நாகலக்ஷ்மி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 4,496
(1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
I
சந்திரசேகரன் தனது நிலைமையைப்பற்றி மிகவும் கவலைப் பட்டான். அவன் பள்ளிக்கூட லீவுக்காக ஊருக்கு வந்திருந்தான். தந்தை பணம் அனுப்புவார் என்ற தைரியத்தில், பள்ளிக் கூடத்தில், பணம் கடன் வாங்கிச் செலவழித்திருக்கான். அடிக்கடி கடிதம் போட்டும், அவன் தந்தை பணம் அனுப்பவேயில்லை. கடன் கொடுத்த அவன் சினேகிதர்களும் பிறரும் கடனுக்குத் தொந்தரை செய்தார்கள். அதனால் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் லீவு விட இரண்டு நாள் முன்னாலேயே ஊருக்கு வந்துவிட்டான். வந்து தந்தையைக் கேட்டதில் கையில் பணம் இல்லை யென்றும், அதனால்தான் அப்போது பணம் அனுப்பவில்லையென்றும் சொன்னார். கொடுக்கவேண்டியவர்களுக்கு பணத்தை மணியார்டர் செய்ய வேண்டுமென்று சொன்னதில், அவர் நாளைக்கு, அப்புறம் என்று சாக்குப்போக்குச் சொல்லி வந்தார். பணம் கடன் கொடுத்து உதவின நண்பர்கள் கடிதம் எழுதத் தலைப்பட்டார்கள். சீக்கிரம் பணத்தை அனுப்பி விடுவதாக அவர்களுக்குக் கடிதம் எழுதி, சந்திரசேகான் தந்தையைப் பணத்துக்குத் தொந்தரை செய்யலானான. அவரோ தன் இளையாளுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர், உலக இயற்கையை அனுஸரித்து இளையாளும் தாயிழந்த சந்திரசேகரனிடம் வெறுப்புள்ளவளாக இருந்தாள். அவள் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொன்னால், சந்திரசேகானுக்குப் பணக் கஷ்டம் ஒரு சிறிதுமிராது. தன் பிறந்தகத்திலாவது, தன் புக்ககத்து வம்சத்திலாவது, வேறெவரும் இங்கிலீஷ் படிக்காமலிருக்க சந்திரசேகான் மாத்திரம் படிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவள் இடைவிடாது தன் புருஷனுக்கு உபதேசம் செய்து, அவன் படிப்பை நிறுத்த முயன்றாள். அதனால் தான் அவர் நாலைந்து மாஸமாக சந்திரசேகானுக்குப் பணம் அனுப்பாமவிருந்து வந்தார்.
அவருக்குக் கையில் பணமில்லை யென்பதில்லை. கடன் கிடைக்கா தென்பதுமில்லை. சந்திரசேகரன் வந்த இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் அவர் தமது மனைவிக்கு ஐம்பது ரூபாயில் ஒரு புடவை வாங்கிக் கொடுத்திருந்தார்.
மறுபடி ஒரு வாரத்துக்கெல்லாம் கடன் வாங்கி தமது பெண்ணுக்கு – இளையாள் வயிற்றில் பிறந்தது- காப்பு செய்து போட்டார். இளையாள் ஸௌகரியத்துக்காக வேறு பல விதத்தில் அவர் செலவு செய்தவை சந்திரசேகானுக்கு நன்கு தெரியும். இவை யெல்லாவற்றையும் கண்ட சந்திரசேகரன் ஒரு நாள் தன் தந்தையிடம் பணத்தைப்பற்றிக் கண்டித்துக்கேட்டான்.
தந்தை :- “நீ கண்டபடி செலவழித்துக் கடன் பட்டு வந்தால், அதற்கெல்லாம் நான் பாத்தியப்பட முடியுமா? நூற்றி ருபத்தைந்து ரூபாய் கடன் ஏற்படுவானேன்? நீ பிரபு வீட்டுப் பிள்ளை போல் நாடகத்துக்கும் கூத்துக்கும் போய், காப்பி ஹோட்டலை ஒழித்துக்கொண்டிருந்தால், நீ படிக்கிறா யென்று நான் பணம் கொடுத்துக் கொண்டேயிருக்க முடியுமா?”
சந்திர :- “நான் தான் கணக்கு வைத்திருக்கிறேனே, அதைப்பாருங்களேன். நான் அக்கிரமச் செலவு செய்தேனா அல்லது நியாயச்செலவு செய்தேனா என்பது தெரிகிறது.”
தந்தை :-“உன் கணக்கெல்லாம் எனக்கு தேவையில்லை. எனக்குக்கடன் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. வெள்ளனூர் கோபாலசாமி ஐயருக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்கவேண்டும். இன்னும் இரண்டு நாளில் அவர் வந்து விடுவார். அதற்கென்ன செய்கிறதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன். நீ நடுவில் தொந்தரை செய்கிறாய்.”
சந்திர :- “நீங்கள் அனுப்புவீர்கள் என்ற நம்பிக்சையி லல்லவோ கான் கடன் வாங்கினேன்?”
தந்தை :- “அதற்காக நான் என்ன செய்யட்டும்?”
சந்திர :- “அப்போதே பணம் அனுப்பமுடியாதென்றால், நான் படிப்பை நிறுத்திவிட்டு ஊர்வந்திருப்பேனல்லவா?”
தந்தை:- “இப்போது தான் என்ன. படிப்பை நிறுத்திவிடு”
சந்திர :- “இனிபடிப்பு கிடையாது தான். இதுவரையில் பட்ட கடனுக்கு கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து விட வேண்டாமா?”
தந்தை:- “அதெல்லாம் எனக்குத் தெரியாது. உனக்காக, தொலைகிறது, ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன். அதுவும் இந்த மாஸக் கடைசியில் தான்!”
சந்திரசேகான் இனித் தன் தந்தையுடன் போராடுவதில் பயனில்லை யென்று கண்டு, தனது மாமனாரைப் பண உதவி கேட்க எண்ணி அவரூருக்குப் போனான்.
அவனுக்குக் கல்யாணமாகி ஒன்றரைவருஷமாகிறது. மாமனர் பணக்காரால்லர். பெரிய குடும்பி. அவருக்கு திடீரென்று நூற்றைம்பது இரு நூறு கிடைப்பது அரிது. மேலும் கல்யாணம் முதலிய செலவில் பட்ட கடன் இன்னும் அடைபடாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் பண உதவி செய்ய மறுத்து விட்டார். அவர் அதனோகி நின்றிருக்கலாம். கால வித்தியாசத்தால், பையன் நிர்க்கதியாக இருப்பதைக் கண்டு மனமிரங்கவேண்டியது போய், அவனை உதாவீனமாகப் பேசி விட்டார். அதனால் சந்திரசேகரன் மனந்தளர்ந்து, தன் மாமனரிடத்திலும், சிறு பிள்ளையாதலால் தன் மனைவியிடத்திலும் வெறுப்பு கொண்டு, தனக்கு ஆபத்தில் உதவிசெய்யக்கூடியவர் எவரும் இல்லை யென்று கண்டு, இனிக் கண் காணாத் தேசத்தில் போய் வஸிக்கத் தீர்மானித்து விட்டான்.
ஆனால் பட்ட கடனைத் தீர்க்காமல் போக அவனுக்கு ஸம்மதமில்லை. அதனால் அவன், தான் வாசித்து வந்த தஞ்சை நகரம் போய், தான் அணிந்திருந்த கடுக்கன், வைாம்பதித்திருந்த மோதிரம் ஆகிய இரண்டையும் விற்று, கடன் கொடுத்து உதவின தன் நண்பர்களுக்குப் பணத்தை அனுப்பிவிட்டு, சென்னை நகரம் போய் அங்கிருந்து பம்பாய் போகத் தீர்மானித்தான். அவன் தஞ்சைக்குப் போனதும், அங்கிருந்து சென்னைக்குப் போனதும் அவன் தந்தைக்குத் தெரியாது. பையன் மாமனாருடைய வீட்டுக்குப் போயிருப்பதாக எண்ணியிருந்தார்.
அவன் தன் தந்தை வீடு போயிருப்பதாக மாமனார் வீட்டில் எண்ணியிருந்தார்கள். ஆகையால் அவன் பம்பாய் போவது யாருக்குமே தெரியாது. ஆயினும் புறப்பட்டு ஸென்டிரல் ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், தன் மாமனார் ஊர் வாஸியாகிய ராமசுப்பையர் என்பவரைக் காண நேர்ந்தது. மனம் நொந்து போயிருந்த அவன் அவரைக் கண்டதும், தன் மனக்குறைகளை யெல்லாம் சொல்லி இனி எவர் முகத்திலும் விழிக்காமல் பம்பாய் போய் அங்கேயே வசிப்பதாய்த் தீர்மானித் திருப்பதாகவும், அதற்காக இரவு மெயிலில் ஏறிப்போவதாகவும் தெரிவித்தான். ராம சுப்பையர் அவனுக்குப் பல விதத்திலும் புத்திமதி சொல்லிப் பார்த்தார். ஒன்றும் அவன் காதில் ஏறவில்லை. அவரும் அன்றிரவே தமதூருக்குப் புறப்பட்டார்.
II
ராமசுப்பையர் சென்னையை விட்டுப்புறப்பட்டு, சிதம்பரம் போய் அங்கிருந்து தமதூருக்குப் போனார். போகும் வழியில் சென்னை வடமேற்கு ரெயில் பாதையில் வயலூருக்கு அருகாமையல் பம்பாய் மெயில்வண்டி இன்னொரு வண்டியோடு மோதி நாசமடைந்ததென்று கேள்விப்பட்டார். உடனே அவருக்கு சந்திசேகரனுடைய ஞாபகம் வந்தது, “அவனும் பம்பாய் போவதாகச் சொன்னானே. அந்த வண்டியில் ஏறிப்போனானோ. என்னவோ ; அவன் போன தேதியில் தானே வண்டிக்கு ஆபத்து நேர்ந்தது. அவன் சதி என்ன ஆயிற்றே!” என்று அவர் கவலை கொண்டார். ஊருக்குப்போனால் தெரியும் என்று எண்ணி வழியில் எங்கும் தங்காமல் நேரே ஊருக்குப்போனார். ஊரில் ஏதோ ரெயில் வண்டிக்கு ஆபத்தென்றும், பல ஜனங்கள் சேதம் என்றும் தெரியுமேயொழிய, பூரா விவாம் ஒன்றும் தெரியாது. சந்திரசேகரன் பம்பாய் போன சேதி எவருக்கும் தெரியாதாதலால், அவன் மாமனார் கவலையற்றிருந்தார். ராமசுப்பையர் வந்து தகவலைச் சொன்ன பிறகு, சந்திரசேகரனது மாமனார் வீட்டில் பெருங்கவலை குடிகொண்டது. மாமனார் பக்கத்து ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி விசாரித்தார். அங்கு ஒன்றும் தெரியவில்லை. சென்னையிலிருந்து அவ்வூருக்கு வருகிற பத்திரிகைகளைப் பார்த்ததிலும் சந்திரசேகரனுடைய சேதி ஒன்றும் கிடைக்கவில்லை. பட்டணத்தில் தமக்குத் தெரிந்தவர்களுக்குத் தந்தி கொடுத்து விசாரித்தார். அதிலும் தகவல் கிடைக்கவில்லை. சந்திரசேரனுடைய மைத்துனன் சென்னையில் விசாரிப்பதற்காப் போனான். மறுநாள் வந்த பத்திரிகைளில் இறந்தவர்களின் தொகை உத்தேசமாகக் கொடுக்கப் பட்டிருந்தது. விவரந் தெரிந்தவர்களின் ஊர் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஜாப்தாவில் சந்திரசேகரன் பெயர் இல்லை. மைத்துனன் போனவன் இரண்டு நாள் கழித்துத் திரும்பி வந்தான். பிணங்களில் பல உருத் தெரியவில்லை யென்றும், தான் போய்ச் சேர்வதற்கு முன்னமேயே சில புதைக்கப்பட்டுப் போயின வென்றும், போட்டோபடம் பிடித்திருந்தவைகளைப் பார்த்ததில் ஒரு பிணம் சந்திரசேகரனுடையதைப் போலிருந்த தென்றும் சொன்னான். இதைக் கேட்டதும் யாவரும் துக்கப்படலானாகள். சிலர் சந்திரசேகரன் இறந்துபோனதாகவே எண்ணினார்கள். சிலர் அவன் தப்பியிருப்பானென்று சொன்னார்கள். தப்பியிருந்தால் இன்னும் சிலநாளில் அவனிடமிருந்து கடிதம் வருமென்று கடிதத்தை எதிர்பார்க்கலானார்கள். கடிதம் ஒன்றும் வரவில்லை. அவன் இறந்து போனதாக எண்ணி அவனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகள் செய்யவும் எவருக்கும் ஸம்மதமில்லை. இன்னம் கொஞ்ச காலம் பொறுத்திருக்கத் தீர்மானித்தார்கள்.
சந்திரசேகரன் மனைவி நாகலஷ்மி என்பவளுக்கு அப்போது வயது பன்னிரண்டு. விவரம் தெரியாத பெண். தன் புருஷனைப்பற்றிய சேதி கேட்டவுடனேயே அவள் ஏக்கம் கொண்டாள். ஆயுளளவும் தான் விதவையாய் இருக்க நேருமோ என்று பயந்தாள், விதவையாய்ப் போய் ஆதரிப்பாரற்று, பலரிடம் பேச்சு கேட்டு, சோற்றுக்குக் கஷ்டப்பட நேரிடுமே என்று திகிலடைந்தாள். தான் மற்ற பெண்களைப்போல புருஷனுடன் இன்பமாய் வாழந்து சுகப்பட பாக்கியமில்லாமல் போயிற்றே என்று வருந்தினாள். ராமசுப்பையர் வந்தவன்று இரவில் அவளுக்கு ஏக்கத்தில் தூக்கம் பிடிக்கவில்லை. அவனையே நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் விடியற் காலையில் சற்று தூக்கம் வந்தது. ஸ்வப்னம் கண்டாள். தன் புருஷன் சேதியை விசாரிக்கத் தானும் தமையனும் சென்னை போயிருப்பதாகவும், அங்கே ரெயில் விபத்தில் இறந்த பிணங்களைப் பார்க்கையில் தன் கணவன் காலிழந்து, அங்கஹீனமாகிச் செத்துக்கிடப்பதைப் பார்ப்பதாயும் கனவுகண்டாள். அவனுடைய பிணத்தைப் புதைப்பதையும் பார்த்தாள். பிறகு விழித்துக்கொண்டாள். அந்த பயங்கரமான ஸ்வப்னத்தை அவள் எவருக்கும் சொல்ல மனம் துணியவில்லை. அவ்வளவு பயமாயிருந்தது. இரண்டொரு நாளுக்கெல்லாம் அந்தக் கனவு சுபமான தென்று கேள்விப்பட்டு, தன் கணவன் உயிரோடிருப்பதாகவும், கூடிய சீக்கிரத்தில் அவன் திரும்பி வரலாம் அல்லது கடிதமாவது போடலாமென்றும் எண்ணி சற்று தைர்யங்கொண்டாள். சில நாளுக்குப் பிறகு கூட கடிதம் வராமலிருக்கவே சிறிது அச்சமடைந்தாள். ஆனால் தனது கணவன் தந்தையுடனும் தனக்குப் பண உதவி செய்ய மறுத்த தன் மாமனாருடனும் கோபித்துக்கொண்டு வெளியூர் போயிருப்பதால், ரெயில் விபத்திலிருந்து தப்பினவர் தமது க்ஷேமஸமாசாரத்தைச் சொல்ல இஷ்டப்படாமலிருக்கிறார்; இன்னும் சில காலமான பிறகு, அவருக்காக மனம் வந்து கடிதமாவது போடுவார். அல்லது தாமே நேராக வருவர் என்று எண்ணி மனதை ஸமாதானம் செய்து கொண்டாள்.
இப்படித் தன் மனத்தை ஒருவழிக்குக் கொண்டு வந்து அவள் புருஷன் விஷயமாகக் கவலை யதிகமின்றி யிருந்தாளென்றாலும், வேறுவிதத்தில் அவளுக்குக் கவலை அதிகமாயிற்று. அவளுடைய தாய்தந்தையும், தமையனும், தமையன் பெண் சாதியும் அவளை அலக்ஷியம் செய்யத் தலைப்பட்டு, வரவர அவளைக் கஷ்டப்படுத்தலானார்கள். அவளை அதிருஷ்டஹீனையென்று தூஷித்தார்கள். அவளுடைய மதனி மற்றெல்லாரையும் விடக் கடுமையாக நடத்தி வந்தாள். இப்படியிருக்க, வீடு நெருப்புப் பற்றி, அதுவும் அதை யொட்டியிருந்த வீடுகளில் சிலவும் அழிந்து போயின. அதிக நஷ்டம் ஏற்பட்டது. இது நாகலக்ஷ்மியின் துரதிருஷ்டத்தாலென்று சொன்னார்கள். அவளுடைய தமையனுடைய குழந்தை பல நாளாக நோயா விருந்தது – இறந்து போனதும் அவளுடைய துரதிருஷ்டத்தாலேயே! அவளுடைய தமையன் பயிர்த்தொழிலில் நஷ்ட மடைந்து வயலில் ஒன்றை விற்க நேர்ந்ததும் அப்படியே! அவள் தகப்பனார் பெண்ணின் கதியை நினைத்துத் துக்கித்து அதனாலும், குடும்பக் கஷ்டத்தை நினைத்து அதனாலும் வியாதிக் காளாய்ப பாத்த படுக்கையாகி இறந்து போனதும் அவளுடைய துரதிருஷ்டத்தாலேயே! தெருவில் போனால் அவள் அதிகமாகப் போவது கிடையாது- அவளைக்கண்டு போகப் புறப்பட்டவர் நிற்பர். போனவர் திரும்புவர். கண்ட வர் திட்டுவர், இப்படி அவள் பலராலும் அலக்ஷியம் செய்து கண்டும் காணாததுமாய்த்திட்டி – முக்யமாய் மதனியால் – சுபா சுபங்களுக்கு இதர வீடுகள் போக போக்யமில்லாமல் போகவே, வீட்டிலும் உபத்திரவம் அதிகமாகவே – அவள் தாயாருக்கு வீட்டில் அதிகாரம் கிடையாது. நாட்டுப் பெண்ணுக்குத் தான் ஸர்வாதிகாரம் – அவள் என்ன செய்வதென்று தோன்றாமல் பரிதபித்தாள். எங்கேயாவது போய்பிழைக்கலாமா என்று எண்ணுவாள். அது முடியாதென்று கண்டு கலங்குவாள். ஆற்றில், கிணற்றில் விழுந்து இறக்கலாமா என்று நினைப்பாள். தன்புருஷன் உயிரோடிருப்பதாக எண்ணி உயிர்வாழ மனங்கொண்டு அந்த எண்ணத்தை விடுவாள்.
பிறகு சில மாஸங்களுக்கெல்லாம் அவளுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. சென்னையில் வைத்தியப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசித்து, வைத்தியத்தில் தேர்ச்சியடைந்து தனியாக கௌரவமாகக் காலங்கழித்து புருஷனுடைய வாலை எதிர்பார்ப்பதாகத் தீர்மானித்து, தன் தமையன் அதிகவெறுப்புக் காட்டும் சமயம்பார்த்து அவனிடம் தன் எண்ணத்தைத் தெரிவிக்க, அவன் இது தான் சமயம் என்று, அவளைச் சென்னைக்கு, அழைத்துப்போனான். அழைத்துப் போகையில் தான் அவனுடைய சகோதர வாத்ஸல்யம் வெளிப்படையாயிற்று. என்ன கஷ்டமோ நஷ்டமோ, அவளைத் தன்னிடமே வைத்து கொள்வதென்று எண்ணி, அவளை ஊருக்குத் திரும்பச் சொன்னான். என்ன மன்றாடிக் கேட்டும் அவள் ஸம்மதிக்கவில்லை. ஒரே பிடிவாதமாகச் சென்னைக்குப் போகவேண்டுமென்றாள். அப்படியே சென்னைக்குப் போய் ஒரு ஆஸ்பத்திரியில் தாதி லேலையில் அமர்ந்து பழகலானாள்.
III
வாலிபனுக்கு மயக்கம் தெளிந்தது. கண்ணை விழித்துப் பார்த்தான். நாகலஷ்மி கையில் மருந்துடன் அருகில் நின்றிருந்தாள்.
“நீ யாரம்மா! நான் இப்போது எங்கிருக்கிறேன்? என் இங்கு வந்தேன்? ஒஹோ! வண்டிமேலேறின தல்லவா? ஆம் நோய் அதிகமாக இருக்கிறது! இதென்ன ஆஸ்பத்திரியா?”
“அதிகமாகப் பேசினால் உடம்புக் காகாது. இந்த மருந் தைச்சாப்பிடும். மறுபடியும் தூங்கும்.”
வாலிபன் நாகலஷ்மியை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கண்ணை மூடிச் சற்று சிந்தையிலிருந்தான். பிறகு கண்ணைத் திறத்து மருந்தைக் குடித்தான்,
நாகலஷ்மி சீதாபுரத்து ஆஸ்பத்திரியில் தலைமைத் தாதியாக அமர்ந்திருந்தாள். அவள் ஸ்வல்ப வயதினளாயினும் பலராலும் கௌரவிக்கப்பட்டும் மெச்சப்பட்டும் வந்தாள். அவள் தந்தை இறந்து போய் சில வர்ஷங்களாகின்றன. அவளுடைய தமையனும் இறந்து போய்விட்டான். தனது சம்பளத்தில் ஒரு பாகத்தை தன் தம்பி, தமையன் குடும்பம், இவர்களுடைய ஸம்ரக்ஷணத்துக்காக அனுப்பிவந்தாள்.
அவள் சிதாபுரம் வந்து சுமார் ஒரு வருஷமாகிறது. அவள் ஸ்வல்ப வாடகையில் தனி வீட்டில் குடியிருந்து வந்தான். யெனவன வயதுள்ள பெண்ணுக்குப் பலவித அஸௌகர் யங்கள் ஏற்படக் கூடும். ஆனால் நாகலக்ஷ்மிக்கோ , அவளுடைய சற்குண நற்செய்கைகளால், யாதொரு தொந்தரையும் ஏற்படவில்லை. அவளைப்போல் உத்தம சீலை எங்கும் இராள் என்று சீதாபுரம் முழுவதும் சொல்லும்.
நாகலஷ்மி பிறர் முன்னிலையில் யாதொரு சிந்தனையுமில்லாதவள் போலிருந்தாலும், தனிமையில் அவள் சதா துக்கித்த வண்ணமாக இருப்பாள். தன் புருஷனுடைய செய்தி யாதொன்றும் தெரியாமல், தான் அமங்கலியென்றாவது ஸுமங்கலி யென்றாவது ஏற்படாமல், தனியாகத் தவித்துக் கொண்டிருக்க நேரிட்டதைப் பற்றி எப்போதும் சிந்தித்துருகுவாள். புருஷன் தன்னூர் வந்து போய் எழு வருஷங்களுக்கு மேலாகியும் அவளுக்கு தான் அமங்கலை என்ற எண்ணம் கொஞ்சமும் உண்டாக வில்லை. இன்னும் தன் புருஷன் வருவானென்றே எண்ணியிருந்தாள்.
மறுநாள் காலையில் காயம்பட்ட வாலிபனுக்கு சிகித்ஸை செய்யப் புறப்பட்டுப் போனாள். வாலிபன் தனது படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அவளைப் பார்த்ததும் அவனது முகம் பிரகாசம் அடைந்தது. அவள் சொன்னபடி யெல்லாம் நடந்து வந்தான். காயம் என்ன நோவெடுத்தாலும் கொஞ்சமும் பாராட்டாமல், அவளுடைய இனிமையான வார்த்தைகளால் நோவு ஒழிந்தவன் போல் இருந்து வந்தான். நாகலக்ஷ்மி முதலில் வாலிபனைப் பார்த்தபோது அவனைப்பற்றி யாதொரு அபிப்பிராமும் கொள்ளவில்லை. ஆனால் இரண்டொரு நாள்களுக்குப் பிறகு அவன் தன்னை அதிகம் கவனிப்பதாக அவளுக்குத் தோன்றிற்று. அவ்விதம் அவன் தன்னை அதிகம் கவனிப்பது அவளுக்கு விருப்பமில்லை. அவள் இதுகாறும் யாதொரு அபவாதத்துக்கும் உள்ளாகாமல் இருந்தவள். தன்னை எவரும் கெட்ட எண்ணத்துடன் பார்க்கக் கூடு மென்றுகூட எண்ணினவளல்லள். சதா தன் நிலைமையைப்பற்றின எண்ணமே மேலிட்டிருந்ததால், வேறு எண்ணம் எதுவும் அவள் மனதில் புகுந்ததில்லை. இப்போதோ அவளையறியாமலேயே இந்த எண்ணம் அவள் மனதில் உண்டாயிற்று. ” ச்சே, நாம் என் அவரைப்பற்றி தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். நோயாளியாயிருக்கும் அவர்மேல் நாம் என் பழி சுமர்த்தவேண்டும். அவர் யோக்கியராகவே இருப்பார். அவர் நம்மை அடிக்கடி பார்ப்பதைக் கொண்டு அவர்மேல் குறை கூறுவது நல்லதல்ல. எப்படி யிருந்தாலென்ன. இன்னம் சில நாளில் அவர் ஆஸ்பத்திரியை விட்டுப் போய்விடுவார். அப்புறம் இதைப்பற்றிக் கவலையே யிராது.” என்று எண்ணி மனந்தேறுவாள்.
வீட்டுக்குப் போனால் புருஷன் ஞாபகம் வந்து விடும். அப்புறம் வாலிபனுடைய சிந்தனையே யிராது. ஆஸ்பத்திரிக்கு வந்தால் தான் இந்த சிந்தனை உண்டாகும்.
வாலிபன் ஆஸ்பத்திரிக்கு வந்த ஐந்தாம் நாள், அவன் சற்று குணமடைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். நாகலஷ்மி அவன் காயங்களைத் துடைத்து மருந்து போட வந்தாள். வந்ததும் வாலிபன், “உங்களை ஒரு கேள்வி கேட்கப் பிரியப்படுகிறேன். பதில் சொல்லலாமா?” என்று கேட்டான்.
நாகலஷ்மி ஒன்றும் சொல்லாமல், கேள்வி என்னவென்று. அறிய விரும்புவாள் போல் நின்று கொண்டிருந்தாள்.
“உங்களை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறது. எந்த ஊர், யார் என்பதைச் சொல்லவேண்டும்.”‘
நாகலஷ்மிக்கு இவ்விஷயங்களை யாராவது கேட்டால் பிடிப்பதில்லை. பதில் சொல்லாமல் வேறு பேச்சுப் பேசி மறைத்து விடுவது வழக்கம். பிறர் அதை அறிய முடியாதபடி அவள் மறைந்து வைத்திருக்கிறாள் என்பதல்ல. தனது குடும்பவிஷயங்கள் பிறர் நகைக்க ஹேதுவாயிருப்பதாலும், அதைச்சொல்லுவதால் தன்னைப்பற்றிப் பிறர் தாழ்வாக நினைக்கக் கூடுமாதலாலும், அவள் ஒன்றும் சொல்லுவதில்லை. ஆனால் அவளுடைய பூர்வ விருத்தாந்தத்தைப்பற்றி எவரும் கொஞ்சமாவது அறியாதவால்லர். தானாக ஒன்றும் சொல்லவேண்டாமென்பது அவள் கருத்து.
மேலும் அவள் அந்த வாலிபனைப்பற்றி ஏற்கனவே சற்று தப்பபிப்பிராயம் கொண்டிருந்ததால், அவன் தன்னைப்பற்றிக் கேட்பது தகாதென்று எண்ணி, அதற்கு பதில் சொல்ல ஓஷ்டப்படாமல், “ராத்திரி நோவில்லையே. நன்றாய்த் தூங்கினீரா?” என்று கேட்டாள்.
“‘நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு பேச்சுப்பேசுவதைப்பார்த்தால், நான் கேட்டது உமக்கு திருப்தி வில்லையென்று தோன்றுகிறது” -சற்று அவள் முகத்தை மறுபடி ஏறிட்டுப்பார்த்து விட்டு –“நான் கேட்டது பிசகானால் இனி நான் கேட்கவில்லை,” என்று சொல்லிக்கொண்டே வேறுபக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டு துக்கத்துடன் கண்ணீர்விடலானான்.
நாகலக்ஷ்மி முதலில் இதை கவனிக்கவில்லை. மறுபடியும் வாலிபன் திரும்பும் போது, அவன் முகம் துக்கமாயிருப்பதையும் கண்ணீர் விட்டிருப்பதையும் கண்டு, அவனிடத்தில் அனுதாபம் கொள்ளலானாள். மற்ற வம்புக்காரர்கள் போலின்றி, அவன் எல்ல ஸ்வபாலம் உள்ளவனென்று எண்ணினாள். அதனால் அவனுக்கு பதில் சொல்லுவது தகுமென்று தீர்மானித்தாள்.
“நான் எந்த ஊர் என்று சொல்லு முன், உமது ஊர் பெயர் சொன்னால் நான் சொல்லலாம்”.
“நானா? எனக்கு ஊரும் பேரும் இருந்தும் இல்லாதவனாக இருக்கிறேன். எல்லாவற்றையும் துறந்தவனாக இருந்து வருகிறேன்”
நாகலக்ஷ்மி தான் செய்துவந்த சில்லறை வேலையை விட்டு விட்டு அவன் சொல்லுவதை கவனித்து வந்தாள்.
“துறவிபோல் காணப்படவில்லையே. இன்னும் உலக வாழ்க்யிைல் பற்றுள்ளவராகவல்லவோ காணப்படுகிறீர்.”
“இன்னும் துறவியாகவில்லை. ஆவதற்கும் இஷ்டப்பட வில்லை. என் சரித் திரக்தைக் கேட்டால் ஆச்சரியமாயிருக்கும். எல்லாவற்றையும் விடவேண்டியவனாயிருக்க, ஒன்றால் மாத்திரம் இன்னும் விடாமல் உலகப்பற்றுள்ளவனாக இருக்கிறேன். அது கிடைக்குமானால், நான் எண்ணினபடி காரியங்கள் நடைபெறு மானால், துறவி வேஷம் போடுவதாக உத்தேசமில்லை. ஆனால் என் அபிப்பிராயத்துக்கு மாறுபாடாக விஷயங்கள் நடைபெறுமானால், எனக்கு உலகத்தில் ஆகவேண்டியது ஒன்றுமேயில்லை”
“நீர் சொல்வது ஒன்றுமே விளங்கவில்லையே.”
“சற்று விளங்கச் சொல்லுகிறேன். அதைக் கேட்ட பிறகு, என் விஷயமாக சில தகவல்கள் உமக்குத் தெரிந்தால் சொல் லும், நீர் இந்தப்பக்கமான தால், அவைகள் உமக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது விசாரித்தாவது சொல்லலாம். நானாக விசாரிக்க இஷ்டமில்லை.
“நான் பம்பாயிலிருந்து வருகிறேன். நான் இந்தப் பக்கங்களைவிட்டு பம்பாய்போய் சுமார் எழுவருஷமாகிறது. என் தகப்பனாருக்கு என்மேல் பிரியமில்லாமல் என்னை அலக்ஷியம் செய்து, தமது இளையாள் பேச்சைக் கேட்டுக்கொண்டு என் படிப்புக்குப் பணம் கொடுக்காமல் என்னைக் கெடுக்கப் பார்த்தார். அதன் மேல் நான் என் படிப்பை நிறுத்த இஷ்டப்படாமல், பம்பாய் போய் படித்துத்தேறி இங்கு உத்தியோகம் பார்க்க வந்தேன். வந்த விடத்தில் என் மேல் வண்டியேறிற்று. இது விஷயம் உமக்குத் தெரியும்.”
வாலிபன் சற்று பேச்சை நிறுத்தி மறுபடி யோசிக்கலானான். பிறகு,
“இவ்விதம் ஒருவாலிபன் தகப்பனாருடன் சண்டையிட்டுக் கொண்டு தூரதேசம் போனதாக நீங்கள் கேள்விப்பட்ட துண்டோ? – ”
“எத்தனையோ பிள்ளைகள் அப்படிப் போயிருக்கிறார்கள். இன்னும் எதாவது விவரம் சொன்னால்-”
“மாமனார் வீட்டிலும் எனக்கு மனஸ்தாபம் நேர்ந்தது. அதனால் அங்கேயும் சோபித்துக் கொண்டு போனேன்.”
“அங்கேன் கோபித்துக்கொண்டிர்?” –
“கொஞ்சம் பணம் கேட்டேன். கொடுக்கவில்லை. அதோடு அவர்கள் அவமானமாக நடத்தினார்கள். அதனால் அவர்கள் முகத்தில் விழிக்க இஷ்டப்படாமல் தூரம்தசம் போய்விட்டேன்”
நாகலக்ஷ்விக்கு அவன் சொல்லியவிஷபம் ஆச்சர்யமாகப் பட்டது. தன் புருஷன் தானோ அவன் என்று சந்தேகப்பட்டாள். அதை நன்றாய் அறிய எண்ணி, ” போனதைப்பற்றி துக்கிப்பதில் பயனென்ன.?” என்று கேட்டாள்.
“இல்லை, அக்காலத்தில் நான் சிறு பையனாக இருந்ததால், கோபம் மேலாடி அவ்விதம் செய்தேன். கோபம் பொல்லாதது அல்லவா? யார்மேல் கோபம் கொள்ளக்கூடாதோ அவர்மேல் கோபம் கொண்டேன்
“இன்னும் சற்று விவரமாகப்பேசும்.”
“ஒன்றும் அறியாத இளவயதான என் மனைவியை அலக்ஷ்யம் செய்து வந்தது பிசகென்று இப்பொழுது தோன்றுகிறது. அவள் என்ன கதியானாளோ? எப்படியருக்கிறாளோ? ஒன்றும் தெரியவில்லை.”
“அதற்கென்ன ஊர்போய் விசாரித்தால் தெரிகிறது.”
“இல்லை, நான் ஒரு ரெயில்விபத்தில் அகப்பட்டு, இறந்து போனதாக ஊரில் வதந்தி ஏற்பட்டுவிட்டதாகப் பின்னால் தெரிந்தது. அதனால் தான் அந்தப் பெண் என்ன கதியானாளோ என்று வருத்தப்படுகிறேன். ”
“இத்தனை காலமாக ஒன்றும் அறியாத ஒரு பெண்ணை துக்கத்துக்கு ஆளாக்கலாமா ?”
“ஆமாம், அது பிசகு தான். அதனால் தான் எனக்கு வருத்தமதிகம். இன்னம் சில நாளில் உடம்பு குணமடைந்தவுடன் போய் விசாரிக்க வேண்டும். இதுவிஷயமாக உமக்கு ஏதாவது தெரியுமா ? தெரிந்தால் சொல்லும். அதோடு உம்மை எங்கேயோ பார்த்தாற்போலிருக்கிறது. இஷ்டமிருந் தால், நீர்யார் என்று சொல்லும். இல்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம். எனக்கு அவளைத் தவிர மற்றவர்களைப் பற்றித் தெரிந்ததாக வேண்டியது ஒன்றுமில்லை.”
“என்ன, அவளிடத்தில் அவ்வளவு அபிமானம்! அதற்காகத்தான் நீர் ஏழுவருஷகாலமாக அவளைப்பற்றிய நினைவேயில் லாமவிருந்தீர ?”
“நீர் என்ன என்னை அவமானப்படுத்த அபிப்பிராயமோ?”
“அப்படி ஒன்றுமில்லை. அவள் அப்பொழுது அறியாப் பெண்ணாயிருந்தாலும், அவள் என்னிடத்தில் அதிகப்பிரிய முள்ளவளாயிருந்தாள்–” இப்படிச் சொல்லிக் கொண்டே வேறுபக்கந்திரும்பிக் கண்ணீர் விட்டாள்.
நாகலக்ஷ்மிக்கு வந்திருக்கும் வாலிபன் தன் புருஷன் என்று தெரிந்தாலும் அவன் மனதை இன்னும் சோதிக்க எண்ணி,
“நீர் யார் என்பதும், உமது மனைவி யார் என்பதும் எனக்குத்தெரியும், உம்மிடம் அன்பு கொண்ட அந்தப்பெண் இத்தனை காலம் எப்படி உயிருடன் இருக்கக்கூடும். துக்கத்தால் உயிரைவிட்டிருப்பாள் அல்லவா? அவளை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் போகும்போது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிப்போனாள். நீர் இறந்து போனதாகவே எல்லாரும் சொல்லி வந்தாலும் அவள் மாத்ரம் நீர் இறந்து போகவில்லை யென்று எண்ணி யிருந்தாள். ஆயினும், அதிக நாளாகவே, நீர் இறந்து போனதாகவே எண்ணி, துக்கத்தால் உடல் மெலிந்து வியாதிக்களாகி இறந்து போனாள். போகும் முன்…”
வாலிபன் துக்கம் மேலாடி “ஐயோ” என்று மெதுவாய்க் கூச்சலிட்டு தாரை தாரையாகக் கண்ணீர்விட்டான் படுக்கையை விட்டு எழுந்தான். அங்குமிங்கும் உலாவினான். “ஐயோ என் செல்வமே, நீ போய்விட்டாயா? உன்னை நம்பியல்லவோ நான் இத்தனை தூரம் வந்தேன். கல்யாணதின முதல் நீ என்னிடம் அன்புபாராட்டி வந்தாயே – அவள் போனது வாஸ்தவர் தானே? எனது வாழ்வு கெட்டுப் போனது வஸ்தவந்தானே? உலகத்தில் உற்றார் உறவினர் இல்லாத எனக்கு ஒருத்தி இருப்பாயென்றல்லவோ நான் இங்கே வந்தேன். நீ போன பிறகு எனக்காக வேண்டியது இங்கு என்ன இருக்கிறது. நான் இருந்தும் இல்லாதது மொன்று தானே. வண்டியில் அகப்பட்ட போதே இறந்து போயிருக்கக்கூடாதா, இப்போது தான் என்ன-” நாகலக்ஷ்மியைப் பார்த்து- “நீ இனி போகலாம். எனக்கு உபகாரம் செய்ய விருப்பமிருக்குமானால் நான் சீக்கிரம் இறந்து போகும்படியாக ஏதாவது மருந்து கொடு. இல்லாவிட்டால் காயம் கட்டுவதில் புரையோடும்படியாக ஏதாவது ஒன்று செய் அல்லது ஒன்றும் செய்யாமலாவது இரு.” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் படுத்துப் புரண்டு துக்கப்பட்டான். கண்ணீர் உதிர்த்து விம்மிவிம்மியழுதான்.
இதைக் கண்ட நாகலக்ஷ்மி மனந் தாளாமல் அவன் முகத்தை உற்றுப்பார்த்தாள். அவனது தாமரைமுகம் போன்ற முகத்தில் நெற்றியில் திலகம் போல் விளங்கும் மச்சத்தையும் இன்னும் சில அடையாளங்களையும் கொண்டு தன் கணவன் தான் என்று நிச்சயங்கொண்டு அவனருகில் போய், “நாதா, என்னை இன்னும் தெரியவில்லையா? நான் நேரில் இருக்கும்போது கூடவா துக்கப்படவேண்டும்?” என்று சொன்னாள். இதைக் கேட்டதும், வாலிபன் உடனே நிமிர்ந்து பார்த்தான். நாகலக்ஷ்மியை உற்றுப்பார்த்தான். நாகலக்ஷ்மி புன்சிரிப்புடன், “என்னை இன்னும் அடையாளத்தெரியவில்லையா? ஊர்வலத்தில் மெதுவாய் நடந்துவா என்றீர்களே, அதை மறந்துவிட்டீர்களா? கண் பார்க்க வக்ஷணமா யிருக்கிறதென்றீர்களே, அதை மறந்து விட்டீர்களா?” என்றாள். வாலிபன் உடனே எழுந்து உட்கார்ந்து அவளை அழைப்பது போல் இரண்டு கையையும் நீட்டினான். நாகலஷ்மி அருகில் வந்து உட்கார வாலிபன் ஆவேசங் கொண்டவன் போல் அவனைக் கட்டியணைத்து “நாகலஷ்மி, என்னை வாழவைத்த கண்மணி, உனக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தேனோ. சிறு பையனாயிருந்தபோது தெரியாமல் சொல்லிக் கொள்ளாமல் போனதில் உனக்கு எவ்வளவு கஷ்டம் நேர்ந்ததோ. எதுவானாலும் மன்னித்துக்கொள். போனது போகிறது. உன்னைக்கண்டேனே. அதுதான் அதிருஷ்டம். நான் போன பிறகு என்ன நடந்தது? சந்திரசேகரன் போய்விட்டானென்றே எண்ணியிருக்கிறார்களோ? என் தகப்பனாரும் தலைமுழுகிவிட்டாரா! நீ ஒருத்தி தான் நம்பிக்கையோடிருந்தாயா? நீ ஏன் இங்கிருக்கிறாய்? உன் தாயார் தகப்பனார் உன்னை கவனிக்கவில்லையா-”
“நாதா, உடம்பு அதிர்ச்சி கொள்ளப்போகிறது, போதும், அப்புறம் பேசிக்கொள்வோம். நடந்தவைகளைப்பற்றி யென்ன? இப்போது நாம் ஸௌக்யமாயிருக்கிறோம். அதை விட்டுவிட்டு மற்றவர்களைப்பற்றி யென்ன? உடம்பு குணமாகும் வரையில் பொறுமையாக, அதிகமாக உடம்புக்கு அதிர்ச்சி கொடுக்காமல், படுத்துக்கொண்டிருங்கள். இன்னும் இரண்டு மூன்று நாளில் எழுந்து விடலாம். அப்புறம் எல்லாவற்றையும் பேசிக் கொள்ளலாம். என் சொல்படி கேளுங்கள். அதற்காக இந்தாருங்கள்!” அவள் சந்திரசேகரனை யணைத்து முத்தமிட்டாள்.
– சிறுகதைகள், முதற் பதிப்பு: 1922, வி.நாராயணன் & கம்பெனி, மதராஸ்.