கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 501 
 
 

இந்த உலகில் எல்லா உயிர்களும் தமக்குத் தமக்கென சில நியாயங்களைக் கொண்டிருக்கின்றன. அவை அவற்றின் கோணத்தில் சரியானவை என்பதை விட அவை அவற்றினது இருப்பை நிலைநாட்டுவதற்கு அவசியமானவையும் கூட…. அவனது கனவு ஒன்றுதான் இந்த உண்மையை அவனுக்கு உணர்த்தியது.

அவனுக்கு பதிநான்கு வயதுதான் ஆகிறது..ஆனாலும் அவன் கோழிப் பண்ணை ஒன்றின் உரிமையாளன் .

அவன் தனது தொழிலை மிகவும் நேசித்தான் .அவனிடம் நூறு கோழிகள் வரை இருந்தன. அவை யாவும் நாட்டுக் கோழிகள் .சூழலில் இருந்து உணவுகளைத் தேடி உண்டு மிகவும் ஆரோக்கியமானவையாகவும் கொழுத்தவையாகவும் இருந்தன,அதனால் அவனது கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் சந்தையில் நல்ல கிராக்கி இருந்தது. விதவையான அவனது தாயும் அவனும் வாழ்வதற்கான வருவாய் போதுமானதாய்க் கிடைத்து வந்தது. ஆனால் அண்மைக் காலமாக அவன் மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறான். அவனது பண்ணையிலிருந்து கோழிகள் திடீர் திடீரெனக் காணாமல் போய்க்கொண்டிருந்தன. எவ்வாறாயினும் திருடனைக் கண்டுபிடிக்கவேண்டுமெனத் தீவிரம் காட்டினான்.

பல இரவுகள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது கோழிகளுக்காக அமைக்கப்பட்ட கொட்டகைக்கு அருகில் சிறிய கூடாரம் ஒன்றைச் சரி செய்து காத்திருந்தான்.

அன்று இரவு அவ்வாறு அவன் காத்திருந்த போதுதான், அடர்ந்த இருட்டை உடுருவிய படி அந்த இரண்டு கொள்ளிக் கண்கள் கொட்டகையை நோக்கி முன்னோறிக் கொண்டிருந்தன, இரண்டு நான்காகி நான்கு இன்னும் பலவாகி…கொட்டகையை நெருங்கியபோது அவன் பயத்தால் உறைந்து போனான் . ஓநாய்க் கூட்டம் …. அவற்றின் இலக்கு கோழிகளாக இருக்காவிட்டால்…. அவன் கதி?

இந்த அதிர்ச்சியால் இரண்டுநாள்கள் காய்ய்ச்சலில் உழன்று கொண்டிருந்த போதுதான் அந்தப் பயங்கரக்க் கனவு .

அவன் அடர்ந்த மரங்களிடையே காளான்களைத் துலாவியபடி நடந்து கொண்டிக்கிறான். ஆனால் அன்று அவனது காளான் வேட்டை அவ்வளவு இலகுவானதாய் இருக்கவில்லை, கல்லும் முள்ளும் அவன் பாதங்களைப் பதம் பார்க்க முடிவில்லாததாய் தொடர்கிறது தேடுதல் வேட்டை…

மரங்களின் செறிவால் இருண்டுகிடந்த காட்டில் மெல்ல மெல்ல இருளும் கவிந்து அவன் பயணத்துக்குத் தடையாகிறது….

அவன் திக்குத் தெரியாது மலைத்து நிற்கும்போது மரக்கிளைகளின் இடுக்கில் எரி தழல்லாய் இரு கண்கள் …அவன் தன்னை சுதாகரிப்பதற்குள் அவனை நோக்கி பாய்கிறது ஓநாய் ஒன்று…. ஈரக்குலை நடுங்க அலமந்து அவன் கத்துகிறான்……அவன் வாயிலிருந்து வார்த்தைகளுக்குப் பதில் வெறும் குழறலாய்,,,,ஓநாயின் ஊளையை ஒத்ததாய். ஒரு சத்தம் மட்டும் வெளிப்படுகிறது.

“இப்படிக்கத்தாதே …எரிச்சலாய் இருக்கிறது …”..மனிதன் போலப் பேசவும் செய்கிறது ஓநாய்.

“நான் உன்னை இப்பொழுது கொல்லப் போவதில்லை…உன்னோடு பேச விரும்புகிறேன்..”

அவன் பயம் விழுங்கிய கண்களால் அதனை நோக்குகிறான்..

“நான் உன்னைச் சாப்பிடுவேன் என்று பயப்படுகிறாய். போலும்”- அவன் மௌனத்தையே பதிலாக்குகிறான்.

“ஆனால் நீ கோழிகளைச் சாப்பிடுவாய் தானே …? ?”

அவன் ஆம் என்பதாய்த் தலையை மட்டும் ஆட்டுகிறான்.

“சமையல் காரன் மிகக் கொடுமையாக அதன் கழுத்தை முறித்துச் சமையல் செய்கிறான். அவன் கோழிக்காகச் சிறிதும் வருத்தப்படுவதில்லை. அவனது வாடிக்கைக் காரர் சுவையானகோழிச் சூப்புக்காக் நாவைத் தொங்கப்போட்டபடி காத்திருக்கிறார்கள், குஞ்சைப் பறிகொடுத்த தாய்க்கோழி துக்கம் தாங்காது கதறுகிறது.செட்டையை உதைத்தபடி அங்கும் இங்கும் பறந்து திரிகிறது.நாம் மட்டும் ஜீவகாருணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமாக்கும்…. இப்பொழுது சொல் எது நியாயம்…?”

அவனது பதிலுக்கு ஓநாய் காத்திருக்கவில்லை.

“இப்பொழுது நீதான் எனக்குக் கோழி . நான் உன்னை உண்டு பசி ஆற்றுகிறேன்”

மூச்சு விடாது பேசியபடி அவனைத் தன் இரையாக்க அவன் மீது பாய்கிறது ஓநாய்.

ஐயோ! உதவி உதவி என்று கத்தியவன் மேலும் கனவின் கனதியைத் தாங்க முடியாதவனாய் விழிக்கிறான்.

அன்று முதல் அவன் மாமிச உணவைக் கையால்த் தொடுவதில்லை. ஆனால் ஓநாய் மட்டுமல்ல… உலக மனிதரும் இன்னும் கோழிகளின் கழுத்தை நெரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

– லியோ டால்ஸ்டாய் மொழிபெயர்ப்புக் கதை(தழுவல்), தமிழில்: வாசுகி நடேசன்

வாசுகி நடேசன் வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *