நாஞ்சில் வீரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2025
பார்வையிட்டோர்: 128 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொதுஜனங்கள் மிகவும் வருந்துகிறேம். எங்களைக் கருணையில்லாமல் வலிய வரிகள் போட்டு நசுக்கக்கூடாது. ஏன் என்றால் எமலோகந்தான் கதியாயிருக்கிறது. 

அந்தக் காலம் நாஞ்சில்நாடு, வீரர் நாடாயிருந்தது. இந்தியச் சரித்திரத்தில் நாஞ்சில் நாட்டாரைப் போலக் கஷ்டப்பட்டவர்கள் இல்லை என்னலாம். திடீரென்று நாயக்கர் சேனை படையெடுக்கும். ஊர் கொள்ளையாகும். பிணம் குவியும். மாடு கன்றுகள் போய்விடும். பணம் காசெல்லாம் பகைவர் வழித்துக் கொண்டு போய் விடுவார்கள். முதிர்ந்த நெற் கதிர்களைக்கூட விடமாட்டார்கள். பொதுஜனங்கள் இரத்தக் கண்ணீர் விட்டுக் கதறுவார்கள். எந்தப் பகை வந்தாலும் இந்த நாட்டைப் பொட்டலடிக்காமற் போவதில்லை. இந்த நிலையில் வரிகள் அசாத்தியமா யிருந்தன. நாஞ்சில் வேளாளர் அடிக்கடி பொதுக் கூட்டங்கூடி கேரளாதிபதிக்கு மகஜர் அனுப்பினர். ஆத்திரத்தில் புரட்சியும் பண்ணினர். ஒன்றும் பலிக்கவில்லை. 

இராமவர்மனுக்குச் சரியாக எடுத்துரைப்பாரில்லை. ஏன்? வலிய சர்வாதிகாரி சங்கரனார் பயங்கரனார். அவர் தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பவர். சுய ஜனங்களைத் தாண்டி அவர் திருப் பார்வை செல்வதில்லை. அவர் திவானாய் விட்டால் சொல்ல வேண்டுமா? திவான் இராமவர்மாவை க்ஷேத் திராடனங்களுக்கும், குமரி முழுக்கிற்கும், முறை ஜபங்களுக்கும் அனுப்பி விட்டுத் தாம் சர்வாதிகாரம் செலுத்தத் தொடங்கினார். அவர் இட்டமே சட்டம். யாராவது மூச்சுவிட்டால் சிறை. 

நாஞ்சில்நாட்டின்மேல் அவருடைய திருவுளம் பலமாகச் சென்று வலுவரி விதித்து விட்டது. பஞ்சமும், பறிகொடுப்புமாயிருந்த ஜனங்கள் குய்யோ முறையோ என்று அலறினார்கள். இராமவர்மருக்கு ஓலை எழுதினார்கள். ஒலை போய்ச் சேர்ந்தால் தானே! ”எம்மைக் காக்க யாருமில்லையோ?” என்று பொது ஜனங்கள் கூட்டங்கூடிக் கூக்குரலிட்டனர் கூட்டத்தில் ஒருவன் எழுந்து நின்றான். 

வேலுத்தம்பி-வாட்ட சாட்டமான ஆள். இரும்புத் தசைகளும், நெருப்புப் பார்வையும், உருக்கு நெஞ்சமும் முறுக்கு மீசையும் கொண்ட நாஞ்சில் நாட்டுத் திருமேனி, “சகோதரர்களே! நான் உங்களைக் காக்கிறேன்” என்றான் வேலு. 

“எப்படி?”

“வழியுள்ளது” 

“என்ன வழி?’ 

“அஞ்சாமை. தைரியமாக என் பின்னே வரத் தயாராய் இருங்கள்”. 

“சரி” 

“உயிர் போனாலும் பயப்படாதீர்கள்”

“சரி” 

வேலுத்தம்பி ஜனங்கள் படுந் துயரத்தை விரி வாக எழுதி அரசருக்கு ஓலை அனுப்பினான். அது ஒற்றரைத் தாண்டிச் செல்லவில்லை. அச்சமயமே வரி வசூலுக்கு அதிகாரிகள் தடபுடலாக வந்து சேர்ந் தனர். வேலுவின் வரிப்பணம் நீண்ட நாட்களாகவே பாக்கியிருந்தது. அதிகாரி அவனைக்  காண்பதே முயற்கொம்புதான். 

இன்று அவனே அதிகாரிக்கு முன் தைரியமாக வந்தான். அதிகாரி வியப்புடன் பணம் கேட்டார். 

“ஐயா! நான் வரிதர முடியாது. செய்வதைச் செய்யும்” என்றான் வேலு! 

“சரி நீ கைதி; வா திருவாங்கூருக்கு”

“இதோ இப்படியே வருகிறேன்” 

விசாரணை தடபுடலாக நடந்தது. மகாராசா அப்போதுதான் விஷயத்தைக் கேட்டார். 

பலமான காவலில் வேலு சென்றான். 

நாஞ்சில்நாடு முழுதும் செல்வம் பொழிகிறது. பஞ்சமென்பதேயில்லை. எல்லாரும் ராஜ விசுவாசத்துடன் வணக்கமாக வரி செலுத்துகிறார்கள். “இந்தப் பயல் ஒருவனே திமிர்கொண்டு வரி மறுக்கிறான்” என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற முறையில் திவான் பதிலளித்தார். 

அரசரிடம் சென்றபிறகு வேலுவை நோக்கி “மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன் வரவேண்டுங் காணும். இன்றேல் தூக்கு மேடைதான்” என்று திவான் அவன் தலையெழுத்திற்கு ஒலை சீவி விட்டார் 

வேலு பயப்பட்டானா? “சமூகம் மூன்று நாள் தவணை தரவேண்டும். மூவாயிரத்திற்கு ஐயாயிரம் கொண்டு வருகிறேன்” என்றான். 

”சரி, வாக்குத் தவறினால் தலை போய்விடும். போம்” என்று வேலுவை ஜாமீனில் அனுப்பினார் திவான். 

மூன்று நாள் ஆனது. பொழுது விழுந்தது. “அவன் இன்னும் வரவில்லையா?” என்று திவான் உருமினார். 

“கோபம் வேண்டாம் துரையே! இதோ வந்து விட்டேன்” என்று வேலு முன் வந்தான்.

“கொண்டு வந்தீரா மூவாயிரம்?” 

“ஆமாம், துரையே! வாக்களித்தபடி ஐயாயிரம் கொண்டு வந்திருக்கிறேன்” 

“எங்கே?” 

“தாங்கள் பீடத்தை விட்டிறங்கி வந்தால்ப் பார்க்கலாம். இதோ தங்கள் பார்வைக்குக் கலகலவென்று ஐயாயிரம் தயார் செய்கிறேன்” என்று வேலு வெளியே சென்றான். 

திவான் எட்டிப் பார்த்தார்; கத்தியும், கம்புமாக ஒரு பெரிய சேனை சுற்றிலும் நின்றது. 

வேலுத்தம்பி வாக்களித்த படியே ஐயாயிரம் கொண்டு வந்தான். என்ன பணமா? இல்லை. ஐயாயி ரம் நாஞ்சில்நாட்டு வேளாளர் படைதான். 

வேலு “தைரியம், இதோ சுதந்திரம்” என்று ஆட்களை ஊக்கப்படுத்தினான். 

ஆட்கள் “அரசே! எங்கள் குறை தீர்க்கவேண் டும்” என்று அலறினார்கள். காவலர் திவானிடம் அலறி ஓடினார். திவான் இராமவர்மாவிடம் ஓடினார். அதற்குமுன்பே வேலுத்தம்பி ஜனவுரிமைப் பத்தி ரத்தை அங்கே நேராக அனுப்பிவிட்டான். இராம வர்மா பத்திரத்தைப் படித்தார். அதன் சுருக்கம் இதுவே. 

“பொது ஜனங்கள் மிகவும் வருந்துகிறோம்.எங் களைக் கருணையில்லாமல் வலிய வரிகள் போட்டு நசுக் கக்கூடாது. ஏன் என்றால் எமலோகந்தான் கதியாயி ருக்கிறது. இந்தத்திவானை உடனே வீட்டிற்கனுப்பி விடவேண்டும். எங்கள் வரியைக் குறைக்கவேண்டும். என்னைப் பொதுஜனப்பிரதிநிதியாக ஏற்கவேண்டும். இல்லாவிட்டால் கலகம் நடக்கும். உயிருக்கு நாங்கள் பயப்படவில்லை” 

இராமவர்மா மிகவும் கருணையுள்ள அரசர். நிரம்பப் படித்த வேதாந்தி. தம்மைப்போல மன்னு யிரை மதிப்பவர். ஜனங்கள் துயரை அவர் இன்றே அறிந்தார். உடனே அவர் உரிமைப்பத்திரத்தில் கையெழுத்திட்டார். புரட்சிக்கார வேலுவை நேச முடன் அழைத்தார். 

“ஐய! நீ கேட்பது நியாயமானது. உங்கள் துய ரத்தை எனக்கு அறிவிக்காமல் மூடு மந்திஞ் செய்த வரை இதோ நீக்கிவிட்டேன். வரி குறையும். உன் னைப்போன்ற தைரியசாலி எனக்கு வேண்டும். நீ நமது மந்திரி சபையிலிருந்து உனது வீரர்கள் எனது சேனாபலமாயிருக்கட்டும்” என்றார் 

வேலுத்தம்பிக்கு உச்சி குளிர்ந்து போயிற்று. “மகாராஜா, மகாராஜாதான். வாழ்த்துங்கள் நமது மன்னரை” என்றான். 

“ஜய கேரள வர்மா வாழ்கவே! என்று பொது ஜனங்கள் ஆவேசமாகப் பாடினார்கள். வேலுத்தம்பி வியாபார மந்திரியாகிப் படிப்படியாகச் சர்வாதிகாரி யாகிச் செய்த லீலைகள் வேறுகதை. 

ஆங்கிலச் சரித்திரத்தில் கிங்ஜான் ஜனவுரிமைப் பத்திரத்தை (மாக்னாகார்டா) அவமதித்து நாடிழந் ததை நாம் அறிவோம். ஜனவுரிமையை நன்குமதித்து நாடாண்ட இராமவர்மனைப் பற்றி நாம் பெருமை கொள்ளவேண்டும். அத்துடன் நாஞ்சில்நாட்டார்நெஞ் சுரத்தையும் மெச்சவேண்டும். நாஞ்சில் வீரம் வாழ்க! 

– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *