கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2025
பார்வையிட்டோர்: 302 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தெருவரைக்கும் கரண்ட் வந்து இருபது வருஷத்திற்கும் மேலே; இந்த ஒழுங்கைக்கு எடுப்பதற்கு எவ்வளவோ நாள் படாத பாடு பட்டார்கள். எல்லோரும் அலுத்து இனிப் பிடிக்க ஒருவருமில்லை என்று ஓய விட்ட வேளையில் எதிர்பாராமல் அது வந் தது. ஒரு வருஷத்திற்கு முந்தி ஒருநாள் ஆட்கள் வந்து தூண் பறித்தார்கள். ஆறு மாதங்களில் நட்டாயிற்று. இன்னும் வயர் தொடுக்கவில்லை. ஆனால், வீட்டு இணைப்புக் காக விண்ணப்பங்களை வாங்குகிறார்களாம். விண்ணப்பங்கள் போடமுதல் வீட்டில் வயறிங் முடித்திருக்க வேண்டும். 

கேதீசனுக்கு இது விஷயம் போன கிழமைதான் தெரியவந்தது. எப்படியும் இப் போதே எடுத்துவிட வேண்டுமென்றிருந்தது. போதாக்குறைக்கு இப்போது தவறவிட்டால் பிறகு கொனக்ஷன் எடுப்பது வலு கஷ்டம் என்று யாரோ சொன்னார்கள். 

ஆளைக் கூட்டிவந்து எஸ்ரிமேற் போடு வித்துப் பார்த்தான். சுருக்கமாகத்தான். ஒன்பது விளக்கு, ஒரு ப்ளக் பொயின்ற் எல்லாமாகப் பத்து. என்றாலும் ஆயிரத்தைந்நூறுக்கு மேல் வரப் பார்த் தது – எவ்வளவு சுருக்கினாலும். சாமான் பட்டியலை வாங்கி வைத்துக்கொண்டான். 


ஆயிரத்தைந்நூறு பற்றி ஈஸ்வரியுன் யோசித்தபோது, அவள் பலாவைப் பற்றிச் சொன்னாள். பலா அடிவளவில் நின்றது, குறைந்தது இரண்டு பரப்பிற்காவது நிழல் பரப் பிக்கொண்டு கூடாரம் மாதிரி. அடிமரம், ஆறேழு அடிக்கு மேல் வரும். சுற்றளவும் அப்படித்தான். அவளது ஆச்சி காலத்து மரமாம். ஆனால் காய்ப்பதை மட்டும் கொஞ்சக் காலமாய் நிறுத்தி விட்டிருந்தது. அதைக் கொடுக்கலாமென் றாள். போன மாதந்தான் தோணிக்காரர் வந்து விலை கேட் டிருந்தார்கள். கேதீசனுக்கு அவ்வளவு மனமில்லை. அவ னுக்கும் அந்த மரத்திற்கும் பழக்கமேற்பட்டு பத்து வரு ஷத்திற்குள்தான். என்றாலும் தோணிக்காரர்களுக்கு முடியாது என்று சொல்லியிருந்தான். 

ஈஸ்வரி இப்போதும் அதைத்தான் சொல்லுகிறாள். கேதீசன் ஓமென்றால், அப்புக்குட்டிக் கிழவன் நாளைக்கே விலை கேட்டவனைக் கூட்டிவந்துவிடும். விலைகூட. சரியாய் வரும் வயறிங் செலவுக்கு அளவாய். பிரச்சினை இராது. 

கேதீசனுக்கு இப்போதும் அவ்வளவு சம்மதமில்லை. மொக்குகளும் செம்மஞ்சள் தேமல்களுமான கம்பீரம், காற்றுக்கெல்லாம் பெய்கிற பழுத்தல்கள், வெய்யில் பூக்கும் வெள்ளை மணல், முற்றத்திலிருந்து பார்க்கையில் ஒரு தென்னை உயரத்தில் தெரிகின்ற உச்சிக் கொப்பு இதெல்லாவற்றையும் தறிக்க வேண்டுமா என்றிருந்தது. எல்லா வற்றுக்கும் மேலாய், கோடை மதியங்களில் அவன் சரணாலயம். 


வேறு வழியில்லாதிருந்தது. அவனிலும் பார்க்க ஈஸ்வரி ஆர்வமாயிருந்தாள். ஒரே நாளில் கொப்பெல்லாம் தறித்து, அடிமரத்தைச் சுற்றித் தோண்டி,, கூம்பாக வெட் டிப்போய் ஒரு ராட்சசனை விழுத்துவதுபோல் பலாவை விழுத்தினார்கள். மரந் தூக்குகிற வண்டில் இரண்டு வடக் கத்தி மாடுகளுடன் வந்து, இரும்புச் சங்கிலியால் கட்டித் தூக்கிப்போனது. 

அடிவளவே வெளித்துவிட்டிருந்தது. வேறு யார் வீட் டிலோ இருப்பது போலிருந்தது. பரவாயில்லை, அந்த இடத் தைக் கொத்தி காய்கறித்தோட்டம் போடலாமென்றாள் ஈஸ் வரி ஒரு மோட்டர் வாங்கிவிட்டால் இன்னும் நல்லது…


சனிக்கிழமை காலையில் பட்டியலையும் காசையும் கொண்டு பட்டினம் புறப்பட்டான். 

சந்தையைத் தாண்டி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்த போது, எப்போதும் குங்கிலியம் மணக்கிற அந்த இடத்தில் தட்டி அவிழ்த்து, வேலி திறந்திருந்தது. உள்ளே அவன் வீட்டுப் பலா கிடந்தது. 

இதுதான் தோணி செய்கிற இடமென்று இவ்வளவு நாளும் தெரியாதிருந்ததே என்று வியந்தான். ஒரு நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பலாவை அறுக்கும்போதல்ல. 

– மல்லிகை, 1982. 

– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *