நாயகி
முன்னுரை:
என்னை, எனது இந்த சிறுகதையை வாசிக்க வந்த நல் இதயங்களுக்கு இந்த இதயதீபாவின் வணக்கங்கள். வழக்கம் போல ஒரு கதை எழுதுவது என்பது ஒரு பிரசவத்தை பிரசவிப்பது போலத்தான். சில நேரம் சுகமாய். பல நேரம் ரணமாய். ஏனோ நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் மிகவும் சுகமாய் உணர்ந்தேன். காரணம் இந்த கதை என்னை ஒரு நீண்ட பாதிப்புக்கு உள்ளாக்கியது. உலகை தற்போது கட்டியாளும் கொரோனா என்னும் கொடிய நோய் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் கட்டிப்போட்டிருக்க, நான் மட்டும் அதிலிருந்து விலக முடியுமா என்ன?. நானும் வீடு எனும் நீண்ட கால சிறையில் அடைபட்டிருக்கிற போது, எனது அலைபேசியில் இனையத்தில் வழக்கம் போல சற்றே உலா வந்த போது, எனது இதயம் தொட்ட ஒரு காணொலியை கண்டு, அதன் தாக்கத்தால் சில நாட்கள் தூக்கமின்றி தவிக்க நேர்ந்தது. அது தான் இந்த கதையின் கரு. ஒரு பத்து நிமிடம் வாய்ஸ் ஓவரில் ஓடிய அந்த காணொலி ஏனோ என் நெஞ்சை பிசைந்து கொண்டேயிருந்தது. சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஓர் திருநங்கையின் மனது என்னை வெகுவாக பாதிக்கவே, அந்த் பாதிப்பின் ஊடே இந்த கதை உருவானது. இது ஏனோ மனிதத்தை மனிதர்களுக்கு உணர்த்துவதாயிருந்தது. இதை நானும் உணர்ந்தேன். எனவே உருவாக்கினேன்.
மற்றபடி இதை உணர்வோர் உணர்க. பகிர்வோர் பகிர்க.
என்றும் அன்புடன்,
உங்கள் இதயதீபா.
நாயகி (THE GOD MUST BE CRAZY)
 ஆனந்தி வேக வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அது அந்தி சாயும் நேரமாதலால் வானம் இருளை நோக்கி வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் கூடு நோக்கி வேகமாய் பறந்த வண்ணம் இருந்தன. மனிதர்களும் தான்.. இந்த பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமை உண்டு. அது என்ன வென்றால் இருவருக்கும் பொழுது சாய்ந்தால் தான் தன் வீடு ஞாபகம் வரும். ஆனந்தி இதை போன்ற மாலை பொழுதை தன் வீட்டு வாயிற்படியில் அமர்ந்து தனது டைகருடன் எப்போதும் ரசிப்பாள். ஆனால் இன்று நிலமை அப்படியிருக்க வில்லை. உடலில் ஒருவித நடுக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஏனென்றால் அவள் தோலில் ஒரு பச்சிளம் சிசு பசியால் கதறிக் கொண்டிருந்தது. அதுவும் தொப்புள் கொடி கூட இன்னும் வெட்டப்பட வில்லை. இதையும் மீறி அவள் இப்போது போய்க்கொண்டு இருப்பதோ போலிஸ் ஸ்டேஷனை நோக்கி.
ஆனந்தி வேக வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அது அந்தி சாயும் நேரமாதலால் வானம் இருளை நோக்கி வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் கூடு நோக்கி வேகமாய் பறந்த வண்ணம் இருந்தன. மனிதர்களும் தான்.. இந்த பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமை உண்டு. அது என்ன வென்றால் இருவருக்கும் பொழுது சாய்ந்தால் தான் தன் வீடு ஞாபகம் வரும். ஆனந்தி இதை போன்ற மாலை பொழுதை தன் வீட்டு வாயிற்படியில் அமர்ந்து தனது டைகருடன் எப்போதும் ரசிப்பாள். ஆனால் இன்று நிலமை அப்படியிருக்க வில்லை. உடலில் ஒருவித நடுக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஏனென்றால் அவள் தோலில் ஒரு பச்சிளம் சிசு பசியால் கதறிக் கொண்டிருந்தது. அதுவும் தொப்புள் கொடி கூட இன்னும் வெட்டப்பட வில்லை. இதையும் மீறி அவள் இப்போது போய்க்கொண்டு இருப்பதோ போலிஸ் ஸ்டேஷனை நோக்கி.
ஆனந்தி இன்னமும் சற்று நடையை கூட்டினாள். இதோ வந்து விட்டது. கூடவே அவளின் செல்ல நாய் குட்டியான டைகரும். நடந்து கொண்டிருந்த ஆனந்தி சட்டென நின்றாள். அதோ அந்த திருப்பத்தில் தான் போலிஸ் ஸ்டெஷன் இருக்கிறது. ஒரு கணம் ஆனந்தி தன் தோலில் பாலுக்காய் கதறிக் கொண்டிருக்கும் அந்த பச்சிளம் சிசுவை தேற்றத் தோண்றாமல் கண்களில் கண்ணீர் வழிய வெறித்தாள். ஆம் ஆனந்தியால் ஒரு குழந்தைக்கு பாலூட்ட முடியாது. காரணம் அது அவள் பெற்ற பிள்ளையில்லை. கூடவே அதற்க்கான முயற்சியில் இறங்க அவள் ஒன்றும் சாதாரண பெண் கிடையாது. காரணம் ஆனந்தி பிறப்பால் ஒரு திருநங்கை.
இந்த கதையின் நாயகியான ஆனந்தியை பற்றி நாம் இப்போது கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். அது கட்டாயம் கூட. ஆதியில் இந்த அண்டத்தை உருவாக்கிய ஆண்டவன் பலவித உயிர்களை படைத்தான். ஓருயிர் முதல் ஆறு அறிவு படைத்த மனிதன் வரையில் படைத்து அவன் அழகு பார்த்தான். இடையில் ஏனோ அவன் ஆண், பெண் இரு பால் தவிர்த்து மூன்றாவது பாலினத்தையும் படைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். மற்ற ஜீவராசிகளில் இத்தகைய வேருபாடு உண்டா என தெரியாது. ஏனோ ஆறறிவு படைத்த இந்த மனிதன் மட்டும் இப்பிறப்பை கண்டு கொண்டு, அதை தனியே பிரித்து பார்க்க ஆரம்பித்தான். பகுத்துண்டு பல்லியிர் ஓம்பிய உயிர்கள் ஏனோ நாளடைவில் இப்பிறப்பை அறவே வெறுக்க ஆரம்பித்தது.
ஆனந்தி ( இல்லை. அப்போது அவன் பெயர் ஆனந்தன். ) தனது 13 வது வயதில் தான் உடல் ரீதியாக தனக்கு ஏற்ப்பட்ட மாற்றத்தை உணர ஆரம்பித்தான். சொல்லொன்னா துயரில் தன் சக நண்பர்கள், தனது தாய், தந்தை, அண்ணன் , அக்காள் மற்றும் சுற்றத்தாரிடம் இருந்து விலக ஆரம்பித்தான். விடை தெறியா கேள்விக்கு விடை காண முயன்று தோற்றான். விபரீதம் புரிந்ததும் அத்துனை பேரிடம் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டான். இதில் இன்று வரையில் நெஞ்சம் வலிப்பது என்ன வென்றால், தன்னை பெற்ற அண்ணை கூட தன்னை புரிந்து கொள்ளாமல் விலக்கி வைத்ததுதான். உடம்பின் ஒவ்வொரு அணுவும் நொருங்கிப்போக, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அடிபட்டு, ரணப்பட்டு, ஒரு கட்டத்தில் அவமாணம் தாளமுடியாமல் தனது 16 வது வயதில் ஒரு நள்ளிரவில் ஆனந்தன், ஆனந்தியாகி இப்பிறப்புக்கு விடை தேடி பயணப்பட்டான். இல்லை இல்லை. பயணபட்டாள்.
ஆனந்தி வீட்டை விட்டு வெளியேறினாலும், பின் வந்த நாட்களில் சொல்லொன்னா துயறத்துக்கு ஆளானாள். உண்ண உணவில்லை, உடுக்க உடை இல்லை, ஒண்டிக்கொள்ள ஒரு இடம் கிடைக்க வில்லை. ஒவ்வொரு நொடியையும் நரகமாய் கழித்தாள். தன் இனம் தேடி அலைந்தாள். வழியெங்கும் பாலைவனமாய் மாற பரிதவித்துப்போனாள். கற்ப்புக்கு மறு உருவம் காமுகர்களால் கற்று தரப்பட்டாள். சமுதாயத்தில் தன்னை போல அலைந்து திரிந்த மற்றவர்களோடு தானுமாய் சேர்ந்து கொண்டாள். வேறென்ன செய்ய,. கையிருப்பிற்கு ஏற்ற வாழ்க்கைக்கு தன்னை பழக்கிக் கொண்டாள்.
இப்படியே ஊர் ஊராய் அலைந்து திரிந்து கடைசியில் திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தாள். திருச்சி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி என்னும் ஊர் வந்தாரை வாழ வைக்கும் ஊர். இவ்வூரின் சிறப்பு பற்றி கேட்டறியவும் வேண்டுமோ. மனது முழுதும் வெருமையை சுமந்து திரிந்தவள் தன் வாழ்வை கடைசியாய் காவிரி தாயிடம் ஒப்படைத்தாள். காவிரித்தாய் அவளை அன்போடு அரவணைத்துக் கொண்டாள். அவள் அழுக்கை கழுவினாள். கூடவே அவள் வாழ்க்கைக்கும் ஒர் ஒளி கிடைக்கச் செய்தாள். இவள் தற்கொலை யை செய்தி தாள்களில் படித்த ஓர் தொண்டு நிறுவனம் அவளுக்கு தனது சொந்த முயற்சியில் ஒரு அலுவலகத்தில் சொற்ப சம்பளத்திள் ஓர் வேலைக்கு ஏற்பாடு செய்து தந்தது. கடவுள் கிருபையால் ஆனந்தி தனது 22 வயதில் ஒரு கௌரவமான நிலையை அடைந்தாள்.
வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோட்டமாய் போய்க்கொண்டிருந்த போது தான், ஓர்நாள் வேலைக்கு போய்க்கொண்டு இருந்த வழியில் தெருவோரம் ஓர் குப்பை தொட்டியருகே ஒரு ஈனஸ்வரம். மெல்ல அதன் அருகில் சென்று பார்த்தாள் ஆனந்தி. அங்கே ஒரு தாய் நாய் இறந்து கிடந்தது. அதன் அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்த ஒரு அழகான நாய்குட்டி, பசியாலும், நேற்றிரவு பெய்த பெருமழையின் தாக்கத்தாலும் உயிர் போகும் தருவாயில் கொஞ்சம் கொஞ்சமாய் தன் ஜீவனை தொலைத்துக் கொண்டிருந்தது. ஆனந்தி சட்டென தீர்மனித்து அந்த குட்டியை தன் கைகளில் ஏந்தினாள். விடுவிடுவென தன் வீடு நொக்கி நடந்தாள். பின் அந்த குட்டியை நன்கு துடைத்து அதற்க்கு பாலூட்டினாள். இப்போது அந்த நாய் குட்டிக்கு கொஞ்சம் தெளிவு பிறந்து ஆனந்தியை பார்த்து வாலாட்டியது. அந்த கணமே அதற்க்கு டைகர் என பெயரிட்டு தனது மகனாய் வளர்க்க ஆரம்பித்தாள்.
இந்த உலகம் மிக்வும் விசித்திரமானது.கனவுகளும் , கற்பனைகளும்,, இன்பங்களும், சோகங்களும், துரோகங்களும் மாறி மாறி வரப்பெற்றது. இருளுக்கு பின் ஓளி போல இல்லை வாழ்க்கை. அது எப்போதும் முரண்பட்டே இருக்கிறது. அது அன்பில் கரையும், அழிவில் மறையும். எக்கத்தில் பறிதவிக்கும். அடுத்த கணமே குரோதத்தால் மனம் வெதும்பி தவிக்கும். அதற்கென எந்த வித கட்டுபாடுகளும் இல்லை. எனவே தான் இவ்வுலகில் படைக்கப்பட்ட ஜீவராஇச்களில் ஏனோ மனிதன் மட்டும் இன்றியமையாத இடம் பபிடிக்கிறான்.
ஆனந்தி தனக்கு கிடைத்த டைகரை ஏனோ கட்டிப்போட்டு வளர்க்க வில்லை. அவனை சுதந்திரமாய் விட்டு விட்டாள். அதற்கென சாப்பாட்டை அதனிடத்தில் வைத்து விட்டு அவள் அலுவலகத்திற்க்கு சென்று விடுவாள். பின் மாலை 6 மணியளவில் தான் வீடு திரும்புவாள். அவள் வருவதற்க்கு முன்னரே டைகர் வீடு வந்து வாசல் படியில் அமர்ந்து அவளுக்காய் காத்திருக்கும். அவள் வீட்டு ஓனர், வேறு ஒரு ஊரில் வசிக்கிறார். சிறிய வீடு தான் என்றாலும் அவளுக்கு போதுமானதாய் இருந்தது. அவள் வேலை செய்த கம்பெனி மானேஜரின் சிபாரிசில் தான் அவளுக்கு இந்த வீடு கிடைத்தது. அவரும் இந்த வீட்டினை அவளுக்கு சுலபமாய் தந்து விடவில்லை. திடீரென அடிக்கடி வந்து பார்ப்பார். பின் ஒருநாள் அவளை முழுமையாய் நம்பி வீட்டை அவளின் பொறுப்பில் விட்டு விட்டார். நிறைவான வாழ்க்கை தான். ஆனாலும் ஏனோ விரக்தியால் பலநேரம் ஆனந்தி வருத்தப்பட்டிருக்கிறாள். அத்துனை சமயங்களிலும் ஒரு மகனாய் டைகர் அவளுக்கு ஒரு நிறைவை தந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாலை பொழுதிலும் டைகருடன் அமர்ந்து அந்த தெருவை வேடிக்கை பார்ப்பது ஆனந்திக்கு மிகவும் பிடிக்கும்.
அன்று ஞாயிற்ருக்கிழமை ஆதலால் விடுமுறை. ஏனோ ஞாயிறு என்றால் ஆனந்திக்கு மிகவும் பிடிக்கும். அந்த விடுமுறை நாளில் டகரை நன்கு குளிப்பாட்டுவாள். இசைஞானி இளையராஜாவின் இசை அன்று முழுவதும் அந்த வீட்டை நிறைத்திருக்கும். அந்த இசையின் ஊடே அவளும் அன்று முழுதும் கறைந்திருப்பாள். தனது உடமைகளை துவைத்து, காய வைத்து, நன்கு அயர்ன் செய்து அடுக்கி வைப்பாள். சாமி படதிற்க்கு பூப்போட்டு விளக்கேற்றி வைப்பாள். சமைப்பாள். டைகரோடு சாப்பிடுவாள். நன்கு உறங்குவாள். பின் டைகரோடு விளையாடுவது என அன்றைய முழு பொழுதையும் மகிழ்ச்சியோடு கழிப்பாள். ஏனோ இந்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு ஒரு இன்றியமையாததாய் மாறிப்போய் விட்டது. காலை சுமார் 11 மணியளவில் வீட்டை விட்டு போன டைகர் இன்னமும் வீடு வந்து சேர வில்லை. மணி வேறு 3 30 ஆகியும் விட்டது. மதியம் சாப்பாட்டிற்க்கு டாண் என்று வந்து அவளிடம் உணவு கேட்கும். ஆனந்தி வாயிற்படியில் அமர்ந்து தனது தாடையில் கைவத்தபடி டைகர் வரும் வழியை வெறித்தபடியே இருந்தாள்.
.சரியாய் அரை மணி நேரம் கடந்தது. தூரத்தே, அதோ டைகர் வருவது தெரிந்தது. ஏனோ நடை முன் போலில்லை. அதன் நடையில் ஏதோ ஒருவித அச்சமிருந்ததை இங்கிருந்தே அவளால் உணர முடிந்தது.. ஆனந்து அதை எதிர்கொள்ளும் பொருட்டு சற்றே எழுந்தவள், அது தன் வாயில் எதையோ கவ்வி இருப்பதை பார்த்ததும் சற்றே அதிர்ந்தாள். உற்றுப்பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சிக்கே போனாள். தன்னையறியாமல் அவள் வாய் பிளந்தது.
“ஆ… அய்யோ…..”
அவ்வாறு ஆனந்தி வாய் பிளந்து அதிர காரணம், டைகர் தன் வாயில் கவ்வியிருந்தது, ஒரு பிறந்து ஒரு சில மணித்துளிகளேயான , இன்னமும் ரத்தம் காயாத, தொப்புள் கொடி அறுபடாத, உயிருக்கு போறாடிக்கொண்டு, ஈனஸ்வரதில் மெல்லமாய் கத்திக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையை.
ஆனந்திக்கு உடல் முழுதும் உதறல் எடுத்தது. ஒரு இனம் புரியாத பயம் வந்தது. அப்போது தான் அவள் தலைக்கு குளித்திருந்தாலும், மீண்டும் அவள் உடல் முழுதும் தொப்பலாய் நனைந்தது. டைகர் அவள் அருகில் வருமுன், ஆனந்தி ஓடிச்சென்று முன்னே போய் அந்த சிசுவை தன் கைகளில் ஏந்தி கொண்டு விடுவிடுவென வீடு வந்து சேர்ந்தாள். கூடவே சட்டென வீட்டு கதவை அடைத்தாள்.
“கடவுளே…. இது என்ன சோதனை….”
என்று மெல்லிய குரலில் முனகியவள் , அந்த குழந்தையை ஒரு துண்டால் நன்கு துடைத்து முகம் விட்டு நன்கு மூடி அதற்க்கு கொஞ்சம் கதகதப்பு உண்டாக்கினாள். பின் சற்றே கோபமாய் டைகரை பார்த்து,
“டைகர்… என்னடா இது. என்ன பன்னி வச்சிருக்கே. இந்த் குழந்தைய எங்கே இருந்து தூக்கிட்டு வந்தே…. ஆண்டவா.. நான் இப்போ என்ன பன்னுவேன்… “என்றாள்.
டைகர் அவளை சற்றே அவளை ஏறிட்டு பார்த்தது. பின் அந்த குழந்தையின் அருகில் சென்று அதை சற்றே தன் நாவால் நக்கியது. பின் அவள் அருகில் வந்து ஈனக்குரலில் ஏதோ முனகியது.
ஆனந்திக்கு ஒன்றுமே புறியவில்லை. உடம்பு மெல்லமாய் உதறிக்கொண்டிருந்தது. மனது என்னென்னவோ நினைக்க ஆரம்பித்தது. குழந்தையின் அழுகை இப்போது சற்று குறைந்து இருந்தது. ஆனந்திக்கு கொஞ்சம் தாகமாய் இருக்கவே அருகில் இருந்த குடத்தில் நீர் எடுத்து பருகினாள். அப்போது தான் அவளுக்கு ஞபகம் வந்தது. குழந்தையின் வயிற்றுக்கு என்ன வழி என் யோசித்தவள், உடனே ஓடி அடுக்களையில் டைகருக்காய் வைத்திருந்த பாலில் கொஞ்சம் எடுத்து சுட வைத்து பின் பதமாய் ஆற்றினாள். மெல்ல குழந்தையின் அருகில் சென்று, அதை மெல்ல தூக்கி தன் மடிமேல் வைத்ததுதான் தாமதம், பாலுக்காய் ஏங்கிக்கொண்டிருந்த அந்த பச்சிளம் சிசு உடன் அவள் கைப்பற்றியது. தன் வாழ்க்கையில் முதன் முதலாய் ஒரு குழந்தயின் ஸ்பரிசத்தால் ஆனந்தி மெல்ல சிலிர்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் அதன் பசி தனித்தாள். அப்பொழுதான் அதை கவணித்தாள். அது பெண் குழந்தை. பாவம் யார் பெற்ற பிள்ளையோ?
இத்தனை நேரத்திற்கப்புரம் அந்த முகம் கொஞ்சமாய் தெளிவாயிருந்தது. கூடவே அது தன் குட்டி கண்களால் அந்த வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தது. அதை பார்ப்பதற்கே அழகாய்த்தானிருந்தது. ஆனந்தி அந்த குழந்தையே சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். இதோ இந்த டைகருக்கும், இந்த பச்சிளம் குழந்தைக்கும் ஏன் தனக்கும் ஒருவித பந்தம் இருக்குமோ என அவளுக்கு பட்டது. அது இந்த மூவரும் ஆர்பரித்து வரும் சமூக அலையிலிருந்து தூக்கி வீசப்பட்டவர்கள். அவர்களின் உரிமைகளை வலுக்கட்டாயமாய் பரிகொடுத்து தவிப்பவர்கள். இப்போது குழந்தையின் லேசான அழுகுரல் ஆனந்தியை தன்நிலை திரும்ப வைத்தது. உடனே அதன் அழுகைக்கான காரணம் புரிந்தது. அது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான பசி.
அழ ஆரம்பித்து இருந்த குழந்தையை சட்டென தன் மடியில் தாங்கிக்கொண்டாள் ஆனந்தி. ஏற்கனவே வைத்திருந்த பாலை புகட்ட முனையுமுன் குழந்தை தன் தாயின் மடியென நம்பி தன் கைகளை ஆனந்தியின் நெஞ்சில் கையாட்டி தன் பொக்கை வாயால் சிரித்தது. ஆனந்திக்கு தன் நெஞ்சில் குழந்தை கை பட்ட இடம் சிலிர்த்தது. உடம்பு ஒருகணம் மெல்ல அதிர்ந்தது. கண்களில் பொலபொலவென கண்ணீர் தேங்கி அது மெல்லமாய் அவளின் முகத்தில் வழிந்தது. ஆனந்தி தன்னையறியாமல் மேலே மாட்டியிருந்த சாமி படத்தினையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த இறைவன் அன்பானவன். , அழகானவன். கூடவே இல்லார்க்கு இனியவன்.ஆனந்தி கொஞ்சம் கொஞ்சமாய் அந்த குழந்தைக்கு பாலுட்டினாள். முதன் முதலாய் வயிறு நிரைந்ததாலோ என்னவோ குழந்தை ஆழ்ந்த நித்திரைக்கு செல்ல ஆரம்பித்தது.. குழந்தையை மெல்ல கீழே படுக்க வைத்தாள் ஆனந்தி. அப்போது தான் டைகரை கவனித்தாள். டைகர் அப்போது தான் தனக்கு வைத்த உணவை உண்ண ஆரம்பித்து இருந்த்து, அதற்க்கும் இப்போது தான் மனது நிறைந்தது போலூம்.
