கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 2,281 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆங் மோ கியோ நிலையத்தில் கூட்டம் கொஞ்சம் குறைந் தது. காலியான இருக்கையில் வசந்தி அமர்ந்ததும் இருபுறமும் இருந்தவர்கள் தங்களை ஒடுக்கிக் கொண்டார்கள்.

வசந்தியின் உடல் வேதனையால் சுருங்கியது. மனதின் அதிர்வுகளை உடல் வெளிப்படுத்திவிடுவது அவளுக்குப் பலகீன மாகத் தோன்றியது. தன் மனதை எந்தத் தடையுமின்றி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யாராவது பார்த்து விடுவது எரிச்சலை ஏற்படுத்தியது.

‘அப்படி என்ன ஒட்டுவாரொட்டி வியாதி என்மேல்…” அடங்கி ஒடுங்கித் திமிறிக் கொண்டிருந்த கோபம் லேசாக எகிறிக்கேட்டது. எதிர்ப்புறக் கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தைப் பார்த்தாள்.

வரண்டு சாம்பல் பூத்த தோல், ஒட்டிப் போன கன்னங்கள், காய்ந்து பறக்கும் தலைமுடி, ஜீன்ஸ் துணியில் கணுக்காலுக்குக் கொஞ்சம் மேல் வரை நீண்டிருக்கும் ஸ்கர்ட், மூன்று வெள்ளி தொளதொளா டீ-ஷர்ட், ரப்பர் சப்பாத்து, பிளாஸ்டிக் ஹாண்ட் பாக், பத்து வெள்ளி கடிகாரம், மெல்லிய கைச் செயின்… இன்னபிற அடையாளங்களும்… யாரும் எளிதில் ஊகித்து விடலாம்…

இப்படி ஒரு பார்வையில் படிவது அவளுக்குத் தாங்க முடியாத அவமானமாகவே இருக்கிறது. மாதம் கையில் கிடைக்கும் 200 வெள்ளியில் 170 வெள்ளியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், வாங்கி வந்த கடனை அடைக்கவும் வீட்டுச் செலவுக்கும். அதிலும் முதல் ஒரு வருஷம் ஏஜெண்டுக்குக் கொடுக்கவே அவளின் சம்பளம் சரியாக இருந்தது. இமைகளை இறுக்கி மூடி தன்னிரக்கத்தை அடக்கிக் கொண்டாள்.

மனதின் கனத்தைத் துறக்கும் பெருமூச்சுடன் அவள் கண்களைத் திறந்தபோது மீண்டும் கூட்டம் நிறைந்திருந்தது. எம்.ஆர்.டியின் வேகமும் உள்ளே இருந்த விதவிதமான மனிதர்களும் அவள் கண்களில் தெரிந்தார்கள். கால்களை நிலைப்படுத்த முடியாது தள்ளாடியபடி நின்ற ஒரு முதிய பெண்மணிக்கு இடம் கொடுத்து எழுந்து நின்றாள். அவள் நின்றதும் அருகில் நின்றவர்கள் சற்று நகர்ந்து கொண்டார்கள். அந்த நெருக்கத்தில் காற்றுப்புக இடம் கிடைத்தாலும் அவளுக்கு மூச்சடைப்பதுபோலிருந்தது. அந்த மூதாட்டி வேகமாய் வந்து இருக்கைக்கு எதிரில் சில நிமிடங்கள் நின்றார். பிறகு டிஷ்யூ பேப்பரால் இருக்கையைத் துடைத்து, கைகளால் தட்டி, ஒட்டியும் ஒட்டாமலும் ஓரத்தில் உட்கார்ந்தார்.

வசந்திக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் உதடுகளை இறுக்கிக் கொண்டாள். கரப்பான் பூச்சிகள் உடல் முழுவதும் ஓடுவதுபோல் இருந்தது.

எப்போது இடம் வரும் என்று துடித்துக் கொண்டிருந் தவள், உட்லண்ஸில் கதவு திறந்ததும் வேகமாக வெளியேறி நடந்தாள். பஸ் எடுத்து வீட்டுக்குப் போகலாம். 45 காசு செலவழிக்க வேண்டும். கால்களை எட்டி வைத்தாள். வழியில் தெருவைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். விளக்கு வெளிச்சம் வேலை செய்பவர்கள் இந்தியர்கள் என்று அடையாளம் காட்டியது. தலையைக் கவிழ்த்து, வேகத்தைக் கூட்டினாள்.

அப்படியும் கடந்து போவதற்குள் “ஹவ் மச்” என்று ஒருவன் கேட்டது காதுகளில் அடைந்து கொண்டது.

“என் விலை 200 வெள்ளி, நீ வர ரெடியா?” என்று கேட்க வேண்டும்போல் இருந்தது. அவர்களால் ஒருநாளைக்கு 200 வெள்ளி கொடுப்பது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. வேறு யாரிடம் இந்த அடிமைகளால் இப்படிப் பேச முடியும். இந்தச் சொற்கள் அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால் தந்துவிட்டுப் போகட்டும் என்று தனக்குத்தானே சமாதானப்பட்டுக்கொண்டாள்.

அவள் கதவைத் திறப்பதற்குக் காத்திருந்ததாய் ரோணி குரைத்தபடி பாய்ந்து வந்தது. எந்த மிருகத்தையும் அவளுக்குப் பிடிக்காது. அவள் ஆஸ்துமாவுக்கும் ஒத்துக்கொள்ளாது. என்றாலும் இந்த ரோணியை அவளால் துரத்த முடியாது. மெதுவாக நகர்ந்து அதை விலக்கி, கழுத்தில் சங்கிலியை மாட்டி, கீழே அழைத்துச் சென்றாள். அவசர அவசரமாய் அதன் வேலையை முடிக்க வைத்து மேலே இழுத்து வந்து, அதன் இடத்தில் கட்டி சாப்பாடு போட்டுவிட்டு, தன் மூலைக்குச் சென்று உடை மாற்றினாள். அந்த நாலறை வீட்டில் அவளுக் கென்று தனி அறை இல்லை. மூன்று அறைகளில் ஒன்றை வாடகைக்கு வேறு விட்டிருந்தார்கள்.

“வசந்தி வசந்தி வசந்தி…” அந்தச் சில நிமிடங்களுக்குள் வீடு முழுவதும் எதிரொலிகள்.

வசந்தி அடுப்பங்கரைக்குள் நுழையும் ஐந்து நிமிடங்களுக்குள் முதலாளி அம்மாவின் நீண்ட கட்டளைப் பட்டியலின் வாசிப்பு முடிந்திருந்தது. அது மீண்டும் வாசிக்கப்படாது. வசந்தியும் வாய் திறந்து கேட்கமாட்டாள். என்னவாக இருக்கும் என்று ஊகித்துக்கொண்டே சமையலறையை ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள்.

சொன்ன வேலைகள், சொல்லாமல் அவள் செய்ய வேண்டிய வழக்கமான வேலைகள், சில மணி நேரம் அவள் வெளியில் போய் வந்ததற்கான அதிகப்படி வேலைகள் எல்லாவற்றையும் முடித்தபோது கையும் காலும் அவளைக் கெஞ்சின. தனது சின்னக் கடிகாரத்தில் ‘இரண்டு மணி’யை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே ஐந்து மணிக்கு அலாரம் வைத்தாள்.

நாளைக்குத் திங்கட்கிழமை. இரண்டு நாள் விடுமுறை சுகத்தில் பிள்ளைகள் வழக்கத்தைவிட அதிகமாய் அடம்பிடிப்பார்கள். அவர்களைக் கிளப்பி அனுப்புவதற்குள்ளாகவே சக்தி எல்லாம் தீர்ந்துவிடும். அதற்கு மேல் ஐயாவுக்கும் அம்மாவுக்கும் காலைப் பலகாரம், மத்தியான சாப்பாடு எல்லாம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். துணி அயர்ன் செய்ய வேண்டும். உடுப்புக்குப் பொருத்தமாக சப்பாத்து எடுத்துத் தர வேண்டும். தேடும் சாமான்களைத் தேடித் தர வேண்டும். நினைத்தபோது தூக்கம் கலைந்துபோனது. நாலு மணிக்கே எழுந்து வேலைகளைத் தொடங்கினாள்.

“நேத்திக்கே நீ ஹோம்வொர்க்கை செக் செய்யக்கூடாது… வசந்தி என்ன செய்யிற, இங்க வா, பார் மாத்ஸ் ஹோம் வொர்க்கை அவன் இன்னும் முடிக்கல.”

கோப்பியை உறிஞ்சியவாறே கணவரோடு அமர்ந்து பேப்பரை அலசியபடி முதலாளி அம்மா, அவளைப் பற்றியும் பேசினாள்.

“நேற்று கோயிலுக்குப் போறேன் என்று வேறு வீட்டில வேலைக்குப் போயிட்டு வந்திருக்கு. அதான் அம்மாவுக்கு அலுப்பா இருக்கு. மணி ஆறரை ஆச்சு. இன்னும் வேலை எதுவும் முடிக்கல. ரொம்ப இடம் கண்டு போச்சு.”

“மூஞ்சி கொடுக்காதேன்னா நீ கேட்டாத்தானே”.

தான் ஆங்கிலத்தில்பேச, கணவன் தமிழில் பதில் சொல்வது அவளுக்கு எரிச்சலூட்டியது.

“ஏன் இப்ப மட்டும் ரொம்ப பற்றோட தமிழ்ல பேசறீங்க” கணவன் மீது கோபப்பட்டாள்.

முதலாளி அம்மா இப்படிக் குசுகுசுவென்று பேசினாலே தன்னைப் பற்றித்தான் பேசுகிறார் என்று வசந்திக்குப் புரியும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படக்கூட அவளுக்கு நேரமில்லை.

“இன்னும் பசியாற எடுத்து வைக்கலையா… என்ன செஞ்சிட்டு இருக்கிற இவ்வளவு நேரமும். ஐயா சாப்பிடாம போயிட்டாரு. அவருக்கு காஸ்டிரிக் இருக்குன்னு தெரியுமில்ல. வேளா வேளைக்கு சாப்பாடு கொடுக்கக்கூட முடியாம அப்படி என்ன செய்யிற.”

“அவன் சட்டையில கறை இருக்கு பாரு… வேற சட்டை மாத்து. மெயிடு வச்சிருந்தும் பிள்ளைகள கவனிக்க முடியலி யான்னு டீச்சர் கேக்கிறாங்க. என் மானம் போகுது.”

முதலாளி அம்மாவுக்குத் தோசை சுட்டு போட்டுக் கொண்டே அவனது சட்டையை மாற்றி விட்டாள்.

வசந்தி வேலைகளை முடித்துச் சாப்பிடும்போது மணி ஒன்றரை. இதோ பிள்ளைகள் பள்ளி முடிந்து வந்து விடு வார்கள். கண்கள் சொருகிக்கொண்டு வந்தன. கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று அவள் தலையைச் சாய்த்தபோது போன் அலறியது.

‘ஏன் இத்தனி நேரம் போன் எடுக்க. ஏசி போட்டுட்டு தூங்கிட்டு இருக்கியா. இல்ல போன்ல கதையளந்திட்டு இருக்கியா..”

இல்லை என்று சொன்னாலும் நம்பப்போவதில்லை. “பிள்ளைங்க இன்னும் ஸ்கூல்ல இருந்து வரல்ல அம்மா.”

“தூங்கிட்டு இருக்காம அவங்க வந்ததும் சாப்பாட்ட சூடாக்கி போடு. இன்னிக்கு சாயந்தரம் நம்ம வீட்டில ஒரு கூட்டம் இருக்கு. பெரியார் பிறந்தநாள் விழா. ஐம்பது, அறுபது பேர் வருவாங்க. சமைக்கணும். ஐயா சாமான் வாங்கிட்டு வருவாரு. ஏதாவது இல்லன்னா அவருக்கு இப்பவே போன் போட்டு சொல்லிடு. நான் வர கொஞ்சம் லேட்டாகும். இன்னிக்கு ஓவர் டைம். என்ன செய்யிறதின்னு ஐயாவ கேட்டு சரியா செய்து வை. வர்றவங்க எல்லாம் பெரிய மனுஷங்க. பேரு கெடற மாதிரி செய்திடாத.”

முதலாளி ஐயா வாங்கி வந்த இறைச்சி, கோழி, ஊடான் எல்லாவற்றையும் பார்த்தபோது வசந்திக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. மாசம் 200 வெள்ளி சம்பளம் கொடுக்கிறார்கள். அதற்குமேல் 350 வெள்ளி லெவி கட்டுகிறார்கள். அவள் சாப்பாட்டுச் செலவு வேறு. சொன்னதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். அவளால் முடியாது என்றால் அடுத்து வருவதற்கு ஆள் தயாராக இருக்கிறது. வேண்டாம் என்று தூக்கிப் போட்டு விட்டுப் போகும் நிலை இருந்தால், அவள் இவ்வளவு தூரம் வந்திருக்கவேமாட்டாள்.

வசந்தி சமையல் முடித்து, வீடு துடைத்து, ஒழுங்குபடுத்தி முடித்த சமயத்தில் விருந்தினர்கள் வரத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருக்காய் குளிர்பானம் கலந்துகொடுத்தாள். கொரிப்பதற்கு பலகாரங்களைத் தட்டுத் தட்டாய் எடுத்து வைத்தாள். எல்லாரும் முதல் பந்தியை ஒரு வழியாக முடித்த பின், விழா தொடங்கியது. பேச்சாளர் பேசத் தொடங்கினார். பெண்ணுரிமை பற்றியும் சமத்துவம் பற்றியும் சமூகச் சீர் திருத்தங்கள் குறித்தும் அவர் பேசிக்கொண்டே இருந்தார்.

காலித் தட்டுகளையும் குவளைகளையும் அப்புறப்படுத்தவும் தேவையானவற்றைக்கொண்டு வந்து தரவும் ஹாலுக்கு வந்து போனாள் வசந்தி. அவள் குனிவதையும் நிமிர்வதையுமே வெறித்துக்கொண்டிருந்தனர் சிலர்.

“நீ புதுசு போல இருக்கே” போதை மேலிட அவள் கைகளைப் பிடித்தபடியே ஒருவர் விசாரித்தார்.

“இது எங்க மெயிட்” வசந்தியை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, “இந்த அழுக்குத் துணியோட ஏன் இங்கேயே சுத்திக் கொண்டிருக்கே. சாப்பாட்ட எடுத்து வைச்சிட்டு, பிள்ளங்களப் போயி பார்” முதலாளி அம்மா பல்லைக் கடித்தாள்.

பேச்சு முடிந்ததும் வீட்டுக்காரர்களின் விருந்துபசாரத்தைப் புகழ்ந்தவாறே எல்லாரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

விருந்தினர்களை வழியனுப்ப அம்மாவும் ஐயாவும் புளோக்கின் கீழே சென்றிருந்தார்கள். அவர்கள் திரும்பி வரும்போது வசந்தி சாப்பாட்டு இடத்தைச் சுத்தம் செய்து முடித்திருந்தாள்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்கே. கொஞ்சம் வேலை கூடினால் உங்களுக்கெல்லாம் மூஞ்சி சுருங்கிடுமே. நான் பார்க்காத வேலையா. ஃபேக்டிரில பத்து மணி நேரம் கால் கடுக்க நின்னு வேலை பார்த்திட்டு வந்து வீட்டிலேயும் வேலை பார்ப்பேன். நாள் முழுக்க வீட்டிலதான இருக்கே. வெளியில போயி வேலை பார்த்திட்டு வந்தா தெரியும். எனக்குச் சோறு வேண்டாம். தலவலி கொல்லுது. சூடா மைலோ மட்டும் கலக்கிக்கொடு.”

மைலோ கொடுத்து, அவளின் முதுகு வலிக்கும் மருந்து தேய்த்துவிட்டு, எப்போதும்போல் பிள்ளைகள் கட்டிலுக்கு அருகில் படுக்கையை விரித்தாள். படுத்த பிறகுதான் இன்னும் சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் எழுந்துபோக முடியாத அலுப்போடு கண்களை மூடிய போது, அவள் கால்களை யாரோ வருடுவதை உணர்ந்தாள். அவள் கண்களைத் திறக்கவில்லை.

“பிள்ளைங்க தூங்கிட்டாங்களான்னு பார்க்க வந்தேன்.” முதலாளி ஐயாவேதான்.

நமக்குந்தான் வேண்டியிருக்கிறதே என்று அன்றைக்கும் அவளுக்குத் தோன்றியது.

ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, உடலை இறுகக் குறுக்கிக்கொண்டாள். வியர்த்துக் கொட்டியது. போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

– ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.

– 1998, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.

லதா லதா எனப்படும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய நான் கொலை செய்த பெண்கள் என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *