நெஞ்சுக்குள் நெஞ்சு வை…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 2,606 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

“என்னங்க..! அலுவலகமே கதியா கிடைக்காம வீட்டையும் கவனிங்க…” சாவித்திரி தன் கணவருக்கு எதிரேயே சூட்கேசில் துணிகளை அடுக்கிக்கொண்டு சொன்னாள்.

“சரி” சந்திரசேகரன் தலையசைத்தார்.

“நிர்மல், விமல்! கிளம்பியாச்சா..?” அடுத்து அவள் குரல் கொடுத்தாள்.

“கிளம்பிக்கிட்டே இருக்கோம்..” எட்டு பத்து வயது பையன்கள் அறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தார்கள்.

தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டாளே! வெளியில் எவராய் இருந்தாலும் வீட்டில் மனைவிக்கு அடங்கியவர்கள் என்பதால்….

“எத்தனை நாள் தங்கல் சாவித்திரி..?” சந்திரசேகரன் மனைவியைப் பார்த்தார்.

“பசங்க கோடை விடுமுறை முடியறவரை.”

“ஒரு மாசமா…????”

“என்ன வாயைப் பிளக்குறீங்க. வீட்ல ஆள் இல்லையேன்னு அங்கே இங்கேன்னு அலையாம அடக்க ஒடுக்கமா அலுவலகம், வீடுன்னு ஒழுக்கமா இருங்க..”

“ஒரு அதிகாரியை விரட்டுற அளவுக்கு மனைவிகள் மாறிட்டீங்க…? “

“அலுவலகத்துலதான் அதிகாரி. வீட்டுக்கு வந்தா அந்த கொம்பு கிடையாது. எனக்குத் தாலி கட்டின சாதாரண புருசன்.”

“சரி . ஒரு மாசம் வேணாம் சாவித்திரி பத்து நாள்ல திரும்பிடு..”

“அதெல்லாம் முடியாது. வருசத்துக்கு ஒரு தடவை போறேன். உடனே திரும்ப முடியாது.”

“ஒரு மாசத்துக்கு நான் சோத்திலிருந்து எல்லாத்துக்கும் ஆளாய்ப் பறக்கனும்.”

“பறங்க…”

“அம்மா வந்தாச்சு…” பையன்கள் இருவரும் எதிரே வந்தார்கள்.

“டேய். அப்பாவை விட்டுட்டு நீங்களும் போறீங்களா…?”

“அய்..! தாத்தா பாட்டியோட ஊட்டியில் ஜாலியா இருப்போம்..”

டிரைவர் வாசலில் இன்னோவாவை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

“சிங்காரம்…!” சந்திரசேகரன் அழைத்தார்.

“ஐயா..!” பவ்வியமாக நின்றான்.

“அம்மாவையும் புள்ளைங்களையும் சொகுசு பேருந்துல பத்திரமா ஏத்தி விட்டுடு..”

“சரி ஐயா..!”

“அப்புறம்…நீ பத்து நாள் விடுப்பு எடுத்துக்கோ…”

“ரொம்ப நன்றி ஐயா. நானே கேக்கலாம்ன்னு இருந்தேன் நீங்களே கொடுத்துட்டீங்க…?”

“அப்படியா..?!”

“ஆமாம் ஐயா. என் மச்சினிக்கு வளைகாப்பு. மதுரைக்குப் போகனும்…”

“சரி. இன்னும் ரெண்டு நாள் அதிகம் வேணும்மின்னாலும் எடுத்துக்கோ. அம்மா வர ஒரு மாசம் ஆகும். அதுவரைக்கும் உன் வேலைகளை முடிக்கத் தேவையான விடுப்புகளை எடுத்துக்கோ..”

“சரி ஐயா..!” அவன் அடக்க ஒடுக்கமாய் அகன்று… காரில் வைக்க சூட்கேசுகளை எடுத்தான்.

சந்திரசேகரன் மனைவி மக்களை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு.. கார் மறையும் வரை இருந்து பார்த்துவிட்டு திரும்பினார்.

அப்போதே மனதுக்குள் திட்டம் வகுத்தார்.

அலுவலகம் கிளம்பினார்.

மொத்த அலுவலக கட்டிடத்தையும் ஒரு சுற்று சுற்றினார். எல்லோரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று ஒரு அதிகாரி நோட்டமிடுவது அவசியம். அதனால் எப்போதாவது இவர் இப்படி கெத்தாக வளம் வருவது சகஜம். மேலதிகாரியைக் கண்டாலே எல்லோருக்கும் அடி வயிற்றில் பயம்.

அவர் சக்தி சர்வமயம். இருக்காதா பின்னே.?..!

தன் தனி அறைக்கு வந்ததும் அழைப்பு மணி அழுத்தினார்.

கடைநிலை ஊழியன் தலை நீட்டினான்.

“விருத்திஷ்!” என்றார்.

அடுத்த வினாடி அவன் அகன்றான்.

பத்து நிமிடங்களில் விருத்திஷ் நுழைந்தான்.

“சார்” நிமிர்ந்தான்.

“இன்னும் பத்து நாள்கள்ல ஆடிட்டிங். உன்னிடம் இருக்கும் வேலைகள் முக்கியம். எல்லாத்தையும் முடிச்சுடு. அவங்க வந்து போறவரைக்கும் நீ விடுப்பு எடுக்க வேணாம்.”

”சரி சார்.”

“அப்புறம்…. எனக்கு ஒரு சின்ன உதவி..”

தன்னிடம் உதவியா..? – “என்ன சார்..?”

“வீட்லவெளியூர் போயிருக்காங்க…சமையலுக்கு ஒரு பத்து நாள் மணிமேகலையை அனுப்பனும்..”

எதிர்பாராதது.!!

“எனக்கு வயிற்றுப்புண். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்காது. நீ அலுவலகம் கிளம்பின பிறகு மணிமேகலை வீட்டிற்கு வந்தா போதும். மாலை அஞ்சு மணிக்கெல்லாம் அவ திரும்பிடலாம். எனக்கும் வீட்டு காவலுக்கு ஒரு நம்பிக்கையான ஆள் வேணும். உனக்கொன்னும் ஆட்சேபனை இல்லையே..?”

தெய்வமே வரம் கேட்பதா..?!

“சரி சார்”

“நாளையிலிருந்து ஆட்டோவுல அனுப்பிடு”

“சரி சார்.” – வெளியே வந்தான்.

சந்திரசேகரனுக்குக் காயைக் கச்சிதமாக நகர்த்திவிட்ட திருப்தி.

அத்தியாயம் – 11

காலையிலையே சந்திரசேகரன் சுறுசுறுப்பாகி விட்டார். வழக்கம் போல் முகத்தை மழு மழுவென்று வழித்து, சலவை உடுத்தி, அதில் வெளிநாட்டு நறுமண வாசனை நீர் தெளித்து ஆள் துள்ளலுடன் இருந்தார்.

மணியைப் பார்த்தார் 8.30.

வேலைக்காரன் சொன்னது செய்திருக்கிறானா என்று நினைத்து படுக்கை அறைக்குள் சென்று பார்த்தார்.

கட்டில் மெத்தை சுத்தமாக இருந்தது. மெத்தையில் எந்தவித சுருக்கமும் இல்லாமல் மேல் துணி நேர்த்தியாகப் போர்த்தப் பட்டு தலையணைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

இந்த கட்டில்தானே இரவு தூக்கம் தொலைத்தது…? ஏளனமாகப் பார்த்தார்.

உண்மையில் நேற்று இரவு இவருக்குச் சுத்தமாக தூக்கம் இல்லை. எல்லாம் மணிமேகலை நினைப்பு.

விருத்திஷ் திருமணத்திற்கு சிரத்தை எடுத்ததே இதற்காகத்தான். எப்படியாவது ஆளை உருட்டி மிரட்டி வழிக்குக் கொண்டு வந்து ஒரு நல்ல பெண்ணைத் தலையில் கட்டி…. அழைக்க, அனுபவிக்கத்தான்.

அவன் அம்மா வந்து இவர் காலில் வந்து விழுந்து கெஞ்சி நிலைமையைச் சொல்லி மகனுக்குக் கால் கட்டுப் போடச் சொன்னபோதே இவர் தனக்கான வழியையும் அதில் போட்டு விட்டார்.

ஒரு பெரிய அதிகாரி ஒரு சாதாரண ஊழியனுக்கு வரிந்து கட்டிக் கொண்டு திருமணம் முடிக்க தலை எழுத்தா…? எல்லாம் இந்த கணக்கு.

இதனால்தான் பெண்ணாய் லட்சணமாய் உள்ள மணிமேகலையைத் தேடி எடுத்தார்.

மணி 9.30 ஆள் வரும் நேரம். வரவேற்க வேண்டும்! கூடத்தில் வந்து அமர்ந்தார்.

டீபாயில் இருந்த ஆங்கில தினசரி எடுத்து விரித் து. ஆட்டோ சத்தம் காதில் விழ காதுகளைத் தீட்டிக்கொண்டார்.

9.40. மணிக்கெல்லாம் வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய மணிமேகலை வீடு திறந்திருந்தாலும் வாசல் அழைப்பு மணி அழுத்தினாள்.

“உள்ளே வா..” சந்திரசேகரன் தினசரி மடக்கி குரல் கொடுத்தார்.

உள் நுழைந்தாள்.

பெரிய வீடு. ஹால் ‘ஹா’ என்று விரிந்து பரந்து இவர் மட்டும் சோபாவில் தனித்து பேய் மாதிரி அமர்ந்திருந்தது மனசுக்குள் ஒரு பயமுறுத்தலை ஏற்படுத்தியது.

நெஞ்சுக்குள் பயம் கலவரம் தயக்கத்துடன் நடந்தாள்.

“பயப்படாம வா..”

அருகில் சென்றாள்.

“பயப்படாதே. வீட்ல என்னைத் தவிர யாரும் இல்லே.”

“சரி சார். அடுப்படி…?” இழுத்தாள்.

“இருக்கு காட்றேன்.” எழுந்தார். நடந்தார்.

அடுப்படிக்குள் நுழைந்தார். விசாலமாக அழகாக இருந்தது.

“இதுதான்.”

“எ.. என்ன செய்யணும்…?”

“மொதல்ல எனக்கும் உனக்கும் ஒரு டம்ளர் காபி. அடுத்து… எனக்கு நாலு இட்லி சட்னி அவ்வளவுதான். நான் அலுவலகம் போக வேண்டிய அவசியமில்லை. அரக்கப் பரக்க செய்ய வேணாம். பொறுமையாய் செய்யலாம்.” சொன்னார்.

அடுப்படியை ஒரு சுற்று கவனித்தாள்.

காபித் தூள். சர்க்கரை, பால் பாக்கெட் மேலும் சமையலுக்குத் தேவையான அத்தனை சாமான்களும் கண்ணுக்கெதற்கையே கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது.

”சரி சார். நீங்க போங்க.”

வந்தார். பழைய இடத்தில் அமர்ந்து தினசரி விரித்தார்.

ஐந்து நிமிடத்தில் காபி மணக்க மணக்க வந்தது.

நீட்டினாள்.

வாங்கினார்.

”உட்கார்”

“பரவாயில்லே சார். அடுத்த வேலையைப் பார்க்குறேன்.”

“பார்க்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை..”

“என்ன சார்..?”

“கூச்சமில்லாம சொல்லு…? விருத்திஷ் ஒழுங்கா படுக்குறானா…?”

‘என்ன இவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வி!?’

“சார்!” கொஞ்சம் அலறலாய்ப் பார்த்தாள்.

“குறையா இருக்கோன்னு எனக்கு சந்தேகம்…”

‘என்ன சொல்ல…?’

“குறையா இருந்தாலும் இல்லாட்டி போனாலும் நான் சொல்றபடி நடந்தா உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது.”

“…..”

“என்னை நீ அனுசரிச்சு நடந்தால் அவனுக்குச் சீக்கிரம் பதவி உயர்வு தர்றேன். உனக்கும் பகுதி நேர வேலை தர்றேன்.”

“…..”

“தப்பு சார்..”

“தப்புன்னு நெனைச்சா தப்பு. சரின்னு நெனைச்சா சரி. பொறுத்தவரை வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிறது தான் புத்திசாலித்தனம்.” – தொட்டார்.

“வேணாம் சார்…”

“பயப்படாதே. தாத்தா, பாட்டிகளெல்லாம் பேரன், பேத்திகளுக்கு ஏங்கிக்கிட்டு இருக்காங்க..”

“சார் நான் மூணு மாசம் முழுகாம இருக்கேன்.”

“சந்தோசம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? அப்புறம்.. அந்தக் கருவைக் கலைச்சிடு. ஊனமுற்றவன் கரு ஊனமுற்றதாய் பிறக்கும். ஒண்ணுக்கு ரெண்டு நீ அவஸ்த்தைப் படனும். என் நண்பர் ஒருத்தர் டாக்டராய் இருக்கார். கலைப்பு விசயத்தில் கில்லாடி. விலாசம் சொல்றேன் போய் பார். கொஞ்சமும் உனக்குக் கஷ்டம் இல்லாம வேலையை முடிச்சுடுவார்.” தொட்டார்.

இனி சரி வராது! என்று உணர்ந்த மணிமேகலை…சடக்கென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள்.

எதிர்பாராத சந்திரசேகரன்….

“மணிமேகலை…!” அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.

“உங்கள் பொறுக்கிப்புத்தி என்னைப் பெண் கேட்டு வந்தபோது நீங்க பார்த்த பார்வையிலேயே விளங்கிச்சு. அப்புறம் திருமணத்தன்னைக்கு என் கையை அழுத்திப் பிடிச்சி மோதிரம் போட்டபோது அது உறுதியாகிடுச்சு.. அப்புறம்….

அன்னைக்கு வீட்டுக்கு வந்தபோதும் அதே பொறுக்கி பார்வை. இப்படி ஏதாவது ஏடாகூடம் நடக்கும்ன்னு கணிச்சிதான் இடுப்புல கத்தியோட முன்னெச்சரிக்கையாய் வந்தேன். நான் கர்ப்பமா இருக்கேன்னு சொல்லியும் பரவாயில்லே படுன்னு சொல்றீன்னா நீ எவ்வளவு பெரிய அயோக்கியன். தொட்டா குத்திடுவேன். மரியாதையா விலகிடு.” நீட்டிய கையை மடக்காமல் எச்சரித்தாள்.

சந்திரசேகரன் வேர்த்து விலக….மணிமேகலை விறுவிறு என்று நடந்து வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

அத்தியாயம் – 12

முன் யோசனை, சாமார்த்தியமாக தப்பி வந்துவிட்டாலும் உடலில் நடுக்கமும், உள்ளத்தில் படபடப்பும் வீட்டிற்குள் வந்து தாழ்போட்டபிறகும் மணிமேகலைக்கு அடங்கவில்லை.

எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பி வந்துவிட்டோம்..! என்று நினைக்கும்போதே திகீரென்றது. ஊனமுற்றவன் மனைவி கணவன் திருப்தி செய்திருக்க மாட்டான்! என்று மட்டமாக நினைத்தது தான் மேலதிகாரி என்கிற நினைப்பு சிறிதுமில்லாமல் அவர்தன் எச்சில் புத்தியைக் காட்டிவிட்டார்.

ஓ..! இந்த ஆசையில்தான் ஓடி ஓடி வந்து பெண் கேட்டாரா..? என்ன ஒரு மட்டமான புத்தி..? ஆண்கள் ஏன் பெண்கள் விசயத்தில் இப்படி நாயாய்ப் பேயாய் அலைகிறார்கள்..? கணவனிடம் திருப்தி இல்லாத பெண் ஆண் தொட்டதும் இணங்கி விடுவாள் அடுத்தவன் அழைத்தால் வந்துவிடுவாள் ! என்பது எந்த கணக்கில் சேர்த்தி..? – நினைக்கும்போது அவமானமாக இருந்தது. அழுகையும் ஆத்திரமும் போட்டிப் போட்டுக்கொண்டு வந்தது.

அலுவலகம் விட்டு வந்ததும்… கணவனிடம் சொல்லலாமா..? சொன்னால்…. ஆத்திரப்படுவார், ஆவேசப்படுவார். ஆனால் ஒன்றும் நடக்காது ! நினைக்க சங்கடமாக இருந்தது.

அதேநேரம் புத்தி வேறொரு கோணத்திலும் சென்றது.

சேதி சொன்ன அடுத்த வினாடி…

“அப்படியா..? நீ தப்பி வந்திருக்க முடியாது. பொட்டக் காக்கா எட்டி கொத்த முடியாது. அவன் உன்னைக் கட்டிப் புடிச்சி சின்னாபின்னம் படுத்தி இருப்பான். பின்னால தெரிஞ்சா நான் கோபப்படுவேன்னு நீ தானா முந்தி சொல்லி உத்தமி வேஷம் போடுறே..?” அவர் புத்தி சட்டென்று இப்படி நினைக்க வாய்ப்பு உண்டு. நினைக்க அவளுக்குள் திகீரென்றது.

இந்த ஆளுக்குக் சந்தேகம்! சந்தேகம்! சந்தேகம்!

மனிதனைத் தவிர விலங்குகள், மற்ற எந்தஉயிரினத்திலும் கர்ப்பமாய் இருக்கும் பெண் விலங்கை வேறு எந்த ஆண் விலங்கும் தொடாது. தொட்டாலும் விசயம் தெரிந்ததும் விலகிப் போகும். பாழாய்ப் போன இந்த மனிதன் மட்டும் அதை பற்றி சட்டை செய்யவேமாட்டேன் என்கிறான் ஏன்..?

“அப்புறம்…. அந்தக் கருவைக் கலைச்சிடு. ஊனமுற்றவன் கரு ஊனமுற்றதாய் பிறக்கும். ஒண்ணுக்கு ரெண்டு நீ அவஸ்த்தைப் படனும். என் நண்பர் ஒருத்தர் டாக்டராய் இருக்கார். கலைப்பு விசயத்தில் கில்லாடி. விலாசம் சொல்றேன் போய் பார். கொஞ்சமும் உனக்குக் கஷ்டம் இல்லாம வேலையை முடிச்சுடுவார்.” எப்படி கூசாமல் சொல்கிறார்.

ஊனமுற்றவர்கள் குழந்தை பெற்றவர்களைப் போல் பிறக்குமா..? குள்ளர்களுக்குப் பிறந்த குழந்தை குள்ளமாகவே பிறக்கிறதே…?! அப்படியானால்..?!!… நினைக்க வயிற்றைக் கலக்கியது.

செவிட்டு ஊமைகளுக்குப் பிறந்த குழந்தையும் அப்படி…? யாரைக் கேட்டால் உண்மை தெரியும்..? என்று நினைக்கும்போது…

அழைப்பு மணி அடித்தது.

கணவனா…?! – வந்து கதவைத் திறந்தாள்.

வெங்கடேஷ்!

அன்பு, அனுசரணையான ஆளை பார்த்ததும்…இவளையும் அறியாமல் குபுக்கென்று கண்ணீர்.

“என்ன… ஏன்…?” – அவன் பதறிக் கொண்டு உள்ளே வந்தான்.

“ஒன்னும்மில்லே” விழி நீர் துடைத்தாள்.

“முகம் சரி இல்லே. உண்மையைச் சொல்லு..?” அதட்டினான்.

கொட்டினாள்.

கேட்ட வெங்கடேசுக்குப் பற்றி எரிந்தது.

“எங்கே இருக்கான் அவன்…?” ஆவேசப்பட்டான்.

“வேணாம் வெங்கடேஷ். பெரிசு பண்ணாதீங்க. இது பெண்ணுக்குத்தான் அவமானம் எனக்கு அவமானம், நமக்கு அசிங்கம்!” சொன்னாள்.

‘தன்னிடம் எவ்வளவு சிருங்காரமாக இருக்க வேண்டியவள்…?!’ என்று நினைக்க இவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“நான் கொஞ்சம் புத்தி பிசகிட்டேன் மணி..” தொய்வுடன் முனகினான்.

“எதுக்கு..? ” புரியாமல் பார்த்தாள்.

“சேவை மனப்பான்மையில் நான் மாத்தி யோசிக்கிறேன். மறுபடுறேன்னு சொல்லி விலகிய உன்னை நான் விட்டிருக்கக் கூடாது. உன்னை வலுக்கட்டாயமாய் இழுத்துப் போய் தாலி கட்டி இருக்கனும். தவறிட்டேன்!”

“விடு வெங்கடேஷ். கேலி, கிண்டல், மான அவமானமெல்லாம் எதிர்பார்த்தேன். ஆனா… இப்படி எதிர்பார்க்கலை.” சொன்னாள்.

“உலகம் பொல்லாதது. மனுசன் கெட்டவன்!”

“விடு வெங்கடேஷ். நான் ரெண்டு மாசம் முழுகாமலிருக்கேன். குழந்தை எப்படி பிறக்கும். விருத்திஷ் போல் பிறக்குமா..?” கேட்டாள்.

“பொறக்க வாய்ப்பில்லே. எதுக்கும் டாக்டரைப் பார்த்து சந்தேகத்தை நிவர்த்தி செய்துக்கிறதுதான் நல்லது. நானே கேட்டு வர்றேன். தேவை பட்டால் நீ போகலாம்.” சொன்னான்.

“சரி” தலையசைத்தாள்.

“நடந்ததை மற. முழுகாம இருக்கிற நீ எதை நினைச்சும் வருத்தப் படக்கூடாது. அது குழந்தையைப் பாதிக்கும். நீ எதுக்கும் கவலைப் படாதே. நான் இருக்கேன்” சொன்னான்.

மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த விருத்திஷ் காதில் இந்த வார்த்தைகள் விழுந்து தீயாக சுட்டது. பட்டென்று நெருப்பாகப் பற்றியது.

வந்த சுவடு தெரியாமல் திரும்பினான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *