நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!
ஒரு பெண்மணி தனது மகனை முல்லா நஸ்ருதீனின் பள்ளியில் சேர்த்துவதற்காக வந்திருந்தார்.

“இவன் சேட்டை மிகுந்தவனாக இருக்கிறான். இவனிடம் பல தீய பழக்கங்களும் உள்ளன. எனவே, நீங்கள் இவனை இப்போதே மிரட்டி வைத்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் இவன் உங்கள் தலையில் ஏறி தொந்தரவு செய்துவிடுவான்!” என்றாள் அந்தத் தாய்.
நஸ்ருதீன் அதைக் கேட்டுவிட்டு, “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அவனை விட்டுவிட்டு செல்லுங்கள்!” என்றார்.
ஆனால் அந்தப் பெண்மணி அதை ஏற்கவில்லை. “நீங்கள் இப்போதே அவனை மிரட்டுங்கள். அவன் பணிந்து உட்கார்ந்ததைப் பார்த்த பிறகு நான் செல்கிறேன்.”
முல்லாவும் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, கண்களை உருட்டி, கை விரல்களை சிங்கம் – புலி போல காண்பித்து, பயங்கரமாக உறுமி, ஆவேசத்தோடு மேலும் கீழும் குதித்து அச்சுறுத்தினார். பிறகு அங்கிருந்து துள்ளிக் குதித்தபடி ஓடி, எங்கோ சென்று மறைந்துவிட்டார்.
அவரது செயல்களைப் பார்த்து அந்தப் பெண்மணிக்கே சற்று அச்சமாக இருந்தது.
முல்லா வெகுநேரம் கழித்து, மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு நடந்து வந்தார்.
“இவ்வளவு நேரமாக எங்கே போய்விட்டீர்கள்? உங்களிடம் என் மகனை அச்சுறுத்தும்படிதான் சொன்னேன். நீங்கள் என்னையே அச்சுறுத்திவிட்டீர்களே!”
“நீங்கள் என்னுடைய நிலைமையையும் கவனித்திருப்பீர்கள் அல்லவா! மிரட்டுவதும், அச்சுறுத்தும், மற்றவர்களுக்கு மட்டுமல்ல; அந்த செயலில் ஈடுபடுவர்களுக்கும் விரோதமாத்தான் இருக்கும்!’ என்றார் நஸ்ருதீன்.
நீங்கள் பிறரிடம் அன்பு செலுத்தும்போது, உங்கள் மனம் அன்புமயமாக ஆகிவிடும். நீங்கள் மற்றவர்களை வெறுத்தால், உங்கள் மனமும் வெறுப்புமயமாக ஆகிவிடும். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்!