நீ ஏன் நீயாக இல்லை?
புகழ் பெற்ற சூஃபி மெய்ஞானி ஜுஸியா, தனது இறுதிக் காலத்தில், அஞ்சி நடுங்கியபடி, கண்ணீர் விட்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தார். அதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அவர் சொன்னார்:
“இப்போது இறக்கும் தறுவாயில் இருக்கிறேன். இறந்த பிறகு கடவுள் என்னிடம், ‘நீ ஏன் மோசஸ் போல இல்லை?’ என்று கேட்டால், ‘நீ எனக்கு மோசஸின் தகுதிகளைத் தரவில்லை; ஆகவே, நான் மோசஸாக ஆகவில்லை’ என பதில் சொல்லிவிடுவேன். ‘நீ ஏன் ரபி அகிபாவாக ஆகவில்லை?’ என்று கேட்டால், ‘நீ எனக்கு அகிபாவின் தகுதிகளைத் தராததால்’ என்று சொல்வேன். ஆனால், “நீ ஏன் ஜுஸியா போல இல்லை?” என்று கேட்டால், சொல்வதற்கு என்னிடம் பதில் இல்லை. எனது வாழ்நாள் முழுக்க நான் மோசஸ், அகிபா அல்லது யாரோ ஒருவராக ஆகவே ஆசைப்பட்டேன். ஆனால். ஜுஸியாவாக இருப்பதற்கு முற்றிலும் மறந்துவிட்டேன். கடவுள், நான் ஜுஸியாவாக இருப்பதற்கான முழுத் தகுதிகளையும் கொடுத்திருந்தார். அதைச் செய்வது சுலபமானதும் கூட. ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டேன். அதனால், நான் அவர் முன்பு வெட்கித் தலை குனிய வேண்டி இருக்கும். அதை நினைத்துத்தான் அஞ்சி நடுங்கி அழுகிறேன்!”
எவ்வளவு பெரிய ஞானியோ, மகானோ, ஆதர்ஷமோ ஆயினும், ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளலாமே தவிர, அப்படியே நகல் செய்வது கூடாது; ஒவ்வொருவருக்கும் தனித்துவம் அவசியம் – என்பதை உணர்த்தும் சூஃபி குட்டிக் கதை இது.