நாரதர் நடத்திய திருமணம்




மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம் கரங்களையும் அரிய வரங்கள் பலவற்றையும் பெற்றவன்.
ஆனால்… காலப்போக்கில் அவனிடம், ‘தம்மை எதிர்க்க எவரும் இல்லை!’ என்ற அகந்தையும் அதிகார மமதையும் வளர்ந்தன. ஒரு நாள் சிவபெருமானிடமே, ”ஸ்வாமி, தங்களது அருளால் பெரும் வல்லமை பெற்றுத் திகழும் என்னை எதிர்க்க ஒருவனும் இல்லை. என் தோள்கள் தினவெடுக்கின்றனவே!” என்று இறுமாப்புடன் கூறினான் பாணாசுரன்.
‘பெரும் வீரனான இவன் ஆணவத்தால் அழியப் போகிறானே!’ என்று அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டது சிவனாருக்கு. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”பாணாசுரா… விரைவில், உன் ஆயிரம் கரங்களையும் துண்டித்து எறியும் வீரன் ஒருவன் வருவான்!” என்றார் சிவபெருமான். அந்த வீரனின் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தான் பாணாசுரன்!
இந்த நிலையில் ஒரு நாள், பாணாசுரனின் ஒரே மகளான உஷை, கனவு ஒன்று கண்டாள். அந்தக் கனவில் ஆணழகன் ஒருவன் அவளுடன் கூடி மகிழ்ந்திருக்க… திடுக்கிட்டு கண் விழித்தாள்! தான் கண்டது கனவு என்பது அவளுக்கு புரிந்தது. எனினும், அவனை மறக்க முடியாமல் தவித்தாள் உஷை.
ஊண்-உறக்கம் எதிலும் விருப்பம் இல்லாமல், எப்போதும் அவன் நினைவாகவே இருந்து வந்தாள். இதனால் அவள் உடல் இளைத்துத் துரும்பானாள்! இதைக் கண்டு அவளின் தோழியர் வருந்தினர். அவர்களில் சற்று மூத்தவளான சித்திரலேகை, உஷையின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டாள். ஆனால், தன் தோழியின் கனவில் வந்த வாலிபன் யார்? எந்த நாட்டைச் சார்ந்தவன் என்று எதுவும் தெரியாமல் திகைத்தாள் சித்திரலேகை.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்த சித்திரலேகை, சிறந்த ஓவியர்கள் சிலரை அழைத்து, அனைத்து தேசத்து அரசிளங்குமாரர்களது உருவங்களையும் வரையச் சொன்னாள். அதன்படி அவர்கள் வரைந்து கொடுத்த ஓவியங்களை ஒவ்வொன்றாக எடுத்து, உஷையிடம் காண்பித்தாள் சித்திரலேகை. அனைத்தையும் ஆர்வத்துடன் பார்த்த உஷை, கடைசி ஓவியத்தைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். அதில் இருந்தவன்- கிருஷ்ணனின் பேரனும் பிரத்தியும்னனின் மகனுமான அனிருத்தன்!
ஓவியத்தில் அவனைக் கண்டதும் வெட்கத்துடன் தலை குனிந்தாள் உஷை. சித்திரலேகை புரிந்து கொண்டாள். மாயாஜாலங்களில் கில்லாடியான அவள், ”இவர் யார் தெரியுமா? கிருஷ்ணரின் மகனான பிரத்யும்னனின் மைந்தன்; அதாவது கிருஷ்ணரின் பேரன். துவாரகையின் இளவரசன். இவரை உன்னிடம் சேர்ப்பது எனது பொறுப்பு!” என்று உஷையிடம் உறுதியளித்தாள்.
அன்று இரவு, தனது மாயா சக்தி மூலம் துவாரகையை அடைந்த சித்திரலேகை, அரண்மனையில் தூங்கிக் கொண்டிருந்த அனிருத்தனை, தனது ‘திரஸ்காணி’ எனும் வித்தையால் மயக்கினாள். பிறகு, கட்டிலுடன் சேர்த்து அவனைத் தூக்கி வந்து, உஷையின் கட்டிலின் அருகில் வைத்தாள்.
சற்று நேரத்தில் விழித்தெழுந்த அனிருத்தன்- உஷை இருவருக்கும் இன்ப அதிர்ச்சி! ஒருவரையருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். அரண்மனையில் வேறு எவருக்கும் தெரியாவண்ணம் அவர்களது காதல் வாழ்க்கை தொடர்ந்தது. ஆனாலும் எத்தனை நாட்களுக்குத்தான் மறைக்க முடியும்? விரைவில் உஷை கருவுற்றாள்!
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த பாணாசுரன், இளவரசியின் அறைக்கு வந்தான். அங்கு, அனிருத்தன்- உஷை இருவரும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர்.
தன் மகளுடன் ஆடவன் ஒருவன் இருப்பதைக் கண்டு கோபம் கொண்ட பாணாசுரன், ”யார் நீ? அரண்மனையின் பலத்த காவலையும் மீறி இங்கே எப்படி நுழைந்தாய்?” என்று அனிருத்தனிடம் கேட்டான்.
அனிருத்தன் பதிலேதும் சொல்லாமல் போகவே அவனைப் பிடித்துச் சிறையில் அடைக்கும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டான் பாணாசுரன். அவர்கள், அனிருத்தனைக் கைது செய்ய முற்பட்டனர். அதற்குள் முந்திக் கொண்ட அனிருத்தன், ஒருவனது ஈட்டியைப் பிடுங்கிக் காவலர்களைத் தாக்கி அழித்தான்.
‘இவன் சாதாரணமானவன் அல்ல!’ என்பதை உணர்ந்த பாணாசுரன் உடனே, நாகபாசத்தை ஏவி அனிருத்தனை கட்டி, சிறையில் அடைத்தான்! அந்த நேரத்தில் சோணிதபுரத்துக்கு வருகை தந்தார் நாரத முனிவர். பாணாசுரன் கடும் கோபத்தில் இருப்பதைக் கண்டு, அதற்கான காரணத்தை வினவினார் நாரதர். அவரிடம் நடந்ததை விவரித்தான் பாணாசுரன்.
உடனே நாரதருக்கு, ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. சில நாட்களுக்குமுன் துவாரகைக்குச் சென்றிருந்த நாரதரிடம், ‘அனிருத்தனைக் காணவில்லை!’ என்று ருக்மிணி தேவி சொல்லி இருந்தாள். ‘ஒருவேளை… இங்கு சிறையில் இருப்பது அனிருத்தனாக இருக்குமோ?’ என்ற ஐயம் அவருக்கு. இது எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத நாரதர், பாணாசுரனிடம் விடைபெற்றுக் கொண்டு, நேராக அந்தப்புரம் சென்று உஷையை சந்தித்தார்.
அவளிடம் பேசி, சிறையில் இருப்பது அனிருத்தனே என்பதை உறுதி செய்து கொண்டவர், ”வருந்தாதே, உங்கள் திருமணம் இனிதே நடக்கும். பாணாசுரனால் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது. இப்போதே நான், துவாரகைக்குச் சென்று, கிருஷ்ணரிடம் நடந்ததைக் கூறுகிறேன்!” என்று உஷைக்கு ஆறுதல் கூறிவிட்டுக் கிளம்பினார்.
நாரத முனிவர் மூலம் அனைத்தையும் அறிந்த கிருஷ்ணர் பெரும்படையுடன் கிளம்பினார். விரைவில், யாதவப் படை சோணிதபுரத்தை முற்றுகையிட்டது. இதை அறிந்த பாணாசுரன் நடுங்கினான். அவன் சிவபெருமானை வழிபட… அவனுக்கு அபயம் தருவதாக அருள் புரிந்தார் சிவனார்.
இதனால் உத்வேகம் பெற்ற பாணாசுரன் அசுரப் படையுடன் கோட்டைக்குள்ளிருந்து வெளிப்பட்டு கிருஷ்ணருடன் போரிட்டான். யாதவப் படைகள் அசுரப் படையினரைக் கொன்று குவித்தன. கிருஷ்ணர், பாணாசுரனின் ஆயுதங்கள் மற்றும் தேரை அழித்ததுடன் அவனது குதிரைகளையும் கொன்றார்.
நிராயுதபாணியான பாணாசுரன் மீண்டும் சிவபெருமானை வேண்டினான். தன் பக்தனைக் காப்பாற்ற எண்ணிய சிவபெருமான், தனது கணங்களுடன் போர்க் களத்துக்கு வந்தார். சிவகணங்கள், யாதவப் படையை சிதறி ஓடச் செய்தன. சிவபெருமானும், கிருஷ்ணரும் நேருக்கு நேர் நின்று போர் செய்தனர். மோகனாஸ்திரத்தைச் செலுத்தி சிவபெருமானையும் சிவகணங்களையும் செயலிழக்கச் செய்தார் கிருஷ்ணர். பிறகு, பாணாசுரன் மீது பாணங்களை ஏவி, அவனது நான்கு கரங்கள் தவிர மற்ற கரங்களைத் துண்டித்தார். இறுதியில் நாராயண அஸ்திரத்தை ஏவ முற்பட்டார்.
அப்போது, மோகனாஸ்திரத்தினால் ஏற்பட்ட மயக்கத்தில் இருந்து விடுபட்ட சிவனார் ஓடி வந்து, ”கிருஷ்ணா, நிறுத்து. பாணாசுரனுக்கு நான் சிரஞ்ஜீவித்தன்மையை அளித்திருக்கிறேன்; அதைப் பொய்யாக்கி விடாதே… அவனுக்கு உயிர்ப்பிச்சை கொடு!” என்று கூறி தடுத்தார்.
உடனே கிருஷ்ணர், ”மகேஸ்வரா, அதை நானும் அறிவேன். பிரகலாதனின் மரபில் தோன்றுபவர்களைக் கொல்வதில்லை என்று நானும் வாக்குக் கொடுத்திருக்கிறேன். எனவே, நான் இவனைக் கொல்லப் போவதில்லை; அஞ்ஞான இருளில் இருந்து மீட்கப் போகிறேன்… அவ்வளவு தான்!” என்றவர் நாராயண அஸ்திரத்தைச் செலுத்தினார். அது, பாணாசுரனை தூய வனாக்கித் திரும்பியது.
ஞானம் பெற்ற பாணாசுரன், தனது தவறை உணர்ந்தான். கிருஷ்ணரின் திவ்விய உருவைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தான். அத்துடன், ”பரந்தாமா, இன்னாரென்று அறியாமல், தங்களுடன் போர் செய்து விட்டேன். அகந்தை மேலிட சிவனாரிடமே, ‘என்னை எதிர்ப்பவர் எவரும் இல்லை!’ என்றதும் தவறே. தங்களால் எனது அகந்தை அழிந்தது. என்னை மன்னியுங்கள். என் மகள் உஷையை அனிருத்தனுக்குத் திருமணம் செய்து வைத்து அருள் புரியுங்கள்!” என்று கண்ணீர் மல்க வேண்டி நின்றான்.
”பாணாசுரா… இனி, உனக்கு எந்தக் குறையும் வராது!” என்று அருளினார் கிருஷ்ணர். பிறகு, அரசாங்கப் பொறுப்புகளை அனிருத்தனிடம் ஒப்படைத்து விட்டு, சிவகணங்களுக்குத் தலைவனாகி திருக்கயிலையை அடைந்தான் பாணாசுரன்.
கிருஷ்ணர் துவாரகை திரும்பியதும், அவரது ஆசியுடன் அனிருத்தன்- உஷை திருமணம் இனிதே நடைபெற்றது.
– ராணிமணாளன், கிருஷ்ணகிரி-1 (பெப்ரவரி 2008)