ஸன்னமா ஊதனும். குட்டி குட்டியா குருவி குருவியா சத்தம் தாத்தா. தாத்தா, சத்தம் இந்த எட்டு ஓட்டைக்குள்ளும் கூடு கட்டி யிருக்குமா? அப்பப்போ இரைதேடப் பறந்துபோயிடுமா? அப்பப்போ திரும்பி வருமா? இதனுள்ளே அதனிஷ்டத்துக்கு இருக்கும்போல் இருக்கு. ஒரு குருவியே உள்ளே ஓடி ஓடி விளையாடறதா? தனித்தனியா எட்டு குருவியா?”
இவன் இங்கே ஏன் தப்பிப் பிறந்தான்?
“விரலாலே தடவிக்கொடுத்தால் முதுகை நெளிஞ்சு கொடுக்கறது தாத்தா! பிரியமாயிருக்கு தாத்தா? ஆனால் கண்ணுக்கு ஏன் தெரியமாட்டேன்கறது? பட்சியிலே இப்படி ஒரு ஜாதியா தாத்தா?”
தாத்தா பாட ஆரம்பித்துவிட்டார்.
“வானத்தில் ஒரு மயிலாடக் கண்டேன்.
மயிலும் குயிலாச்சுதடி”
சாரீரத்தின் வெண்கல நாதத்தில், கூடத்துள் திரண்டு இறங்கிக்கொண்டிருக்கும் மாலையிருள். திரை மடிகள் அசைந்தன. சுவர் மூலைகளில், கட்டிலுக்கடியில், சுவருக்கும் சுவாமி படங்களுக்கும் இடைவெளியில் கூரையின் விட்டங் களில்… இருள் அலைகள் சுருண்டு வந்து பந்தாக…
“சுக்கடா கடகடா கக்கடா..”
இந்த நேரத்துக்கே காத்திருந்தாற்போல் இதென்ன சத்தம்? பட்சியா, பூச்சியா, வேறேதேனும் ஜந்துவா?
வானமாதேவி தன் கூந்தலை அவிழ்த்துவிட்டாற்போல, கறுக்கலில் ஒரு பளபளப்பு, மெருகு ஏற ஆரம்பித்துவிட்டது. அவிழ்ந்த கூந்தலில் பூக்களென மீன்கள் கொத்தாயும் தனி யாகவும் சுடர்விட்டன். நேரத்தில் ஒரு நறுமணம் அமானுஷ்யம், இன்ப அபாயம், ரகஸ்யத்தின் மலர்ச்சி-
பையனுடைய விரல் நுனிகளடியில் புல்லாங்குழலிருந்து குருவி மூக்குகள் செல்லமாகக் கொத்தின.
“வாசிச்சுண்டிருந்தேனா? அப்போ தாத்தா, பாறாங்கல் பின்னாலிருந்து தலை எட்டிப் பார்த்தது. நீண்டுண்டே வந்தது. நன்னா நீளமாயிடுத்து. தெருவிலே வேடிக்கை காட்டறாளே முதுகுலே படார் படார்னு தன்னையே அடிச்சுண்டு அந்த ஜாட்டியாட்டாம். தடியா நீளமா, அது வெள்ளை, இது அட்டக்கரி.”
“உனக்குப் பயமில்லையா?”
“வாசிச்சுண்டேயிருந்தேன் தாத்தா நாக்கு சுளுக்கிண்ட மாதிரி வலிச்சது. ஆனால் நிறுத்திட்டேன்னா என்னமாணும் பண்ணுமோன்னுதானிருந்தது. கேக்க வந்திருக்கே! அதோ அம்மா இருக்காளே, அந்த தூரத்துலே அது இருந்தது; நின்னுடுத்து. ஒண்ணும் பண்ணல்லே. நாங்க பேசிண்டோமே தாத்தா!”
“பேசிண்டீர்களா, என்ன பேசினீர்கள்?” என்று கேட்கப் பயமாயிருந்தது. பையன் தொட்டிருக்கும் கட்டம் அப்படி.
அவன் சொல்லில் அவனுக்கு எள்ளளவுகூட சந்தேகமற்ற நேரம்.
காண்பதெல்லாம் அதன் சத்யத்தை வெளிப்படுத்தும் நேரம்.
இதயம் அதன் கமலம் விரியும் சமயம்.
முத்துச்சிப்பி, காத்திருந்த மழைத்துளியை, வயிற்றுள் வாங்கிக்கொண்டு வாய்மூடும் தருணம்.
யட்சதேவன் புஷ்பத்துள் புகுந்துகொண்டதும், பூவின் இதழ்கள் குமிழும் நேரம்.
ஸர்வே ஜனோஸுகினோ பவந்து: ஸர்வம் ப்ரேம மயம் ப்ரம்மம், த்யானம் கலைந்து.
புவனத்துக்கு ஆசியில் அபயஹஸ்த முகூர்த்தம்.
“என்ன பேசிண்டேளோ?” அவருக்குக் கேட்கத் தைரியமில்லை. கேள்வி மூச்சாகத்தான் வந்தது.
“சொல்லத் தெரியல்லே தாத்தா!” செடியினின்று காம்பு கழன்றுகொண்டிருக்கும் பூப்போல் அவன் கரம் தவித்தது.
“ஆனால் எங்களுக்குள் ஒரு நேசம் – என்ன தாத்தா உங்களுக்குத் தூக்கிப் போடறது?”
“என்ன சொன்னே?”
“நேசம் – சினேகம், ஃப்ரண்ட்ஸ்-பாடப் புஸ்தகத்தில் வந்திருக்கு தாத்தா!”
“சரி, அப்புறம்.”
“அப்புறம் ஒண்ணும் இல்லை. கொஞ்சநேரம்தான். தானாவே வந்தவழியே போயிடுத்து. நாக்கை நீட்டி நீட்டி. அதுக்கு ஏன் நாக்கு கிழிஞ்சிருக்கு?”
தாத்தா ஏதும் பதில் பேசவில்லை. ‘தாத்தா ! தாத்தா!’ இல்லை அவர் பதில் பேசமாட்டார் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன், அவர் மடியிலிருந்து இறங்கினான். நேரம் அதன் பிறகு கலைந்துவிட்டது.
தள்ளாடித் தள்ளாடி மாடிப்படி ஏறினான், சின்னப் பசங்க ஸ்டைல். மாடியில், ஒரு ஒதுக்கம் இருந்தது. அறையு மில்லை தடுப்புமில்லை. மொட்டை மாடிக்கு வாசற்படி தாண்டுமுன் ஒரு அகல, பெரிய வாசற்படி என்று சொல்ல லாம். நவராத்திரி கொலுப்பெட்டி, வேண்டாத கண்டான் முண்டான், காதறுத்தானுக்கு இடம் ஆனால் அது அவன் இடம். தனியிடம் யாரும் வரமாட்டார்கள்.
பெரியவருக்குத் தூக்கம் வரவில்லை. வெகுநேரம் படுக்கையில் புரண்டு பார்த்துவிட்டு, எழுந்து, கூடத்தில் உலவினார். மீண்டும் படுக்கையில் உட்கார்ந்தார். இருப்பு கொள்ளவில்லை.
“அடியே நேசம், மோசம் பண்ணியேடி!”
ஸ்பரிசம் உறுதுணை. அதற்கு வயது கிடையாது. அம்மா தாலியைத் தொட்டுக் கொண்டு பால் குடிக்கும் குழவியி லிருந்து ஆண்டவன் அப்படி ஒரு வேடிக்கை காட்டுகிறான்! அதுவும் இந்த வயசில் எங்களைச் சதையாகப் பார்க்கும் கண்களில்தான் காமம். எல்லாத்துக்கும் அதனதன் வயசு, காலம் இல்லையா? பெத்ததும் குறைச்சல் இல்லை. ஆனால் மிச்சம் வெளிக்குக் ஒண்ணுதான்! அதுவும் சுவாரஸ்யமில்லை. காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளமுடியுமா?
ஆக மொத்தம் எல்லாம் வந்து, போய் நிகரமிச்சம் மாட்டுக்கொட்டாயில் மாடுகூட இல்லை. கொல்லையோரம் ரெண்டு தென்னை, அதில் ஒண்ணு மலடு. இன்னொன்னுக்கு மூக்கில் வேர்த்து, முகம் தெரியாப் பங்காளி வந்துடறான். ராத்ரி பங்காளி
கிணற்றில் கற்கண்டு மாதிரி ஜலம். தாகத்துக்கு அக்ர ஹாரமே இங்கேதான் மொள்ளறது. வேலியோரம் அரச பார்த்த மரத்தடியில் பாம்புப் புத்து: பாம்பை யாரும் தில்லை. ஆனால் புற்றுக்குப் பால் ஊத்தறவாளும் பிள்ளை வரம் வேண்டிக்கறவாளும் குறைச்சலில்லை. மிஞ்சினது இதுதான். இதில் “நீ எனக்கு, உனக்கு நான்” தவிர நமக்கு என்ன இருக்கு? ஆனால் அதிலும் வேளை கண்ணைப் போட்டுடுத்தேடி!
துளசி மாடத்துக்கு விளக்கு வைக்கப் போனவள் காலில் சுருக்குன்னுது, கல்லா முள்ளா?” கேள்வியிலேயே எனக்கு வாய் குழறிடுத்து. எனக்கு ஜாடை காட்டி என் மடியில் தலைவெச்சுப் படுத்து, கண்ணை மூடி காலை நீட்டினவள் அப்படியே நீளமாகவும் ஆயிட்டே. அடிநேசம், பாவி என்னை நாசமாக்கிட்டையேடி!
அடக்க முயன்ற அழுகை, விக்கல்களாக மாறி உடலைப் பூகம்பமாக உலுக்கிற்று.
அடி நேசம், உன் ஆவி இறக்கையடிச்சுண்டு, நேரே ஸர்வேசுவரனிடமே போயிடுத்தோ என்னவோ, அதனால் உனக்குத் தெரியாதோ என்னவோ, கொள்ளி நான்தான் போட்டேண்டி! ஸன்னதித் தெருவில் கோவிலுக்கு மூணாவது நம்மது. பிள்ளை ஊரிலிருந்து வரவரை சுவாமி இன்னும் எத்தனை வேளை பட்டினி போட முடியும்? புழுங்கிப் புழுங்கிச் சாகாமல் சாகறேண்டி பாவி!
இங்கே நான் வரதுக்கு உண்மைக் காரணம் வேறு. முள்ளாம், கல்லாம், உன்னை என்னிடமிருந்து எது பிடுங் கிண்டுப் போச்சுங்கறதுக்கு மை போட்டுப் பார்க்கணுமா? ஒருநாள், ராத்ரி பூரா உன்னை நெனச்சு நெனச்சு விடிகாலை வெறிபிடிச்சவனாயிட்டேன். கடப்பாறையை எடுத்துண்டு ஓடிப்போயி புற்றை இடிச்சுத் தள்ளினேன், உள்ளே ஒண்ணும் இல்லை. இடம் மாறிடுத்தோ, இல்லை எப்பவுமே இல்லைதானோ?
காரியம் முடிஞ்சதும் எனக்குத் ‘திக்பக்கு ஆயிடுத்து. ஊருக்குப் பதில் சொல்லியாகணும். தற்செயலாக அன்னி மத்தியானம் இவனிடமிருந்து எழுத்து வந்ததும் ராத்ரியே வண்டி ஏறிவிட்டேன். நேற்று உனக்கு நாலாவது மாஸியமடி-
திடீரெனத் தாழம்பூ மணம் கிளம்பிற்று. ஜன்னல் வழி எட்டிப்பார்த்தார். நிலா பட்டை வீறிட்டுக் கொண்டிருந்தது செம்பருத்தம் செடியடியில் சலசல-தான் தனியாக இல்லை என்னும் உணர்வு. அதன் நடமாட்டம் இருந்தால்தான் இது மாதிரிக்கு பீர் வாஸம் – பழி வாங்கணும்னா எங்கிருந்தாலும் வந்துடுமாமே! அதோ அதோ, சீறல் சத்தம் ஏதேனும் கேட்டுதோ? பிடரி குடைக்கம்பி போல் விறைத்தது. நேசம் நேசம், என்னடி நடக்கிறது. சொல்லேண்டி!
அவள் முகத்தை நிலாவிடம் தேடி அவர் முகம் பதிலுக்குத் தவித்தது. சந்திரன் வெற்றிகரமாக மேகங்களை சவாரி செய்துகொண்டிருந்தது.
மறுநாள் காலை, தகப்பனும் பிள்ளையும் சந்தித்ததுமே அவர்: “இன்னி ராத்ரி நான் ஊருக்குப் புறப்படறேன், புறப்பட்டாகணும்”
பிள்ளை வியப்புடன் அவரை நோக்கினான். ‘என்னப்பா வந்து இன்னும் ஒருவாரம் முழுசா ஆகல்லே. அதுக்குள்ளே…’
‘இல்லை எனக்குப் பிராயச்சித்தம் அங்கேதான் இருக்கு’
அவன் திகைப்பு அதிகரித்தது.”என்ன பிராயச்சித்தம். எதுக்குப் பிராயச்சித்தம்? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே!”
அவர் குரல் அமைதியாகவும், பதில் தீர்க்கமாகவும் வந்தன.
“உனக்குப் புரியாது.”
– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.