நெருடல்
வெளிக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மின்சாரம் இல்லாதது சங்கருக்கு நினைவுக்கு வந்தது. வெளியே வந்துபார்த்தால், சேகர் தனது மகனுடன் வந்திருந்தான். அவர்கள் வந்த கார் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. பார்த்து எத்தனை ஆண்டுகளாகி விட்டது.
’’வாங்க..வாங்க. சரத் நீயும் வாப்பா’’ என உள்ளே அழைத்தான். வீட்டில் யாருமில்லை.ஊருக்குப் போயிருந்தனர்.
”ஏது இவ்வளவு தூரம், உடல்நிலை எல்லாம் சுகம்தானே, வீட்டில் உனது துணைவியார், மகள் அனைவரும் நலம்தானே.”..
”அனைவரும் நலம். எனது உடல்நிலையும் நன்றாக உள்ளது.”
’’நீ இப்போ பிளஸ் டூ வா’’ என சங்கர் கேட்டதற்கு சரத் வெட்கத்துடன் தலையாட்டினான்.
’’எங்களது நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவுக்கு உன்னை அழைக்க வந்தேன்’’.
”அட, போனில் சொல்லியிருந்தாலே போதுமே, இதுக்குப்போய் இவ்வளவு தூரம் வரணுமா”.
”எனக்கு எந்த சிரமும் இல்லை. இதுதான் முறையும்கூட”.
” அட,நமக்குள் எதுக்கு இந்த வீண் சம்பிரதாயமெல்லாம்’’……
சங்கரும் சேகரும் பத்துவருடங்களுக்கு முன் சென்னையில் ஒரே பகுதியில் குடியிருந்தார்கள். இருவருக்கும் ஏற்கெனவே நண்பராக இருந்த வேலு மூலம் அறிமுகமானார்கள். இருவருக்கிடையில் பொது விஷயங்களில் ஒத்த கருத்து இருந்ததால் தினந்தோறும் சந்திப்பதும், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசுவதும் தொடர்ந்தது. இருவருக்குள் நடக்கும் விவாதம், ஆழமான கருத்து பரிமாற்றமாக இருந்தது.
இருவரும் எங்கு சந்திக்க நேரிட்டாலும்,முதல்வேலையாக தேனீர் அருந்துவார்கள். அதைத் தொடர்ந்து துவங்கும் பேச்சு சர்வதேசம் முழுக்கச் சுற்றிவந்து உள்ளூருக்குத் திரும்ப பலமணிநேரமாகும். சேகர் பழைய புத்தகக்கடைகளில் இருந்து சிறந்த இலக்கியங்களைத் தேடிப்பிடித்து வாங்கிவந்து சங்கருக்கு படிக்கக் கொடுப்பான்.
வழக்கமாக மாலையில் சங்கரது அலுவலக நேரம் முடியும் போது வந்து சந்திப்பது போன்றேதான் அன்றும் சேகர் வந்திருந்தான். வழக்கத்திற்கு மாறாக அவனது முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது. என்னவென்று சங்கர் விசாரித்தான். நேற்று மாலையில் இருந்தே மார்பு வலித்துவருவதாக சேகர் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்து,டாக்டரை பார்த்தியா என பதட்டத்துடன் கேட்டான்.
’’டாக்டரிடம் போனேன், ஈசிஜி எடுத்துப்பார்த்தார். ஆபத்து ஒன்றுமில்லை, சில சோதனைகளை செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறி மாத்திரைகளை எழுதித்தந்து அடுத்த வாரம் வரச்சொன்னார், ஆனால் இன்னும் அந்த வலி குறையவில்லை.’’என்று அமைதியாக சேகர் கூறினாலும், அவனது முகத்தைப் பார்க்கும்போது சங்கருக்குள் ஏதோ ஒன்று நெருடியது. எனவே, அவனது சீனியருக்குத் தெரிந்த இருதய நோய் நிபுணரை பார்க்க புறநகரையொட்டியிருந்த அவரது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.
உடனே சேகரை சோதித்துப் பார்த்த மருத்துவர் ஈசிஜி மற்றும் ரத்தப் பரிசோதனைக்கும் எழுதிக் கொடுத்தார். முடிவுகள் தெரிய ஒரு மணி நேரமானது. அதை மருத்துவர் பரிசீலித்து, ’’தீவிரமான ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ளார். தீவிர கண்காணிப்பில் இரண்டு நாட்களாவது வைத்திருக்கவேண்டும். இனியும் தாமதிக்காமல் உடனடியாக அட்மிட் செய்யுங்கள்’’ என்றார்
அட்மிட் செய்யவேண்டிய அளவுக்கு சீரியசான நிலைமையில் சேகர் இருக்கிறான் என்று சங்கர் சற்றும் நினைக்கவில்லை. ஏன் சேகரும் எதிர்பார்க்கவில்லை. முந்தைய டாக்டர் கூறியதிலிருந்து அவ்வளவு அவசரம் இல்லை என்றே நம்பியிருந்தான். ஆனால் இந்த மருத்துவரோ இப்படிக் கூறுகின்றார். இவர் பணம் பண்ணுவதற்காக வேண்டுமென்றே சொல்லவில்லை என்பது சங்கருக்குத் தெரியும். நகரத்திலுள்ள ஒரு சில நேர்மையான மருத்துவர்களில் இவரும் ஒருவர்.
நேரமோ பதினொன்று. கையில் இரண்டாயிரத்து ஐநூறு தவிர வேறு பணமுமில்லை. இரவு தங்குவதற்கேற்ற போர்வைகளோ, லுங்கியோ கூட இல்லை. வீட்டுக்குச் சென்று வரலாமென்றால் நேரமில்லை. எவ்வளவு செலவாகுமென தயக்கத்துடன் கேட்டபோது முப்பதாயிரம் ஆகும் என்றார். தொகையை கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது. இதற்குள் நடுநிசி நேரமாகிவிட்டது. பசிக்கிறது என சேகர் கேட்க, சே, இந்த களேபரத்தில் உடம்பு சரியில்லாதவனை இப்படி பட்டினி போட்டுவிட்டோமே என சங்கர் நொந்து கொண்டான். பக்கத்தில் சரவணபவன் அந்த நேரத்திலும் அதிர்ஷ்டவசமாக திறந்திருந்தது. நேரமாக ஆக சேகர் தளர்ந்துவருவது அவனுக்கே தெரிந்தது. அதற்குள் தனது மனைவிக்கு தகவல் தந்துவிட்டு, தன்னை எங்கே சேர்ப்பது என்பது குறித்து சங்கரையே முடிவெடுக்கச் சொல்லிவிட்டான். அதற்கு மேல் விவாதிக்கும் மன நிலையில் அவனுமில்லை.
சேகரின் உயிர் விஷயத்தில் உத்திரவாதமான வழியைத்தான் சங்கர் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. வேறு வழிகளை சோதித்துப்பார்க்கும் உரிமை அவனுக்கில்லை. மேலும் இந்த மருத்துவர் சொல்லும் தொகை மற்ற மருத்துவமனைகளோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். எனவே தனது சீனியரின் அறிவுரையின்படி அந்த மருத்துவமனையிலேயே சேர்த்துவிட்டான். அடுத்த நாள் மாலைக்குள் பாதிப் பணத்தை கட்டுவதற்கும்,மீதியை டிஸ்சார்ஜ் ஆகும்போது செலுத்துவதற்கும் மருத்துவர் ஒப்புக்கொண்டார். மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்க, கையில் இருந்த இரண்டாயிரத்து ஐநூறு போதுமானதாக இருந்தது. அடுத்த நாள் எப்படியாவது மொத்த பணத்தையும் புரட்டி கட்டிவிடலாமென நம்பினான். அந்த நம்பிக்கையில்தான் சேகரை அந்த மருத்துவமனையில் துணிந்து சேர்த்திருந்தான். சேகருக்கு எந்த பண கஷ்டமும் தந்துவிடாமல் தானே சமாளித்துவிடலாமென நம்பினான்.
மருத்துவமனையின் வரவேற்பு கூடத்தில் காத்திருந்தபோது, அடுத்த நாள் யாரிடமெல்லாம் உதவி கேட்கலாமென சங்கர் யோசித்துக்கொண்டிருந்தான். அந்தநேரத்தில் சேகரின் நண்பர் வரதன் தகவல் தெரிந்து வந்தார். அவர் வந்தது அவனுக்குத் தெம்பைத்தந்தது. கூடத்திலேயே படுத்துக்கொண்டார்கள். எலும்பைத் துளைக்குமளவுக்கு ஏ.சியின் குளிர் வாட்டியெடுத்தது. மார்பிள்தரையோ பனிக்கட்டியாய் குளிர்ந்திருந்தது. உறக்கம் வரவில்லை. அவசரத்துக்கு உதவுமளவுக்குக்கூட பணம் இல்லாமல், நம் மக்கள் வாழும் வாழ்க்கை இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் எப்படித் தடுமாறுகிறது என்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்ததில் சங்கருக்கு விடிந்ததே தெரியவில்லை.
அடுத்த நாள் காலையில் சேகரின் மனைவி வந்தார். எதிர்பார்த்தபடியே அவரிடம் பணமில்லை. தகவல் கிடைத்து அவரது தம்பி வந்தார். அவசரமாக வந்ததால் பணம் புரட்டமுடியவில்லை என்றார். சங்கர் தனக்குத் தெரிந்தவர்களை பார்த்து பணம் திரட்ட புறப்பட்டுச் சென்றான். மாலைக்குள் அவனால் ஆயிரம் ரூபாய்கூட புரட்ட முடியவில்லை, அவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது. டாஸ்மாக் பாரில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பார்ட்டி வைத்த செல்வம் நூறு ரூபாய்கூட இல்லையென சத்தியம் செய்தான். உனக்கென்றால் தருகின்றேன் ஆனால் மூணாம் மனுஷனுக்காக என்னிடம் ஒத்தை ரூபாய்கூட கேட்காதே என ஒரு சொற்பொழிவே ஆற்றிவிட்டார் அவனது மாமா. குடும்ப அமைப்புகள் எப்படி சுயநலக்கோட்டைகளாக உள்ளனவென்பதையும், பிறருக்கு உதவ தமது ஜன்னலின் ஒரு பகுதியைக்கூட அவை திறக்கத் தயாராக இல்லை என்பதையும், எவருக்கு உதவினால் தமக்கு எதிர்காலத்தில் பயன்படுமென கணக்குப் போட்டு அவர்களுக்கு மட்டுமே உதவ முன்வரும் வியாபார சாதுர்யத்தையும் நேருக்குநேராக கண்டு அதிர்ந்துபோனான். இந்த அனுபவம் முதல்முறை இல்லை என்ற போதிலும் மனிதர்களின் அப்பட்டமான சுயநலமானது, ஒவ்வொருமுறையும் ஒரு புதிய கோணத்தில் தன்னை வெளிப்படுத்தி அவனை அதிரவைக்கின்றது.
வேறு வழியின்றி சங்கர் தனக்கு பழக்கமான ஒரு மளிகை கடைக்காரரிடம் சென்று சம்பளம் இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடும் என்பதை எடுத்துச்சொல்லி உதவி கேட்டான். இரண்டு நாட்களில் கண்டிப்பாக தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பத்தாயிரம் ரூபாய் தந்தார். இதை அவனது குடும்பம் கண்டுப்பிடித்து மூன்றாம் உலகப்போரை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு தராமல் எங்கேயாவது கடனை வாங்கி இந்த மாதச் செலவுகளைச் சரிகட்ட வேண்டும். அதை அப்புறம் யோசிக்கலாம், முதலில் சேகரின் பிரச்சினையை கவனிப்போமென சங்கர் நினைத்தப்படி, வரதனிடம் எவ்வளவு இருக்கிறது என கேட்டதில் ஆறாயிரம் கிடைத்தது. ஆக சொன்னபடி மாலைக்குள் பாதிப்பணத்தை கட்டிவிட்டான். சங்கரின் அலைச்சலைப்பார்த்த சேகரின் மைத்துனர் மீதியை டிஸ்சார்ஜாகும் போது தானே எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து கட்டிவிடுவதாகச் சொன்னார். அவனும் மெளனமாக தலையசைத்தபடி, தன்னுடைய இயலாமையை நொந்துக்கொண்டான்.
சேகரைப் பார்க்க வந்தவர்களில் சிலர், சங்கரிடம் வந்து “நீங்கள் எடுத்த முடிவு மிகவும் தவறு. அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தால் எந்த செலவும் இருந்திருக்காது பணத்தை கறக்க ஆபத்தான நிலையில் இருப்பதாகத்தான் எந்த ஒரு தனியார் மருத்துவமனை டாக்டரும் சொல்வார். அதை நம்பி இப்படி ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்கும் தனியார் மருத்துவமனையில் அன்றாடங்காய்ச்சியான சேகரை சேர்த்துட்டீங்களே, இது சரியா?. அது சரி, ஒண்ணாந்தேதியானா டாண்ணு சம்பளம் வாங்கும் உங்களுக்கெங்கே எங்க கஷ்டம் புரியப்போகுது’’என்று விமர்சித்த போது, எந்த மாதிரியான நிலைமையில் அவரைச் சேர்க்க வேண்டிவந்தது, அதற்கு எவ்வளவு சிரமம் எடுக்கவேண்டியிருந்தது என்பது பற்றி யெல்லாம் சற்றும் யோசிக்காமல் இப்படிப் பேசுகின்றார்களே என மனம் நொந்தாலும், அவர்களது பொருளாதார நிலைமைதான் இப்படி பேச வைக்கிறது என்கிற உண்மையும் அவனுக்குப் புரியாமல் இல்லை. சேகரின் அன்றைய நிலைமைக்கு நிச்சயம் இது பெரும் சுமைதான். தன்னால் பணத்தைப் புரட்டிவிட முடியுமென நம்பினான், ஆனால் பாதிக் கிணறு தான் தாண்ட முடிந்தது. குறுகிய காலத்தில் மீதிப்பணத்தைத் திரட்ட முடியாமல் திண்டாடவேண்டிவந்துவிட்டதே. என்ன செய்வது?
இந்த மாதிரியான நிலைமையில், தான் எடுத்தது சரியான முடிவுதானா, சேகரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து கடன்காரனாக்கி விட்டேனா, சேகரின் குடும்பத்தினர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ, தன்னைப் பார்க்க வந்ததால்தான் இப்படி ஆகிவிட்டதென நினைப்பார்களோ, என சங்கரின் மனதுக்குள் அடுக்கடுக்கான சிந்தனைகள் புயலைப்போல வீசிக்கொண்டிருந்தன. யாருக்கு அவன் உதவப்போனாலும் கடைசியில் மிஞ்சுவதென்னவோ இந்த மாதிரியான நெருடல்கள்தான். தன்னம்பிக்கை உள்ளவர்களால்தான் பிறருக்கு உதவமுடியும். ஆனால் இந்த நெருடல்களோ, தன்னம்பிக்கையை வற்றவைத்து குற்றமனப்பான்மையை தோற்றுவித்துவிடுகின்றது. சில சமயம் மனம் தாங்காமல் யாரிடமாவது இதைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்தால், உன்னை யார் இதிலெல்லாம் தலைகொடுக்கச் சொன்னார்கள், ஆலோசனையை மட்டும் வழங்கிவிட்டு உன் வேலையைப் பார்க்க வேண்டியதுதானே என அறிவுரை கூறுவதுடன் தம்மைப் போலவே அவனையும் மாற்ற முயற்சிப்பார்கள். பிறர் துன்பம் குறைக்க தனது சுண்டுவிரலைக்கூட நீட்ட மறுக்கும் இவர்களைப் போன்றவர்களால் அவனது மனநெருடல்களைப் புரிந்துக் கொள்ளவே முடியாது.
அடுத்த சில நாட்களிலேயே சங்கரை திருச்சிக்கு மாற்றிவிட்டதால், முன்புபோல சேகரை அடிக்கடி பார்க்க அவனுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இரண்டு வாரங்கள் கழித்து, சேகர் தொலைபேசியில் தொடர்புகொண்டான். தான் பூரணநலம் பெற்று விட்டதாகவும், மருத்துவமனையில் முன்பணமாக செலுத்திய பணத்தை சங்கரின் வங்கிக்கணக்கில் கட்டிவிட்டதாகவும், மீதமுள்ள வரதனின் கடனையும் அடுத்த வாரம் அடைக்கவுள்ளதாகவும் சொன்னான். எப்படி புரட்டினானோ, என்ன அவஸ்தை பட்டானோ என்று சேகரைப் பற்றி யோசித்த சங்கருக்குள் மறுபடியும் அந்த நெருடல் ஊவாமுள்ளாய் உறுத்தி தனது இருப்பை தெரியப்படுத்திக்கொண்டது.
அதற்குப்பிறகு, காலம் சேகரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. சொந்தமாக ஒரு சிறு நிறுவனத்தை ஆரம்பித்தான். அவனது கடுமையான உழைப்பால், பலருக்கும் வாழ்வுத் தரும் அளவுக்கு அது பெரிய நிறுவனமாக விரிவடைந்தது . பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். சொந்த வீடு, கார் என அமர்க்களமாக சேகர் முன்னேறியது இந்த பத்து வருடத்தில்தான். நேரில் பார்த்ததில் பழைய நினைவுகள் சரசரவென சங்கரின் மனதுக்குள் வந்துப் போயின, கூடவே அந்த நெருடலும்தான்.இந்த நெருடல் ஒரு நன்றியையோ, பாராட்டையோ எதிர்பார்த்து ஏற்பட்டதல்ல. தான் எடுத்த முடிவுக்கு ஒரு மனப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்காததைத்தான் மனம் இப்படி ஒரு நெருடலாக வெளிப்படுத்துகின்றது.
பத்தாவது ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. விழாவில் சேகர் பேசும்போது, தனது நிறுவனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லிவிட்டு ’’ பத்து வருடங்களுக்கு முன் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. உடனே ஒரு மருத்துவரிடம் சென்றபோது, அவர் எனக்கு மேம்போக்கான சிகிட்சையை தந்து அனுப்பிவிட்டார். வலிகுறையாத நிலையில், வழக்கம்போல் சந்தித்துப்பேசும் நண்பரிடம், ஒரு தகவலாகத்தான் எனது மார்புவலியைப் பற்றிச் சொன்னேன். ஆனால் மற்றவர்களைப்போல் அடடே அப்படியா என வெறுமனே அனுதாபப்படாமல், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக தக்கவர்களுடன் ஆலோசனை செய்து, சிரமப்பட்டு பணத்தைப் புரட்டி உரிய நேரத்தில் என்னை மருத்துவமனையில் சேர்த்து எனது உயிரைக் காப்பாற்றினார். தனது செயலுக்காக நன்றி என்ற வார்த்தையைக்கூட அவர் எதிர்பார்த்ததில்லை. நானும் நன்றி சொல்லி நட்பை அந்நியப்படுத்த விரும்பவில்லை. அத்தகைய எனது நண்பரை உங்களுக்கு இன்று அறிமுகம் செய்வதில் உள்ளபடியே மிகவும் பெருமைப்படுகின்றேன்’’ என்று சேகர், தனது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடியிருந்த சபையில் கூறி சங்கரை மேடைக்கு அழைத்தபோது, கூச்சத்துடன் மேடையேறி சேகரை ஆரத்தழுவியபோதுதான் சங்கர் கவனித்தான், அயிரைமீன் முள்ளாய் தனது மனதுக்குள் இத்தனை நாட்களாய் உறுத்திக்கொண்டிருந்த அந்த நெருடல் இருந்த சுவடு தெரியாமல் எப்போதோ வெளியேறிவிட்டதை.