நெஞ்சில் ஒரு முள்
கதையாசிரியர்: பெரி.சண்முகநாதன்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 1,787
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்று வெள்ளிக்கிழமை. அதிகாலை ஐந்தரை மணியிருக்கும். கீரிமலையிலிருக்கும் அனாதை ஆச்சிரமத்தின்முன் கையில் மூட்டை போல் ஒன்றை ஏந்திக் கொண்டு நின்றாள். ஒரு பெண். அவ்வாச்சிரமத்தின் காரிய தரிசி சபாநாதன் விடியுமுன்பே எழுந்தவர் வெளியே போகப் புறப்பட்டார். அவர் தினமும் காலையில் ஒரு மைல் தூரமாவது நடந்துவிட்டு வருவது வழக்கம்.
தலையில் ஒரு சிறு துண்டைக் கட்டிக் கொண்டே வாசல் படிகளில் இறங்கியவர் “ஐயா!” என்ற பரிதபகரமான குரல் வந்த திக்கை நோக்கினார். அவ்வளவு பனியிலும் தலையை மூடாமல் இரு கையிலும் ஏதோ மூட்டை போல ஒன்றை ஏந்திக் கொண்டு சபாநாதனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
“என்னம்மா வேண்டும்?” சபாநாதன் கேட்டார்.
“நீங்கள் தானே இந்த ஆச்சிரமத்தின் காரியதரிசி சபாநாதன்?”
“ஆமாம் நீயார்?” சபாநாதன் வியப்புடன் விசாரித்தார்.
“ஐயா என் பெயர் சரோஜா. நான் உங்களிடம் தான் வந்தேன்.. எங்கேயோ வெளியே போகிறீர்கள் போலிருக்கிறது. நான் தடுத்து நிறுத்தியதற்காக ஒருவேளை….” இழுத்தாள் சரோஜா .
“பரவாயில்லையம்மா, உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி பனியில் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்று சொல்லி உள்ளே திரும்பி நடந்தார் சபாநாதன்.
சரோஜாவின் கையிலிருந்தது வெறும் மூட்டையல்ல என்பதை அது அசைந்து காட்டியது. சபாநாதனை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் சரோஜா.
உள்ளே சென்ற சபாநாதன் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரோஜாவை உட்காரும்படி சைகைகாட்டினார். சரோஜா அங்கிருந்த கட்டிலில் வெளிச்சம் அதிகமாகப் படாத இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
“என்னால் உங்களுக்கு என்ன ஆகவேண்டும்?” சபா நாதன் கேட்டார்.
“உங்கள் அனாதை ஆச்சிரமத்தில் சேர்ப்பதற்காக இந்தக் குழந்தையை கொண்டு வந்திருக்கிறேன். இதை ஏற்றுக் கொள்வீர்களா? இதன் பராமரிப்புச் செலவுக்கான ஏற்பாடுடன் தான் வந்திருக்கிறேன்” என்றாள் சரோஜா.
அவள் சுற்றிவளைக்காமல் நேரடியாகத் தான் வந்த விஷயத்தைச் சொன்னதும் சபாநாதன் மனதில் என்னென்வோ யோசனைகளெல்லாம் தோன்றின.
சபா நாதனுக்குப் பத்து வருட அனுபவம். அங்கு கொண்டு வந்து சேர்க்கப்படும் குழந்தைகளைக் கொண்டு வருபவர்களிடம் பேசிப்பேசிப் பழகியிருக்கிறார். அவர்கள் வரும் முறையும் பேசும் விதமுமே தனி கொண்டு வரும் குழந்தையின் பிறப்பில் சிறிது வழிப்பிசகு இருந்தாலுஞ்சரி தான். அந்த அவமானம் துக்கம் எல்லாவற்றையும் அவரையும் அனுபவிக்கும்படி கட்டாயப் படுத்திவிடுவார்கள். அந்த முறையில் பேசுவார்கள் வருபவர்கள்.
ஆனால் சரோஜா அப்படியொன்றும் பேசவுமில்லை. நடந்து கொள்ளவுமில்லை. அவளுடைய வெளித்தோற்றம் சபாநாதனின் மனதில் அவளிடம் ஏற்படுத்திய மதிப்பை சரோஜாவின் பேச்சும் நடத்தையும் அதிகரிக்கச் செய்தன. சபாநாதன் சொன்னார்.
“எங்கள் ஸ்தாபனம் அனாதைகளுக்கென்றே ஏற்படுத்தப்பட்டது. ஆகையால் கொண்டுவருபவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது எங்கள் நியதியில் கிடையாது. ஆனால் எல்லாவற்றிற்கும் முன்பாகச் சிலவற்றை நிச்சயம் செய்து கொள்ள விரும்புகிறேன். குழந்தையின் பராமரிப்புக்கான செலவு பற்றிப் பேசினீர்களலல்லவா? அனாதையென்றால் பராமரிப்புக்கு நாதியற்றது என்றுதானே அர்த்தம்……”
சரோஜா சகிக்க முடியாத வேதனையால் துடிப்பவளைப் போல கண்களை மூடிக்கொண்டிருந்தாள். சபாநாதன் தொடர்ந்து பேசினார்.
“உங்களின் மனதை புண்படுத்த வேண்டுமென்று எனக்கு உத்தேசமில்லை. .. எங்களிடம் இப்படிக் குழந்தைகளை கொண்டு வந்து சேர்ப்பவர்கள் பரோபகாரச் சிந்தையால் தங்களால் இயன்றளவு அல்லது இஷ்டப்படி ஆச்சிரமத்திற்கு பொருளுதவி செய்வதுண்டு அப்படி ஏதாவது செய்வதாக இருந்தால் வந்தனத்துடன் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அதற்காக கட்டாயப்படுத்துவதோ அல்லது பணம் கொண்டுவரவில்லை என்பதற்காக குழந்தையை ஏற்க மறுப்பதோ கிடையாது. இந்தக் குழந்தையைப் பற்றி பலவிதமான கேள்விகளையெல்லாம் கேட்போமென்று நீங்கள் பயம் அடையலாம். நீங்கள் எதுவும் சொல்லாத வரையில் நாங்கள் வற்புறுத்த மாட்டோம். உங்கள் வாயினால் இந்தக் குழந்தை ஒரு அனாதை என்று சொன்னால் மட்டும் போதும் அம்மா! நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே இருங்கள். காலை உணவை முடித்துக் கொண்டு போகலாம்” என்றார் சபாநாதன்.
சரோஜா கெஞ்சுந் தோரணையில் பேசினாள்: “ஐயா! உங்களிடம் இந்தக் குழந்தையை ஒப்படைக்க வந்தேன். என்னையும் நீங்கள் ஒரு அனாதையாக மதித்து உபசாரம் செய்வீர்களென்று நான் எதிர்பாக்கவேயில்லை. தயவு செய்து இந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டு எனக்கு போக விடை தாருங்கள். ஏற்கனவே நைந்து போன என் நெஞ்சை உங்கள் உபகாரங்களால் அதிகமாக நோக வைக்க முயலாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்” என்றாள்.
வழக்கமாக கேட்கும் கேள்விகளை சபாநாதன் கேட்டார். தன் தயக்கத்தை கூடியளவு மறைக்க முயன்று கொண்டே சரோஜா பதில் சொன்னாள். அந்தக் குழந்தை அவளுடையது என்பதை மட்டும் ஒப்புக்கொண்டாள். அதற்கு மேல் எதுவும் சொல்ல மறுத்துவிட்டாள்.
எவ்வளவோ தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் பேசி முயன்றும் சபாநாதனால் சரோஜாவிடமிருந்து எதையும் கிரகிக்க முடியவில்லை.
இறுதியாகச் சரோஜா, “ஐயா! உங்களிடம் நான் பல விஷயங்களை மறைக்க முயலுகிறேன் என்று குறை நினைக்கக் கூடாது. காலையில் நான் வந்த போது என் மனதிலிருந்த வேதனையையும் அவமான உணர்ச்சியையும் நீங்கள் உங்கள் சுபாவத்தினால் மாற்றி விட்டீர்கள். என் மனதை புண்படுத்தக் கூடாதென்று நீங்கள் பக்குவமாகப் பேசுகிறீர்கள். என் இஷ்டம் போல் பேசிவிட்டு குழந்தையையும் ஏற்க தயாராயிருக்கிறீர்கள். இதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் நன்றி செலுத்த வேண்டும். உங்களுடைய இந்த உதவிக்கு ஈடுசெய்ய என்னால் எப்போதுமே முடியாது. தெய்வத்தின் கருணைக்கு ஈடு செய்ய முடியுமா? நீங்கள் எனக்குத் தெய்வந்தான்” என்றவள், கைகூப்பி வணங்கிவிட்டு விடுவிடென்று வெளியே நடந்து சென்றாள்.
அவள் நடந்து போவதையும் கட்டிலில் உள்ள குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தார் சபாநாதன்.
அந்தச் சம்பவம் சபாநாதனின் நெஞ்சை அளவுக்கு மிஞ்சி நெகிழ்த்திவிட்டது.
ஒரு வாரத்துக்குப் பின்னர் சபாநாதனுக்கு ஒரு கடிதம் வந்தது. அது சரோஜாவிடமிருந்து வந்திருந்தது. வியப்புடன் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார். பக்கதில் ஆச்சிரமத் தலைவர் ராஜகோபால் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அன்புள்ள சபாநாதன் அவர்களுக்கு,
வணக்கம். என்னை இதற்குள் நீங்கள் மறந்திருக்க முடியாது. சென்ற வெள்ளிக் கிழமையன்று அதிகாலையில் முதன் முதலாக நீங்கள் விழித்த என் முகத்தை மனிததெய்வமான நீங்களே மறப்பதானால் பின்பு…
அன்று உங்களிடம் என் செல்வத்தை ஒப்புவித்து வந்தேன். உங்களிடத்தில் என்னிடமிருந்த நாணத்தினால் என் அபாக்கியக் கதை முழுவதையும் சொல்ல முடியவில்லை. இக் கடிதத்தின் மூலம் உங்களுக்குத் துன்பமே நிறைந்த என் கதையை தெரிவிக்கிறேன். என் குழந்தை மற்றவர்களுக்கு அனாதையாக இருந்தாலும் அந்தக் குழந்தையினது சரித்திரம் உங்கள் ஒருவருக்காவது தெரிந்திருக்கட்டும் என்று எழுதுகிறேன்.
நான் ஒரு தாயில்லாப் பிள்ளை ஆதலினால் என் தந்தை என்னை அருமையாக வளர்த்தார். என்னை எஸ் . எஸ் . சி வரை படிக்க வைத்தார். என் விஷயத்தில் எவ்வித குறையும் இருக்கக்கூடாதென்பதே அவர் கவலையாக இருந்ததென்று கூறலாம். அதிலும் நான் ஒரே பிள்ளை என்பதற்காக என்னிடம் அவருக்கு அளவுகடந்த வாஞ்சை.
அதிக சீர்சிறப்புடன் என்னை ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு இந்த உலகை விட்டே போய் விட்டார். என் தந்தை, எனது கணவர் என்னைத் தமது இரு கரங்களாலும் வரவேற்றுத் தமது இதயத்தில் இடம் கொடுத்து அமர்த்திக் கொண்டார். மூன்று வருஷ காலம் கலப்பற்ற இன்ப வெள்ளத்தில் மிதந்தேன். நாற்புறமும் இனிமையும் கனிவும் பொங்கித் ததும்பின. மூன்று வருடங்களுக்குப் பின்புதான் முதன் முதலாக என் வாழ்வில் கசப்புத் தட்ட ஆரம்பித்தது. ஆனால் அது இவ்வளவு கொடிய விஷமாக வளர்ந்து விடுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
எனது கணவனின் சகோதரி ஒருத்தி நாங்கள் கொழும்பிலிருக்கும் வீட்டுக்கு வந்தாள். “மச்சாள்! கல்யாணமாகி மூன்று வருடமாச்சு, எப்போது என் மருமகனை நான் கொஞ்சுவது?” என்று ஆரம்பித்தாள். டாக்டரைப் பார்க்க வேண்டுமென்றார்கள். டாக்டரும் ஏதேதோ சொன்னார். பயனில்லை. எத்தனையோ கோவில்களுக்கு நாங்களிருவரும் “நேர்த்தி” / வைத்துக்கொண்டோம்.
மேலும் இரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. என்னென்னவோ மருந்தெல்லாம் வாங்கிக் கொடுத்தார் அவர் பலனில்லை. ஊரில் என்னென்னவோ பேசினார்களாம். எனது மாமியாருக்கு அல்லும் பகலும் அறுபது நாழிகையும் இதுவே பேச்சாகிவிட்டது.
எங்களிருவருக்கும் ஒரு குழந்தை வேண்டுமென்ற ஆசை எந்த எல்லையில் இருந்ததென்பதை மற்றவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும். அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு நான் புழுவாகத் துடிப்பேன். அவரிடம் என் கஷ்டத்தை மறைக்க முயன்று எவ்வளவோ சாமர்த்தியமாக நடந்துகொள்வேன். ஆனால் அவர் நெஞ்சில் என்னிடமிருந்த பிரேமையின் முன் என் மத்தியம் எவ்வளவு! “யார்” என்ன வேணுமெண்டாலும் பேசட்டும். நானிருக்கிறேன் உனக்கு” என்று எனக்கு தைரியமளித்து என்னை அணைத்துக்கொள்வார். அவர் வீட்டில் இல்லாத போது கூட அவருடைய கரங்கள் என்னை மற்றவர்களின் சொல்லம்புகளிலிருந்து பாதுகாத்துக்கொண்டிருப்பதாக நான் உணருவேன். அப்படி நடந்து கொண்டார் அவர்.
இந்நிலையில் தான் அவருக்கு கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு மாற்றலாகியது. இப்படிப் பல மாற்றங்களை தனக்குள்ள செல்வாக்கைக் கொண்டு தட்டிக் கழித்த அவருக்கு இதையும் தட்டிவிடலாம் என்ற எண்ணந்தான் அவருக்கு முதலில் தோன்றியது. இருந்தாலும் மாமி முதலியவர்களிடமிருந்து எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போய்விட்டால் போதுமென்பதற்காகவும் இம்மாதிரிப் போவதிலும் ஏதாவது பலனிருக்குமோவென்று அவரையும் மீறி எழுந்த ஆசையினாலுமே அவர் திருகோணமலைக்குப் போக உத்தேசித்தார்.
மாமியை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விட்டுத் திருகோணமலைக்குச் சென்றோம்.
இரண்டு வருட காலம், திருகோணமலையில் கழிந்தது. ஒரு பலனையும் காணோமே என்று இருவரும் ஒரு சமயம் நினைத்து கலங்குவோம். ஆனாலும் எங்களுடைய பாக்கியம் அவ்வளவுதானென்று சமாதானம் செய்து கொள்வோம்.
இந்நிலையில் மாமியிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. தனக்கு வயதாகிவிட்டதாயும், அவரை பார்க்க நிரம்ப ஆவலாயிருப்பதாயும் அவரது குழந்தையை எடுத்துக் கொஞ்ச தனக்குப் பாக்கியமில்லாமல் போய்விட்டதாகவும், தெய்வத்திற்கு கண்ணில்லையென்றும் அவரைப் போன்றவர்கள் விஷயத்தில் தெய்வம் கஞ்சத்தனமும், வஞ்சத்தனமும் செய்வதாகவும், இன்னும் என்னவோ எல்லாம் எழுதியிருந்தார். ஆனால் கடைசியாக எழுதியிருந்த வசனத்தைப் படிக்க மயக்கந்தான் வந்தது.
உங்கள் இருவர் ஜாதகங்களையும் சாத்திரியாரிடம் காண்பித்தேன். உன் மனைவியின் ஜாதகப்படி உனக்கு புத்திர பாக்கியமே இல்லை. நீ ஒரு குழந்தைக்காக எப்படி ஏங்குகிறாய் என்று எனக்கத் தெரியும். எனவே நீ ஒரு விவாகம் செய்து கொள். ஐயோ! இதை எழுத மாமிக்கு எப்படித்தான் துணிவு வந்ததோ? அந்த ஒரு வசனத்தில் தான் எத்தனை விஷம் இருந்தது. ஆனால் எனக்குத்தானே அது விஷமாகத் தோன்ற முடியும்.? தனது பரம்பரை தழைக்க ஒரு குழந்தை வேண்டுமென்ற எண்ணத்துடன் எழுதும் மாமிக்கு எப்படி அது விஷமாகத் தோன்ற முடியும்?
ஒரு குழந்தைக்காக அவர் எப்படி ஏங்கினார் என்பது எனக்குத்தான் தெரியும். என்னால் அவருடைய ஆசை பூர்த்தியாகாதென்றே தோன்றியது. தனது தாயின் கருத்தை ‘சட்’ என்று சொல்லி ஒரே வார்த்தையில் உதறியெறிந்து விட்டார். ஆனால் மாமி போட்ட விதை என் மனதில் ஊற ஆரம்பித்தது. ‘மாமியின் யோசனைப்படி என் நெஞ்சில் ஒரு முள்ளால் குத்தியது போலிருந்தது. ஆளால் போகப் போக அந்த வேதனை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்து, அதுதான் சரி என்ற நிலைமைக்கு வந்து விட்டேன்.
அன்று ஆபீஸிலிருந்து வந்தவுடன் அவசர அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே மீண்டும் சென்று இரவு ஏழு மணிக்குத் திரும்பினார். அவர் வந்து பத்திரிகை எடுத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தார். நான் அவரருகில் சென்று காப்பியை அவர் முன் இருந்த மேசை மீது வைத்துவிட்டு தொண்டையை ஒரு முறை கனைத்துக் கொண்டேன். அவர் நிமிர்ந்தார். நான் அவருக்கு முன் மண்டியிட்டு இருந்து, அவரது கைகளைப் பற்றிக் கொண்டே, “அத்தான்! எனக்குக் கூட இந்த வீடு ஒரே சூன்யமாகிவிட்டது. இத்தனை காலமாகியும் ஆண்டவன் நம்மை ஏமாற்றி விட்டான். மாமி சொல்லியபடி உங்களது பரம்பரைக்காவது ஒன்று வேண்டும் தானே. ஏன் நீங்கள் வேறு விவாகம் செய்யக் கூடாது ” என்று இழுத்தேன்.
அவர் என் முகத்தை கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையில் தான் எத்தனை அர்த்தம்.
“சரோஜா! என்ன அசட்டுத்தனமான பேச்சு இது. எனக்குக் குழந்தை இல்’லை என்று இதே கவலைதான்….” என்று சொல்லும் போது அவர் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது….” ஆனால் அதற்காக உன்னை விட்டுவிடவேண்டுமா? நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இந்த விஷயத்தையிட்டு நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பு சிறிதளவும் மாறாது” என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டார்.
அதுதான் நான் அவரிடமிருந்த கடைசி மனமொத்த இரவு, ஆம்! அன்றும் நமது மனமொத்த வாழ்வின் ஒரு வித்து பதிக்கப்பட்டது. நான் அந்த இரவிலேயே முடிவு செய்து கொண்டு மறு நாளே என்னை அனாதையாக்கிக் கொண்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை அவர் விவாகமென்ற விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டாரென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். நானாக விலகிக் கொண்டால் அவர் ஒரு தகப்பனாகும் ஆசையும், மாமி ஒரு பாட்டியாகும் ஆசையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமல்லவா?
மறுநாள் காலையில் அவர் வெளியே போயிருந்த சமயம், அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டு விட்டேன். முன் யோசனைப்படியே மன்னாரில் வசிக்கும் எனது பாடசாலைத் தோழி இந்திராவிடம் போய்ச் சோந்தேன்.
அவள் என் நடத்தையை சரியென ஒப்புக் கொள்ளாவிட்டாலும் எனக்கு ஆதரவு தர மறுக்கவில்லை. இந்திரா தன்னால் ஆனவரை முயன்று எனக்கு ஆறுதலளிப்பதோடு என்னைத் திரும்பவும் என் கணவரிடம் அனுப்பவும் முயன்றாள். அவள் தன் முயற்சியில் தோல்வியே கண்டாள். இந்தத் துன்பக் கதையை சகிக்க முடியாத கசப்பை அதிகம் வளர்த்த எனக்கு இஷ்டமில்லை. சுருக்கமாகவே சொல்லுகிறேன். நான் அப்படி விதியின் ஏவலாக என் கணவரை விட்டுப் போன போது ஒரு மாதக் கர்ப்பவதி!
முதலில் நானும் இந்திராவும் நம்பவில்லை. நாங்கள் உண்மையறிந்து நம்புவதற்குள் நான் மூன்று மாதக் கர்ப்பவதியாகிவிட்டேன். தெய்வமே இப்படிச் சதி செய்வதுண்டா?
ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருந்த அந்தச் சமயத்தில் அப்பப்பா! என்ன பாடுபட்டது என் மனம்! துக்கமும் சந்தோஷமும் மழையாகப் பெய்வது போல இருக்கும். ஆனால் அன்று தொட்டு இன்று வரை ஒரு கணமாவது கலப்பற்ற சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறேனா? எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியவதி நான்!
இந்திரா எவ்வளவு சொல்லியும் அப்போது அவருக்கு நான் ஒரு கடிதம் எழுத மறுத்துவிட்டேன். எழுதினால் அவர் நம்புவார? களங்கமில்லாமல் ஏற்றுக்கொள்ளுவாரா? என்ன செய்வது என்று துடி துடிக்க, நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி கழிந்து கொண்டே போயிருந்தன. முடிவென்ன? அதைத்தான் நீங்களே அறிவீர்களே. ஒரு பாவத்தையும் அறியாத என் செல்வத்தை நான் — சதிகாரி அனாதையாக்கி உங்களிடம் ஒப்புவித்து விட்டேன். உலக நியாயத்திற்கும், தர்மச் சடங்குகளுக்கும் இம்மியளவும் குறையாத பெற்றோர்களுக்குப் பிறந்தும் பெற்றவர்களாலேயே இந்தக் கதிக்காளாக்கப்பட்ட அந்தக் குற்றமற்ற பாலகனை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வண்ணம்,
நன்றியுள்ள,
சரோஜா
கடிதத்தைப் படித்து முடித்த சபாநாதன் பக்கத்தில் நின்ற ஆச்சிரமத் தலைவர் ராஜகோபாலைப் பார்த்தார். “சபாநாதன்! இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதெல்லாம் உண்மையென்று நம்புகிறீர்களா?” ராஜகோபாலன் தான் கேட்டார்.
“உண்மையென்று சொல்லமாட்டேன். அவ்வளவும் சத்தியம் என்று சொல்வேன். பாவம் இந்தப் பெண்ணுக்கு இப்படி நேர்ந்திருக்க வேண்டாம்.” சபாநாதனுக்கு கண்களில் நீரே வந்து விட்டது.
“விதிக்கு மனிதனின் உலகில் ஒரு விளையாட்டுப் பொம்மை. நாம் என்னதான் செய்யினும் அந்தப் பெரு விளையாட்டின் முடிவுதான் முடிவு” என்றார் ராஜகோபால்.
பெரி.சண்முகநாதன்
குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர் பெரி. சண்முகநாதனாவார். முரளிகானம், இரு புதல்வர்கள், நெஞ்சில் ஒரு முள், அழிவும் ஆக்கமும் முதலான நல்ல சிறுகதைகளைப் படைத்து அளித்துள்ளார்.ஈழநாட்டில் கணிசமானவளவு எழுதியுள்ளார்.
– 11.05.1966, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.