நாகூர் ஆண்டவர்




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெள்ளையன் செட்டியாருக்கு இருப்புக்கொள்ள வில்லை, வாழ்க்கையில் கசப்புத்தட்டியது.
புயல் தேவன் கோஷமும் அவருக்கு ஒரு வரவேற் பாகவே இருந்தது.

அப்பொழுது அந்த முஸ்லிம் கிழவன் நாகூர் ஆண்டவன் மீது பாடிக்கொண்டு அவரை நம்பும்படி மன்றாடினான்.
வெள்ளையன் செட்டியார் இடத்தை விட்டு எழுந் திருந்தார், திரும்ப உட்கார்ந்தார். மறுபடி எருந்திருந்தார். திரும்ப உட்கார்ந்தார். மறுபடி எழுந்திருந்தார். சற்றுக் குறுக்கும் நெடுக்குமாக உலாவினார். கடற்காற்றுச் சூழ்ந்த கப்பலில் இருந்தும்கூட சித்திரை வெயிலில் வேஷ்டியால் விசிறிக்கொள்வது போல் மேல் துண்டால் விசிறிக்கொண்டார்.
ஒன்றும் நிலைகொள்ளவில்லை. அறையை விட்டு வெளியேறி வந்து ஆகாயத்தைப் பார்த்தார். படுக்கையை விட்டு வர மனமற்ற ராணியைப்போல் உடலசையப் புரண்டுகொண் டிருந்த கடலைப் பார்த்தார். அவ்வளவு காலமாக வசித்துவந்து, இப்பொழுது விடப்போகும் அந்த நகரத்தைப் பார்த்தார். நெஞ்சம் குமுறிக் குமுறிப் பொங்கிற்று. நெற்றியிலிருந்த விபூதியை வலது கையால் அழித்துக்கொண்டே, ‘களவாணிப்பயல்கள், தூ!’ என்று நகரத்தை நோக்கிக் காரி உமிழ்ந்தார்.
செட்டியார் செய்ததை ஒரு மாலுமி பார்த்துக் கொண்டிருந்தது அவருக்குத் தெரியாது.
“ஏன் முதலாளி கோபம்?” என்றான் அவன்.
“சாமி இருக்கென்று நம்பறீஹளா?” என்றார் செட்டியார்.
மாலுமி கைகூப்பி மார்பு வரை உயர்த்தி ஆகாயத் தைப் பார்த்துக்கொண்டே, ‘நல்ல கேள்வி கேட்கறீங் களே?” என்று பரிதாபப்பட்டுச் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீஹ?”
மாலுமி பதில் சொல்வதற்குள் கப்பித்தான் கூப்பிடுவதாகச் செய்தி வந்துவிட்டது. விழுந்தடித்து ஓடிப் போய்விட்டான்.
“இம்புட்டுக்கும் நான் ஒன்றும் அக்கிரமம் செய்ய வில்லை. பர்மாக்காரன் ஒவ்வொருவனையும் தனித்தனி யாகக் கேட்டால் சொல்லுவான். ஆனால் நடந்தது மாத்திரம் இப்படிப் பெரிய எளவாய்ப் போச்சு” என்று தமக்குத்தாமே பேசிக்கொண்டார். ஆத்திரம் தீரவில்லை. கரைப்பக்கம் மறுபடி காரித் துப்பிவிட்டு, அலங்க மலங்க விழித்துககொண்டு நின்றார்.
ஐந்து நிமிஷத்திற்குள் கப்பல் கிளம்பிவிட்டது. செட்டியார் திரும்பி வந்து தம் இடத்தில் அமர்ந்தார். பொழுது போக்குக்காகப் பிரயாணிகள் ஏதேதோ பேசிக் கொண் டிருந்தார்கள். செட்டியார் அதில் கலந்து கொள்ளவே இல்லை. சற்று நேரத்திற்குப் பிறகு பேச்சு, பர்மியர் கலகத்தைப்பற்றிச் சென்றது. அங்கிருந்தவர்கள் அனேகமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளாக இருந்தபடியால், முதலாளித் தத்வத்தைச் சரியாக ஆதரித்துப் பேச ஆட்களே இல்லை. யாரோ ஒரு பிரயாணி சொன்னான்:
“பணம் குட்டிபோடுமா என்கிறார்களே, நன்றாய்ப் போடும். குட்டிமாத்திரமல்ல. தாயைப்போலவே அல் வளவு பெரிய குட்டியல்லவா போடுகிறது! அசல் ரூபாய் நூற்றுக்கு வட்டி ரூபாய் நூறு குட்டி. ஆனால் இந்த மருத்துவச்சி வித்தை நகரத்தாருக்குத்தான் தெரியும். ஏன் முதலாளி, அப்படித்தானே?”
செட்டியாருடைய பதில் வரவில்லை. பின்னொரு பிரயாணி தானாகக் குறுக்கிட்டான்.
“எது இருந்தாலும் அக்கிரமக் காசு விளங்காது. இதோ கண்ணுக்கெதிர்த்தாற்போல் பாருங்களேன். பர்மாவில் செட்டிகளை அடி வைக்கப்படாது என்கிறான் பர்மாக்காரன். வட்டி வட்டியாகக் கடனைத் திருப்பிக் கொடுக்கும்பொழுது ரொம்ப நல்லவனுக்குக்கூட உள்ளூறப் புகைச்சல் கிளம்பிவிடும். மனிதன் வயிற் றெரிச்சல் சும்மாப் போவதில்லை.’
சேட்டியாருக்கு இப்பேச்சுக்கள் வேம்பாயிருந்தன. மனவேதனை தாங்கவில்லை. இளமையில் பழகிய வழக்கம் ஒன்று திடீரென்று ஞாபகம் வந்தது. இடத்தை விட்டுக் கிளம்பி நேரே ஸ்டோருக்குச் சென்று ஒரு பெட்டி சிகரெட்டுடன் திரும்பி வந்து தம் ஆத்திரத்தை யெல்லாம் புகைவிடுவதில் திருப்பினார். வெகு சீக்கிரத்தில் அது ஒழிந்துவிட்டது ஆத்திரமல்ல. சிகரெட். அடுத்தாற்போல் செய்யத் தோன்றிய காரியம் வெற்றிலை மெல்வது. இவைகளினாலெல்லாம் மனக் குரங்கைத் தளையிடுவதென்றால் உலகில் இவ்வளவு தொல்லையேது? எனவே மற்றொரு சிகரெட்டைக் கொளுத்திக்கொண்டு மேல்தட்டிற்கு வந்து ஒரு பெரிய கயிற்றுக்கட்டிலின்மேல் உட்கார்ந்தார். கண் பாட்டுக்குக் கடற் பறவைவைப் போல் வானத்தைத் துழாவிக்கொண் டிருந்தது.
எப்படியோ ஒரு பதினைந்து நிமிஷம் ஊர்ந்தது. விமோசனம் ஏற்பட்டது. பழைய மாலுமி சீட்டி அடித்துக்கொண்டே வந்தான்.
செட்டியாரைப் பார்த்ததும், “ஐயா இங்கெல்லாம் குந்தக்கூடாது. போன மாசம் எசகேடாக ஒரு மனிதன் போய்விட்டான். அப்பொழுதே பிடித்து இந்த உத்தரவு. இல்லாவிட்டால் எனக்கென்ன?” என்றான்.
“போனவன் பாடு ரொம்ப மேல்” என்று சொல்லிக் கொண்டே செட்டியார் ஒரு சிகரெட்டை நீட்டியதும் மாலுமி கீழே உட்கார்ந்துவிட்டான்.
“ஏன் முதலாளி மனம் இவ்வளவு பேஜாராகப் போய்விட்டது? கடவுள் மேலே பாரத்தைப் போடுங்கள்’ என்று மூக்கால் வரும் புகையுடன் பேச்சைக் கலந்தான் மாலுமி.
“பிச்சைக்காரன் குரங்கைப் பறிகொடுத்தால் அவ னுக்குப் பிழைப்பு ஏதையா?’
“ஏதோ ஆண்டவன் திருவிளையாடல் என்று எண்ண வேண்டியதுதான்.”
“ஆண்டவன் ஆண்டவன் என்று சொல்கிறவர்களுக் கெல்லாம் கண் ‘சுமார்’ என்று நினைக்கிறேன்.”
“ஏனோ?”
“அவருக்கே கண் ‘சுமாராய்’ இருக்கும்பொழுது?”
“முதலாளியின் பேச்சைப் பார்த்தால் மனம் உடைந்து கிடக்காப் போலல்ல தோணுது; எதுவாகிலும் பெருத்த நஷ்டம் கிஷ்ட்டம் ஆகிவிட்டதோ?’
“சொல்லப் போனால் இருபத்து நாலுக்கு மேலே வட்டி வாங்கினதே இல்லை. அடகு வைத்த நகையை மாற்றியதில்லை; மறைத்ததில்லை. நினைத்திருந்தால் லக்ஷம் லக்ஷமாகச் சேர்த்திருப்பேன்.”
“என் வயதிலே எவ்வளவோ பார்த்துவிட்டேன். அக்கிரமக் காசு ஒரு நாளும் துலங்காது.”
“ஒரு பர்மாக்காரனுக்குக் கடன் கொடுத்திருந்தேன். அறுவடை ஆன பிறகு அவன் வீட்டுக்குப் போய்ப் பணம் கேட்டேன். அப்பொழுது வண்ணாத்திப் பூச்சி மாதிரி பக்கத்தில் அவன் வைப்பாட்டி அழகாய் உட்கார்ந்திருந் தாள்.” அந்த அலமாரியில் பணம் இருக்குது. எடுத்துக் ‘கொள்’ என்றான்.
“கணக்கு?” என்றேன்.
“நீங்களே அலமாரியிலிருந்து கணக்குப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.நீர் சாமிக்குப் பயப்படக்கூடிய பேர்வழி. கணக்கில் பிசகு சொல்லமாடீர்.”
“நானாக எடுக்கலாமா?”
”செட்டியாரே! நீங்களே எடுத்துக்கொள்ளா விட்டால் பணம் இந்தக் கையால் தரமாட்டேன். நான் ஆள் நிதானம் தெரியாத மடையன் என்ற யோசனையா?”
“பெட்டியைத் திறந்தேன், பத்தாயிரத்திற்குமேல் நோட்டுகள் இருந்தன. என் கணக்குப்படி வட்டியுள்படப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆயிரம் பாக்கி என்றாலும் அவனுக்குத் தெரியப் போவதில்லை. படுசோம் பேறி பர்மாக்காரன்!… இவ்வளவெல்லாம் யோக்கியமா யிருந்துங்கூட எனக்குத் தொல்லை வந்துவிட்டது. இந்தக் கையில் இருக்கும் ஐந்து வைர மோதிரமும், செரம் பாங்கில் எழுபத்து ஐந்து ஏக்கர் நிலமும், கையில் ரொக்கம் ரூபாய் 1000-ம் பாக்கி. ஓர் இரவு கொள்ளை போய்விட்டது; பாக்கி,தஸ்தாவேஜி, பணம் எல்லாம்.. எவனாவது செட்டி பொல்லாதவனாயிருந்தால் நான் கூட ஜவாப் ஆகவேண்டி இருக்கிறது! பர்மா, பர்மாக்கார னுக்குத்தான் சொந்தமாம்!…”
“ஒருவன் கெட்டவனாயிருந்தால் ஊருக்கே, ஜாதிக்கே பட்டம் கட்டிவிடுகிறது மூட ஜனங்கள்!”
“அதெல்லாம் என்ன பேச்சு?- முட்டாள் சாமி என்று சொல்லு, சொத்தெல்லாம் போய்விட்டால் உயிர் இருந்து லாபம்?”
இப்படிப் பேச்சும், சிகரெட்டும் செலவழிந்ததே யன்றி ஒருவரும் மற்றவர் கட்சியை ஏற்பதாய்க் காணோம். மாலுமி, “வருகிறேன்” என்று கிளம்பினான். செட்டி யாரும் மேல்தட்டை விட்டுக் கீழே இறங்கி வந்தார்.
எப்பொழுதும்போல் பிரயாணிகள் ‘சளபுள்’ வென்று பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்கள் சம்பா ஷணையில் கலக்க ஏராளமான வசதி தந்தும்கூட அதில் கலக்காத ஒரு ஜீவனைப்பற்றி ஏன் அவர்கள் அவரும் பிக்கைப் படக்கூடாது? ஆனால் தன்னைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களென்று எண்ணச் செட்டியார் மனத்தில் இடமே இல்லை. செட்டியார் மனம் ஈடுபட்டிருந்த விஷயம் – கருணையங்கடவுளின் திருவிளையாட லால் ஏற்பட்ட நஷ்டம்!
அன்று பகலும் இரவும் எப்படியோ கழிந்தன. மறு நாள் காலையில் எழுந்து கப்பலின் மேல்தட்டிலிருந்து சுற்று முற்றும் செட்டியார் பார்த்துக்கொண் டிருந்தார். அலைகளில் ஒரு பேயொளி குடிகொண் டிருந்தது. ஒரு விஷயம் பிரயாணிகளின் காதில் விழுந்தது; இருபத்து நான்கு மணிக்குள் கப்பல் புயல்வாய்ப் படுமென்று. என்ன காரணத்தாலோ அவ்விஷயம் செட்டியாருக்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்தது.
அடுத்த நாள் காலை செட்டியார் விழித்தெழக் கொஞ்ச நேரம் சென்றது, பிரயாணிகளின் கூக்குரலும், செவிடுபடும் ஓசைகளும், கடும் புயலைக் காட்டின. கப்பல் பலகணி வழியாய்ப் பார்த்தார். வானமும், கடலும் ஒன்றாகிவிட்டன. பித்தர்களைப் போன்று காற்று உச்சக் குரலில் உளறிக்கொண் டிருந்தது. செட்டியார் புயலைப் பொருட்படுத்தவில்லை. தான் விரும்பியது கிடைத்தது போன்ற உற்சாகத்தை அடைந்தார்.
நேரம் ஆயிற்று. புயல் வலுத்தது. காற்று, கசையடி போல் விழுந்தது. மழை, கப்பலை அறைந்தது. கண்ணாடி மதில் சுவர்கள்போல் அலைகள் எழுந்து சரிந்தன. ஆயிரம் வஸுக்களின் அடங்காத போர்க்கோலம்! கப்பல் தத்தளித்துக்கொண்டிருந்தது.
நிமிஷத்திற்கு நிமிஷம் கவலைக்கு இடமாயிற்று கறுப்பு உடலில் பட்ட வெட்டுக் காயம்போல் மைக்கரி யான வானத்தின் புகைப்படலத்தில் கப்பலின் சிவப்புக் கொடி பறந்துகொண் டிருந்தது.
பிரயாணிகள் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்தனர். செட்டியார் மட்டும் கவலையின்றிப் புகை விட்டுக்கொண் டிருந்தார். அது பிரயாணிகளுக்கு இன்னும் அருவருப்பைத் தந்தது. ஜனங்களின் கலவரம் உச்சநிலையை அடைந்தபொழுது சொல்லிவைத்தாற்போல் எல்லோரும் கப்பித்தான் அறையை நோக்கிக் கிளம்பினார்கள். செட்டியார் தமாஷைப் பார்க்கப் போவதுபோல் கூடவே சென்றார்.
கப்பித்தான் தன் தோழர்களுடன் முடிவுகட்டிப் பேசிக்கொண் டிருந்தான். ஏசு அழைத்தால் நமக்கேன் துயரம்? நமது கடமையை நெறிதவறாது நடத்திய திருப்தியே நமக்கு ஊன்றுகோல். புயல் நம்மை விட்டுச் சென்றாலும், நாம் புயலை விட்டுச் சென்றாலும், மகிழ்ச்சியே அடைவோம். ஏசு வெல்க.”
பேச்சின் முடிவில் ஒரு மாலுமி, “ஆஹா! அப்படி யென்றால் கறுப்புச் சட்டைகளையும், விஸ்கி பீப்பாவை யும் எடுத்துக்கொண்டு வா?” என்றான்.
“கடைசி விருந்துக்கா?… நல்லது” என்றான் கப்பித்தான். இரண்டு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு கறுப்புச் சட்டைகளும், ஒரு விஸ்கி பீப்பாயும் வந்து சேர்ந்தன. உடனே கறுப்பு உடை தரித்துச் சாப்பாட்டு மேஜையின் இருபுறமும் அவர்கள் அமர்ந்தனர். அரை மணி நேரத்திற்குள் ஆட்டமும் பாட்டும் தொடங்கின. கப்பித்தான் மட்டும் நிலைதவறாத் தெளிவுடன் இருந்தான்.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்த பிரயாணிகள் திரும்பிக் கப்பலின் மேல்தட்டில் கூடினர். அவர்கள் திகைப்பு அதிகப்பட்டது. ஒரு கிழவன் கேட்டான்:
“எதற்காக அவர்கள் கறுப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு விஸ்கி குடிக்கிறார்கள் தெரியுமா?’
ஒருவரும் பதில் பேசவில்லை. கிழவனே பதிலும் சொன்னான்.
“இப்படியே கப்பல் மூழ்கி உயிர்போனாலுங்கூட அவர்களுக்குத் துன்பம் தெரியாமல் இருக்க.’
ஒரு நிசப்தம். மறுபடி கிழவன், “நாம் அவர்களைப் போல் செய்யமுடியாது, செய்யவும் படாது. நாம் பிழைப் பதற்கு ஒரே வழிதான் உண்டு” என்றான்.
நாகூர் ஆண்டவர்
“என்ன என்ன?….சொல்லு” என்றனர் பிரயாணிகள். மூப்பில் நடுங்கும் குரலில் கிழவன் பாட ஆரம்பித்துவிட்டான்.
‘ஆழ்ந்த கடலோரத்தில்
அமர்ந்திருக்கும் நாகூர் மீரான்!
நம்பினோரைக் கைவிடாத
நாகூர் ஆண்டவா!-
கடலில் உடைந்த கப்பல் கண்ட
துண்டமாய்ப் போனாலும்
காதலித்துக் கரை சேர்த்திடுவாய்
காதர் அலியே!
எங்கள் ஆண்டவரே!
எங்கள் ஆண்டவரே!
ஏழைக் கிரங்க வேணும்
ஏழை முகம் பார்க்கவேணும்
எளியோர் வீட்டு மணிவிளக்கே
நாகூர் ஆண்டவா!
எங்கள் ஆண்டவரே!
எங்கள் ஆண்டவரே!
நாகூர் ஆண்டவராலன்றி நாம் மீள மாட்டோம். அதற்காக அவரவர்கள் ஆண்டவனை வணங்கிக் காணிக்கை செலுத்தி உயிர்ப்பிச்சை கேளுங்கள்” என்று சொன்னதோடு நிற்காமல், தன் கையிலிருந்த ஒரு கிளாவர் மோதிரத்தைக் கழட்டிப் போட்டான். சருகில் தீப்பிடித்ததுபோல் அவனுடைய பேச்சு ஏற்றுக்கொள் ளப்பட்டது. இரண்டொரு நிமிஷத்திற்குள் பிரயாணிகள் ஒவ்வொருவரும் ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்தி விட்டார்கள். பொன், வெள்ளி, நகை, பணம், அசல், பவழக்கொடி இன்னம் எவ்வளவோ!
கிழவனுடைய பருந்துப் பார்வைக்குச் செட்டியார் காணிக்கை செலுத்தாமல் சும்மா இருந்தது தெரிந்தது.
“ஏன் முதலாளி நீங்கள் மட்டும் பிழைக்க வேண் டாமா?”
“பிழைத்து ஒரு காரியமும் இல்லை!”
“உங்களுக்குக் காரியமில்லையென்றால் அதற்காக எங்களையும் சாகச் சொல்கிறீரா? பேசாமல் நாகூர் ஆண்டவரை நினைத்துக்கொண்டு ஏதாவது போடுங்கள்.”
“போதும் கிழவனாரே! சாமியுமாச்சு, பூதமு மாச்சு!… யோக்கியமாய் இருப்பவன்களையெல்லாம் ஆண்டவன் ரொம்பக் காப்பாற்றிவிட்டார்! இப்பொழுது கப்பலைக் காப்பாற்றப் போகிறார்! நாகூர்ச் சல்லிகூடத் தரமாட்டேன்.”
கிழவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“என்னய்யா நாஸ்திகம் படிக்கிறாய், நகரத்தானா யிருந்து.நேற்று அந்த மாலுமி கிட்டே ஒரு கெட்டவன் இருந்தால்கூட நல்லவன் தலையில் வந்து வெடியுது என்று தத்வம் பேசினீரே. இப்பொழுது உன் நாஸ்திகத்திற்காக நாங்கள் புசலில் சாகவேண்டும்போல் இருக்கு!”
கப்பல் பிரயாணிகளுடைய கண்கள் செட்டியாரைக் குற்றம் சாட்டியபடியே இருந்தன. செட்டி ஒருவனுடைய நாஸ்திகத்தாலும், தாமதத்தாலும் தங்கள் உயிர் தப்ப மிஞ்சிய ஒரு வழியும் இல்லாமல் போய்க்கொண் டிருக்கிறதே என்ற திகில். பிரயாணிகளின் கலவரத்தைக் கண்ட செட்டியாரின் உள்ளத்தில் சகிக்கொணாத அலுப்பு எழுந்தது.
‘கிழவனாரே! பர்மாவுக்கு வந்ததில் ரொம்பக் கஷ்டப் பட்டுவிட்டேன். கையில் இருப்பதையும் இங்கே இழந்து போகிறேன்!சம்மதமா உங்களுக்கு!’
கிழவன் நெஞ்சம் இளகிவிட்டது.
”பணம், கொடுக்கல் வாங்கல், சொத்து சுதந்திரம் இதுகளிலெல்லாம் ஆண்டவனுக்கு என்னய்யா சம்பந்தம்? மனிதன் செய்கிற தில்லுமுல்லுக்கெல்லாம் ஆண் டவன் ஜவாப்தாரி யாக முடியுமா? அதற்கென்ன? பொய் சொல்வதற்குக்கூடத்தான் ஆண்டவனை அழைக்கிறார்கள். இதை வேண்டுமென்றால் பாருங்கள். இந்தக் கப்பலை ஆண்டவன் காப்பாற்றுகிறானா இல்லையாவென்று? அதற்கப்புறம் உங்க பேச்சுக்கூட மாறிப்போகும். காசு. பணம் எல்லாம் இப்படித்தான் ஓடிக்கொண்டே இருக்கும். பள்ளம் மோடாகும்; மேடு பள்ளமாகும். ஆண்டவன் தானய்யா கூடாமல் குறையாமல் இருப் பான். ஆண்டவனை நம்பி முந்தாணியில் போடு.”
“நான் போனால்தான் வருத்தம் இல்லை யென்கிறேனே.”
“செட்டியாரே! கோவிக்கப்படாது, என் பேச்சைக் கேட்டு, நீங்கள் காணிக்கை செலுத்தாவிட்டால் நாங் கள் பிழைக்க முடியாது. ஆனால் எங்களுக்கோ உங்களைப் போல் போக இஷ்டமில்லை. என்ன செய்யலாம், சொல்லுங்கள்?”
செட்டியாருடைய தெய்வபக்தி வளர்ந்துவிட வில்லை; காணிக்கை செலுத்தாத அளவுக்கு உறுதியும் வளர்ந்து விடவில்லை. கிழவனுடைய நம்பிக்கை மீதும் ஓர் பரிவு தோன்றியது. இந்த முட்டாள்களைத் திருப்தி செய்விக்க வேனும் இருக்கட்டும் என்று இருபது ரூபாயை எடுத்து முந்தாணியில் போட்டார்.
“நாகூர் ஆண்டவர் பேரால் என்று சொல்லுங்கள். சொல்லுங்கள்” என்று கிழவன் வற்புறுத்தினான்.
“அதெல்லாம் முடியாது. உங்கள் சள்ளைக்காகக் கொடுக்கிறேன். சாமி பூதத்திலெல்லாம் இருந்த நம்பிக்கை மலையேறிப் போய்விட்டது.
“உன் வாயால் சொல்லய்யா. மனத்தில் நம்பிக்கை பிறகு தானாய் வரும் பாரேன்..சொல்லய்யா ஆண்டவன் பேரால்” என்று கிழவன் முரண்டினான்.
ஒரு நிமிஷம் மௌனம். ”எனக்காகவேனும் சொல்லித் தொலையேன் ஐயா” என்று கூவினான் கிழவன். ஆண்டவன் பேரால்’ என்று மொண மொணத் தார் செட்டியார்.
இப்பொழுது பாருங்கள், ஆண்டவன் அருளை” என்று சொல்லிவிட்டுக் கிழவன் துணியைச் சுருட்டி மூட்டை கட்டினான்.
“ஏழைக் கிரங்க வேணும்,
ஏழை மனம் பார்க்க வேணும்.”
என்று பாடிக்கொண்டே அந்த முடிச்சுக்கு அரக்குச் சீல் வைத்தான்.
ஹும். பாட்டை என்னோடு முறை வைத்துச் சொல்லுங்கள்” என்று பாட்டைத் திரும்ப ஆரம்பித் தான்.
நாகூர் ஆண்டவர் பாட்டு, தொண்டை கம்மும் வரையில் முறை வைக்கப்பட்டது…
மறுநாள் அதிகாலை சூரியன் வானவெளியில் முதல் ஈட்டியைப் பாய்ச்சிக்கொண் டிருந்தான். கிழவன் எழுந்து செட்டியாரை எழுப்பினான். “அதோ பார் சூரியனை! ஆண்டவன் அருள்!”
வெள்ளையன் செட்டியார் எழுந்து கப்பலின் மேல் தட்டிற்கு வந்து வியப்புடன் சுற்றிப் பார்த்தார். புயலின் சுவடே தெரியவில்லை. அலைகளின் ஆவேசம் அடங்கி விட்டது. இனிமையான காலைக் காற்று வீசிக்கொண் டிருந்தது. எங்கும் அமைதி.
செட்டியாரின் மனம் நெகிழ்ந்தது. தன் விபூதியை எடுத்துப் பலமாய் நெற்றி, உடலெங்கும் பூசிக்கொண் டார். “ஆண்டவனே! உன் அருள் வரட்டும்’ என்று சொல்லிக்கொண்டே இளஞ் சூரியனைப் பார்த்து வணங் கினார்… ஆழ்ந்த கடலோரத்தில் அமர்ந்திருக்கும் நாகூர் மீரான்!” என்று பல குரல்கள், கப்பலின் சங் கொலியையும், கடலலையின் கோஷத்தையும் மீறிக் கிளம்பின. கப்பல் கிளம்பிற்று.
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |