நெளிந்து போன நேசம்…





“ஷ்ஷ்”…”ஷ்ஷ்” என்று குக்கர் தனது இரண்டாவது விசில் சத்தத்தை அப்பொழுதான் உமிழ்ந்து முடித்து மூன்றாவது விசிலிற்கு மூச்சை எடுத்துக் கொண்டிருந்தது. “ஏய்ய்ய் கணேஷ்ஷா…!” அந்த அடுப்பைக் கொஞ்சம் சிம்மில வையும்மான்னு பொறவாசல் அடிபம்புல தண்ணீர் அடித்து எடுத்துக் கொண்டிருந்த அம்மா அமுதா உரக்கச் சொன்னாள். எப்பப் பார்த்தாலும் என்னையவே கூப்பிட்டு வேலையைச் சொல்லும்மா, உம் மூத்த மவனை ஒண்ணுஞ் சொல்லிராதேன்னு எரிச்சலாக சத்தம் கொடுத்திட்டே வந்த கணேஷ் என்ன பண்ணனும்ன்னு கால்ல வெந்நீர் ஊத்துன மாதிரி துடிச்சிட்டு நின்னான். அந்தக் குக்கரை சிம்மில வையும்மான்னு மீண்டும் சொன்னதும் அப்படியே வைத்து விட்டு விர்ரென்று கைபேசியோடு நகர்ந்தான்.
ஒண்ணையும் ஒழுங்காச் செய்யத் தெரியுறதில்லை. எல்லாத்துலயும் அரைகொறைதாம். சிம்மில வையுன்னு சொன்னதுக்கு அடுப்பை அணைச்சிட்டுப் போயிருக்காம் பாருன்னு புலம்பிக்கிட்டே லைட்டரை எடுத்து கேஸ் அடுப்பின் பெரிய பர்னரைப் பற்ற வைக்க முனைந்தாள். அது என்னமோ “கிர்..கிர்..கிர்ரென” சத்தம் கொடுத்தது. ஆடுன குக்கர் கைப்பிடியை லேசாப் பிடிச்சு கொஞ்சமா பின்பறம் நகர்த்தி “ப்பூ.. ப்பூ.. ப்பூவென” ஊதி மறுபடியும் லைட்டரைக் கொண்டு பற்ற வைத்தாள். இப்பொழுது நெருப்பு தன்னுடைய ஊதா நிறத்தில் எரியத் துவங்கியிருந்தது. மீண்டும் குக்கரை கவனமாக சிம்மிற்கு மாற்றினாள் அமுதா. மெதுவாக அணைந்தும் அணையாமலும் சூரியன் கூடடையும் மாலை நேர வானம் போல் ஊதாவும் சிகப்புமாக எரிந்து கொண்டிருந்தது தற்போது .
இந்தக் குக்கரை மாத்தித் தாரேம்ன்னா கேக்கியா.? இந்தப் பாரு சைடு வழியா தண்ணீ வேற ஒழுகுது. கேஸடுப்புல விழுந்து பர்னர் ஓட்டயெல்லாம் வேற அடைச்சுக்கிடுது. எரியுற நெருப்புல தண்ணி பட்டா என்னாவும்.? சூடு கொறையும். கேஸூ சீக்கிரம் தீர்ந்து போவும். ரொம்பக் கறார் பேர் வழி இல்லையென்றாலும் கண்ணில் பட்டதை பட்டெனச் சொல்லிவிடும் பழக்கம் மகேஷுக்கு. “அட அது ஒண்ணுமில்லப்பா.! ” கேஸ்கட்டை கொஞ்ச நேரம் ப்ரிட்ஜ்ல்ல வைச்சு எடுத்துப் போட்டா தண்ணி வழியுறது ஏகத்துக்கும் கொறைஞ்சிடும். இப்பத்தானே கேஸ்கட் மாத்தினேன் என்று சாென்ன மகேஷிடம், அது மாத்தி மூணு மாசத்துக்கு மேல இருக்கும்ல்லா, இந்தக் கைப்பிடியை லேசா சரி பண்ணாலும் போதும் என்று சொல்லி குக்கரை அடுப்பிலிருந்து அமுதா இறக்கி வைத்தாள். சமமான அடிமானம் இல்லாத
குக்கர் இருப்புச் சட்டி போல இல்லையென்றாலும் அதன் தன்மையில் சற்று ஆடி ஆடி அடங்கி அமர்ந்தது.
கல்யாணத்துக்கு சீரா அம்மா தந்தது. அப்பவே ஆயிரம் ரூவா. கல்யாணமாகி இப்ப இருபது வருசமாச்சு. அப்பாவுக்கும் மட்டுந்தாம் வேலை. தியேட்டர்ல்ல மேனஜர் உத்தியோகம். அதுல என்னத்தை கிடைச்சிறப் போவுது? இருக்கிறதக் கொண்டு அழகா குடும்பம் நடத்துறதை அம்மாகிட்டதான் கத்துக்கணும். அப்பா கொண்டு வந்து தரும் பணத்துல நான், தம்பி, தங்கை என மூவரையும் வெவ்வேறு துறையில படிக்க வைச்சதுல ஊரே பெருமை பேசுச்சு. மூத்தவளான நான் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்துச்சு. அம்மா கொஞ்சம் கொஞ்சமா சீட்டுப் போட்டுச் சேர்த்தப் பணத்துல வாங்கினதுதான் இந்தக் குக்கர்.
“சும்மாதானே கொடுக்கப்போறே?! அதுக்கு எதுக்கு இவ்வளவு வெலையில.? கொஞ்சமில்ல நேர்பாதி வெலையில நம்ம உள்ளுர்க் கடைக்காரன் தயாரிப்புல வர்ற குக்கர் போதாதா.? நாங்கூட அதைத்தான் வைச்சிருக்கேன். ஒரு பிரச்சனையும் வரலை என்று அத்தை சொன்னதைக் கேட்டும் கேட்காத மாதிரி புன்னகை ஒன்றை உதிர்த்தாள் அம்மா. “அது சரி.! நாஞ்சொல்றதை கேட்கணும்ன்னு என்ன சட்டமா.?” என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் புன்னகைக்கான பொருளைப் புரிந்து கொண்டு நகர்ந்தாள் அத்தை. அம்மாவுக்கு அந்தக் கம்பெனி விளம்பரத்தை பார்த்ததிலிருந்து அப்படி ஒரு ஆசை.
தான் ‘கர்வப்பட்டு’க் கொள்ளுகிற மாதிரி பேரு இருக்கறதால வந்த பவுசோ என்னமோ.? அப்படிப் பவுசு இருந்தாலும் ஒண்ணும் கொறைவில்லை. அதுக்குச் சரியானவதான் அம்மா. அது அஞ்சு லிட்டர் குக்கர். இப்பம் மாறி எவர்சில்வரெல்லாம் அப்போ கெடையாது. அலுமினியந்தான். உள்ளடங்கலா அலுமினிய ப்ளேட், அப்புறமா ரெண்டடுக்கு கேரியர் கணக்கா அதுல ரெண்டுப் பாத்திரம். ஒண்ணுல அரிசி வைச்சாலும் ரெண்டாவது கறிகாய் வேக வைச்சுக்கலாம். நீ வேலைக்குப் போற அவசரத்துக்கு இது கொஞ்சம் உதவியா இருக்கும்ன்னு அம்மா சொன்னது இன்னும் காதுல விழுந்துகிட்டே இருக்கு.
கல்யாணம் பேசி முடிச்ச வேளை, வேலை முடிஞ்சு வந்து மகேஷும், அமுதாவும் அடிக்கடி போன்ல்ல பேசிக்கிறதுண்டு. “ஏட்டி.! எப்பப்பாரு போன்ல்ல பேசிகிட்டேயே இருக்கீயே மாப்பிள்ளைப் பேரனுக்கு என்ன சமையல் புடிக்கும்ன்னு கேட்டீயா.? அடை புடிக்குமா.? கூட்டாஞ்சோறு புடிக்குமா.? இல்லை சொதியா.?” என்னன்னு கேளுட்டீன்னு ஆச்சி அடிக்கடி கேட்பாள். அப்படிப் பேசிட்டு இருக்கும் போது தான் மகேஷ் ஒரு முறை தனக்கு ஃபில்டர் காபின்னா ரொம்பப் பிரியம்ன்னதும், வடிச்ச சோறுதான் தமக்கு ரொம்பப் பிடிக்கும், அதுலயும் அந்தச் சுடு கஞ்சியில லேசா உப்புப் போட்டு கொதிக்கக் கொதிக்கக் குடிக்கப் பிடிக்கும்ன்னதும், ஆனா எப்ப இந்தக் குக்கரை கண்டுபிடிச்சு பயன்பாட்டுக்கு வந்ததோ, அன்னையிலிருந்தே எல்லாமே இல்லாமப் போச்சுன்னும் ஆதங்கப்பட்டாங்க.
கல்யாணம் முடிஞ்சு வந்த புதுசுல அம்மா போன் பண்ணும் போதெல்லாம் மறக்காம குக்கரைப் பத்திக் கேப்பாள். இல்லம்மா இன்னும் அதை எடுக்கலை. இங்க உள்ளதே சரியா இருக்கு. அதுவே போதும்ன்னு அத்தை சொல்லிட்டாங்க என்று சொல்வாள். இரண்டு மூன்று முறை இப்படிக் கேட்டு வந்த இதே பதிலால் அம்மா அடுத்தடுத்த முறைகளில் கேட்பதையே விட்டு விட்டாள். ஆனால் அம்மாவின் மனசு என்னமோ அந்த குக்கர் மேலேயேதான் இருந்தது.
புழங்கிட்டிருந்த குக்கரு ஒரு நாள் திடீர்ன்னு சேஃப்டி நாசில் தெறந்து ஆவியெல்லாம் வெளியே போக அடுப்பங்கரை முழுவதும் ஒரே புகை மூட்டம். நல்ல வேளை அங்கன பொழங்கிட்டு அப்பத்தாம் வெளியில வந்த அமுதாவுக்கும், அத்தைக்கும் எதுவும் ஆகவில்லை. வீட்டுல பெரியவன் பொறந்த புதுசு. அவன் வேற சத்தத்தைக் கேட்டு ஆரம்பிச்ச அழுகையை கொஞ்ச நேரத்துக்கு விடவே இல்லை.
ஒரு வழியா அந்தப் புகையெல்லாம் அமந்தது போக அடுப்பங்கரையைப் போய்ப் பார்த்தா மூடி தனியா, அடிப்பாகம் தனியா குக்கரு கிடந்தது. சோறும் காயும் சிதறிக் கிடந்தததைப் பார்த்ததும் என்னமோ கல்யாண வீட்டு ஆக்குப்பிறை ஞாபகம் வந்திருச்சு.
“முருகா.! நல்ல வேளை ஒருத்தருக்கும் ஒண்ணும் அடிகிடி எதுவும் படாம காப்பாத்திட்டே. வரும் கடைசி வெள்ளிக்கு வந்திருதோம் செந்திலாண்டவா” என்று சுவரில் மாட்டப்பட்டிருந்த திருச்செந்தூர் முருகனைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அத்தை. “ஏம்மா அமுதா.!” அந்த எடத்தை கிளீன் பண்ணிட்டு உன் குக்கருல இன்னைக்கு சமைச்சிறேன் என்று சொன்னவள், மொத மொதலா வெளியில எடுக்கே… அதுக்கு கொஞ்சம் திருநீறைப் பூசி குங்குமம் வச்சு, கொஞ்சூண்டு சர்க்கரைப் பொங்கலைப் போட்டிட்டு அப்புறமா சோத்தை வையும்மா என்றாள்.
மாலை வந்த மகேஷ் இன்றென்ன விசேசம்?, பொங்கலெல்லாம் போட்டு மாமியாரும் மருமகளும் ஜமாய்ச்சிருக்கீங்க என்று கிண்டலடித்தான். அது
ஒரு பெரிய கதை என்று நடந்ததைக் கூறும் போதே ஐய்யோ உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே எனப்பதற, எல்லாம் அந்த முருகன் செயல் ஒண்ணுமில்லை. வரும் கடைசி வெள்ளிக்கு திருச்செந்தூர் வாரோம்ன்னு வேண்டியிருக்கேன். போயிட்டு வந்திரணும்ப்பா என்றாள் அம்மா.
அடுத்தவன் பொறந்து அவனுக்கு அன்னப்பாயாசம் கொடுக்க, வீடு பால் காய்ச்சுற அன்னைக்கு பாயாசம் வைக்க, அப்புறம் சொதி வைக்க என அந்தக் குக்கர் அப்படியே தம் வாழ்வோடு வந்து கொண்டிருந்தது.
அன்று என்ன ஆச்சுன்னு தெரியல்ல, கைப்பிடி லேசா வெலகினதால அதுல வர்ர சுடுதண்ணி பட்டு அமுதா கையில லேசா கொப்புளமாகி நின்றது. வலியால் துடித்த அவள் ததும்பி நிற்கும் கண்ணீரை மௌனமாக தனக்குள் அடக்கிக் கொண்டு அடுத்த வேலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். வேலை முடிஞ்சு வந்தவன் ஒரு நாளும் அந்தி சாயும் வேளையில் உறங்காத அமுதாவைக் கண்டு எனனாச்சும்மான்னு பதறினான். கையைப் பார்த்ததும் அவனுக்கு எல்லாம் வெளங்கிடுச்சு.
எத்தனை தடவை கிளிப்பிள்ளைக்கு சொல்லுத மாறி சொல்லியிருக்கேன், கேட்டியா? இப்பப் பாரு யாருக்குக் கஷ்டம்.? “வா..! ஆஸ்பத்திரிக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திரலாம்” என்று சற்றுப் பதற்றததுடன் அழைத்தான். அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா லேசாத்தான், அதாம் தோசைமாவு போட்டிருக்கேன்ல்லா சரியாயிரும் என்று சொன்னவளின் உதட்டில் இருக்கும் தைரியம் கண்களில் தெரியவில்லை என்பதைக் கண்டவன் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போய் ஊசி போட்டு மருந்து மாத்திரையையும் வாங்கிக் கொண்டு வந்தான். “நல்ல வேளை தீக்காயம் உள்ளே வரைக்கும் போகவில்லை. லேசாப் போச்சு” என்றார் டாக்டர்.
வண்டியில் ஏற்றிக் கொண்டு மெதுவாக வந்தவன் இட்லிக் கடை முன்னால நின்னு பார்சல் வாங்கிக் கொண்டான். இரவு படுக்கும் முன் கொப்புளத்தில் மருந்து இட்டான். மருந்திடும் போது வலியால் அமுதா லேசா கண் கலங்க அதைக் கண்ட இவன் கண்களின் ஓரம் ததும்பி வந்த கண்ணீர்த் துளிகளை மறைக்க அவன் வேறு பக்கம் முகத்தைத் திருப்பும் போது பார்த்த அமுதா ஒண்ணுமில்லைப்பா. லேசாதான்.. சரியாயிடும்ன்னு சொல்லி அவன் தலைமுடியினைக் கோதிவிட்டாள்.
ஒரு வாரம் போய் இருக்கும். அமுதாவின் புண் சற்று ஆறியிருந்தது, அவளை அழைத்துக் கொண்டு அந்தப் பழையக் குக்கரோடு கடைக்குச் சென்று புதிய குக்கர் ஒன்றைப் பார்க்கலானான். எதுக்குங்க.? இதே இருக்கட்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் அவன் சற்றுப் பிடிவாதமாக மாற்ற வேண்டுமென்றே இருந்தான்.
அதைப் போன்றே ஒரு புதிய குக்கரைத் தேர்வு செய்து பணம் செலுத்தும் முன் பழைய குக்கரைக் கொடுக்கும் போது விலையில் நூத்தைம்பது ரூபாய் கழித்தார்கள்.
என்னண்ணே ஒரு இருநூறாவது கழியுங்க என்ற மகேஷிடம் இன்றைக்கு அலுமினிய விலை இதான் சார், இதுக்கு மேல கொறைக்க முடியாது என்று கறாராகச் சொன்னான். இந்தப் பணத்துக்காக கொடுக்க வேண்டாம் என்று சொன்ன அமுதாவிடம் அவள் கைத் தீப்புண்ணைக் காண்பித்தான். மௌனமாக நின்ற அமுதாவிடம் புதுக் குக்கரை வாங்கிக் கொடுத்து வண்டியில் ஏறச் சொன்ன போது அவள் சற்று நழுவி விழப் போனாள். பழைய குக்கரை கடைக்காரன் சம்மட்டியால் ஒரே அடி அடித்து நெளித்து நசுக்கி அப்படி லேசாக அலுமினியப் பாத்திரக் குவியலில் இட்டுக் கொண்டிருந்தான். அம்மா, “குக்கரு எப்படிம்மா இருக்கு?” என்று கேட்டது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது அமுதாவுக்கு.
– சுற்றந்தழால், முதற் பதிப்பு: 2022, சந்தியா பதிப்பகம். சென்னை.