நெருக்கடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 1,036 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சரவணமுத்து இருக்கிறாரா?” என்ற குரலைக் கேட்டு வீட்டிலிருந்த அத்தனை குழந்தைகளும் வெளியே வந்துவிட்டனர். பார்த்தால் படி முதல் வீசம் வரையில் எழுந்து வந்து சூழ்ந்துகொண்டதுபோல் இருந்தது. அதிலும் தேய்ந்து துருப்பிடித்தவைபோல் இருந்தன. குழந்தைகளின் உடையும் உடையின்மையும் பெற்றோர் களின் பொருளாதார நிலையை நன்றாக உணர்த்தின. 

”யார்!” என்றது ஒரு குழந்தை. 

“சரவணமுத்து இருக்கிறாரா என்கிறேன்.” 

குழந்தைகளில் ஒரு சின்னப் பெண், “இல்லையே” என்றாள். “ஏண்டி இல்லை என்கிறாய். அதான் உள்ளே இருக்கிறாரே! என்ன வேணும் உங்களுக்கு?’ என்றான் கொஞ்சம் வயது வந்த பையன் ஒருவன். 

இந்த முரணான பதில்களைக் கேட்டவருக்குக் குடும் பத்தின் நிலையைப்பற்றிய எண்ணம் ஊர்ஜிதமாயிற்று. 

“அவரைப் பார்க்கவேண்டும். இன்ஸ்பெக்டர் வந் திருக்கிறார் என்று சொல்லு.”

அதற்குள் சரவணமுத்துவே அலங்கோலமாக வாசல்புறம் ஒடி வந்தார்.”மன்னிக்க வேண்டும். வாருங் கள், வாருங்கள்” என்று உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒரு கிழிந்த பாயை எடுத்துப் போட்டார். 

கூடத்தில் ஒரு குழந்தை ஏதோ நோய்வாய்ப்பட்டு ஒரு கிழிந்த துணியில் படுத்துக்கொண் டிருந்தது. 

இன்ஸ்பெக்டர் ஒரு தடவை வீட்டை நோட்டம் பார்த்தார். வார்த்தைகளால் தெரிவிக்க இயலாத தாழ்ந்த நிலையின் சாயலே எங்கும் தென்பட்டது. 

“ரொம்ப அபூர்வமாக இருக்கிறதே?” 

“அபூர்வமென்ன? சும்மாத்தான்; இந்தப் பக்கம் போனேன; இப்படியே பார்த்துவிட்டுப் போகலாம் என்று தோன்றிற்று.” 

“நான்கூட ஏதோ கேள்விப்பட்டேன். நீங்கள் காப் பாற்றினால்தான் உண்டு; இல்லாவிட்டால் பிழைப்பே இதோடு முடிந்துவிடும்.” 

“கடுதாசு விஷயம் உமக்கு எப்படித் தெரியும்?”

“எப்படியோ தெரிந்தது.எப்பொழுது ஸ்தலத்தைப் பார்ப்பதாக யோசனை?’ 

“எப்பொழுது பார்க்கலாம் என்று சொன்னாலும் போவோம்.” 

சரவணமுத்துவின் உடல் ஒரு தரம் நடுங்கி ஒடுங்கிற்று. 

“சார்! ஒன்று சொல்லுகிறேன், நீங்கள் கடவுள் மாதிரி. பெரிய மனது செய்தாலொழிய நான் கெட்டு விடுவேன். தோட்டத்திலே பார்க்க ஒன்றுமில்லை. போக வேண்டிய வேலையே இல்லை?’ 

“ஆ! சவுக்கைப் பயிர் செய்யவே இல்லையா?” 

“இல்லை சார்.” 

“சர்க்கார் பணம்?” 

“இங்கே அடிபட்டுப் போய்விட்டது.’ 

“பெரிய குற்றமாச்சே ஐயா! பிழைப்பிலே மண் விழுந்துவிடும் என்று தெரியாதா?” 

“என்ன தெரிந்து என்ன செய்கிறது சார்? இதோ இந்தக் கூடத்துக்கு ஒழிவில்லாமல் ஒரு வருஷமாக ஒருவர் மாறி ஒருவராகச் சீக்கு எனக்குச் சம்பளத்தைத் தவிரச் சில்லறை சம்பாதிக்கத் தெரியாது. நெடுக முடை. பணம் செலவழிந்து போய்விட்டது. பின்னாலே அங்கே இங்கே புரட்டிக் காரியத்தைச் செய்துவிடலாம் என்று பார்த் தேன். நடக்கவில்லை. அதற்குள்ளே எவனே அநாமதேயத் தபாலை அனுப்பிவிட்டான். கொஞ்ச நாளைக்கு ஓட்டுங் களேன்.ஏதாவது செய்துவிடுகிறேன்.” 

“நான் போய் ஸ்தலத்தைப் பார்த்தே ஒரு வாரம் ஆகி விட்டது.நீர் சொல்வதற்காக ஒரு வாரம் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் இடத்தைப் பண்படுத்திச் சவுக் கைக் கன்று வாங்கி நட்டு முளைக்கச் செய்துவிட முடியுமா?” 

“முடியவேண்டும். இல்லாவிட்டால் நான் என்ன கதி ஆகிறது? பக்கத்திலே சவுக்கைப்பயிர் பண்ணியிருப்பதைப் பார்த்தீர்களா?” 

“பார்த்தேன். அதை வைத்துக்கொண்டு இந்தப் புகாரைப் பொய் என்று எழுதி அனுப்பச் சொல்லு கிறீரா?” 

“அப்படிச் சொல்வேனா சார்? எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. நீங்கள் எது செய்தாலும் சரிதான். வெள்ளம் தலைக்குமேலே போய்விட்டது. 

“ஒரு வாரம் இல்லை. இரண்டு வாரம் பார்க்கிறேன். அதற்குள் ஏதாவது செய்தி இருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள். நீர் வராவிட்டால் பதினாறாவது நாள் என் அறிக்கையை அனுப்பிவிடுகிறேன். 

இன்ஸ்பெக்டர் கூடத்தை விட்டுக் கிளம்பிவிட்டார். குறைந்த சம்பளமும் நிறைந்த சீக்குமாகச் சேர்ந்து சர வணமுத்துவை அயோக்கியன் ஆக்கிவிட்டன என்று இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்து என்ன லாபம்? 

சரவணமுத்து குடி இருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பங்களா. சொந்தக்காரர் விவசாயக் கம்பனி ஒன்றில் வேலை பார்த்துவந்தார். பங்களாவைவிடத் தோட் டம் அழகாக இருக்கும் என்று சொன்னால் பங்களாவுக்கு இழுக்கு ஒன்றுமில்லை. வருஷம் முந்நூற்று அறுபத் தைந்து நாளும் ஏதாவது காய்கறி கிடைக்காமல் போகாது. நாள் தவறினாலும் தோட்டத்தில் புஷ்பம் தவறாது. செடி களும் கொடிகளும் வெகு செழுமையாகவும் அழகாகவும் இருக்கும். 

ஒழிந்த வேளைகளில் சரவணமுத்து இங்கேதான் வருவார்.பங்களா சொந்தக்காரரோடு அதையும் இதை யும் பற்றிப் பேசிவிட்டுப் பாக்கிப் பொழுதைத் தோட்டத் தில் போக்குவார். தரித்திரத்தில் உழலும் மனத்துக்குத் தோட்டத்துப் பச்சையும் சிவப்பும் காய்கறிகளும் புஷ் பங்களின் மணமும் விவரிக்க முடியாத ஆறுதலைக் கொடுக்கும். அன்று மாலை மகா வேதனையுடன் சரவண முத்து, தோட்டத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். அன்றுதான் அவர் வேலைக்குக் காரியாலயத்தில் ‘சீட்டுக்’ கொடுத்துவிட்டார்கள். பதினைந்து நாள் பார்த்துவிட்டு இன்ஸ்பெக்டர், மொட்டை மனுவில் கண்ட விஷயம் மெய் தான் என்றும், வெறும் கட்டாந்தரையைத் தவிர ஸ்த லத்திலே வேறொன்றும் இல்லை என்றும் மேலே எழுதி அனுப்பிவிட்டார். குறிப்பிட்ட காரியத்துக்காகக் கொடுக் கப்பட்ட பணத்தை அதற்காகச் செலவழிக்காமல் சர்க் காரை மோசம் செய்துவிட்டார் என்று சரவணமுத்து வின்மீது குற்றம் சாட்டப்பட்டது. குடும்பக் கஷ்டத் தினால் தவறு நேர்ந்து விட்டது என்றும் கொஞ்சம் கெடுக் கொடுத்தால் பயிர் செய்துவிடுவதாகவும் மன் னிப்புக் கோரிச் சமாதானம் எழுதி வைத்தார்.நிர்வாக முறை என்றால் தர்மப் பிரபுவா? – கொஞ்சம் ஈரமும் நெஞ்சமும் இருக்க? தாட்சண்யமின்றி வேலைக்குச் ‘சீட்டு’க் கொடுத்துவிட்டார்கள். உத்தரவு இன்றுதான் கிடைத் திருந்தது. அந்தத் துயரத்தைத் தாங்கமாட்டாமல்தான் சரவணமுத்து, பங்களாத் தோட்டத்தில் உட்கார்ந்திருந் தார். 

எதிர்த்தாற்போல ஒரு நாரத்தை மரம் இருந்தது. அதில் ஒரு கிளையிலிருந்து தேன் சிட்டுக்கூடு ஒன்று லோலக்கைப்போல் தொங்கிக்கொண் டிருந்தது. சரவண முத்துவை அறியாமலேயே கூட்டின் கட்டிடத் திறமை அவர் மனத்தை வசப்படுத்திவிட்டது. சிறிது நேரத் திற்கெல்லாம் ஒரு சிட்டு, கூட்டின் வாசலண்டை போய்க் குந்திற்று.கூட்டுக்குள் இருந்து ஒருகுஞ்சு கத்திக் கொண்டே வாசலண்டை வந்து வாயைத் திறந்தது. வந்த குஞ்சின் வாயில் எதையோ ஊட்டி விட்டுப் பறந்து விட்டது குருவி. அது போன சிறிது நேரத்திற்கெல்லாம் மற்றொரு குருவி வந்து அதே காரியத்தைத் திரும்பவும் செய்துவிட்டுப் பறந்து சென்றது. இதே மாதிரி மாறி மாறிப் பல தடவை நடந்தது. குருவிகளாய் இருந்தால் கவலை இல்லாமல் இருக்குமே என்று சரவணமுத்து நினைத்துக்கொண்டார். 

இப்படி நினைத்துக்கொண் டிருக்கும்பொழுதே சர வணமுத்துவின் பார்வை மற்றொரு மரத்தில் விழுந்தது. அந்த மரத்தில் விநோதமான கொடி ஒன்று படர்ந்திருந் தது. கொடியைப் பார்த்த உடனேயே பயிர் செய்யப்பட்ட கொடி என்பது விளங்கிவிட்டது. ஆனால் மலைப்பாம்பு சுற்றிக்கொள்வதுபோல் சீந்தில் கொடி ஒன்றும் அதைச் சுற்றிக்கொண் டிருந்தது. 

சரவணமுத்துவுக்கு ஏதோ ஒரு விதமான கிளர்ச்சி. கொடியின் அருகில் போய்ப் பார்த்தார். குரல்வளையைப் பிடித்து நெருக்கி ஒருவரைக் கொன்றால் கழுத்தில் குறிகள் இருக்கும் என்பார்களே அதைப் போன்ற குறிகள் பயிர் செய்யப்பட்ட கொடியில் தென்பட்டன.உலகத்தில் பிழைக்க முயலும்போது சீந்தில் கொடியைப்போல் தரித்திரமும் கூட வந்து கழுத்தை நெறிக்காமல் இருக் காதுபோல் இருக்கிறது என்ற எண்ணம் மிதந்தெழுந்தது. 

பங்களாச் சொந்தக்காரரின் குரலைக் கேட்டதுந் தான் சரவணமுத்து, திடுக்கிட்டுச் சுயநினைவை அடைந்தார். 

“வந்து ரொம்ப நேரம் ஆயிற்றோ?’ 

“ஆமாம்.” 

“பூச்சி பிடித்த பீர்க்கன் இலை மாதிரி இருக்கிறதே முகம்?” என்று பங்களாக்காரர் அரைக் கேலியாகக் கேட்டார். 

சரவணமுத்து, பதில் சொல்லவில்லை. சொல்ல முடிய வில்லை. அவர் முகத்தைப் பங்களாக்காரர் திரும்பவும் ஊன்றிப் பார்த்தார்.”எப்பொழுதும்போல் இல்லையே? என்ன விசேஷம்?’ என்று வற்புறுத்தினார். உண்மையைச் சொல்லச் சரவணமுத்துவின் மனம் இடம் தரவில்லை. என்றாலும் ஏற்பட்டிருக்கும் நிலையைத் தாங்கக் கூடிய தெளிவோ சமாளிக்கக்கூடிய திறனோ அவருக்கு இல்லை. ஆற்றிலே மிதக்கும் சுள்ளியைப்போன்றதுதான் அவர் மனப்பான்மை. கடைசியாக, விவரத்தை எல்லாம் கூறினார். 

“என்ன அசட்டுத்தனமையா! இந்த மாதிரி கஷ்டம் என்று முன்பே சொல்லியிருக்கலாகாதா? 

“ஒரு நாள் கஷ்டமானால் சொல்லிக்கொள்ளலாம். ஓயாத கஷ்டத்தைப் பிறரிடம் சொல்லி என்ன செய்வது?”

“ரொம்பப் புத்திசாலித்தனமாக வேதாந்தமாகப் பேசுகிறீர். இப்பொழுது என்ன செய்வதாக யோசனை?”

“ஒன்றும் தோன்றவில்லை. கண்ணை மூடிக்கொண்டு காலை நீட்டவேண்டியதுதான்.” 

“ஒழிவில் பிறகு ஓடுங்கலாம். நான் சொல்வதைத் தற்பொழுது கேட்டு வையுங்கள். ஓர் அப்பீலைத் தயார் செய்து மேலே அனுப்புங்கள்.’ 

“என்னவென்று எழுத? சவுக்கைப்பயிரோ வைக்க வில்லை. இன்ஸ்பெக்டரும் பார்த்துவிட்டுப் போயிருக் கிறார். இப்பொழுது என்ன அப்பீல் போடுவது?” 

“உமக்குத் தெரியாது. நான் சொல்லுகிறபடி எழுதிப்போடுங்கள். என்று சொல்லிவிட்டு அப்பீல் செய்யவேண்டிய விதத்தைப் பற்றிப் பங்களாக்காரர் விளக்கிக் கூறினார். 

“ஸ்தலத்தில் பயிர் இல்லாதபொழுது இருப்பது போல் எழுதச் சொல்லுகிறீர்களே!’ 

“ஆமாம். பயிரை உண்டாக்கிவிடுவோம்..” “இன்ஸ்பெக்டர் பார்த்து”

“ஸ்தலத்தில் மாறாட்டம்.” 

“என்னால் ஆரம்பத்தில் பயிர் செய்ய முடியாமல் போனதினாலேதானே இவ்வளவு கஷ்டமும்.” 

“கவலைப்படாதேயும். நான் செலவழித்துச் செய்து விடுகிறேன்.” 

“ஒரு வருஷம் வளர்ந்திருக்க வேண்டிய பயிருக்குப் பதிலாக ஒரு மாதப் பயிரைக் காட்டினால் போதுமா?” 

“நீர் இன்னும் பழைய யுகத்திலேயே இருந்துகொண் டிருக்கிறீர். இந்தக் கத்தரிப் பாத்தியை வந்து பார்த்து விட்டுச் சொல்லையா!” தோட்டத்துக் கோடியில் இரண்டு கத்தரிப் பாத்திகள் இருந்தன. ஒன்றில் கத்தரிக்காய் சாதாரணமான அளவில் காய்த்திருந்தது. மற்றொன்றில் பெரிய மணிகளைப்போல் குண்டுகுண்டாகவும் ஏழெட்டு இஞ்சு நீளமுள்ளவைகளாகவும், கத்தரிக்காய்கள் காய்த் திருந்தன. 

“இதென்ன, அதென்ன?” என்று சரவணமுத்து பிரமித்தார். 

“இது சாதாரண முறையில் பயிர் செய்யப்பட்ட கத்தரிப்பாத்தி. இது மின்சார ஜலம் பாய்ச்சி விஞ்ஞான முறையில் பயிர் செய்யப்பட்ட பாத்தி. 

“விஞ்ஞான ரீதியில் பயிர் செய்தால் ஒருமாதப் பயிர் ஒரு வருஷத்துப் பயிரைப்போல் தோற்றமளிக்கும் என்றா சொல்கிறீர்கள்!” 

“அந்தக் கவலை எல்லாம் உமக்கேன்? பயிரைக் காட்ட வேண்டியது என் பொறுப்பு. அப்பீலைப் போடவேண்டியது உம் பொறுப்பு.” 

“இன்ஸ்பெக்டர் பொய்யன் ஆகிவிடுவாரே!” 

“வேண்டாமே; ஒரு சாண் கயிறு தருகிறேன். மயா னத்துக்குப் போங்கள்! ஹரிச்சந்திரன் இருப்பார்! சாட் சியை வைத்துக்கொண்டு சுருக்கு மாட்டிக்கொள்ளுங்கள்.” 

அவநம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே சரவண முத்து குறிப்பின்றி எதிரே பார்த்தார். அவரைக்கொடி ஒன்று கொழுகொம்பின் தயவுடன் மேலே படர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. செயற்கையின் உதவியைக் கொண்டுதான் இயற்கைகூட ஊன்றிக்கொள்ள முடியும் என்று சொல்லுவதுபோல் இருந்தது. 

“அப்பீலை நீங்களே தயார்செய்து நாளைக்கு என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் மேலே அனுப்பிவிடுகிறேன்.” 

“பைத்தியக்கார மனுஷன்!” என்று அத்தாட்சி வழங்கினார் பங்களாக்காரர். 

சரவணமுத்துவின் அப்பீலைப் படித்த சென்னை மாகாண அதிகாரிக்கு ரௌத்திரம் பொங்கிற்று. மொட்டை மனுவின் பேரில் என்ன நடவடிக்கை எடுத் துக்கொள்ளப்பட்டது என்று குமாஸ்தாவை அதிகாரி கடிந்துகொண்டார். 

குமாஸ்தா மறுத்துப் பேசாமல் இன்ஸ்பெக்டரின் அறிக்கையை எடுத்து மேஜை மேல் வைத்தார். 

அதைப் படித்த அதிகாரிக்குக் குழப்பம் உண்டாகி விட்டது. சவுக்கைப் பயிர் செய்யப்பட்டிருக்கிறது என்று அப்பீலில் சொல்லப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டரோ பயிர் செய்யப்படவில்லை என்று அறிக்கை அனுப்பி இருந் தார். எது உண்மை? யார் பொய்யன்? என்பது அவருக்கு உடனே விளங்கவில்லை. 

கோபம்தான் அளவுக்கு மீறி எழுந்தது. உடனே ஸ்தலத்தைப் பார்வையிட்டு அறிக்கை அனுப்பும்படி தம் அந்தரங்க குமாஸ்தாவுக்குக் கட்டளையிட்டார். 

மூன்று நாளைக்குள் அறிக்கை வந்துவிட்டது. ஒரு வருஷத்துச் சவுக்கைப் பயிர் ஸ்தலத்தில் இருப்பதாகக் கண்டிருந்தது. 

முதலெடுப்பில் அதிகாரிக்கு இன்ஸ்பெக்டரின் மேல் அவநம்பிக்கை உண்டாயிற்று. அவரைப்பற்றிக் காரியாலயத்தில் உள்ள அந்தரங்கக் குறிப்புகளைப் புரட்டிப் பார்த்தார். இலாகாவிலேயே நேர்மைக்குப் பெயர் பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதிகாரிக்கு முன்பு எழுந்த ஆத்திரம் இப்பொழுது எழவில்லை. அப்பீலைப் பைசல் செய்யவேண்டும் என்ற துறையில்தான் கவனம் சென்றது. மாகாண அதிகாரிக் குள்ள அநுபோகம் எங்கே போகும்? சரவணமுத்துவை வேலையை விட்டு நீக்கிய உத்தரவு பிசகு என்று ரத்துத் செய்துவிட்டுப் பொய் அறிக்கை அனுப்பியதாக ஏன் நட வடிக்கை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி குறிப்பிட்டுத் தம் தீர்ப்பை முடித்து வைத்தார். 

ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தமான கோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டார். தரம் பார்த்தது பொய் என்றே ஸ்தலத்தில் மாறாட்டம் உண் டாகிவிட்டது என்றோ அவருக்குச் சந்தேகம் இல்லை. பின்? எதுதான் உண்மை என்பது அவருக்குப் புரியவில்லை. 

மறுபடியும் சவுக்கை ஸ்தலத்தைப் பார்வையிட்டார். கட்டாந்தரையாக இருந்த இடத்தில் சவுக்கை, செழுமையாக வளர்ந்திருந்தது. திகைப்பு, கரைபுரண்டது. 

அங்கிருந்து நேரடியாகச் சரவணமுத்துவின் வீட்டிற்குச் சென்றார். 

இதென்ன செப்பிடு வித்தை! கட்டாந்தரையில் இரண்டு மாதத்திற்குள் பயிர் ஏற்றிவிட்டீரே! அதோடு எனக்கும் ஆபத்தைக் கொண்டுவந்துவிட்டீரே!” 

“பக்கத்துப் பங்களாக்காரர் நான் பிழைக்கச் செய்த வழி” என்று சரணவமுத்து முழு விவரத்தையும் கூறினார். இன்ஸ்பெக்டரின் வியப்பு, திடீரென்று வேறு திக்கை நோக்கித் திரும்பிற்று. ஒழுங்கு நடவடிக்கைக்கு உண் மையை அம்பலப்படுத்திப் பதில் எழுதி அனுப்ப வேண்டி யது அவசியந்தானா என்ற கேள்வி மனத்தில் பிறந்தது. குழந்தைகளோ தமக்கில்லை. உத்தியோகத் துறையில் ஓய்வு பெறும் கால எல்லைகூட நெருங்கிக்கொண் டிருந் தது. ஸ்தலத்தைப் பார்வையிட்டதில் ஏதோ மாறாட்டம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சமாதானம் கூறினால் ஓய்வெடுத்துக்கொள்ளும்படி மேல் அதிகாரி கட்டாயப் படுத்துவதைத் தவிர எதுவும் நிகழ்ந்துவிடாது என்று குருட்டுத்தனமாக இன்ஸ்பெக்டர் எண்ணினார். 

“சரவணமுத்து பங்களாக்காரர் விளக்கேற்றி வைத்தார் என்று சொன்னீரல்லவா? நான் விளக்குக்கு எண்ணெயாக இருந்துவிட்டுப் போகிறேன்” என்று சொல்லிக்கொண்டே தம் வீட்டிற்குக் கிளம்பினார்.

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *