நிதர்சனமான உண்மை





“டேய்!மணி இதுவரைக்கும் நீ எந்த ஒரு எக்ஸாம்லேயும் பாஸானதில்லை,நாளா அன்னிக்கு பப்ளிக் எக்ஸாம்டா,நாளைக்கு இருக்கிற அந்த ஒரு நாள் லீவ்லேயாவது நான் சொன்ன சம்ஸ்,கிராஃப்,ஜியாமெட்ரினு போட்டு பாருடா சரியா?”
“ஓகே சார்”
“ஹீம்”
என்று ஒரு பெருமூச்செறிந்துவிட்டு அந்த வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்,அந்த வகுப்பில் இருந்த அனைவரும் தத்தம் தங்களது வீட்டிற்கு சென்றனர்,ஆனால் மணி மட்டும் அப்படியே தனியாக உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்,அவன் தனியாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்த அவனது நண்பன் அபிஷேக் அவன் அருகில் சென்று
“என்னடா நீ கிளம்பலையா?”
“இல்லடா”
“ஏன்?”
“நாளா கழிச்சு மேக்ஸ் எக்ஸாம்டா,எப்படி எழுதப்போறேன்னே தெரியலை”
“அப்போ நல்லா பிரிப்பேர் பண்ணலையா?”
“இல்ல சார் சொன்ன சம்லாம் பார்த்துட்டேன் இருந்தாலும் மனசுல ஒரு வித பயம் இருக்கத்தான் செய்யுது,நான் இதுவரைக்கும் எந்த ஒரு மேக்ஸ் எக்ஸாம்லேயும் பாஸானது கிடையாது இப்போ அதை நினைச்சா இன்னும் கொஞ்சம் பயமா இருக்கு”
“மத்த எக்ஸாம்லாம் எப்படி எழுதுன?”
“அதெல்லாம் ஈஸியா இருந்தது எப்படியும் எண்பதுக்கு மேல வரும்”
“ஏனா அது லாங்குவேஜ்,ஆனா இது சப்ஜெக்ட் கான்செப்ட் புரிஞ்சாதான் உன்னால எழுதவே முடியும்”
என்று கூறினான்,பிறகு சிறிது நேரம் கழித்து மணியிடம்
“நான் ஒன்னு கேக்கட்டா நீ அடிக்கடி சொல்லுவியே நேர்மைதான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம்,ரொம்ப முக்கியம்னு,நீ எக்ஸாம்லாம் நேர்மையா தான எழுதுன?”
“ஆமாம்!”
“ஆம்!அவ்வளவு நேர்மையா இருந்து என்ன பிரயோசனம் நீ எக்ஸாம்ல பாஸானியா?”
என்று கேட்டதற்கு அவனிடம் பதில் இல்லை,மேலும்
“நீ நல்லா படிச்சும் ஏன் பாஸாக மாட்டிக்குறேன்னு நான் சொல்லட்டா உனக்கு அந்த எக்ஸாம் ஹாலில் போனதும் அந்த பயத்துல பதட்டத்துல எல்லாமே மறந்துருது,கரெக்டா?
“ம்”
“இந்தப் பிரச்சினை உனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் இருக்கு ஆனா அவங்க மறந்தா பக்கத்தில் உள்ளவன்கிட்ட கேட்டோ அல்லது பாத்தோ எழுதிடுவானுங்க அதனால தான் அவங்களுக்கு மார்க்கும் கூடுது,இவ்வளவு ஏன் நானே அப்படிதான் எழுதுவேன் என் கடைசி எக்ஸாம்ல என் டோட்டல் எவ்வளவு தெரியுமா? 420 டோட்டல். உன்னை மாதிரி நான் நேர்மை,வாய்மைன்னு பாத்துட்டிருந்தா உன் நிலைமை தான் எனக்கும், ஏன் இந்த இங்கிலீஷ் பப்ளிக் எக்ஸாம்ல கூட உன் ஹாலில் நிறைய பேர் பாத்து எழுதுனாங்கன்னு நீ தான சொன்ன.இங்க ரொம்ப நல்லவனா இருந்தா அவனைவிட முட்டாப்பய எவனும் கிடையாது, இப்போ எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு நான் நல்ல மார்க் எடுத்தேன்னா எங்க அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க ஒழிய இது நீ நேர்மையா எழுதுனியான்னு கேக்கவா போறாங்க சொல்லு”
என்றதற்கு அவன் இல்லையென்று தலையாட்டினான்.
“ம்!இப்போ நீ எல்லாத்திலேயும் பாஸாகி ஒரு 220 மார்க் தான் எடுத்துருக்கேன்னு வெச்சுக்கோயேன்,உன் சொந்தக்காரங்க இந்த மார்க்கை பாத்து என்ன சொல்லுவாங்க தெரியுமா “ஏன்டா இவ்வளவு கம்மி மார்க் எடுத்துருக்க ஒழுங்கா படிக்கமாட்டியா”ன்னு தான் கேப்பாங்க,அப்போ அவங்கக்கிட்ட போய் “இல்ல நான் நேர்மையா எழுதுனேன்”னு சொல்வியோ, அதே இது நீ மார்க் கூட எடுத்தருந்தேன்னு வெச்சுக்கோயேன் அதே சொந்தக்காரய்ங்க உன்னை பாராட்டி தள்ளுவானுங்க, இதுதான் நிதர்சனமான உண்மை,நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன் இதுக்கப்புறம் உன் பாடு”
என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.மணியின் மூளையில் அவன் சொன்ன வார்த்தைகளே திருப்பி திருப்பி ஓடிக்கொண்டிருந்தது.அதே யோசனையுடன் வீட்டிற்கு சென்றான் மணி.
தேர்வு நாள்
தேர்வறையில் மணி பயத்துடன் உட்கார்ந்திருந்தான் அவனது இதயம் ‘படக் படக்’ என்று அடித்துக்கொண்டிருந்தது.கடவுளை வணங்கிவிட்டு தேர்வெழுத ஆரம்பித்தான். முதலில் அவன் ஜியாமெட்ரியை செய்ய ஆரம்பித்தான் அதனை கரெக்டாக செய்து முடித்தப்பின் அடுத்து கிராஃப் செய்ய ஆரம்பித்தான்,அப்படி அவன் செய்துக் கொண்டிருக்கும்போது அதில் அவனுக்கு சிறு குழப்பம் வந்தது பிறகு எப்படியோ மேனேஜ் செய்து அதையும் ஓரளவுக்கு ஏதோ செய்து முடித்தான்.அடுத்ததாக அவன் ஐந்து மதிப்பெண் வினாக்களை எழுத ஆரம்பித்தான் பன்னிரண்டு வினாக்களில் அவன் மூன்று வினாக்களை சரியாக செய்தான் அடுத்து வந்த வினாக்கள் அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது,அப்போது அவன் நண்பன் அபிஷேக் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது “ரொம்ப நேர்மையா இருந்தா நம்மளை மாதிரி முட்டாப்பய எவனும் கிடையாது”என்று எண்ணிக்கொண்டு அருகில் இருப்பவனிடம் நைசாக “இந்த வினாவிற்கு என்ன விடை” என்று சைகையில் கேட்டான் அதற்கு அவனோ ஒரு சிறு பிட்டு பேப்பர் ஒன்றை கொடுத்தான் அதனை வாங்கிப் பார்த்தவனுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை ஏனெனில் அந்த சிறு பிட்டு பேப்பர் ஐந்து ஃபைவ் மார்க் கொஸ்டின் அடங்கியது,அதைக் கொடுத்தவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அங்குள்ள கண்காணிப்பாளருக்கு தெரியாமல் அதனைப் பார்த்து எழுத ஆரம்பித்தான்,தேர்வும் முடிந்தது முடிந்ததும் முதலில் அவன் தேடிச் சென்றது அவனது நண்பனான அபிஷேக்கைதான்.
“டேய்!டேய்!ரொம்ப நன்றிடா நீ மட்டும் அன்னைக்கு என்கிட்ட அப்படி சொல்லலன்னா நான் இந்நேரத்துக்கு ஃபெயில் ஆகியிருப்பேன்”
“சரி சரி மார்க் எவ்ளோ வரும்?”
“எப்படியும் 60 அல்லது 65க்கு மேல வரும்”
“ஏய்!சூப்பர்டா”
“இனி ஒரே குதூகலம் தான் இன”
என்று கூற அவன் மகிழ்ச்சியில் டான்ஸ் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தான்.பிறகு அடுத்து வந்த அறிவியல்,சமூக அறிவியல் தேர்விலும் அருகில் உள்ள மாணவனால் அவனுக்கு மறந்துப்போன,தெரியாத,படிக்காத வினாவிற்கும் விடையளிக்க முடிந்தது.
அனைத்து தேர்வுகளும் முடிந்தப்பின் ஒன்றறை மாதம் விடுமுறை விடப்பட்டது அந்த லீவில் எந்தவித பயமுமின்றி ஆடிப்பாடி,சந்தோஷமாக அந்த லீவை கழித்துக்கொண்டிருந்தான்
ரிசல்ட் நாள்
என்னதான் அவன் எக்ஸாம் நன்றாக எழுதியிருந்தாலும் ரிசல்ட் பார்க்கும் நேரத்தில் அவனது இதயம் வெளியே விழுந்து விடுவது போல் துடித்துக்கொண்டிருந்தது,அவனது அம்மா அருகில் வந்து
“நீ ஸ்கூலில் வைக்கிற அரையாண்டு தேர்விலேயே பாஸாகாம வெறும் 230 மார்க் எடுத்த,இது பப்ளிக் வேற என்ன செஞ்சு வெச்சிருக்கியோ”
என்று அவனது பயத்தை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்
நம்பர்,பிறந்த தேதி,பெயர் எல்லாம் டைப் செய்து கடவுளை வணங்கி சப்மிட் என்கிற பட்டனை கொடுத்தான் அதுவும் லோடிங் ஆகிக்கொண்டிருந்தது அது லோடிங் ஆக ஆக அவனது இதயமும் ‘லப்டப் லப்டப்’ என்று அடித்துக்கொண்டிருந்தது லோடிங் செய்து முடித்ததும் ஒருவழியாக அவனது ரிசல்ட் வந்தது அதனைப் பார்த்தவனுக்கு இதயம் ஒரு நொடி நின்றுவிட்டதென்றே சொல்லலாம் அப்படி நிற்பதற்கு காரணம் அவனது டோட்டல் மார்க் தான்,அவனது டோட்டல் மார்க் என்னவெனில் 439.
(இது உண்மையில் நடந்த நிகழ்வுகளோடு புனைந்து எழுதப்பட்ட கதையாகும்)