நான் நானாக… – ஒரு பக்க கதை





அவன் முறை வந்தது. கொண்டு சென்ற பழங்களை சுவாமிஜியின் காலடியில் வைத்தான். குனிந்து அவரை வணங்கினான். ”அடிக்கடி உணர்ச்சி
வசப்படறேன். கட்டுப்படுத்த முடியலே” எனத் தன் பிரச்னையை வெளிப்படுத்தினான்.
”உன் அப்பாவோட சொத்தை அபகரிச்சிட்டே” என்றார் சுவாமிஜி.
”அப்பாவுக்கு சொத்து எதுவும் இல்லே. இறக்கும் போதும் கடனாளியாத்தான் இறந்தார்.”
வீடு வாசல் தோப்பு துரவுதான் சொத்துன்னு அர்த்தமில்லே. அவரோட குணம், அந்தக் கோபம் எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுகிற சுபாவம்,
ஆக்ரோஷம் எல்லாம்தான். அதையெல்லாம் கைவிடு. நீ நீயாக மாறு” அருளாசி வழங்கினார்.
வீடு வந்தான். விஷயத்தை புவனாவிடம் சொன்னான்.
”பார்க்கலாம்” என்றாள். அவ்வளவு சீக்கிரம் நம்பி விடமாட்டாள். அனுபவம்.
விடிந்தது. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு உள்ளே வந்தான். காப்பியைப் பருகினான்.
”நீங்க நீங்களா மாறிட்டீங்க” என்றாள். விழித்தான்.
”புரியலையா? காப்பியிலே சர்க்கரை குறைச்சாலே கத்துவீங்க. இன்னைக்கு காப்பியில நான் சர்க்கரையே போடலே!”
புவனா வாய் விட்டு சிரித்தாள். அவனுக்கு நோய்விட்டுப் போனாற்போல இருந்தது
– வினோதானந்த் (5-12-12)