ஆனந்திக்கு அடிமனதில் ஆயிரமாயிரம் சிந்தனைகள் ஒட ஆரம்பித்தது. இந்த குழந்தை இங்கே வர காரணம் என்ன ? யாரோ பெற்ற பிள்ளையை இந்த டைகர் தூக்கி வந்திருக்கிறதே ? இதனால் என்னென்ன பிரச்சனைகள் தனக்கு வருமோ ? இது அக்கம் பக்கத்தவர்களுக்கு தெறிந்தால் என்ன ஆகும் ? இந்த குழந்தையின் பின்னனி என்னவால இருக்கும் ? . ஆதரவற்ற தனக்கென இது வந்ததா ? இல்லை … வேறு எதற்க்காக ?. இப்படி மாறி மாறி சிந்தனைகள் ஆனந்திக்கு ஓடின. இப்போதே மணி 5 – ய் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு சில மணித்துளிகளில் முழுவதுமாய் இருட்டி விடும். அதற்க்குள் நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும் என் தீர்மானித்தவள் டைகரை அழைத்தாள்.
“டைகர் இங்கே வாடா……”
குரல் கேட்டு ஓடி வந்த டைகரை தன்னிரு கைகளில் தாங்கிக்கொண்டு பின் அதை பார்த்து,
“டைகர்…. என்னடா இதெல்லாம். இந்த குழந்தையை எங்கே இருந்து தூக்கி கிட்டு வந்தே ?…”என்றாள்.
இதை கேட்டதும் தான் தாமதம். டைகர் உடன் எழுந்து குழந்தையின் அருகே அமர்ந்து அதை தன் நாவால் நக்கியது. பின் அவளை அழைக்கு பொருட்டு ஒரு சென்று வாயிற்படியில் நின்று அவளை மௌனமாய் பார்த்தது.
இத்தனை வருட வளார்ப்பில் டைகரின் அபிலாழைகள் அவளுக்கு அத்துப்படி ஆகியிருந்தன. டைகர் தன்னை எங்கோ அழைக்கிறது அன உணார்ந்து கொண்டவள் சட்டென முடிவெடுத்து குழந்தையை துக்கி கொண்டாள். வீட்டை பூட்டிவிட்டு அதனுடன் அதன் பின்னே அவசரம் அவசரமாய் நடக்க ஆரம்பித்தாள். டைகர் வளைந்து வெளிந்து ஓடி ஒரு நான்கு தெரு தள்ளி ஊருக்கு ஒதுக்குப் புரமாய் இருந்த அந்த குப்பை கிடங்கில் வந்து நின்று ஆனந்தியை பார்த்து ஒரிடத்தை காட்டி மெல்லமாய் ஈனஸ்வரத்தில் முனகியது. இதை பார்த்ததும் ஆனந்தி செய்வதறியாமல் விக்கித்துப் போனாள். அவளையறியாமல் அவள் வாயிலிருந்து மீண்டும்,
“அய்யோ… இதென்ன கொடுமை…குப்பையிலேர்ந்து தான் இந்த குழந்தையை தூக்கிட்டு வந்தியா…?
ஆனந்திக்கு பதில் தரும் பொருட்டு டைகர் ஒரு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. அதை பார்ப்பதற்க்கு, எனோ ஒரு வித ஆதங்கமாய் பட்டது ஆனந்திக்கு. தன்னைப்போல் நிராகாரிக்கப்பட்ட ஒரு உயிரை பார்த்ததும் மனது பொறாமல் அதை தூக்கி வந்து தன்னிடம் நம்பிக்கையாய் தந்திருக்கிறது. ஆனந்திக்கு இப்போது தெளிவாய் புரிந்து விட்டது. இது முறை தவறி பிறந்த குழந்தையாய் இருக்கலாம். இதை பெற்றவள் இங்கேயே அவளை பெற்று போட்டுவிட்டு சென்றிருக்கலாம். இதை நாம் வைத்திருப்பது வேண்டாத பல சிக்கல்களை நமக்கு ஏற்படுத்தும். எனவே இதை போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடுவதுதான் நமக்கும் இந்த குழந்தைக்கும் நல்லது. என நினைத்தவள் சட்டென அந்த இடம் தவிர்த்து ஸ்டேஷன் இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
நிற்க. ஆனந்தி ஆழ்ந்த சிந்தனையிலிருந்து மீண்டாள். மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொண்டாள். குழந்தையை மெல்ல தன் கைகளால் வருடினாள். பின் விருவிருவென தெரு முக்கு தாண்டி ரொம்ப நாளைக்கு பிறகு போலிஸ் ஸ்டேஷனில் அடியெடுத்து வைத்தாள்.
அன்று ஞாயிர்றுக்கி கிழமையாதலால், போலிஸ் ஸ்டேஷன் கொஞ்சம் களையிழந்து காணப்பட்டது. நல்ல வேளை S I ஸ்டேசன் வந்து இருந்தார். ஒரு குழந்தையை ஒரு பெண் இல்லையில்லை பெண் போல இருக்கும் ஒரு பெண். அனேகமாய் இவள் திருநங்கையாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணியவர் நேரடியாய் அவளை எதிர்கொண்டார்.
“ஏய். இரு.. என்ன விஷயம் ? யார் இந்த குழந்தை ?.. எதுக்கு இங்கே வந்தே …..?
நல்ல கம்பீரமான குரல் அவருக்கு. ஆனந்தி சட்டென நின்றாள். மீண்டும் ஒர்கணம் மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொண்டாள். அவருக்கு மறியாதையாய் வணக்கம் சொன்னாள். பின் நடந்த அனைத்தையிம் அச்சு மாறாமல் சொல்லி முடித்தாள். பின் தனது ஆபிஸ் ID CARD ஐ காட்டினாள். கூடவே ர்தன்னைப் பற்றியும் சொன்னாள்.
அவள் கூரியவகளை நிதானமாய் கேட்டறிந்தவர் பின் அவள் நீட்டிய ID CARD ஐ வாங்கி உற்று பார்த்தார். பின் ஒன்றும் சொல்லம்மால் தன் கைபேசியை எடுத்து அவளைப்பார்த்து,
“ம்… உன் மனேஞர் பேரும், நம்பரும் சொல்லு…. “என்றார்.
ஆனந்தி சொன்ன தகவல்களுடன் கொஞ்ச தூரம் சென்று தனிமையில் ஒர் 5 நிமிடம் பேசியவர், பின் அவளருகே வந்து, ஆனந்தியை பார்த்து .
“ஆனந்தி, அதானே உன் பேரு. good . வா வந்து வண்டியிலே ஏரு. கூடவே நீ கூட்டி வந்த நாயையயும். நாம போய் அந்த இடத்தை பார்த்துட்டு வந்துடலாம்.”என்றார்.
அவரை இடைமறித்த ஆனந்தி, பின் மெல்லிய குரலில் அவரைப்பார்த்து,
“ஸார்… ஒரு நிமிஷம். இந்த குழந்தைக்கு இன்னும் தொப்புள் கொடி கூட இன்னமும் அறுபடாமல் வீங்கி கிடக்கு. போரதுக்கு முன்னாடி HOSPITAL போனா தேவலை..? என்றாள்.
“சரிம்மா..போற வழிதானே அதுவும். பார்த்துக்கலாம் வா என சற்று மென்மையான குரலில் கூறியவர் மீண்டும் தனது பாணியில் ,
“கான்ஸ்டபில்… வந்து வண்டிய எடுங்க. பொய்ட்டு வந்திடலாம்…”என்றபடி கம்பீரமாய் முன்னே நடக்க ஆரம்பித்தார்.
ஆனந்திக்கு போலிஸ் ஸ்டேஷன் ஒன்றும் புதிதில்லை. தன் வாழ்நாளில் பல இடங்களில் , பல சமயங்களில், பல இரவுகளில், பலவிதமான மனிதர்களை இவள் பார்த்திருக்கிறாள். அவற்றில் பல தனது நிஜ முகங்களை மறைத்து வேறு முகன்ங்களில் இவளை பார்த்தவர்கள். அகர்களிடத்தே ஏற்பட்ட வக்கிரங்களை பல கொணங்களில் அணுஅணுவாய் உள்வாங்கி துடித்திருக்கிறாள். அவர்களை பொருத்த வரையில், இவளை போன்றோர்கள் அவர்களின் வடிகால்கள் அவ்வளவே. அவர்களையும் சொல்லி குற்றமில்லை. அவர்களின் நிலை அப்படி. மனம் என்ற ஒன்றை பார்க்க அவர்களிடத்தில் ஏனோ நேரமில்லை. ஆனாலும் நல்லவர்களுக்ககு அங்கேயும் பஞ்சமில்லைதான். அவர்கள் நீண்ட நெடு பாலைவனத்தே பூத்திருக்கும் பூஞ்சோலையை போன்றவர்கள். என்ன செய்ய. பூவிருக்கும் உலகில் தானே, கொடிய தேள்களும் வாசம் செய்கின்றன. ஏன் ஆனந்தியின் இன்றைய வாழ்க்கைக்கு வித்திட்டவரும் இவர்களை போன்றவர்களில் ஒருவரே. எனவே தான் ஆனந்திக்கு எதையும் துணிந்து எதிர் கொள்ளும் ஆற்றல் வந்தது.
அந்த ஸ்டெஷன் S I மிகவும் துரிதமாய் செயல்பட்டார். சம்பந்தப்பட்ட இடத்தை ஆராய்ந்து ஆனந்தி சொன்னதை உறுதிப் படுத்திக்கொண்டார். பாவி மகள் குழந்தையை அந்த இடத்திலேயே பெற்றுப்போட்டு விட்டு சென்றதற்கான நிறைய தடயங்களை அங்கே அவர் பார்த்து அதை போட்டோவும் எடுத்துக் கொண்டார். பின் குழந்தையை தூக்கி வந்த டைகரை அன்புடன் தடவிக் கொடுத்தார். பின் ஆஸ்பத்திரியிலும், வரும் வழியிலும் அவளை பற்றி கேட்டு அறிந்து கொண்டார். அவளிடம் முறைப்படி ஒரு கம்ப்ளெயிண்ட் ( COMPLAINT ) எழுதி வாங்கிக்கொண்டு பின்னர் அவளைப்பார்த்து,
“ஆனந்தி… முறையாய் விசாரித்து உனக்கு சொல்லி அனுப்புவோம். அப்போ நீ வந்தா போதும். ரொம்ம நல்ல மனசும்மா உனக்கு. என் நம்பரை ரைட்டர் கிட்டே வாங்கிக்கோ. உனக்கு எந்த சந்தர்ப்பத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்கு போன் பன்னு. சரியா… இப்போ நீ உன் வீட்டுக்கு போகலாம்….. ”
ஆனந்திக்கு கொஞ்சம் ஆறுதலாயும், கொஞ்சம் பயமாயும் மீண்டும் அவரை பார்த்து,
“ரொம்ப தேங்ஸ் ஸார்….அப்போ குழந்தையை என்ன பன்னுவீங்க ஸார்…..”என்றாள் அப்பாவியாய்.
“என்ன வழக்கமான விசாரணைதான். குழந்தையை பற்றி, அதன் தாயை பற்றி அக்கம் பக்கம் தீவிரமாய் விசாரிப்போம், சரியான தகவல் கிடைக்கலென்னா, பேப்பர்ல நியூஸ் பேப்பர்ல குழந்தையின் போட்டோ போட்டு விளம்பரம் செய்வோம். அப்படியும் கிடைக்கலன்னா, முறைப்படி குழந்தையை ஏதாவது ஹோம்ல செர்த்து விடுவோம். அவங்க கொஞ்ச நாள் கழிச்சு, குழந்தையில்லாதவங்களுக்கு அரசு விதிப்படி தத்து கொடுப்பாங்க. நீ ஒன்னும் கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ போய்ட்டு வா….. “என்றார்.
“அப்போ அதுவரையில் குழந்தையை நான் பத்திரமா வச்சுகிட்டா ஸார். ஏன்னா, எனக்கும் யாரும் இல்லே ….”
சட்டென அவளிடமிருந்து வார்த்தைகள் வந்து விழவே, SI கொஞ்சம் திகைத்து, பின் மெல்லமாய் சிரித்த படி மீண்டும் அவளை நேருக்கு நேராய் பார்த்து,
“ம். OH YES… எப்படியும் குழந்தை ஹொம்லதான் இருக்க போகுது. குழந்தையை கண்டெடுத்தவள் என்ற முறையிலேயும், அப்புறம் முறைப்படி இங்கே வந்ததாலயும் குழந்தையை இப்போ உன்கிட்டே நம்பி தர்ரேன். குழந்தையை நல்லா பார்த்துக்குவே தானே நீ ..? “என்றார்.
“என் உயிர கொடுத்து நல்லா பார்த்துகுவேன் ஸார்… “என கையெடுத்து கும்பிடும் ஆனந்தையை பார்த்து இப்போது நன்றாய் சிரித்தவர் அவளை பார்த்து,
“GOOD. சரி வா. நான் போர வழியிலே உன்னை வீட்டிலே விட்டுறேன். என்றபடி எழுந்தார்.
மீண்டும் அவருக்கு கை கூப்பி நன்றி சொன்னாள் ஆனந்தி. பின் டைகருடன் வந்து அவள் வீட்டை திறந்து லைட்டை போட்டாள். தெடீரென வீடு பிரகாசமானது. கூடவே அவள் மனதும்தான். வீட்டுக்குள் சென்று சாமி படத்துக்கு விளக்கேற்றினாள். பாலை மீண்டும் சுட வைத்து பின் பதமாய் ஆற்றி தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு புகட்டி பின் மீண்டும் அதை தூங்க வைத்து அருகில் அமர்ந்து அந்த குழந்தையையே வைத்த கண் வாங்காமல் வெறித்து பார்த்தபடியே இருந்தாள். டைகரும் குழந்தையின் அருகில் படுத்து தூங்கியும் விட்டது. வெகு நேரம் கழித்து சுமார் 3 மணியளவில் அவளையுமறியாமல் குழந்தையை அனைத்தபடியே தூங்கிப்போனாள்.
நீண்ட நாளைக்கு அப்புறம் ஆழ்ந்த நித்திரை. கனவில் ஆனந்தி இரண்டு குழந்தைகளுக்கு தாய். குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்கிறாள், அவர்களை செல்லமாய் கண்டிக்கிறாள். அவர்களை பள்ளிக்கு கிளப்புகிறாள். காய்கறி பேரம் பேசி வாங்குகிறாள். சமைக்கிறாள். இப்படி ஒரு குடும்ப தலைவி போல ஆனந்தி, ஆனந்ந்தமாய் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கையில் திடீரென குழந்தையின் அழுகுரல் அவளை உலுக்கி எடுத்தது. திடீரென அலறி கண் விழித்தாள் ஆனந்தி. பசியின் காரணமாய் தன்னிரு கைகளில் ஒன்றை அவள் மார்பருகே தள்ளியபடியே அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் ஆனந்திக்கு அவளையரியாமல் கொஞ்சம் வெட்கம் வரவே, அரிதாய் கண்ணம் சிவந்தாள். பின் குழந்தையை பார்த்து ஏதோ அவள் பிள்ளை போலவே,
“சீ…. எப்படி அசந்து தூங்கிட்டேன் பாரு…..”
என்றபடி எழுந்து மணி பார்த்தாள். மணி 7 என கடிகாரம் காட்டவே
“அம்மாடியோவ்…. டைகர்… இந்கே வாடா . வந்து கடைக்கு போய் பால் வாங்கிட்டு வா. சீக்கிரம் குழந்தை அழறா பாரு…”
என்றபடி ஓடி வந்த டைகரின் கழுத்தில் ஒரு பையும் , அதனுள் பணமும் போட்டனுப்பினாள். டைகர் வர சுமார் 10 முதல் 15 நிமிடங்களாகும். அதுவரையில் குழந்தையின் அழுகையை நிப்பாட்ட சற்றே வெளியே வந்தவள் சுற்றி யிருந்தவர்கள் ஓரிரு பேர் தன்னை நோக்கி வருவதை பார்த்து அவர்களை எதிர் கொள்ள தயாரானாள்.
வந்தவர்கள் அல்லாது அடுத்து வந்த ஒரிரு மணிகளில் விஷயம் முற்றிலும் தெரிந்து பலபேர் வந்து பார்த்து போனார்கள். அவர்களில் பலபேர் உனக்கு எதற்க்கு இந்த வேண்டாத வேலை என்று ஓதிவிட்டு சென்றனர். ஆனால், அவர்களில் ஒருசிலர் நல்லவர்கள். அவர்கள் இவளின் செயலை மனதார பாராட்டினார்கள். கூடுதலாய் குழந்தையை பராமரிக்கும் முறையையும் சொல்லிவிட்டு போனார்கள். அனைத்தையும் இன்முகத்துடன் கேட்டுக்கொண்டாள் ஆனந்தி. அனவருக்கும் நன்றி சொன்னாள்.
ஆனந்திக்கு அன்று நிறைய வேலை இருந்தது. முதன் முதலாய் அவள் ஆபிஸ் மேனேஜருக்கு போன் போட்டு நன்றி சொன்னாள். கூடவே ஒரு சில நாட்களுக்கு லீவும் சொன்னாள். அதற்க்கு மானேஜர் அவலை பாராட்டியதோடு எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை அனுகும்படி கேட்டுக்கொண்டார். விஷயம் கேள்விப்பட்டு போனிலேயே பாராட்டிய ஆபிஸ் நண்பர்களுக்கு மனதார நன்றி சொன்னாள். கடவுளை கையெடுத்து கும்பிட்டாள். குழந்தை தன்னிடம் இருக்கும் வரையில் அவளை மிகவும் சந்தோஷமாய் வைத்திருக்க முடிவு செய்தாள். இதற்காக அவள் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. இத்தனை நாள் அவளின் சம்பாத்தியத்தில் தன் சிக்கனமான செலவு போக, கொஞ்சமிருந்தது.
ஆனந்தி குழந்தையை தூக்கிக் கொண்டாள். ஆட்டோ பிடித்து டைகருடன் தெப்பகுளம் கடைவீதிக்கு போனாள். முதலில் குழந்தைக்கு விதம் விதமாய் ஆடைகள் மற்றும் அதற்க்குண்டான சோப்பு, பவுடர், ஆயில், பால் புட்டி, கிரேப் வார்ட்ஸ், துண்டு முதல் அனைத்தையும் விலை பேசாமல் வாங்கினாள். பின்னர் மலைக்கோட்டை பிள்ளையாருக்கு கீழிருந்தே அர்ச்சனை செய்தாள். குழந்தைக்கு திரு நீரு பூசி விட்டாள். புது ஆடையில் திருநீரு பூசிய அக்குழந்தை அவ்வளவு அழகுடன் பளிச்சிட்டது. பின் வேகமாய் படியிறங்கினாள். ஊன்றிப்பார்த்த ஒருசிலரை சட்டென தவிர்த்தாள். மீண்டும் வீடு வந்து சேர்ந்தாள். இளையராஜாவின் பாடலில் அன்று முழுதும் கரைந்தாள்.
சில நாட்கள் இப்படியே கரைந்தது. இதற்க்கிடையே ஒரு சில தடவை போலிஸ் ஸ்டெஷன் சென்று இன்பெக்டரிடம் குழந்தயை காட்டிவிட்டு வந்தாள். அவரும் அவளின் ஓவ்வொரு சந்திப்பிலும் குழந்தை மெருகேறி வருவதை உணர்ந்திருந்தார்.இடையில் ஒரு நாள் நியூஸ் பேப்பரில் குழந்தையின் படம் போட்டு விபரம் தெரிவிக்குமாறு போட்டிருந்தார்கள் . கூடவே ஸ்டேஷன் நம்பரோடு, தனது நம்பரையிம் போட்டிருந்தார்கள். ஏனோ ஆனந்ந்திக்கு எந்த ஒரு காலும் வரவே இல்லை. இவளும் அதை பற்றி கவலைப் படவுமில்லை. இப்பொழுதெல்லாம் குழந்தை அவள் முகம் பார்த்து சிரிக்கிறது. டைகரும் அவளுடன் விளையாட ஆரம்பித்து விட்டது. குழந்தையின் பக்கத்தில் அமர்ந்து லேசாய் கத்த ஆரம்பிக்கும். உடனே குழந்தையும் ஆ… ஊ…. என கத்த ஆரம்பிக்கும். இது தான் இவர்களின் விளையாட்டு.
ஆரம்பம் என்று ஒன்று இருந்தல், முடிவுச என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்யும். அதைப்போலத்தான் அன்று ஸ்டேஷனில் இருந்து ஆள்விட்டிருந்தார்கள். இவளை வரச்சொல்லி. அது முதலாய் ஆனந்தியின் அடிவயிரு கனக்க ஆரம்பித்தது. கூடு கலைந்து விடுமோ ? அன்று முடிவுக்கான நாளாய் ஆனந்தி எண்ணிக்கொண்டாள் ஆனந்தி. எழுந்து குளித்து முடித்து, குழந்தையையும் குளிப்பாட்டி புது ஆடை உடுத்தி, பின் குழந்தைக்கு பாலூட்டி பின் அதற்க்கென வாங்கி வைத்திருந்த அத்துனையையும் எடுத்து ஒரு பெரிய பையில் வைத்து, பின் மனது கேட்காமல் ஒரே ஒரு ஆடையை மட்டும் ஞாபகார்த்தமாய் எடுத்து வைத்துக்கொண்டாஅள். பின்னர் மௌனமாய் ஆட்டோ பிடித்து டைகருடன் ஸ்டேஷன் வந்தாள்.
இந்த இடைப்பட்ட நாட்களில் ஆனந்தியை ஸ்டேஷனில் எல்லோருக்கும் தெறிந்திருந்தது. ஆனந்தி எல்லோருக்கும் மௌனமாய் வணக்கம் சொன்னாள். எதிர்பட்ட ரைட்டர் இவளை பார்த்து,
“என்ன … ஆனந்தி குழந்தை ஷோக்கா இருக்கா. நல்லா பார்த்துக்கரே போலிருக்கு. குட்….”எனறபடி அவளை ஸ்னேகமாய் கடந்து போனார்.
“எல்லாம் ஆண்டவன் புன்னியம் ஸார்…”என்றபடியே இவளும் அவரை கடந்து நேராய் நடந்து ஏட்டுவின் மேஜையை அடைந்தாள். ஏட்டுவும் இவளை பார்த்து மெல்ல சிரித்தபடி,
“வாம்மா… இதோ இப்படி உட்காரு. ராவனன் ஸார் இப்போ வந்துடுவார். “என்றார்.
ஆனந்திக்கு ராவணன் என்பவர் யார் என்று தெரியாமல், மெல்லிய குரலில் ஏட்டுவினை பார்த்து,
“யார் ஸார் இந்த் ராவணன்…..யாராச்சும் ஆபிஸருங்களா…? என்று அப்பாவியாய் கேட்டாள்.
“போச்சு… போ…. அய்யாவோட பேரு கூட இது நாள் வரை தெரியாமலேயே இருக்கியா ?… SI அய்யாவோட பேரு தான் ராவணன்.”
ஆனந்தி அந்த இக்காட்டான நேரத்திலும் அதிசயமாகி பின் ஆச்சர்யமானாள். இந்த மனிதர்கள் ஏனோ வித்தியாசமானவர்கள் என நினைத்துக்கொண்டாள். பின் சென்று ஓரம்மாய் ஒரு பெஞ்சில் அவர் காட்டிட்ய இடத்தில் சென்று மௌனமாய் உட்கார்ந்து கொண்டாள். டைகரை வெளியில் விட்டிருந்தாள்.
நிமிடங்கள் யுகங்களாய் கழிந்து கொண்டிருந்தன. ஆனந்தி அதீத வேதனையால் இருந்தாள். இந்த தலைவலி வேறு அவளை காலையிலிருந்ந்து வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. நெஞ்சம் ஏனோ சொல்லொன்னா துயரில் விம்மி புடைத்திருந்தது. ஆரம்ப காலங்களில் இவள் கஷ்டப்பட்ட போதேல்லாம் இப்படி அவல் கவலை பட்டதில்லை. மனதை தேற்றிக்கொண்டு அடுத்த காரியம் நோக்கி நடக்க ஆரம்ப்த்து விடுவாள். ஆனால் இது அப்படி இல்லை. ஊழி பெருங்காற்றில், கூடவே பெருமழையை காட்டிய ஆண்டவன், திடீரென ஒண்டிக்கொல்ல ஒரு ஓலை குடிசையை காட்டி, அதில் தான் ஒண்டி தன் ஈரம் உலர்த்தி நெருப்பூட்டி குளிர் காயும் வேளையில் மீண்டும் ஊழிக்காற்றை தன் பக்கம் திருப்பினான் என்றால் எப்படி இருக்கும். அப்படி பதட்டமாய் இரு;ந்தாள் ஆனந்து. தன்னோடிருந்த ஒரு உயிர் எங்கே தன்னை விட்டு போய் விடுமோ என்ற அச்சம் அவளை வாட்டி வதைத்தது. வரும் வழியில் அவள் பார்த்த வாசகம் “THE GOD MUST BE CRAZY “இப்போது நினைவில் வந்து போனது.
திடீரென ஸ்டேஷன் பரபரப்பானது. வண்டி ஒன்று வந்து நிற்கும் சப்தம் கேட்டது. பின் பூட்ஸ் காலொலி ஒங்கி ஒலிக்க சப் இன்ஸ்பெக்டர் ராவணன் வந்து கொண்டிருந்தார். ஆனந்தி மரியாதை நிமித்தமாய் எழுந்து கொண்டாள். அவளை அவர் கடந்து போகுமுன் அவருக்கு மரியாதை செலுத்துனாள். அவரும் அவளை பார்த்து லேசாய் முருவலித்தபடியே தன் கேபின் நோக்கி விருவிருவென சென்றுவிட்டார். மீண்டும் நிமிடங்கள் நகர முடியா நரகமாய் கழிய, சிறிது நேரம் கழித்து அவளை கூப்பிட்டார்கள்.
“ஆனந்தி… அய்யா கூப்பிடுராரு. போம்மா….”
ஆனந்தி ஒருவிதமான நடுக்கதோடே எழுந்தாள். பின் குழந்தையை தன் கைகளில் தூக்கிகொண்டு மெல்லிய நடையில் SI ரூமை அடைந்தாள். ஊள்ளே வந்து மீண்டும் அவருக்கு வணக்கம் சொன்னாள்.
“வாம்மா.. வந்து உட்கார்…..”
ஆனந்தி அமைதியார் உட்கார்ந்தாள். எனோ தொண்டை அடைக்க வார்த்தை வராமல் சிரமப்பட்டாள். குழந்தை அமைதியா அவள் கைகளில் உறங்க்கொண்டிருந்தது. ஏனோ அவரும் ஏதும் அடுத்து கூறாமல் மௌனமாய் இருந்தார். கடிகார முட்கள் அங்கே நகர சிரமப்பட்டன. சிறிது நேரம் கழித்து அவரே பேச ஆரம்பித்தார்.
“ஆனந்தி…”
“குழந்தையை நல்ல பார்த்துக்கறேம்மா…
“ரொம்ப நன்றி ஸார்…”
அவர் ஆரம்பித்தார்.
“ஆனந்தி.. இந்த் 20 நாள் விசாரணையில குழந்தையை பத்தின எந்த ஓரு தெளிவும் கிடைக்கலே. பேப்பர்ல விளம்பரம் கொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லே. அதனால அரசாங்கம் இந்த குழந்தையை அனாதை குழ்ந்தையின்னு டிக்ளர் பன்னி நாளையோ இல்லை நாளை மருநாளோ இந்த குழந்தையை ஒரு ஹோம்ல ஒப்படைத்து விடனும். ”
என்றார் அவள் கண்களை ஆழமாய் ஊடுருவியபடி. ஆனந்தி மரம் போல் ஏனோ அமர்ந்திருக்கவே, மீண்டும் அவலை நோக்கி,
“என்னம்மா… நான் சொல்றது உனக்கு புரியுதா…? என்றார்.
“நல்லா புறியுது ஸார்…”
என்ற ஆனந்தி எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் நிலையிலிருந்தாள். கைகள் ஏனோ அந்த பச்சிளம் சிசுவை மேலும் சற்று இருக அணைத்தபடி இருந்தது. இத்தனையையும் நன்குணர்ந்தவாய் மீண்டும் அவளை கணிவுடன் பார்த்து,
“ஆனந்தி. உன் கஷ்டம் எனக்கு புறியுது. But கவர்மெண்ட் ரூல்ஸை யாரும் மீற முடியாது. ஏன் அது தான் நல்லதும் கூட. குழந்தையை நாம ஹொம் ல ஒப்படச்சுதான் ஆகனும். ரொம்ப நாள் கடத்த முடியாது.”என்றார்.
இப்போது ஆனந்தி சகலமும் உடைந்து அழ ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து மெல்லிய குரலில் அவரை பார்த்து,
“ஸார்… இந்த குழந்தையை ஹொம் ல ஒப்படச்ச பிறகு என்ன செய்வாங்க….”என்றாள்.
அதுவரையில், அமைதியாய் இருந்தவர், பின் மெல்லிய சிரிப்பின் ஊடேஅவளைப் பார்த்து அடுத்து நடக்க போவதை அனுமானித்தவர் போல,
“ஏன்… கொஞச நாளைக்கப்புறம், பிள்ளை இல்லாதவங்களுக்கு சட்டப்படி தத்து கொடுத்துடுவாங்க….”என்றார்.
“ஸார்.. உங்களுக்கு, இந்த அரசாங்கத்துக்கு, அந்த ஹொம்ல உள்ளவங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, இந்த குழந்தையை நானே வளர்க்கட்டுமா ?. என்னா எனக்கும் வேற யாரும் இல்லே ஸார். நான் ஒரு….ஒரு…. அனாதை ஸார்…..”
என்றபடி எழுந்த ஆனந்தி குழந்தையை டேலிளில் கிடத்தி விட்டு சட்டென அவர் காலில் விழுந்து ஓவென அழ ஆரம்பித்தாள். இதை கண்டதும் சட்டென தன் சீட் தள்ளி எழுந்து ஓரடி பின்னே சென்றவர் ஒரு தாயாய் உடைந்து போய் அவரிடம் மடிப்பிச்சை கேட்கும் அவளை நோக்கி,
“எழுந்திரும்மா….”
என்றார் தழைந்த குரலில். ஆனந்தி மெல்ல எழுந்து தன் இருக்கையில் அமர்ந்து குழந்தையை எடுத்து தனது தோள் மேல் தூக்கி போட்டுக்கொண்டாள். பின்னர் தனது அலைபேசியை எடுத்து யாருக்கோ டயல் செய்து சிறிது தூரம் சென் தணிந்த குரலில் பேசத்தொடங்கினார்.
“வணக்கம் ஸார்…”
“அந்த கேஸ் தான் ஸார்…..”
“விக்டிம் இத்வரையில் இல்லை ஸார்….”
“தானே வளர்க்கறதா சொல்றாங்க ஸார்…..”
“ஆமா ஸார். திருநங்கை தான். But profile very clear . And She already worked one company. Her Manager and her team support well sir….”
“ok sir……..”
“ok sir. I follow the whole procedure. I will complete everything ..”
“Thank you Sir…”
ஆனந்தி இவரது மெல்லிய உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தாள். பதி புரிந்தும் , பாதி புரியாமலும் இருந்தாள்.அதே சமயம் அவரையே வைத்த கண் வாங்காமல் அவரின் பதிலுக்காய் காத்திருந்தாள். பதிலுக்கு அவரும் அவளிடம் எதுவும் சொல்லாமல் பக்கத்து ரைட்டர் அறைக்கு சென்று அவரிடம் ஏதோ பேசிவிட்டு சிரிது நேரம் கழித்து திரும்பி வந்தார். ஆனந்தியின் நிலையினை பார்த்து பின் கம்பீரமாய் பேச ஆரம்பித்தார்.
“ஆனந்தி…”
“ஸார்….”
“சப்போஸ் இந்த குழந்தை உனக்கு கிடைச்சா, அப்போ இந்த குழந்தையை நீ நல்லா பார்த்துக்குவியா….?”
“என் உயிரை விட மேலா பார்த்துக்குவேன் ஸார்…..”
என்று சொல்லிவிட்டு ஆனந்தி அப்போதுதான் அவர் மெஜை மேல் ராவணன் என்று பித்தளை எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு டியூப் லைட் ஒலியில் மின்னிக்கொண்டிருக்கும் அவர் பெயரை மிகவும் மறியாதையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த கடவுள் விசித்திரமானவர் என அந்த வேளையிலும் அவளுக்குப் பட்டது.
“எனக்கு தெறிந்த ஒரு ஜட்ஜ் கிட்டேதான் இப்போ பேசினேன். என் மெலிடத்துல நேத்திக்கே பர்மிஷன் வாங்கியிருந்தேன். என்னா இந்த கேள்விய நீ இன்னைக்கு என்னை பார்த்து கேட்பேன்னு நான் எதிர்பார்த்தேன். ரைட்டர் கிட்டே சொல்லியிருக்கேன். அவர் சொல்படி நீ உன் கைப்பட ஒரு லெட்டர் எழுதி கொடுக்கனும். மாதா மாதம் குழந்தையை கொண்டு வந்து இங்கே காட்டனும். இது ஒரு 3 வருஷம் வரைக்கும் தான். ஸ்டேஷன் ல இருந்து ஒரு சர்டிபிகேட் தருவாங்க . அதை வச்சுக்கிட்டு நீ இந்த குழந்தையை சட்டப்படி பதிஞ்சுக்கலாம். But one condition……”
என்று நிறுத்தியவரை, இதுவரை இவர் சொன்னதெல்லாம் கேட்டு வானத்தில் மிதந்து கொண்டிருந்த ஆனந்தி திரடுக்கிட்டு, தன்னிலை திரும்பி அவரை பார்த்து,
“என்ன ஸார்…..”என்றாள்.
“இவ்வளவும் இந்த குழந்தையை யாராச்சும் உரிமை கொண்டாடி வரும் வரை தான். அப்படி யாராச்சும் வந்து சட்டப்படி அவங்கதான்னு நிருபிச்சா, நீன் எந்த மறுப்பும் சொல்லாமல் குழந்தையை கொடுத்துடனும். ஏன்னா… தத்து பெரும் உரிமை இன்னமும் உங்களை போன்றோருக்கு இந்த அரசாங்கம் வழங்கப்படவில்லை. அதுக்கு இன்னும் கொஞ்ச வருசமாகலாம். ..”என்றார்.
பதில் பேசாது மீண்டும் அவர் காலில் விழப்போனவளை தடுத்து நிறுத்தியவர்,
“அழாதேம்மா… இனி உன் வாழ்க்கையிலே சந்தோஷம் தான். ஆமா… குழந்தைக்கு பெயர் ஏதாவது வச்சிருக்கியா…?”
என்ற கேள்வியை அவளைப் பார்த்து எழுப்பினார்.
“வச்சிருக்கேன் ஸார். நாயகி. என் அம்மோவோட பெயர் ஸார்…..”
என்றவளைப் பார்த்து,
“நாயகி உன் அம்மாவும் இல்லை. இப்போது உன் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் குழ்ந்தையுமில்லை. நீ தான்”.
என வாய் வரை வந்த வார்த்தைகளை ஏனோ சொல்லாமல், அந்த ராவணன் என்னும் சப் இன்ஸ்பெக்டர் அவளை பார்த்து மெல்ல சிரித்தார்.
 கதையாசிரியர்:
 கதையாசிரியர்:  கதைத்தொகுப்பு:
 கதைத்தொகுப்பு: 
                                    
 கதைப்பதிவு: June 26, 2021
 கதைப்பதிவு: June 26, 2021 பார்வையிட்டோர்: 6,025
 பார்வையிட்டோர்: 6,025  
                                     
                     
                       
                      