நாற்றல்ல அவள்





(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புரட்டாசி மாதக் கடைசி. உப்பு மூலை மின்னிக் கொண்டிருந்தது. எல்லோரும் தூங்கட்டுமென்று காத்திருந்தமாதிரி, சாமத்துக்குமேல். மழை கொட்டத் தொடங்கியது. மேகமே நொறுங்கி விழுந்த மாதிரி… பேய் மழை பெருமழையாய்ச் சதப்பியது.
உழுது, பாத்தி கட்டி முடிந்த புஞ்சைக்காரர்களுக்கு, உறக்கம் போய்விட்டது. ‘மிளகாய் நாற்று வளர்ந்து கிடக்கு. நடுவை முடிச்சாகணும். ஆளுங்க வேலைக்குக் கிடைக்கணுமே…’
பதைக்கிற மனசை, தூக்கம் எட்டிக்கூடப் பார்க்குமா? பசுங்கிளி, இருட்டைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். ‘கொங்காணி’ மடித்த சாக்கைத் தலையில் போட்டுக்கொண்டு, மழையோடு சல்லம்பட்டி, செந்தட்டியாபுரம் போய் வந்துவிட்டார், அய்யா.
“எட்டு ஆளுங்க வருதுகளாம்… நாளை மதியத்துக்குள்ளே நட்டு முடிக்கணும். அதுக்குப் பெறகும் பிந்துனா… ஈர மண்ணு இறுகிக்கிடும். நாத்தை வைச்சுக்கிட்டுப் பெருவிரலைப் பதிக்க முடியாது. விரல் நகம் ‘விண்’ணென்று வலிக்கும்!”
விடிவதை எதிர்பார்த்துப் படுத்திருந்த பசுங்கிளிக்குப் பதைப்பு. முள்ளு மேலே படுத்திருக்கிற மாதிரி மனசெல்லாம் தவிப்பு…
கட்டுத் தரையில் நிற்கமாட்டாத கன்றைப்போல, அறுத்துக் கொண்டு ஓட ஆசைப்படுகிற மனசு. பசுங்கிளி எழுந்துவிட்டாள்.
முற்றம் தெளித்து, பாத்திரங்களைக் கழுவி, அடுப்பு வேலையைத் துவங்கிவிட்டாள். தம்பி முத்து தூங்கிக் கொண்டிருக்கிறான். வேலை முடியும்போது கிழக்கு வெளுத்துவிட்டது.
அய்யாவை எழுப்பினாள்.
“என்னம்மா?”
“நடுவைக்கு வர்ற ஆளுகளை அனுப்பி வையுங்க அய்யா… நான் நாத்து புடுங்கி வைக்கேன்!”
“இன்னும் இருட்டாயிருக்கேம்மா?”
“இருட்டு என்ன செய்யப் போவுது?”
“ஒத்தையிலேயா போறே?”
“இல்லே, முத்தம்மாவும் கூடவர்றா.”
கடாப்பெட்டிகள், கூடைகள், பழைய கிழிந்த துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
கனிந்த கறுப்பில் படுத்துக்கிடந்த நிலம். தாயக்கட்டம் போலச் சதுரம் சதுரமாய்க் கட்டிக்கிடந்த பாத்திகள். உழுது புதிதான மண். மினுமினுக்கிற ஈரம். வடமேற்கு மூலையில் நாற்றங்கால். பாத்திகளின் மூலையில் மழைத் தண்ணீர்.
பாத்தி வரப்புகளில் பசுங்கிளியும், முத்தம்மாவும் குத்துக்காலிட்டு உட்கார்ந்தனர். வேர் அறுந்து போகாமல், நாற்று பறித்து கைப்பிடி கைப்பிடியாக வைக்கின்றனர். பசுங்கிளி துரிதமாக இயங்கினாள். தோழியையும் துரிதப்படுத்தினாள்.
“நடுவைக்கு ஆள்க வந்துரும். வெருசா நாத்தைப் பிடுங்கு.”
“சும்மாவா உக்காந்துருக்கேன்? நாற்றைப் பிடுங்கிக்கிட்டுதானே இருக்கேன்? ஏண்டி வெரட்டுதே? இதான் கடைசி நடுவைன்னு வெரட்டுதீயாக்கும்?”
கேலிச் சிரிப்பாணியாய் ‘களுக்’கென்றாள், முத்தம்மா.
“கடைசி நடுவையா, என்னடி பேசுதே?”
பசுங்கிளி முகம், கோபத்தில் சுண்டிப்போய்விட்டது.
அவ்வளவுதான், பசுங்கிளி மௌனத்தில் புதைந்து கொண்டாள். விசனத்தைக் காட்டுகிற மெளனம். ‘உன் சங்காத்தம் வேண்டாம்’ என்று முகம் திருப்பிக்கொள்கிற மௌனம். கிள்ளப்பட்ட மனத்தின் கோப மௌனம்.
முத்தம்மா, கஞ்சி குடிக்க வீடு போய்விட்டாள். விடுபட்ட காலடி நாற்றைக் கை பார்த்துக்கொண்டிருந்தாள் பசுங்கிளி.
முத்தம்மாவின் கேலி, பொய்யல்ல. வெள்ளாமைக்கான வேலைகளோடு கல்யாண வேலையும் கைவீசி நடக்கிறது. ஆவணி மாசமே நிச்சயமாகி, ‘பூ’ வைத்துவிட்டுப் போய்விட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார்.
கல்யாண வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு, ஒற்றையாளாய் ஓடியாடுகிற அய்யாவை நினைத்து, உள்ளுக்குள் நெகிழ்ந்தாள்.
‘கரையேத்த வழியைப் பாருங்க’ என்று நச்சரிக்கிற அம்மா இல்லை. ‘நாள் குறிச்சு வை. மத்ததுங்களுக்கு நாங்களாச்சு’ என்று தைர்யம் கொடுக்கிற – கை கொடுக்கிற – சொந்தக்காரர்களும் இல்லை.
ஆனாலும் அய்யாவே அலைந்து, முயற்சிகள் செய்து, அததற்கு ஆட்களைப் பிடித்து… ஏற்பாடுகளைச் செய்து…
‘அடடா… அய்யாவைப் போல ஒரு மனுசர் யாரு இருக்க முடியும்? இவருக்கு மகளாப் பொறக்க …நா எம்புட்டுக் குடுத்து வைச்சிருக்கணும்…!’
பிரசவத்தில் சிரமம் ஏற்பட்டு, வைத்தியம். பார்க்க வசதியில்லாமல் பொசுக்கென்று அம்மா போய்ச் சேர்ந்தபோது… பசுங்கிளி,பாவாடைகட்டிக் கொண்டு திரிந்த ஒன்பது வயது அரும்பு.
முத்து, கைப்பிள்ளை.
கண்ணு முழியாத சின்னக் குஞ்சுகளைக் காலடி நிழலில் வைத்துக்கொண்டு… அய்யா எம்புட்டுத் தவிச்சாரு! அடுப்பு வேலையும், காட்டு வேலையும் அவரது தோளில்தான். போதாக்குறைக்கு, கைக்குழந்தை வேறு… காலைப் பின்னிக் கொள்ளும்…
மறு கல்யாணம் செய்து கொள்ளும்படி, யார் யாரோ பெரிய ஆட்களெல்லாம் பொடிவைத்து, மந்திரம் ஓதிப் பார்த்தனர்.
“இந்தச் சின்னஞ்சிறுசுகளை வளர்த்து ஆளாக்கினா… அதுவே போதும். எனக்குக் கல்யாணமும் வேண்டாம்; ஒரு கருமாதியும் வேண்டாம்.
பிள்ளைகளிடம் பூவாக நடந்துகொள்கிற அய்யா, இந்த விஷயத்தில் மட்டும் இரும்பாக இருந்துவிட்டார். ரெண்டு வருஷம் அடுப்புப் புகையோடு மல்லுக்கட்டி, அல்லாடித் தவித்துப் போனார், பாவம்!
முத்துவைத் தூக்கிச் சுமந்து கொண்டிருந்த பசுங்கிளி, அடுப்பு வேலைக்குத் தயாராகி… வீட்டு வேலைக்குக் கை பழகிய பிறகுதான்… வீடு, வீடாயிற்று. குப்பையும் கூளமுமாய்க் கூகை அடைந்த வீடு மாதிரி கிடந்த அந்த வீடு, சுத்தமாகி, சுண்ணாம்பு பார்த்து, மனுஷ மக்கள் குடியிருக்கிற வீடாக மாறியது.
நல்ல நாட்களுக்கு, இந்த வீட்டிலும் பலகாரம் மணந்தது.
அய்யா மட்டும் கொஞ்சம் சபலப்பட்டிருந்தா என்னாகியிருக்கும்? அக்காளும், தம்பியும் எம்புட்டுச் சீரழிவுக்கு ஆளாகியிருக்கணும்? நெனைச்சாலே… நடுங்கிப்போகுது, மனசு.
ஒரு நாற்றுப் பெட்டியை ‘முக்கித் தக்கி’த் தூக்கினாள். புஞ்சையின் ‘மாரி மூலை’யில், வேப்ப மரத்தடியில் வைத்தாள். முதல் நடுவை இங்குதான் துவங்கணும்.
கொழை மூடிக் கிடந்த அந்த இடத்தில், சின்னக் கன்றாக மறைந்து கிடந்த வேம்பைப் பசுங்கிளிதான் பார்த்தாள். கொழைகளைச் செதுக்கி, கன்றுக்கு வேலியமைத்து… கண்ணுங்கருத்துமாய் வளர்த்தாள்.
இதில் துரட்டிப் போட்டுக் கொழையை இழுத்த, எத்தனை ஆட்டுக்காரர்களிடம் சண்டை போட்டிருக்கிறாள்… திட்டி விரட்டியிருக்கிறாள். இவளும் வசவுகளை வாங்கியிருக்கிறாள்.
இப்போது… நல்ல மரமாக வளர்ந்துவிட்டது. நாலா பக்கமும் சமமாய்க் கிளைகள் நீண்டு, இலைகள் அடர்ந்து… என்ன அம்சமாய்க் குடை விரித்து நிற்கிறது!
இந்த மரத்தின் பூ வாசனை… இவளுக்குத் தனியாக மணக்கும். மற்ற வேப்ப மரங்களின் பூ வாசனைகளிலிருந்து, இந்த மரத்துப் பூ வாசனையைத் துல்லியமாய் வித்தியாசப்படுத்தி நுகர்ந்துவிடத் தெரியும், இவளது நாசிகளுக்கு! அம்புட்டு நெருக்கமான பிணைப்பு அவளுக்கு, இந்த மரத்துடன்!
புஞ்சையின் நடு வாய்க்காலில் நடந்தாள். பாதம் முழுவதும் ஈரமண்ணுக்குள் சுகமாய்ப் புதைந்தது. கால் விரல்களுக்கிடையே சகதி பிதுங்கியது. இந்த மண்ணின் ஈரச் சகதியில் மிதிக்கிறபோது… தாய் மடியில் முகம் புதைக்கிற சந்தோஷம்… அரைத் தூக்கத்திலிருக்கும்போது அம்மாவின் கை, தலையைக் கோதிவிடுகிற இன்பப் புல்லரிப்பு…
‘வியர்வையை வாங்கிக்கிட்டு இந்த மண்ணு, எம்புட்டு விளைச்சலை வாரி வாரிக் குடுத்திருக்கு… இந்த மண், அம்மாவைப் போலப் பாசக்காரிதான்.’
காத்துக் கிடக்கிற வேலைகள், இவளது காலுக்குச் சக்கரம் கட்ட… துரிதமானாள்… வீடு வந்தாள்.
இவள் காலடிச் சப்தம் கேட்டதுமே… ஆசையோடு தடபுடவென்று எழுந்தது, எருமை மாடு. ‘ம்ம்மேஏஏ…க்’ என்று அடிக்குரலில் கதறிப் பாசத்தைப் பொழிந்தது.
அறுபத்தைந்து ரூபாய்க்குக் கன்றுக்குட்டியாக அய்யா பிடித்து வந்தது, இவளது அக்கறையில் வளர்ந்து, நாலு ஈத்து ஈன்று, ஐந்தாவதைச் சுமந்து நிற்கிறது.
”எக்கா, சோறு வை.’முத்துவின் குரல்தான் அவள் பார்வையைக் கலைத்தது. திரும்பினாள்.
“பல்லு தேய்ச்சிட்டியாடா?”
“எருமை மாடு பல் தேய்ச்சுதான்னு கேட்டீயா?”
“ஏலேய்…”கோபித்த பசுங்கிளியைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். சிரிப்பே பதிலாக இருந்தது. பளிச்சிட்ட பற்கள்.
வட்டில் முன் உட்கார்ந்தான் முத்து. இவளும் கஞ்சியை ஊற்றிக் கொண்டாள். சாப்பிடுகிற தம்பியை, ஆசையோடு பார்த்தாள்.
அம்மாவின் அதே அச்சு. அம்மாவுக்கும் இப்படித்தான். சிரித்தால் உதட்டில் ஒரு வளைவு தெரியும். கன்னத்தில் குழி விழும்.
தவிக்கவிட்டுப் போய்’ விட்ட அம்மாவே, எதிரில் உட்கார்ந்து சாப்பிடுவதுபோல… ஒருகண உணர்வு! அவளுக்குள் என்னவோ செய்தது. பகீரென்று மோதிய ஒரு சூன்யம். கண்ணுக்குள் முட்டிய நீரை, மனசு அப்படியே விழுங்கிக்கொண்டது.
சுவரின் கீழ் மூலையில் ‘ங்ங்ஙிய்ய்ய்’யென்று இரைகிற சில்வண்டு. சில்வண்டுக்கும் ஆயுசு மனுஷங்களைப் போலத்தானோ! இவளும் சின்ன வயசிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறாள், இந்தச் சில்வண்டு இரைச்சலை. அதே சில்வண்டு… அதே சப்தம்… உணர்வுகளின் ஆழத்திலே பழகிப்போன இரைச்சல்.
பைக்கட்டை எடுத்துக்கொண்டு, “நான் பள்ளிக்கூடம் போறேன்க்கா” என்று சத்தத்துடன் ஓடிவிட்டான் முத்து. சாப்பிட்ட இடத்தைப் பெருக்கி முடித்துவிட்டு நிமிர்ந்தால்… அய்யா நின்றார்.
”நாத்து பிடுங்கிட்டியாம்மா? நீ புஞ்சைக்குப் போ. நடுவைக்கு எழு ஆளுக வருது. வெள்ளனத்துலே நடுவையைத் துவக்கு.”
“நான் உங்களுக்குச் சோறு வைச்சிக் குடுத்துட்டுப் போறேன் அய்யா.”
“வேண்டாம். நீ வெருசா போ. நான் சாப்பிட்டுக்கிடுதேன்!”
அய்யா மூகத்தைத் தயக்கமாய்ப் பார்த்தாள். ‘அவரே பானையை உருட்டிச் சட்டியை உருட்டி… சோறு வைக்க, நான் சம்மதிப்பதா…?’
மனத்தைத் தட்டியடக்கிக் கொண்டாள். அய்யா பார்க்காத அடுப்பங்கரையா…!
பாய்ச்சலாய் நடையை எட்டிப் போட்டுப் புஞ்சைக்கு வந்தாள். நடுவைக்குப் பெண்கள் வந்திருந்தனர். மாரி மூலைக்கு ஓடிவந்தாள்.
நடுவை தொடங்கியது. முத்தம்மாவும் வந்து சேர்ந்தாள். வேலை ‘மளமள’வென்று நடந்தது…
நாளும் பொழுதும் நாலாவித உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டு, நாட்களாய் நகர்கிற வாழ்க்கை. ஐப்பசி பிறந்து கல்யாண வேலைகள் சிறகு கட்டிப் பறந்தன. பரபரப்பாய் ஆடி ஓடித் திரிகிற அலைச்சல்கள். உஸ்ஸென்று உட்கார நேரமில்லாமல் பறக்க வைத்த வேலைகள்.
தூர்ந்து போன சொந்தங்கள் யாவும், மீண்டும் அரும்பி.. கல்யாணத்தில் கூட, வெள்ளையும் சொள்ளையுமாய்-வெளிச்சமும் வர்ணமுமாய் வீடு நிறைந்து ததும்பிய ஆண்கள், பெண்கள்… உறவினர்கள்… குழந்தைகள்…
என்றைக்குமே இவள் பார்த்தறியாத கோலத்தில், அய்யா வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையுமாய்… பார்க்கப் பார்க்கப் பசுங்கிளிக்குச் சந்தோஷம். மனசுக்குள் பூத்துச் சிரிக்கிற பூக்காடு.
புது டவுசரும்,சட்டையும் போட்டுக்கொண்டு, மகிழ்ச்சி நதியாய், உற்சாக வெள்ளமாய்த் துள்ளித் திரிந்த தம்பியைப் பார்த்துப் பார்த்து.. இவளுக்குக் கண்ணெல்லாம் நிறைந்தது. ததும்பி வழிந்தது, மனசு.
கல்யாணம் நடந்து முடிந்தது. மறுநாள், கணவன் அவள் மனசெல்லாம் நிறைந்துவிட்டான்; நினைத்த கணமெல்லாம் மனதைச் சிலிர்க்க வைத்துவிடுகிறான்.
அறிமுகமில்லாத அந்த அந்நியன், ஒரே இரவில் மனசுக்கு எவ்வளவு நெருங்கிவிட்டான்! தனிமையில் இவளுடன் கலந்து… என்னென்னவோ பேசி, எதையெதையோ நினைக்கவைத்து, எங்கெங்கோ தொட்டு, பார்த்தறியாத உலகங்களையெல்லாம் புரியவைத்து… ஆன்மாவையே கவ்வி ஆக்கிரமித்துவிட்டான், அதிசயம்தான்!
மூன்று நாட்களும் மாப்பிள்ளைச் சோறு. விருந்து தடபுடலாக நடந்தது. பசுங்கிளி அனுபவித்தறியாத உயரத்தில் சிறகடித்தாள். இன்பத்துள்ளலோடு மேகங்களுக்குள் ஊடுருவிப் பறந்தாள்.
அடுப்பங்கரையில் எந்நேரமும் பலகார வாசங்கள். குளிப்பும், புதுச்சேலையுமாய்… மஞ்சளும், மங்கலமுமாய் இன்ப நதியாக நடக்கிற பசுங்கிளி. அவளது சிவந்த முகம்… தங்கமாய் ஜொலிக்கிறது.
மூன்றாவது நாள், மாலை.
புருஷனின் அண்ணனும், அக்காளும் வந்து சேர்ந்தனர். இவளும் சந்தோஷமாய் வரவேற்றாள். ஆக்கி, அவித்துப் போட்டு உபசரித்தாள். புருஷனுக்கு வேண்டியவர்கள் என்ற அன்பில், மதிப்போடு பேசிப் பழகினாள்.
இரவுச் சாப்பாடு முடிந்து, கை கழுவி முடித்தவுடன், “காலையிலே பசுங்கிளியையும், தம்பியையும் கூட்டிக்கிட்டுப் போறோம். அதுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்க, மாமா” என்றனர்.
தொண்டைக்குள் விக்கிக்கொண்டதைப்போல, ‘விலுக், விலுக்’கென விழித்தார், அய்யா.”ம்,ம்… பார்ப்போம்” என்று முனகிவிட்டு, முகத்தை மறைக்க வெளியே போய்விட்டார்.
பசுங்கிளிக்குப் பகீரென்றது. உள்ளுக்குள் மோதித் தள்ளிய ஒரு சூன்ய உணர்ச்சி.
கூட்டிட்டுப் போகவா… புகுந்த வீட்டுக்கா…? நிரந்தரமாகவா…?
பகைமை நிறைந்த வெறுப்பும், வேதனையும் மனசுக்குள் குப்பென்று மூண்டெழுகிறது. புருஷனின் உறவுக் காரர்களே – பகையாளிகளாய்- சிறகுகளைப் பிய்த்தெறிகிற எதிரிகளாய்-
உடம்பெல்லாம் தீயாய்த் தகித்தது, அவளுக்கு. மனசுக்குள் பொங்கிப் பொருமிய வெறுப்பை மறைத்துக்கொள்ள, வீட்டுக்குள் மறைந்தாள் பசுங்கிளி.
சில்வண்டு இரைகிறது. இவளுக்காக ஏங்கி அழுவதைப்போல இடைவிடாத ‘ங்ங்ஙிய்ய்ய்’ என்ற இரைச்சல்…
இந்தச் சில்வண்டின் இரைச்சலை, நாளை முதல் கேட்கவே முடியாதா?
பாதத்தின் சப்தத்திலேயே இனம் கண்டு பாசத்தோடு பார்க்கிற அந்த எருமை மாட்டின் அன்புக் கதறல்… தொலையாத தூரத்தில் போய்விடுமா?
தாயின் மடியாகக் சுகம் தருகிற பச்சை மண், னி தொடமுடியாத அந்நியமா?
பிள்ளையாய்க் கருதிப் பேணி வளர்த்த, அந்த வேப்ப மரத்தின் பூ மணம்கூட, நுகரமுடியாத தொலைவிலா?
நினைக்க நினைக்க இருட்டாகச் சூழ்கிற ஏக்கம். பிரிவுத்துயர் நெஞ்சை மடேரென்று தாக்கி, அதிரச் செய்கிறது. நிலைகுலைந்து நிற்கிறாள். திணறித் தவித்த உணர்ச்சிகளால், அலைக்கழிக்கிற மனசு.
சகலத்தையும் பறிகொடுக்கிற உணர்வுப் பரிதவிப்பில்… மனசே துவண்டது.
‘முத்துவை இனி யாரு பார்த்துக்கொள்வது? அவனுக்கு நேரமறிஞ்சு, மனசறிஞ்சு. யாரு சோறு வைச்சுக் கொடுப்பது? உழைத்துத் தளர்ந்துபோன அய்யா. மறுபடியும் அடுப்பங்கரைப் புகையில் அல்லாடணுமா?
‘அவருக்கு ஒரு காய்ச்சல், தலைவலின்னா. யாரு பார்த்துக்கிறது? நாதியத்த அனாதையாய்த் தவிக்கவிடவா? பொம்பளைப் புள்ளையைப் பெத்து வளர்த்து, ஆளாக்கின பாவத்துக்கு… இது தண்டனையா?’
பசுங்கிளிக்குக் கதறியழவேண்டும் போலிருந்தது. அடிவயிற்றில் எதுவோ புரண்டது. இதயத்தின் சதைகளையே யாரோ அறுத்து, நரம்புகளைப் பிய்த்தெறிகிற திகிலுணர்வு
நாற்று, நாற்றங்காலை மறந்து புதிய மண்ணில் சில நாட்களில் துளிர்க்கத் துவங்கிவிடும். நாற்று மனுஷியல்லவே! அதுக்கு மனசு இல்லையே…? உறவுகளை வளர்த்து, அதிலேயே உறைந்து கொள்கிற உணர்வுகள் இல்லையே…?
‘கூட்டிக்கிட்டுப் போக வரல்லே, இவக. பிய்ச்சுக்கிட்டுப் போக வந்திருக்காங்க. பாவிக. உடம்புலேயிருந்து கையை மட்டும் வெட்டிக்கிட்டுப் போறமாதிரி!’
கல்யாண பந்தத்திற்காக எதையும் இழக்காமல், ஆண் கூடுதல் சுகத்தையும், உறவையும் பெற்றுத் திளைக்க, பெண் மட்டும் எவ்வளவு இழக்க வேண்டியிருக்கிறது! ஆன்மாவையே அறுத்துக் காயப்படுத்துகிற இழப்புகள்… துடித்தலற வைக்கிற கொடிய இழப்புகள்…
இந்த இழப்புக்களின் வேதனையே பிறந்த வீட்டுப் பாசத்துக்கும், புருஷனின் உறவுக்காரர்கள் மீது வெறுப்புக்கும் நிரந்தர ஊற்றுக்கண்ணாகிவிடுகிறதா?
தப்பிக்க முடியாத குழிக்குள், கதியற்று விழுந்துவிட்ட அவலத்தை நினைத்து நினைத்துப் பசுங்கிளி அழுதாள்… பெண்ணாக ஜென்மமெடுத்ததை எண்ணி, அவள் மனசு கசந்து அழறியது.
மறுநாள்-
அந்த வீடு, கண்ணீரும் கம்பலையுமாய்… காயம்படும்!
– கல்கி, தீபாவளி மலர் 1987.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |