நினைவுகளும் நிகழ்வுகளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,371 
 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் ‘கபுரை’ச் சுற்றிலும் பெருந்திரளான மக்கள் மொய்த்து நின்றனர். அவர்களின் வதனங்கள் சோர்ந்தும், வாடியும் கிடந்தன. நெஞ்சங்களோ மரணத்தை எண்ணி ‘இது என்ன வாழ்க்கை, இது என்ன வாழ்க்கை’ என்று முணு முணுத்துக் கொண்டிருந்தன. 

பாயிஸோ, கபுரின்’ கரையிலே சோகமே உருவாக நின்றிருந்தான். அவன் விழிகள் இரண்டும் அருவியென் நீரைக் கொட்டிக் கொண்டிருந்தன. மேனியோ, பட படத் துக் கொண்டிருந்தது. தன் உடல் தரையிலே சாய்ந்து விடாத வண்ணம் தாங்கிப் பிடித்துக் கொண்டு ஒருவாறு நின்றிருந்தான். 

இருபத்தைந்து முப்பது வருடங்கள் தன்னோடு இணைந்து வாழ்ந்து வந்த தன் மனைவி ஹசீனாவின் திடீர் மறைவு பாயிஸை மெத்தவும் வருத்தி ஆட்டி வைத்ததில் லியப்பில்லைத்தான். 

இவ்வாறு பாயிஸ் சோகத் தீயில் வெந்து கொண்டி ருந்த வேளையிலுங்கூட ‘கபுரி’ன் கரையிலே நின்று நிதான மாக அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த தன் மனைவியின் நல்லடக்கத்தை ஆரம்பமுதல் ஊன்றி அவதானித்து வந் தான். 

இப்போது அப்பகுதியெங்கும் அமைதியின் உச்சநிலை. 

பெரிய பள்ளிவாசல் ‘லெவ்வை’, ‘கபுரி’ ல் அடக்கம் செய்யப்பட்ட அந்த ‘ஜனாஸா’வின் முகப்பக்கமாகக் குந்தி யிருந்து ஓதிய ‘தல்கீன்’ ஓசை அங்கு நிலவிய அமைதியைக் குத்திக் கிழித்துக் கொண்டு ஓங்கியும் தாழ்ந்தும் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘லெவ்வை’, ‘தல்கீன்’ ஓதத் தொடங்கி ஓரிரு நிமிடங்கள்தான் உருண்டிருக்கும். அவ்வேளை, பாயிஸ் அந்தச் சூழலையே மறந்தான். அவன் நினைவில், சில வாரங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியும், இப்போது சில மணித்தியாலங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவமும் விரிந்தன. 


அன்று ஞாயிற்றுக்கிழமை. பிற்பகல். வீட்டின் முன் ஹோலில் நடு அறைக் கதவின் அருகே சுவரோடு ஒட்டிய வாறு போடப்பட்டிருந்த சுட்டிலிலே ‘ஸ்பிரிங்’ மெத்தை யில் அவன் மிகவும் களைப்புற்றவனாக சுருண்டு படுத்தி ருந்தான். அவ்வேளை, அங்கு விரைந்து வந்த அவன் மனைவி ஹசீனா, கட்டிலின் கரையிலே மெல்ல அமர்ந்து, ”இஞ்சப் பாருங்க…இப்ப குளிச விழுங்கணுமில்லவா? என்ன படுக்கிற…எழும்புங்க” என்று அவனை மெல்ல அசைத்து விட்டாள். அவன், கண் மலர்ந்து எழுந்திருக்க முயன்ற போது தோளைப் பிடித்து அவள் உதவி புரிந்தாள். அவன் முதுகை நிமிர்த்தி, கைகளை ஊன்றி நன்கு அமர்ந்து கொண் டதும் அவள் மதிய போசனத்தின் பின் அவனுக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைகள் அனைத்தையும் பக்கட் டுகள் ஒவ்வொன்றாக வாசித்து வாசித்து அவற்றிலே குறிப் பிட்டிருந்தபடி கொடுத்தாள். எல்லா மாத்திரைகளையும் உட்கொண்ட பின் அவன் மெத்தையிலே இருந்தவாறு வசதியாகச் சாய்ந்து சற்றுப் பின்னே நகர்ந்து சுவரிலே வசதியாகச் கொண்டான். அவன் மனைவி ஹசீனாவோ, கட்டில் கரையிலிருந்து எழுந்து பக்கத்திலே கிடந்த கைக்கதிரையில் தன் கணவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள். இருவருக் குமிடையில் சிறிது நேரம் அமைதி நிலவியது. 

அதனை முதலில் அவளே கலைத்தாள். 

“இஞ்சப் பாருங்க … நேத்துக்காலயில உங்களுக்குக் அவடத்த கிறுகிறுப்புப் போல வந்து உழப்பாத்திங்க நானும் நம்மிட பிள்ளைகளும் நிண்டத்தால டக்கிண்டு நாங்க உங்களைத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டம். இல்லாட்டி என்ன நடந்திருக்கும் … அல்லாஹ்தான் காப்பாத்தினான். அத நெனச்சாலே இப்பவும் எனக்கு நெஞ்சு பதறுது. நேரத் தோட உங்களுக்கிட்ட டாக்குத்தரும் சொல்லித்தானே இருக்காரு… நீங்க நெஞ்சு வருத்தக்காரரு நிக்கக்க. இல்லாட்டி நடக்கக்க, கிறுகிறுப்புப் போல வந்தா உட னேயே கீழுக்குக் குந்திக்கணும் அப்படிண்டு… நீங்க ஏன் நேத்து கிறுகிறுப்பு வந்தவுடன் அப்படிச் செய்யல்ல?” என்ற ஹசீனா நெஞ்சுச் சீலையைச் சரி செய்து கொண்டு தன் கணவன் பாயிஸை ஊன்றி அவதானித்தாள். 

பாயிஸோ தன் வதனத்தைத் துவாயினால் அழுந்தத் துடைத்து விட்டுக் கொண்டு அமைதியாகக் கூறினான்: 

”புள்ள…எனக்கு விஷயம் தெரியும்தான்.ஆனா … நேத்து எனக்கு கிறுகிறுப்பு வந்தவுடன் என்ன செய்யிற, ஏது செய்யிற எண்டு ஒண்டுமே செய்யத் தோணல்ல. அவ் விடத்த நீங்களும் பிள்ளைகளும் நிண்டதும் நல்லதாத்தான் பேய்த்து.” அவன் வதனத்தில் மெல்லியதாய்க் கருமை கவிந்திருந்தது. விழிகளிலோ ஒளி குன்றியிருந்தது. 

தன் கணவனையே உற்று நோக்கிய வாறிருந்த ஹசீனாவின் வதனம் வாடிய மலரானது. 

“இஞ்சப் பாருங்க…ஒரு முக்கியமான விஷயம்…ஒரு வகையில பார்த்தா அதச் சொன்னாலும் நல்லம் போலத் தெரியிது. மற்றொரு வகையில யோசிச்சா, அதச் சொல் லாமல் விட்டாலும் நல்லம் போலத்தான் தெரியிது. எனக்கு என்ன செய்யிறதெண்டு யோசினயாயிருக்கு என்று ஹசீனா தயங்கியவாறு இயம்பினாள். அதனைச் செவி மடுத்த அவளின் கணவன், “அந்த விஷயம் எப்படிப்பட்ட தாய் இருந்தாலும் பறுவாயில்ல, அதச் சொல்லுங்க’ என்று எவ்விதச் சலனமுமின்றிக் கூறினான். 

தைரியமுற்ற ஹசீனா அப்படியே விடயத்தை வெளியே பிட்டு வைத்தாள். 

“இஞ்சப் பாருங்க …சனங்கள்ளாம் சொல்றாங்க… நெஞ்சு வருத்தக்காரருக்கு அதாலதான் மௌத்தாம் அவங்களுக்கு மௌத்து எந்த நேரம் எந்த நிமிஷம் வரு மெண்டு சொல்லேலாதாம்… இப்ப நீங்களும் நெஞ்சு வருத் தக்காரரு.உங்களுக்கும் அந்த நெஞ்சு வருத்தம் இத்தோடு மூண்டு முற வந்திருக்கு. மத்த ரெண்டு முறையையும் விட இந்த முற அது மிச்சம் ஓரமா இருக்கிறாப் போலவும் தெரியிது.எதுக்கும் நீங்க உங்கட பேரிலரிக்கிற ஐந்து ஏக்கர் நெற்காணியையும் எனக்கு எழுதி வச்சா என்ன…? நீங்க அப்படி அத எனக்கு எழுதி வைக்காம உட்டு ஏதாவது நடந்துட்டுண்டா அப்படி நடக்கப் போடா எண்டுதான் அல்லாக்கிட்ட ‘துவா’க் கேக்கன். தற்செயலா அப்பிடி வித்தியாசமா நடந்துட்டுண்டா நம்மிட ஏழு பொம்புளப் பிள்ளைகளுக்கும் அது பங்காப் பேய்த் திரும். அந்த ஏழில கல்யாணம் முடிக்காத நாலு பொம் பிளைப் பிள்ளைகளுக்கும் பங்கு போறத்தப்பத்தி நான் எதுவும் யோசிக்கல்ல. அத விரும்பின நேரம் எழுதி வாங்கிக் கலாம் என்று சொல்லுங்க.ஆனா, கல்யாணம் முடிச்ச மத்த மூண்டு பொம்பிளப் பிள்ளைகளுக்கும் பங்கு போனா அவங்களுக்கிட்ட இருந்து அத எழுதி வாங்கிக்கிறதுதான் மிகவும் கஷ்டத்தில் வந்து முடியும். அவங்கள்ளயும் இளைய வர்கள் ரெண்டு பேருக்கிட்ட எப்படியோ தெண்டித்து எழுதி வாங்கிக் கொண்டாலுங்கூட நம்மிட மூத்த மகளுக் கிட்ட எழுதி வாங்கிக்கவே முடியாது. இது உங்களுக்குந் தெரியுந்தானே. நமக்கிட்ட இந்த ஐந்தேக்கர் நெற்காணியை விட வேற சொத்துவத்தோ, பண வசதியோ எதுவுமே இல்லை.இந்த நிலயில இந்த ஐந்தேக்கர் காணி அவ்வள வும் என்ட பேரில் இருந்தா எப்படியோ அதக்கொண்டு கல்யாணம் முடிக்காத நம்மிட நாலு பொம்பிளப் பிள்ளை களுக்கும் வளவு வாங்கி, வீடு கட்டி சுலியாணமும் முடிச்சி வைக்கலாம். என்ன செய்யப் போறிங்க?” என்று நிதர்சன மாகத் தன்மனக்கருத்தை வெளியிட்டு வைத்தாள் ஹசீனா. 

ஹசீனா இவ்வாறு கூறியதைக் கேட்ட பாயிஸ் உண்மை யாகவே கலங்கித்தான் போனான். வற்றி வறண்டு கிடந்த அவன் விழிகளில் பொலு பொலு வென நீர் நிறைந்து கொண்டதோடு கரைகளும் கசியத் தொடங்கின. இருந்தும் அவன் ஓரிரு நிமிடங்களில் தன்னைச் சமாளித்துக் கொண் டான். 

தன் மனைவி, வேடம் போடத் தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவள் என்பதும், தன் மனதில் பட்ட எதை யும் அப்பட்டமாக வெளியில் கக்கிவிடும் சுபாவம் பெற்ற வள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆதலால் அவன் அவளைப்பற்றி வித்தியாசமாய் எதுவும் எண்ணவில்லை. 

தனது இந்த நிலையில் அவளின் ஆலோசனை அவனுக்கும் சரியெனவே பட்டது. மெத்தையில் இரு கரங் களையும் ஊன்றி வசதியாக உட்கார்ந்து கொண்டு அவளை நோக்கினான். 

அவளின் வதனமோ ஓங்கி அறைந்து விட்டது போல் காட்சி தந்தது. விழிகளோ படபடத்துக் கொண்டிருந்தன. இருந்தும் அவளின் பார்வையில் தன் கணவன் பாயிஸின் பதிலை அறியும் ஆர்வம் இழையோடிக் கொண்டிருந்தது. அதனை அவனும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். மெல்ல தன் வறண்ட இதழ்களைப் பிரித்தான்: 

“என்ட பேரிலரிக்கிற ஐந்தேக்கர் நெற்காணியையும் உங்களுக்கு எழுதி வைக்குமாறு இப்ப நீங்களாகவே எனக் கிட்டக் கேக்கீங்க… நான் அதப்பத்தி வித்தியாசமா எதுவும் யோசிக்கல்ல .. என்ட நிலய அவதானித்ததாலேயே நீங்க அவ்வாறு கேக்கீங்க என்பதும் எனக்கு நல்லா விளங்கிது. சரி… சரி… வீணாக என்னத்துக்கு கதைத்துக் கொண்டிருப் பான் … இப்பவே என்ட பேரிலரிக்கிற அந்த ஐந்தேக்கர் காணியையும் உங்கட பேரில எழுதி வைக்கன்… இப்பவே டக்கிண்டு உங்கட தம்பிய அனுப்பி நொத்தாசிய எடுப் பிய்ங்க” என்று விட்டு நெற்றியில் வந்து கவிந்து கிடந்த கேசத்தை ஒதுக்கி விட்டுக் கொண்டான் பாயிஸ். 

“சரி. நான் தம்பிர ஊட்ட போய் அவர அனுப் பிட்டு வாறன், நீங்க எழும்பி அங்க இங்க நடக்காதீங்க. ஹசீனா எழுந்து தலையிலே முக்காடிட்டுக் கொண்டு முற்றத் திலே அடியெடுத்து வைத்தாள். 

சிறிது நேரத்துக்குள் பிரசித்த நொத்தாரிசு ஒருவர் அங்கே அழைத்துவரப்பட்டார். பின்பு, அவரைக்கொண்டே பாயிஸின் பெயரிலிருந்த ஐந்தேக்கர் நெற்காணியும், அவன் மனைவி ஹசீனாவின் பெயரில் எழுதி வைக்கப் பட்டது. இறுதியில், பாயிஸ் அங்கு வைத்தே அவ்வுறுதி யையும் அவளிடம் கையளித்தான். அவ்வேளை மாலைப் பொழுதின் மெல்லிய இருள் எங்கும் படர்ந்து கொண்டி ருந்தது. அங்கு அவர்களிடையே நிலவிய பெருஞ் சோகத் தைக் காண இயலாமையால்தானோ என்னவோ பரிதியும் மேற்கு வானில் மறைந்தான். 

காலமென்ற கொடியில் நாட்களென்ற மலர்கள் மலர்ந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன. 

பதினைந்து தினங்களுக்குள் நெஞ்சு வருத்தம் மெல்ல மெல்லத் தணிந்து பூரண குணமாகிப் பழையபடி எழுந்து நடமாடவும் தொடங்கினான் பாயிஸ். 

இவ்வாறு பாயிஸ் எழுந்து நடமாடத் தொடங்கி ஆறு, ஏழு நாட்களின் பின், அதாவது இன்று காலை பத்து பத்தரை மணியிருக்கலாம், அவன் மனைவி ஹசீனா கிணற் றிலே நன்கு குளித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்ட பின் திடீரென்று தனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று விட்டுக் கட்டிலிலே மெல்லச் சாய்ந்தாள். அவளின் நிலை கண்டு பீதியடைந்த அவளின் பிள்ளைகள் ‘ஓ வென்று அழுதனர். 

விடயமறிந்து அங்கு வந்து திரண்ட அக்கம் பக்கத் திலுள்ளவர்கள், ‘கொஞ்ச நேரத்தைக்கு முதல்லதானே நல்லா இருந்தா… இப்ப குளிர்கிளிர் போட்டிட்டா என்ன என்று அங்கலாய்த்தனர். 

தன் மனைவியின் நிலைமை மேலும் மோசமடை வதை உணர்ந்து கொண்ட பாயிஸோ, டாக்டர் ஒருவரிடம் விரைந்து விடயத்தை எடுத்துக் கூறி உடனேயே அவரை அங்கு அழைத்து வந்தான். 

டாக்டர் அவளை நன்கு பரிசோதித்து விட்டு, “நெஞ் சடைப்பு; உயிர் போய்விட்டது” என்றார். 

ஒரு கணம் பாயிஸும் பிள்ளைகளும் அதிர்ந்து போனார்கள். பின்பு, டாக்டர் கூறியது உண்மை என அறிந்ததும் பாயிஸ் செய்வதறியாது நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு வான் கிழிய வாய் பிளந்து அழுதான். ஆனால், பிள்ளைகளோ ஓடி விழுந்து தம் தாயின் பூதவு டலைத் தழுவிக் கொண்டு புலம்பிப் புலம்பி அழுதார்கள். 

“எக்கட தங்க உம்மா… எங்கள விட்டிட்டுப் போயிட் டிங்களா! எங்கட ஈரத்துளிரான உம்மா… எங்கள் விட் டிட்டுப் போயிட்டிங்களா! எங்கட ஈமான் பெத்த உம்மா… எங்கள விட்டிட்டுப் போயிட்டிங்களா!” என்று பிள்ளைகள் புலம்பிப் புலம்பி அழுதது அங்கு நின்ற கலங்காத மனிதர் களைக் கூட கண்ணீர் வடிக்க வைத்தது. 


“மௌலவி துவா ஓதுங்க.” லெவ்வையின் சப்தம் கணீரென்று ஒலித்தது. 

சுயநிலை எய்திய பாயிஸ் நிமிர்ந்து நோக்கினான். கபுரின் அருகே நின்ற சாலி மௌலவி கைகளை ஏந்தியபடி பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்தார். 

சுற்றிலும் நின்றவர்களும் கைகளை ஏந்திய வண்ணம் அதில் பங்கு கொண்டிருந்தனர். 

தனது கரங்களால் வதனத்தை அழுந்தத் துடைத்து விட்டு உடனேயே அவனும் கைகளை ஏந்திப் பிரார்த்தனை யில் கலந்து கொண்டான். 

பிரார்த்தனை முடிவு பெற்றதும் ஒருவரோடு ஒருவர் கைகளை இணைத்து ‘சலாம்’ சொன்னார்கள். முக்கியமாக அனைவரும் அவனோடு சலாம்’ சொல்லத் தவறவில்லை. 

சற்று நேரத்தில், ‘சலாம்’ சொல்லும் நிகழ்ச்சியும் நிறைவு பெற்று அவ்விடத்தை விட்டு யாவரும் நகர்ந்து பாதையில் இறங்கினர்.பாயிஸ் அவர்களோடு ஒருவனாக ஆனால், சோகத்தின் வலிய கரங்களால் நசுக்கப்பட்டுத் தள்ளாடியவனாக அடிவைத்துக் கொண்டிருந்தான். 

– தினகரன் வாரமஞ்சரி 1983 ஜூன் 05.

– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *