நான் தொலைத்த மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 3,391 
 
 

அதுவே எனது முதல் நீண்ட நெடுந்தூர பயணம். சென்னையிலிருந்து பஞ்சாப் (மோகா) நோக்கி தில்லி வழியாக பயணிக்க எனது அலுவலகத்தில் திட்டமிட்டிருந்தார்கள்.

ஏறக்குறைய 3 நாள் பயணம் அது. அன்று மாலை 6:50 க்கு சென்ட்ரலில் இருந்து தில்லி கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அந்த தொடர்வண்டி. கன்னிமுறைப் பயணம் என்பதால் 1: 30 மணி நேரத்திற்கு முன்பே ரயில்நிலையம் சென்றுவிட்டேன்.

சென்னை சென்ட்ரல் – எத்துனை பேரின் கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்து கொண்டிருக்கும் இடம். புதுப்புது மனிதர்கள், புரியாத பாசைகள் என இருந்தது அதை எல்லாம் ரசித்துகொண்டிருந்தேன். நான் செல்ல வேண்டிய தொடர்வண்டியில் பயணிகள் அனுமதிக்கபட்டார்கள். நானும் என் உடைமைகளை எடுத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன் முன்பதிவு இருக்கை என்பதால் அவரவர் இருக்கையில் எவ்வித சலசலப்புமின்றி அமர்ந்தார்கள். என்னுடைய கம்பார்ட்மென்டில் ஓர் 5 பேர் கொண்ட குழு வந்தமர்ந்தார்கள். பாாாம் பாாாம் என்றொரு மிகப்பெரிய ஒலியுடன் எங்களுடைய தொடர்வண்டி புறப்பட்டது.

ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி என்னுள், பல பல கனவுகளுடன் என் பயணத்தை தொடங்கினேன். கப்பார்ட்மெண்டில் இருந்த அந்த ஐவர்குழுவில் ஒருவர் என்னிடம் “தம்பி நீங்க எந்த ஊரு ? என்ன பண்றீங்க?எங்க போறீங்க?” என்று கதைக்கத் தொடங்கினார். நானும் என்னுடைய பதில்களையளித்து, அவர்களுடைய பயணநோக்கத்தையும் அறிந்தேன். என் தந்தை மதிப்பு ஒத்த அவர்கள் வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு தில்லியிலிருந்து விமான மார்க்கமாக செல்வதாய் சொன்னார்கள்.

உலகின் இரண்டாம் மிகப்பெரிய நாடு இந்தியா ஆனால் வேலைவாய்ப்பு,பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது ஏனோ?

மேலும் எங்களுடன் ஒரு வட இந்திய வாலிபன் பயணித்தான் அவனும் என்னுடன் அறிமுகமனான். அவ்வப்போது அரைகுறை ஆங்கிலத்தில் நானும் கதைத்தேன். தொடர்வண்டியில் பணியாற்றும் அனைவரும் வட மாநிலத்தவர் என்பதால் எனக்கு மொழிப் பிரச்சனையானது. உணவுவேளைகளில் அவர்கள்தான் உதவினர் அவ்வப்போது சில ஹிந்தி வார்த்தைகளும் கற்றேன். ஆந்திராவை கடந்ததும் மக்களின் உணவும், உடையும் முற்றிலுமாக மாறியுள்ளதை அறிந்தேன். கோடை காலமென்பதால் மிகவும் கடினமாக இருந்தது அந்த பயணம். மாலை வேளைகளில் இசைஞானியும், SPB யும் அவ்வப்போது பொழுதைக் கழிக்க உதவினர். 36 மணி நேர பயணத்திற்கு பிறகு காலை 6:35 க்கு தில்லியை வந்தடைந்து. கோடை மழை பெய்திருந்தது அந்தக் காலை வேளையில். தில்லி ரயில் நிலையத்தில் அனைவரும் இறங்கினார்கள். அந்த ஐவர்குழு சில பல குறிப்புகளை கூறிவிட்டு பட்டாம்பூச்சியாய் பறந்தது. முதல்முறையாக ஆயிரக்கணக்கானோர் அருகிலிருந்தும் அனாதையாக உணர்ந்தேன், காரணம் என் தமிழ் என்னை விட்டுப் போனதாய் எண்ணி. பின்பு என் உடைமைகளை எடுத்துக்கொண்டு ரயில்நிலையத்தை விட்டு வெளியேறினேன்.” நான் இப்போது இந்தியாவின் தலைநகரத்தில் உள்ளேன், எத்துனை பெரிய அறிஞர்களும்,அரசியல்வாதிகளும்,ஆளுமைகளும் புழங்கிய இடமல்லவா! தென்தமிழகத்தின் கடைக்கோடியில் இருப்பவன், மாவட்டத்தை விட்டு வெளியேறாத பரம்பரையில் இருந்து வந்தவன், கனவிலும் நினைக்காத இடத்திற்குப் புலம்பெயர்ந்தவன்” என எண்ணி என்னை நானே உற்சாகபடுத்திக்கொண்டு அடுத்த பயணத்திற்க்கு ஆயத்தமானேன், (தில்லி – பஞ்சாப்) தில்லி ரயில் நிலையத்திலிருந்து தில்லி மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். அருகிலிருந்த மெட்ரோ ரயிலின் வழியாக செல்லலாம் என அங்கிருந்தவர்களிடமிருந்து அறிந்தேன். பின்பு மெட்ரோ ரயிலில் சென்றேன். முதன்முறையாக மெட்ரோவில் பயணிப்பாதல் மிகவும் விசித்திரமாக இருந்தது , மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தேன். காலை உணவாக 2பூரி, சென்னா தால்(கொண்டகடலை), சாச்(மோர்) உன்றுவிட்டு நகர்ந்தேன். அங்கிருந்து சுமார் 8 மணி நேர பயணம் என்பதால் தனியார் (ஆம்னி) பேருந்தில் வர சொல்லியிருந்தார் என் சீனியர். அந்த தனியார் பேருந்தில் அரைகுறை ஆங்கிலத்திலும் அரியாத ஹிந்தியிலும் பேசி நான் போக வேண்டிய இடத்தைக் (லூதியான) கூறி பயணச்சீட்டு பெற்று ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். வண்டி புறப்படும்போது அவசர அவசரமாக ஒரு குடும்பம் பேருந்தில் ஏறியது. நல்ல ஆஜானுபாகுவான சுமார் 6 அடி உயரம் , மிகப்பெரிய டர்பன் அணிந்த அந்த சர்தார்ஜி என் இருக்கையையும் ஆக்கிரமித்து அமர்ந்தார். இருவரும் புன்முறுவல் செய்துவிட்டு திரும்பி விட்டோம்.

நான் தொலைபேசியில் மூழ்கினேன். சிலரது அழைப்புக்காக நாம் காத்துக்கிடப்பதுண்டு, அப்பேற்பட்ட அழைப்பு அது. ஆம் என் பவித்ரமான கல்லூரித்தோழியின் அழைப்பு! உள்ளத்தில் ஏனோ உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவளின் உறவை தோழி என்பதா? காதலி என்பதா? இந்த கேள்விகளுக்குள்ளேயே அடைபட்டிருந்த உறவு அது. அதிலும் அவள் இந்த “கழுவுற மீனுல நழுவுற மீனு” எனும் ரகத்தைச் சேர்ந்தவள். அழைப்பை ஏற்றுத் தொடங்கினேன், மன்னிக்கவும் உரையாடத் தொடங்கினேன். உரையாடல்கள் நீண்டது, தூரம் குறைந்தது.

இடையில் அந்த சர்தார்ஜி என்னிடம் கதைக்க முயன்றார், ஆனால் நான் கதைக்கவில்லை எனக்கு விருப்பமும் இல்லை . நாங்கள் எங்கள் கல்லூரி நாட்களைப்பற்றி அளாவிக்கொண்டிருந்தோம். நானும் முயன்ற அளவில் அவளினுள் இருக்கும் எ‌ன்னுடைய காதலை வெளிக்கொணரும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். அவளிடமும் அந்த காதலிருந்ததை அறிவேன் ஆனால் அது சாதியக்கட்டமைப்பினாலும், குடும்பச்சூழ்நிலையினாலும் கட்டப்பட்டிருந்தது. இந்தியாவை பொருத்தமட்டில் இந்த காதல் என்பது கொலைக்குற்றமாகும். திடீரென துண்டித்தால் அவள் என்னுடனான உரையாடலையும், உறவையும். அது காலத்தின் சூழ்ச்சியா? இல்லை காதலின் வீழ்ச்சியா? அதற்கு பதில் அவளிடமே.

மணி சரியாக நண்பகல் 1:30 இருக்கும் மதிய உணவிற்காக சாலையோர உணவகத்தில் நின்றது. அனைவரும் உண்பதற்காகவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் சென்றனர். பெரும்பாலும் பகல் பயணங்களில் மதிய உணவை தவிர்த்துவிடுவேன், அன்றும் அவ்வாறே இருக்க சில நொறுக்குத் தீனிகளை மட்டும் வாங்கிக்கொண்டு உணவகத்தின் முன்புறமிருந்த பூங்காவில் அமர்ந்திருந்தேன். அந்த சர்தார்ஜி என்னைப்பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு கடந்து சென்றார்.

சற்றும் எதிர்பாராத விதமாக நான் வந்த பேருந்து சென்றுவிட்டது. நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். யாரிடம் முறையிடுவது? எப்படிப் பேசுவது என ஒரே மனக்குமுறல்கள். ஐயோ என்னுடைய உடைமைகள் அனைத்தும் போகிறதே நான் எப்படி அதை கைப்பற்றுவது என புரியவில்லை, சட்டென்று ஒரு யோசனை நான் வைத்திருந்த பயணச்சீட்டில் எதாவது தொலைபேசி எண்கள் உள்ளாதா எனத் தேடினேன் சில தொடர்பு எண்கள் இருந்தன. பாலைவனத்தில் தாகத்தோடு அலைபவனுக்கு தண்ணீர் கிடைத்தது போல், அதிலிருந்த எண்களை தொடர்பு கொண்டேன் ஆனால் அதுவும் தோல்வி. அலுவலக பொருள்கள், என்னுடைய சான்றிதழ்கள், மற்றும் உடைமைகள் என மொத்தம் ரூபாய் 50000 மதிப்புள்ள பொருள்கள் போய்விட்டதே என மிகுந்த வேதனைக்குள்ளானேன், நேரம் ஆக ஆக என் கட்டுப்பாட்டில் நானில்லை.

அப்போது பின்னாலிருந்து ஒரு கை என் தோளில் வைக்கப்பட்டது. திரும்பிப் பார்த்தால் அதே உருவம் புன்முறுவல் செய்து கடந்து சென்ற அந்த சர்தார்ஜி . நான் மிகவும் குழப்பத்திற்க்குள்ளானேன். அவரிடம் என்னுடைய தவிப்பைச் சொல்ல முயன்றேன். அதையறிந்தவர் பின்பு விளக்கினார் இவ்வாறாக, நாங்கள் வந்த பேருந்து எரிபொருள் நிரப்ப சென்றாதகவும். இப்போது சென்ற பேருந்து நாங்கள் வந்த அதே நிறுவனத்தின், மற்றொரு பேருந்து என. முதல்முறை என்பதலோ அல்லது புதிய இடம் என்பதலோ என்னவோ. நான் என்னுடைய பேருந்தின் பதிவு எண்ணைக் கவனிக்க மறந்தேன். மேலும் பயணச்சீட்டிலும் பதிவெண் இல்லை.

பின்பு ஒரு வழியாக எங்கள் பேருந்து வந்தது ஒரு நிம்மதி பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தேன். அருகில் அமர்ந்தார் என் நண்பர்(சர்தார்ஜி), ஆம் இப்போது நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அந்த 50 வயது கொண்ட நண்பருடன் கதைக்க ஆரம்பித்தேன், அவர் தனது மனைவி மற்றும் மகனை அறிமுகம் செய்தார். அவர்கள் எங்கள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர் என்னிடம் சாப்பிட்டாய எனக் கேட்டார், நான் இல்லையனக் கூற , செல்லக்கோபம் கொண்டார் என்மேல். இந்த களபரேத்தில் நான் வைத்திருந்த நொறுக்குத்தீனிகளையும் மறந்து விட்டேன், பின்பு அவர் எனக்கு சில பழங்களையும் நான் அவருக்கு சில ரொட்டித்துண்டுகளையும் கொடுத்து பரிமாறிக்கொண்டோம். அவர் தன்னை அறிமுகப்படுத்தினார் தான் ஒரு இராணுவ வீரன் எனவும் அந்த அடையாள அட்டையையும் காண்பித்தார்,. இராணுவ வீரனுக்கான அத்தனை தகுதியும் அவரிடமிருந்தது. பின்பு நான் என்னையும் என் பணியையும் விவரித்தேன்.

அவரைப் பொருத்தவரை நான் ஓரு மதராசி . பாவம் வட இந்தியர்கள். 1996 ஆம் ஆண்டே மெட்ராஸ் சென்னையானது அவர்கள் இன்றும் அறியவில்லை போல. நாங்கள் இருவரும் ஒரே இடத்தில்தான் இறங்கி, பின்பு மாறிச் செல்லவேண்டும் என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டோம். எங்களுடைய உரையாடல்கள் அனைத்தும் அரைகுறை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் இருந்தன சில சமயங்களில் சைகை மொழியில் பேசியும் மகிழ்ந்தோம்.

மாலை ஓரு 5 மணியளவில் லூதியான வந்தடைந்தோம் (பஞ்சாபில் ஒரு பகுதி). சீக்கியர்கள் சூழ்ந்த பகுதி என்பதால் ஆண்கள் அனைவரும் பெரிய டர்பன்களுடனே (தலைப்பாகை) இருந்தனர்.

பின்பு அங்கிருந்து மோகா நோக்கி பயணத்தைத் தொடங்கினோம்.

அந்த பேருந்தில் கூட்டம் என்பதால் அவர் 3 இருக்கை தள்ளி அமர்ந்தார்.நான் நடத்துனரிடம் ரூபாய் 100 கொடுத்து ரூபாய் 25 மதிப்புள்ள பயணச்சீட்டை பெற்றுவிட்டு சில்லரைக்காகக் காத்திருந்தேன். நான் பேசும் அரைகுறை ஹிந்தியை அறிந்த அந்த நடத்துனரும் சில பயணிகளும் நகைத்தார்கள். நானும் அதை அறியாத வண்ணம் இருந்தேன், சிறிது நேரம் கழித்து என் மீதி பணத்தை கேட்டேன் அதற்கு அந்த நடத்துனர் என்மீது கடிந்து கொண்டார். இவையனைத்தையும் கவனித்த என் நண்பர் சட்டென்று வந்து அந்த நடத்துனரை தக்க முறையில் கவனித்து என் மீதி பணத்தை வாங்கிக் கொடுத்தார்.

மேலும் நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு முன்னதாகவே அவர் இறங்க வேண்டி இருந்ததால், அந்த நடத்துனரிடம் அதட்டலானதோணியில் “ அவர் தமிழகத்தைச் சார்ந்தவர் அவருக்கு ஹிந்தி தெரியாது ஒழுங்காக நடந்துகொள் என கூறினார் “. பின்பு என்னருகில் “வந்து நாங்கள் இறங்குறோம், நீ பார்த்து போ” என்று சொல்லிவிட்டுக் கடந்தார் அவர். அவருடைய கண்களில் ஓர் இனம்புரியாத பாசத்தைக் கண்டேன்.

ஏனோ தெரியவில்லை அந்த ஐவர்குழுவிடமும், எனது நண்பருமான சர்தார்ஜியிடமும் அலைபேசி எண்களை பரிமாறிக்கொள்ளவில்லை. இந்தி அறியாமலே அன்று சைகையில் பேசிக்கொண்டோம், ஆனால் இன்று இந்தி பேசுமளவு தெரிந்தும் கூட அவர்களுடன் பேசமுடியவில்லை என்ற கவலை பெரிதும் உண்டு. அதன்பிறகு எந்தப் பயணமானலும் அவர்களுடைய நினைவலைகள் இன்றும் என் நெஞ்சில் மோதுவதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *