நாடுமில்லை… நாயுமில்லை…





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தேயிலைத் தொழிற்சாலையின் சல்லடைக் காம்பிராவில் அவன் நிற்கிறான்… அந்த ஒரு நாள் தான் அவனது கடைசி நாளாக இருந்தது………
அந்த கணப்பொழுதில் முத்தையாவைப் பொறுத்தளவில் எல்லாமே நடந்து முடிந்து விட்டன. இனிமேல்…. என்றுமே திரும்பிவர முடியாத…. இந்த ஊரைவிட்டே போகவேண்டிய ஒரு நிலமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அவன் ஒருபோதும் இனி…. இங்கே வரமாட்டான்……..

இனி எதுவும் நடக்குமென்று நினைத்துக் கூட பார்க்க முடியாது! அந்தச் சல்லடைக்காம்பிராவில் உருளும் சக்கரங்களின் சுழற்சியிலேயே அவனது பதினைந்து ஆண்டுகால இளமை வாழ்வு எண்ணி முடிந்தது! எந்த நாளும் சதா அவனது கைகள் பட்டு… பட்டு அந்தச் சல்லடைக்காம்பிராவின் கதவுப் பிடி தேய்ந்து போயிருந்தது.
முத்தையா அந்தச் சல்லடைக்காம்பிரா வேலைக்கு பதினைந்து வயதில் வந்தான். அன்று தொடக்கம் இன்று வரை அவனது வாழ்வும் உலகமும் அதே தொழிற்சாலைதான்!
கொஞ்ச நாளாய் அந்த தொழில்….. அவனுக்கு ஒருவித வெறுப்பும் கசப்பும் ஏற்படத் தொடங்கின…. ஒரு விரக்தியான நிலையில் இருந்தான்……..இப்படியொரு நிலை மூன்று மாதங்களுக்கு முன்பு…அதாவது அவன் மதுரைக்கு யாத்திரை போவதற்கு முன்பே ஏற்படத் தொடங்கியது.
எந்தநேரமும் சுழன்று கொண்டிருக்கும் சக்கரங்களின் ஓலமும்…. ஆடிக் கொண்டேயிருக்கும் சல்லடையந்திரத்தின் அதே சத்தமும் அவனைச் சலிப்படையச் செய்தன.
ஆனால் இன்று அந்த நிலைமை வித்தியாசமாக மாறியிருந்தது! அவனிடம் ஒரு திடீர் மாற்றம் காணப்பட்டது. அங்கே இரைச்சலிடும் யந்திரங்களெல்லாம் அவனை வசப்படுத்தின! படக் படக்கென அடித்துக் கொண்டிருக்கும் அவனது நாடித் துடிப்புகளோடு அவைகளும் சேர்ந்து கொண்டன!
வேலை முடிந்து ஆண்களும் பெண்களும் தொழிற்சாலையை விட்டுப் போகும் வரை… அவன் தயங்கியபடி அங்கே நின்றான். கடைசியாக ஒரு தடவை அந்தச் சல்லடைக் காம்பிராவைப் பார்த்துவிட்டுப் போக ஆசைப்பட்டான். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவருமில்லை….
வெறிச்சோடிக் கிடந்த சல்லடைக் காம்பிராவுக்குத் திடீரென ஜீவன் வந்தது! தேயிலைத் தூளின் வாசமும், இரும்புக் கழியில் பூதங்களால் உறங்கிக் கிடந்த சக்கரங்களின் சக்தியும் வெறிகொண்டு எழுந்தன….! அவன் உடலுக்குள் அந்த ஆவேசங்கள் புகுந்தன……..! முத்தையாவின் மனமும் உடலும் இயந்திர மயமாகி இயங்கத் துடித்தன.
அவனது பதினைந்து ஆண்டுகால வாழ்க்கை கொழுந்துகள் வாட்டமாகும் பச்சிலைத் தட்டுக்களிலும்… தூள் சலிக்கும் சல்லடைகளிலும் ஓலமிட்டுக் கொண்டிருக்கும் இயந்திர சத்தங்களிலும் இரண்டறக் கலந்து கிடந்தது.
“நாளைக்கு…. இந்த நேரம்….?’ மனம் குமைந்தது.
“நா போய்ட்டா. எனக்குப் பதிலா… எவனாவது வருவான்… வழமையா சல்லடகாம்பரா வேல நடக்கிறமாதிரி நடந்துக்கிட்டுத்தான் இருக்கும்……இங்கே இருக்கிற சாமான்களெல்லாம் இருந்த மாதிரித்தான் இருக்கும்….. நான் மட்டும் தான் இருக்க மாட்டேன்! இதுதான் ….. வாழ்க்க!….. ஒருத்தன் போனா…… இன்னொருத்தன் வருவான்….!”
அவன் மனம் நியாயப் படுத்திக் கொண்டது…. ஆமாம்.முத்தையா போய்விட்டால் மாத்திரம் எதுவுமே குடைசாய்ந்து போய்விடாது! இந்த உலகத்தில் ஈடு இணையற்றவர் என்று எவரும் கிடையாது.
என்ன இருந்தாலும் அந்தத் தோட்டத்தில் முத்தையா சக தொழிலாளர்களால் கைவிடப்பட்டவனாகக் கருதி வேதனைப் பட்டான். அவன் நாடி தளர்ந்தவனாய்…. தொங்கிய உடலோடு தொழிற்சாலைவிட்டு திறந்த நெடுஞ்சாலை….! பாதைதான் இங்கு வெட்ட வெளியாகத் திறந்து கிடக்கிறது! ‘நாளை’ என்ற ஒரு நம்பிக்கையும் எதிர்காலமும் இல்லாத பாதை….!
வேலை முடிந்து வீட்டை நோக்கும் தொழிலாளர்களோடு கலந்து அவனும் நடந்தான். அவர்களின் உறவும் நெருக்கமும் இன்றோடு ஒதுங்கி விட்டதாக உணர்ந்தான். வழமையாக அவன் கண்களில் எதிர்ப்படும் காட்சிகளெல்லாம் இன்று வெறும் சூனியமாகவே தெரிந்தன. நடந்து முடிந்த பழைய நினைவுகள் அவன் மனதில் பளிச்சிட்டு மறைந்தன….. ஊருக்குப் போகும் பிரயாணப் பத்திரங்களை வாங்குவதற்கு அவன் கொழும்புக்குப் போய் வந்த அந்த முதல் நாளை நினைத்துப் பார்த்தான். இமிக்கிரேசன் டிப்பாட்மென்ட் ஆப்பீஸில் நடந்த விசாரணை அவன் நினைவில் ஆடியது.
அந்த அதிகாரி…. அந்த முரட்டு மனிதன் …….. முதுகும் பிடரியும் ஒரேயளவாக ஊதிப்புடைத்திருக்கும்….. அந்த மனிதன் கண்களில் தீப்பிழம்பு கக்க முத்தையாவின் முன்னால் நின்றான்.முத்தையாவின் பார்வையில் அந்த ஆபீசர்…. வலையில் சிக்கிய ஒரு காட்டுமிருகமாகவே காட்சி தந்தான்.
தனது டி.ஆர்.பியை (Temporary Resident Passport) புதுப்பிக்க முத்தையா அவனிடம் போயிருந்தான். கொழும்பில் அது நடந்தது….. அந்த அதிகாரி முத்தையாவைப் பார்த்ததும் பயங்கரமாகக் கர்ஜித்தான். அந்தக் கர்ஜனையைக் கண்டு அங்கு வந்திருந்த ஏனைய தொழிலாளர்கள் கூனிக் குறுகிப் போய் நின்றார்கள்.
முத்தையா தனது பத்திரங்களை அந்த அதிகாரியிடம் கொடுத்துவிட்டு நின்றான்.
”ஒன்ட டி.ஆர். பி.யை புதுப்பிக்க முடியாது! ஓடிப் போ!” அந்த மனிதன் உறுமினான்.
”ஐயா!” முத்தையா திக்கித் திணறினான். “கோயில் கொளத்தச் சுத்திப் பாக்குறதுக்காகத் தான்..நா… மதுரைக்குப் போயிட்டு வந்தேன்… நா…. சிலோன்ல தாங்க இங்க தாங்க தோட்டத்துல தாங்க பொறந்து வளர்ந்தவன்..!” கொஞ்சம் தைரியமாக முத்தையா சொன்னான்.
”ஆமாண்டா! ஒவ்வொரு பிச்சைக்காரனும் இனிமே சிலோன் காரன்தான்! இல்லையா…..? உனக்கு இங்க செய்றதுக்கு ஒன்னுமில்லேன்னா….. வூட்ல போய் செய்யடா!” எவ்வளவு கீழ்த்தரமான பாஷையிலே…. இவன் பேசுறான்…….! இந்த அதிகாரியெல்லாம் ஏன் இப்பிடி கொடூரமா நடந்துக்கிறாங்க.? அந்தப் பிரஜாவுரிமை அதிகாரியும் இவனப் போலத்தான் ரொம்ப ராங்கித்தனமா… நடந்துக்கிட்டான்……. எங்கப்பாவ எங்க அம்மா கல்யாணம் கட்டிக்கிட்டாங்களான்னு கேட்டான்…!
“இதெல்லாம் ஒரு கேள்வியா.?’ அந்தக் கசப்பான வெறுப்பான சம்பவங்களெல்லாம் அவன் நெஞ்சுக்குள் நுழைந்து ஓடின….
முத்தையாவுக்கு தன் தாயின் நினைவு வந்தது. பாசம் வடியும் அந்தக் கருணைமுகம் அவன் முன்னால் தோன்றியது….. கண்ணீர் நிறைந்த கருவிழிகள்.. அதில் துயரத்தோடு இழையோடும் ஓர் ஏழ்மையான….. பாமரப் புன்னகை காட்சி தந்தது…. வார்த்தையால் வடிக்க முடியாத ஒரு வலி அவன் இதயத்தைத் துளைத்தது… அந்த வேதனை அங்கே முழுதும் மின்சாரமாய் பாய்ந்தது.
அவள் ஆவிபிரிந்த அந்த நாளை இன்னும் அவன் எவ்வளவு தெளிவாக நினைவில் வைத்திருக்கிறான்…….? கண்கள் வறண்டு போகும் வரை அவன் எப்படி அன்று கதறி கதறி அழுதான்….? அவன் தன் கடைசி மூச்சை உள்ளே இழுத்து விடமுடியாத வேதனையிலும் எவ்வளவு தெம்பாக -தெளிவாகப் பேசினாள்…?
”மவனே! என்னைய நெனைச்சி ஒன் வாழ்க்கைய அழிச்சிக்காத….. கண்ணு! நா…. எப்பவும் ஒன்னோடத்தான் இருப்பேன் சாமீ!….” அவள் கொஞ்சம் மௌனமாகித். தொடர்ந்தாள். ஒடம்ப நல்லாக் கவனிச்சுக்கோணும் என் ராசா….! சூட்டிய நல்லாப் பார்த்துக்கணும்…. ஒங்கப்பாரு தான் இந்த நாய்க்குட்டிய வூட்டுக்கு கொண்டாந்தாரு..
அந்த நாய்க்குட்டி சின்னதில் மொழு மொழுவென்றிருக்கும். உடலில் அப்பி முளைத்திருக்கும் பஞ்சு முடி….. சில்க் துணியைப் போல பளபளக்கும். காதுகளை மடக்கிப் பின்னால் விழுந்து… உடலை நெளித்து நெளித்து வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும் அந்த அழகிய காட்சி இன்னும் அவன் நினைவில் இருக்கிறது.
தாயின் மரணத்துக்குப் பின் முத்தையாவை விட்டு, சூட்டி பிரிவதில்லை. அவனோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டது. கந்தல் துணியில் மிஞ்சிய துண்டாய் அந்தச் சின்ன உயிர்… தாயின் பிரிவிலே கிடைத்த ஒரு ஞாபகப் பரிசு!…… ஓர் ஆறுதல் சொத்து! என்று முத்தையா நினைத்தான்.
சின்னாயி…… சித்தப்பா எல்லாரையும் விட சூட்டியையும் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ‘எப்பிடி சூட்டிய விட்டுப் போறது…..? அவன் நெஞ்சறை நிர்மூலமாக்கப் பட்ட குடிசையாய் உருவிழந்து கிடந்தது…… அவனது உறவாய்….. உயிரால் இருந்த சூட்டியை யாரிடம் கொடுத்துவிட்டுப் போவது?
”சின்னாயி பாசமே இல்லாதது….. ஒரு… பிறவி….. அவ சூட்டிய விரும்ப மாட்டா…..”
பெக்டரி வொச்சர் ராமனிடம் கொடுத்துவிட்டுப் போகத் தீர்மானித்தான். இருந்தும்…… அவள் மனதை அறிய,
“ராமன் நாய்க்குட்டிய கேக்கிறான்!’ என்று ஜாடையாகச் சொன்னான்.
அவள் கொஞ்சங்கூட அவன் பேச்சைக் கவனிக்கவில்லை. அந்த அலட்சியத்தை……. பிறகு அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வீடு வந்து விட்டது.
வாசலில் போய் நின்றான். பிறந்ததும்…. வளர்ந்ததும்… வாழ்ந்ததுமான அந்த லயத்துக் காம்பிராவை….. அந்தப் புறாக்கூட்டை விட்டு அவன் வெளியேறிவிட வேண்டும்.
முத்தையா வீட்டுக்கு வந்ததும் பயணத்துக்குரிய எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. சித்தப்பாவும் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். சின்னாயி ஒரு துணிப்பையில் அவனது சாமான்களை யெல்லாம் மூட்டை கட்டி காம்பிரா மூலையில் வைத்திருந்தாள்.
முத்தையா வழமையாக எவரிடமும் அதிகமாகக் கதைக்க மாட்டான். அது அவனது சுபாவமும் கூட. அன்றைய தினம் அவனது நாக்கு பின்னிக் கிடந்தது.
அந்த நிலையில் பரஸ்பரம் அவர்களது மனவுணர்வுகள் மௌனமாக அழுதன…. சங்கடமான அந்தச் சூழலில் சித்தப்பா பேசினார்…..
‘முத்தையா…! அந்த வார்த்தையில் வேதனைச் சுமை நிறைந்திருந்தது.
“ஒங்க பாட்டன் காலத்துலத்தான் நாங்க கிராமத்துவுட்டு சிலோனுக்கு வந்தோம்.. இப்ப ஏதோ தூரத்துச் சொந்தமுன்னு யாராவது அங்க இருப்பாங்க நா யாரக் கண்டேன்…? எவரக் கண்டேன்…? எல்லாப் பாரத்தையும் கடவுள் மேல போடு …….! திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தான். தொணை! காயிதம் கன்னிகள்….. கவனமா… வச்சிக்க…!” என்று நா தளு தளுத்தார்.
அவரால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
சரிங்க சித்தப்பா…… சரிங்க சித்தப்பா…….! என்று பலதடவை முத்தையா, சொல்லிக் கொண்டான்.
அந்த இரண்டு வார்த்தைகளில் அவன் என்ன வெல்லாமோ சொல்ல நினைத்தானோ அதில் அத்தனையும் அடங்கியிருந்தன.
பலவீனப்பட்டுப் போன மனிதர்கள் எளிய பூச்சிகளாய் இருக்கும் வரை வலிமை நிறைந்தவர்கள் மிதித்துக் கொண்டு தான் இருப்பர்……
பிரியும் நேரம் வந்தது.
முத்தையா துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு மறுகையில் சூட்டியை அணைத்தபடி மௌனமாக விடை பெற்று நடந்தான்.
பெக்டரி வொச்சர் ராமன் வீட்டை நோக்கி அந்தத் தேயிலைக் காட்டு வழியாக அவனது கால்கள் பின்னிப் பின்னி நகர்ந்தன….
பலவந்தமாக அவனை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் அந்தப் பேசிக் பயணத்தைப் பற்றியே தொழிலாளர்களெல்லாம் கொண்டிருந்தார்கள். முத்தையாவைப் பலிபீடத்துக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் துயரப் பட்டார்கள்.
முத்தையா சூட்டியை இறுக அணைத்த படியே நடந்தான். சூட்டி அவன் முகத்தை அடிக்கடி முகர்ந்து பார்த்துக் கொண்டது. அதுதான் அவனோடு சேர்ந்து போகும் கடைசிப் பயணம் என்று அதுக்குத் தெரியாது.
“ஏன் நாய்க… பிரஜாவுரிம கடுதாசு வச்சிருக்கணு முன்னு அவசியப் படல்ல……? ஹும்…… சில நேரம் அதுகளுக்கும் ஏதாவது ஒரு மாதிரியான கடுதாசு இருக்கும்…….! இல்லாட்டிப் போனா அதுக வாழ்க்கைக்கும் ஆபத்து வந்திரும்…… அப்படியான ஒரு ஆபத்து சூட்டிக்கு வந்திரக் கூடாது!”
(He wondered why dogs were not required to get citizenship papers. Perhaps they too had some kind of paper. Other wise their life would be in danger. He hopes that such a tragedy would not befall sooty) என்று வேண்டிக் கொண்டான். அவன் மனம் பேதலித்திருந்தது.
ராமன் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதை முத்தையா கவனித்தான். இன்னும் சொற்ப நேரமே இருக்கிறது. அதற்குள் இருவரும் ஏதாவது கதைத்துக் கொள்ள வேண்டும்…
“அந்தச் சின்ன அறையில் போட்டு அடைச்சி வச்சிருக்கிறேன்’ என்று ராமன் குசுனிப்பக்கமிருந்த ஒரு அறையைக் காட்டினான்.
“அது கொஞ்ச நாளையில் பழகிவரும்……. நீ கவலப்படாத நா… கவனிச்சுக்குவேன்.” என்று முத்தையாவுக்கு ஆறுதல் கூறினான்.
“நீ நல்லா கவனிச்சுக்குவேன்னு…. எனக்குத் தெரியும் ராமு!” என்றான் முத்தையா.
அவன் மெதுவாக கதவருகே சென்றான். சூட்டி அவன் உடலோடு உடலாய் ஒட்டிக் கொண்டது. அதை கீழே இறக்கிவிட்டு அந்த அறைக்குள் கூப்பிட்டான். சூட்டி நகர வில்லை! அவன் அடித்துவிடுவானோ என்ற பயத்தோடு அவனை ஏக்கத்தோடு பார்த்தது. முத்தையா அதைத் தடவினான். அதன் பஞ்சு மயிர்களைத் தன் மூக்கோடு உரசினான். அன்பாகத் தட்டிக் கொடுத்து தூக்கி அந்த அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்தினான். சூட்டி கதவைப் பிராண்டியது. வெளியே வருவதற்காக அலைமோதியது. கத்தியது. முனகியது.
இருவரும் மௌனமாக ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். திசாயும் நேரம் இருள் மெல்லப் படர்ந்தது…
சூட்டியின் அழுகுரல்’ தூரத்திலிருந்து கேட்கிறது. கொஞ்சம்….. கொஞ்சமாக அந்தச் சத்தம் இப்போது…. மங்கி….. மறைகிறது. எங்கோ நடுராத்திரியில் அழுது ஓயும் குழந்தையின் சத்தத்தைப் போல…..!
அந்தப் புலம்பல் தன் தாயின் கல்லறையிலிருந்து வருவதாய் முத்தையா கலங்கினான்.
ஆம்! சுடுகாட்டில்….. தேயிலைச் செடியின் அடியில்…. தாயின் குழிமேட்டிலிருந்து…. ஒரு பிடி… மண் அவனை அழைக்கிறது.
ரயில் நிலையம்
வழமையான சந்தடி….. நடமாட்டம் முத்தையா திருச்சி சந்திக்கு ஒரு டிக்கட் வாங்கினான். கடைசி மணி ஒலித்தது.
“உள்ளுக்கு… போ… முத்தையா….. கவலப் படாத..!’ ராமனின் நாக்கு தடுமாறியது….. முத்தையாவைப் போலவே அவனுக்கும் ஒரே வயது…..சமமாக நசுக்கப் படும் நிலை…..! சமமாகத் துயரப்படும் வாழ்க்கை…! அந்த ஏழை நண்பனின் ஈரலும் பிடுங்கப் பட்ட நிலையில்…. அந்த ரயில்வே கேட்டுக்கு வெளியே சிலையாக நின்றான்.
முத்தையா “கேட்’ வழியாக உள்ளே நுழைகிறான்…. ரயில் வந்து நிற்கிறது……. ‘பட்டாபரியா’ எழும்பிய கூட்டம் ‘குய்யோ முறையோ’ வென்று கூவியது. ஒரே புலம்பல். ஒரே குமுறல்…. ஒரே விம்மல்… கட்டியணைத்துப் பிரிய முடியாமல் பிரியும் அவலம்…
ஆனால்…. முத்தையாவுக்காக அழுவதற்கு அங்கு யாருமில்லை. அவன் தனித்துப் போய் விட்ட ஒரு நடைப் பிணம்….
கோச்சிப் பெட்டிக்குள் ஏறினான். ஜன்னல் ஒரமாய் உட்கார்ந்தான். பக்கத்தில் இரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். மனங் குழம்பி ஜீவனற்ற ஜடமாக எதையுமே புரிந்து கொள்ளும் திராணியற்றவனாக சமைந்திருந்தான் அவன்.
ரயில் நகர்ந்தது. கிரீச்சிட்டு கடகட….. சத்தம் ராமன் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு ‘கேட்’டிலே சாய்ந்தபடி நிற்கிறான். முத்தையா அவனையே பார்க்கறான். இருவரும் பரஸ்பரம் கைகளை அசைத்துக் கொள்ளவில்லை. வண்டி வேகத்தில் ‘திமிர்’ எடுத்தது……. சம தரை பாதையில் தடதடவென் கடூரமான ராகத்தை இசைத்து ஓடியது….. அந்த வண்டிச் சக்கரங்களின் ஒலம் அவனை வதைத்து அவன் வாழ்க்கையும் சக்கரமாகியதோ…?
கடைசி….. ஒரு தடவையாக…. ஜன்னலில் தலையை நீட்டி……. அவன் வேலை செய்த தொழிற்சாலையின் மின்சார வெளிச்சங்களைப் பார்க்கிறான்…
தொழிற்சாலையின் வெளிச்சம்….. ரயில் நிலையத்தில் பிரிவால் துடித்த பெண்களின் கூக்குரல்……. குட்டி நாயின் முனகல்…… எல்லாம் ஒன்று கூடி அவன் மூளையைச் சம்மட்டியால் சிதறடித்தன.
இருளின் அந்தகாரத்தில் அந்த இமிக்ரேசன் ஆப்பீசர்…..! பற்களை இளித்துக் கொண்டு முத்தையா முன்தோன்றி மறைந்தான்.
“அவங்கிட்ட உண்மையைத்தான் சொன்னேன்….. நான் புண்ணிய யாத்திரைக்குப் போய்ட்டு வந்தேன்னு……! இன்னைக்கு? என் வாழ்க்கையில.. ஒரு நீண்ட யாத்திர ஏற்பட்டுப் போச்சு….’ அவன் மீண்டும் வெதும்பினான்….
ரயில் வேகமாய் ஓடியது…. அவன் மீண்டும் ஜன்னல் வெளியே பார்த்தான்.
இரவு வானத்தில்….. வீசி எறியப்பட்ட பொரியாய் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தான். அவை கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
அவன்….. இப்படி நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று ஒரு போதும் நினைத்தது கிடையாது….. ஆனால்… இன்று இந்த இரவில் அவைகளை ஏன் அப்படி ரசித்துப் பார்க்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை.
மின்னி மின்னிச் சிரிக்கும் அந்த நட்சத்திரங்களிடையே அவனுடைய குட்டி நாய் சூட்டி புலம்பிக் கொண்டு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்க்கிறது! அதன் முனகல் அவனுள் எதிரொலிக்கிறது…. அந்த நேரம். அந்த இளம் பெண் ….. அவனருகில் அமர்ந்திருந்தவள்….. அவனை நெருங்கினாள்! அவளது உரசல்…. உடலின் கொதிப்பு….. ஸ்பரிசமாக….. முத்தையா திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். அந்தக் கணப்பொழுதில்…….அவன் லயித்துக் கிடந்த நினைவோட்டங்களெல்லாம் கலைந்து போயின…..
வண்டியின் கடூர ஓட்டம்……!
சக்கரங்களின் பேரொலி….!
சல்லடைக் காம்பிரா…!
மறுநாள் விடிந்தது. சூட்டி பழைய வீட்டுக்கே ஓடிவந்துவிட்டது. சேற்றில் புரண்டு நனைந்து….. அகோரமாகியிருந்தது. சின்னாயி சத்தமிட்டாள். சூட்டி பாசத்தோடு தன் சின்னப் பாதங்களை நீட்டி அவளின் மேல் தாவியது.
”சீ! ஓடு நாயே!” அவள் சீறினாள்…. சூட்டியின் முகம் வாடியது….. இஸ்தோப்புக்கு ஒடி வந்தது. அது படுக்கும் மூலையைத் தேடியது. அந்த மூலையில் கோழிக் குடாப்பு வைக்கப் பட்டிருந்தது.
சின்னாயி சூட்டியை விரட்டினாள்….. “தூத்தேறி ஓடு! தொலைஞ்சி!” அவள் அதட்டினாள்.
சூட்டி கோழிக் குடாப்பின் அருகே வந்து படுத்துக் கொண்டது. அதன் கண்கள் அகல விரிந்து முத்தையாவைத் தேடின.
முத்தையா ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று சூட்டிக்கு இன்னும் புரியவில்லை. காலைப் பொழுது உச்சியைத் தொட்டது. மலையிலிருந்தும் ஸ்டோரிலிருந்தும் பகல் சாப்பாட்டுக்காகத் தொழிலாளர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
சூட்டி இஸ்தோப்புத் திண்ணையிலிருந்தபடி றோட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆவல் நிறைந்த அதன் விழிகள் அகல் விரிந்திருந்தன…..
முத்தையாவின் சித்தப்பா வீட்டுக்கு வந்தார். சூட்டி அவரிடம் ஒடியது. அவர் பாதங்களை முகர்ந்து வாலை ஆட்டியது. அவர் கவலையோடு சூட்டியைப் பார்த்துவிட்டு போனார். சூட்டியின் முகம் வாடியது. அந்த முனகல் மனிதப் பாஷையில் தாளாத வேதனையின் அழுகையாகும்…
அன்றைய பொழுதும் சாய்ந்தது. இருளும் படர்ந்தது.
சூட்டி வாசலில் உட்கார்ந்து அந்த நெடுஞ்சாலையையே பார்த்துக் கொண்டிருந்தது.
முத்தையா இன்னும் வரவில்லை…!
– ஆங்கில தொகுதி: No state.. No dog, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.