நினைவில் நின்றவள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 4,341
“ஜானு..! ” ரவி உற்சாகமாக குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
“என்னங்க..?….” கூடத்து சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஜானகி புத்தகத்தை மூடி வைத்து விட்டு கணவனைப் பார்த்தாள்.
“இப்போ… உனக்கு நான் ஒரு சேதி சொல்லப் போறேன். !…” சொல்லி அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்தான்
“என்ன சேதி..? “ஏறிட்டாள்..
“ஒரு மாதிரியான சேதி..? “கண்ணடித்தான்.
“ச்சீய்…! “ஜானகி செல்லமாய் முணகி முகம் சிவந்தாள்.
“ஏ… அந்த மாதிரி சேதி..? இல்லே. இது வேற….”
“அப்படித்தான் சொல்லுவீங்க. அப்புறம் சுத்தி சுத்தி அங்கதான் வருவீங்க. உங்களுக்கு எப்பவும் அதே நினைப்பு சிந்தனை…”
“அது இல்லேடி. தங்கம். இது வேறுமாதிரியான சேதி. உனக்கு ஆதரிச்சி தரும்…!!.”
“எனக்கு அதிர்ச்சி தருமா…? என்ன உளறீங்க..? ஏதாவது சின்ன வீடு வைச்சிருக்கீங்களா…?”
“அழகான பொண்டாட்டி நீ இருக்கும்போது எனக்கு எதுக்கு சின்ன வீடு…?”
“எல்லா ஆம்பளைக் குரங்குகளும் அப்படித்தான் சொல்லும். அப்புறம் கையும்மெய்யுமாய் அகப்படும்போது வலிய மாட்டுச்சி வேற வழி இல்லேன்னு எந்த குரங்கு முகத்தையாவது காட்டும்.”
“அம்மா தாயே ! நான் சேதி சொல்லட்டுமா..? வேணாமா..?”
“சொல்லுங்க…?”
“நீ அதிர்ச்சி அடையக்கூடாது. !”
“அதிர்ச்சி அடையிற விசயத்துக்கு அதிர்ச்சி அடைஞ்சுதானே ஆகனும்…?!”
“ஆத்திரமும் படக்கூடாது…!”
“ரொம்ப விவகாரமோ…? “”
“அப்படியெல்லாம் இல்லே. சொல்றேன்.”
ஜானகிக்கு வயிற்றைக் கலக்கியது. கலவரமாக கணவனைப் பார்த்தாள்.
“பார்த்தியா..? இதுதான் வேணாங்கிறது..! கணவன் மனைவிக்குள்ள ஒளிமறைவு இருக்கக் கூடாதுன்னு நெனச்சி உண்மையைச் சொல்லனும்ன்னு ஆசைப்பட்டா… மாறுறியே …?” நிறுத்திப் பார்த்தான்.
“சரி. சொல்லுங்க…? “ஜானகி மனதைத் திடப்படுத்தூக்கிகொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
”ஆங்…! இது சரி ! “ரவி முகம் மலர்ந்தது.
“அப்புறம் அப்படி இப்படி மாறக்கூடாது ?!…”கராறாகச் சொன்னான்.
“ரொம்ப கடுப்பேத்தா தீங்க சீக்கிரம் சொல்லுங்க..?”
“சொல்றேன். ஜானு..! நம்ப திருமணத்துக்கு முன் நான் ஒருத்தியைக் கா……….கா.தலிச்சேன். ! இன்னும் சொல்லப்போனால் எங்க கல்லூரி படிப்பிலிருந்தே காதல்.”
“… சரி..”
‘’அவ பேரு ஜான்சி.”
“ஓ… நான் ஜானகி. அவள் ஜான்சியா…?”
“ஆமாம். ரெண்டு பேரும் உயிருக்குயிராய்ப் பழகினோம். கலியாணம் முடிக்கலாம்ன்னு முடிவெடுக்கும்போதுதான் சாதி, மதம், அந்தஸ்து குறுக்கே நின்னு ரெண்டு வீட்டிலேயும் எதிர்ப்பு.! பார்க்கக் கூடாது, பழக்கக் கூடாது, பேசக்கூடாதுன்னு கண்டிப்பு. ஆண்… நான் சமாளிச்சுட்டேன். ஆனா… ஜான்சி மனசுடைஞ்சி, உள்ளுக்குள்ளேயே புழுங்கி புத்தி பேதலிச்சுப் போயிட்டாள். என் பேரைச் சொல்லி, எங்களைப் பிரிக்காதீங்க, திருமணத்தை நிறுத்தாதீங்க, தடுக்காதீங்கன்னு புலம்பல். ஐந்தாறு நாட்களில் அப்படியே வீட்டை விட்டும் வெளியேறிட்டாள். எங்கு தேடியும் யார் கண்ணிலும் படல. அப்படியே. ஐந்தாண்டுகள் ஆகிப் போச்சு.’’ நிறுத்தினான்.
“அப்புறம் …?”
‘’இன்னைக்கு அவ என் கண்ணுல பட்டாள்.”
“எங்கே..?”
“இந்த ஊர்லதான்! பூங்கா பக்கம்.”
“எப்படி இருக்காள்…?”
“மனநிலை பாதிக்கப்பட்டவங்க எப்படி இருப்பாங்களோ.. அப்படி அலங்கோலமாய் இருக்காள்.”
“சரி. அப்புறம் …?”
“மனசு சங்கடமா இருக்கு” கமாறினான்.
“சரி. இப்போ என்ன பண்ணலாம்..?”
“அவளுக்கு உதவலாம்ன்னு மனசுக்குப் படுது”
“ரொம்ப சரி. அவ அம்மா அப்பாவுக்குத் தகவல் கொடுங்க..”
“அப்படி அவளுக்கு யாருமில்லே. அவங்க இப்போ உயிரோட இல்லே.”
“வேற உறவு..?”
“யாரும் இல்லே…!”
“அப்புறம்…?”
“என்னை விட்டா உதவி செய்ய வேற ஆளில்லே.”
“அத்தான்…!”
“பதறாதே ! தப்பில்லேன்னு நினைக்கிறேன். மூன்று வருடங்களாய் உயிருக்கயிறாய்ப் பழகிய உயிர். அப்புறம் என்னாலேயும் அது இப்படி நாசம். நான் உதவாம போறது சரி இல்லே தப்புன்னு என் மனசுக்குப் படுது.”
“நியாயம். என்ன யோசனை ?…”
“கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து அவளைக் குணப்படுத்தலாம்ன்னு யோசனை..”
“குணப்படுத்தி….?” கலவரமாய்க் கேட்டு அடிக்கண்ணால் பார்த்தாள்.
“நாம அவ வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க வேண்டியதுதான்.!!”
“பு…புரியல…”
“கவலைப்படாதே. அவளுக்கு ஒரு நல்ல வரனாய்ப் பார்த்து முடிக்கலாம்.”
“முடியுமா..? ! குணமாகி அவள் இதுக்கு சம்மதிப்பாளா…?”
“சம்மதிக்கலன்னா…விதி விடவேண்டியதுதான்.”
“அதை இப்பவே விட்டுடலாமே…?”
“மனசு வரல ஜானகி. என்னால கெட்ட உயிர்.”
ஜானகி ரொம்ப நேரம் அமைதியாய் இருந்தாள். மனசுக்குள் என்னன்னவோ யோசனைகள். முடிவில்….
“சரி. வாங்க புறப்படலாம். ! “எழுந்தாள்.
ஐந்து நிமிடங்களில் இருவரும் காரில் புறப்பட்டார்கள்.
பத்து நிமிடப் பயணத்திற்குப் பின் ரவி வ.உ.சி பூங்கா ஓரம் காரை நிறுத்தினான்.
இருவரும் இறங்கி, நடந்தார்கள்.
“அதோ நான் சொன்ன ஆள்!” ரவி சிறிது தூரத்தில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த உருவத்தைக் காட்டினான்.
பார்த்த ஜானகி….
“லாரன்ஸ்!!” அதிர்ச்சியில் அலறினாள்.