நாகம்மாவா?




(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கேட்டைத் திறந்து வெயிலில் நனைந்து மஞ்சள் மயமாய்க் கிடந்த முற்றத்தில் இரண்டு அடி எடுத்து வைத்தபோதுதான், முதன்முதலில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

நடுவில் சிமெண்ட் போட்டிருந்த நடை பாதையில் இடப் பக்க வெள்ளை மணலில் இருந்து நிதானமாய் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அது இவன் காலடி ஓசையில் வியந்து, தலை உயர்த்திப் பார்த்த பின், திரும்ப மணலுக்குச் செல்வதா, இல்லை பின்வாங்காமல் நேராகவே சென்று விடலாமா என்று ஒரு கணம் மயங்கி நிற்கும் போது…
இந்த முகச் சாயல் எங்கோ கண்டு மறைந்தது போல்…
போக்கு வெயிலில் மினுமினுத்த இந்த நிர்வாண மேனியின் கடும் மஞ்சள் வரிகளுடன் என்றோ எங்கோ வைத்து இதற்கு முன் தனக்குச் சம்போகம் சம்பவித்து விட்டிருந்ததைப்போல் ஒரு உணர்வு…
என்னவோ ஒரு முடிவுக்கு வந்ததுபோல், நிதானமாய், ஆனால், வேகமாய் நேராகவே சரசரவென்று சென்று அந்தி மந்தாரைச் செடிகளின் பச்சை மடிக்குள் அது மறையும் போது, வாட்டசாட்ட மான அந்த வாளிப்பான உடம்பு இவனை என்னவோ செய்து கொண்டிருந்தது.
சற்று நேரம்கூட மறதியின் இருளில் எதையோ துழாவுகிற வனைப்போல் அப்படியே நின்று விட்டு, அது கடந்து சென்ற பாதையில் கால் வைத்து அசுத்தப்படுத்தக்கூட அஞ்சியவனாய், காலை எட்டி வைத்து வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டான்.
தன்னைத் தேடிக்கொண்டுதான் அது வந்திருக்க வேண்டும்…
அந்தச் சந்திப்பைப்பற்றி அவன் யாரிடமும் மூச்சுக் காட்ட வில்லை. இருந்தும் இந்தச் சந்திப்பானது எதனுடையனவோ ஆரம்பமல்லவா என்ற தோரணையில் ஒரு எண்ணப் பொறி அடிவானத்தின் அப்பாலிருந்து மெல்லிசாய் வரும் இடியோசை யாய் இவன் அந்தரங்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தது.
மறுபடியும் இன்னொரு நாள், அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது, பின் பக்க ஜன்னல் வழி அவன் பார்த்துக் கொண்டு நிற்கும்போது, கொல்லையில் அது பார்வையில் பட்டது… கடைக் கண்ணால் இவனை ஒரு தடவை பார்த்து விட்டு பழக்கத்தைப் புதுப்பித்துக் கொள்கிறதா சரசரவென்று கீழே பள்ளத்தில் குதித்து அந்தர்த்தியானமாகி விட்டது.
இப்போதும், அவன் அந்த ரகசியத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. அதன் ‘பால்’ சம்பந்தமாக அவனுக்குச் சந்தேகம் வரவில்லை. பெண்பால்தான்…! அதன் முகச் சாயல்தான், உள்ளங்காலில் பட்டும் படாமலும் வருடும் பறவை இறக்கையாய் அவன் நினைவுகளைக் கிசுகிசுக்க வைத்து எங்கெல்லாமோ இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஜன்மத்தில் கண்டு மறந்த நாகம்மாவின் முகச் சாயல் அல்லவா…
இன்னொரு விடுமுறை நாள்.
மத்தியானம் சாப்பிட்டு விட்டு, கட்டிலில் படுத்தவாறு எதை யெல்லாமோ நினைத்து குழம்பிக் கொண்டிருந்தான். மனைவி சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்…
வெயிலின் வெப்பம் ஆவியாகி தகித்துக் கொண்டிருந்த வெளி யில் என்னவோ ஒரு ஆரவாரம். இவன் எழுந்து வந்து பார்த்த போது கொல்லையில் அடுத்த வீட்டுக்காரர்கள், தன் வீட்டுக்காரர் கள் பார்த்து நிற்க, ஒன்றுடன் ஒன்றாய் ஒயிலாய் இணை சேர்ந்து அமர்க்களமாய் நடந்தேறிக் கொண்டிருக்கும் நாக நர்த்தனம்… ஒன்றோடொன்றாய் ஆக்ரோஷமாய் பின்னிப் பிணைந்து நிலத்தில் இருந்து ஐந்தடி வரை தூக்கலாய் மேலெழும்பி குதித்துக் குதித்துக் குஷாலாய்க் கும்மாளம் போடும் கோலாகல காட்சி. மோக சாந்திக்குப் பின் ஒன்று எங்கு சென்று மறைந்ததோ தெரியவில்லை. இவனுக்குப் பழக்கமானது இவனையும் இவன் மனைவியையும் கடைக் கண்ணால் பார்த்தவாறு செல்லும் போது, ஏற்கெனவே, மணமாகி இணை சேர்ந்துவிட்ட அவனைப் பழி வாங்கிவிட்ட ஒரு வெறி அதன் முகத்தில் தெறிப்பது போல்…
இவனுக்குள்ளே ஒரு சிலிர்ப்பு…
பிறகு…
அது ஒரு சித்திரை மாத ஆயில்ய நாள்… இரவு பதினொரு மணி இருக்கலாம். அறைக்குள் புழுக்கம் அகத்துக்குள் மூச்சுத் திணறல்.
கொல்லையில் தங்கமாய்க் காயும் நிலவு சாளரம் வழி தெரிந்தது. கதவைத் திறந்துகொண்டு மணலில்வந்து படுத்தபோது, பெற்ற தாயைப்போல் காற்று வந்து அன்புடன் அரவணைத்துச் சென்றது.
விண்வெளியில் பளிச்சிட்ட நட்சத்திரங்களில் ஒன்று உருகிக் கீழிறங்கி மறைந்தது.
கீழ் வானத்திலிருந்த ஒரு பஞ்சுப் பொதி மெல்ல மேலேறி வந்து, கீழிறங்கி எதிர்த் திசையில் நகர்ந்து சென்றது.
தென்னை ஓலைகளின் சலசலப்பு ஒரு சோக இசையின் அறுந்த இழைகளாய்த் தன்னை வந்து தழுவுவதைப்போல்…
யாரையோ எதையோ இறைஞ்சும் மனம்… இந்நாள் வரை வாழ்ந்த வாழ்வின் கனம்.
தலைக்கு மேல் நூலிலையில் ஊசலாடும் கூர்வாளாய் வருங் காலம்.
இருந்தும் படபடக்கும் இதயத்தைத் தளிர்க் கரத்தின் சீதளத்தால் யாரோ ஒத்தடம் போடும் ஒரு லாகவம்.
வெளியுலகின் வெட்கைத் தகிப்பில் இருந்து விடுபட்டு விமோசனம் தேட, கருப்பைக்குள் ஒளிந்துவிட மும்முரமான அந்த நாளின் நினைவு நிழலாடும் கனவு…
அவன் விழிகளைத் திறக்கும்போது, காரிய சித்தியாகி அவன் மார்பிலிருந்து ஊர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது அது…
சர்ப்பக் காவில் வைத்து, கடைசியாய் இணை சேர்ந்துவிட்டுப் பிரியும்போது நாகம்மாவின் முகத்தில் எரிந்த அதே பேரின்பத் திரட்சி. பிறகு, இவன் வீடு போய்ச்சேர்ந்த சற்று நேரத்தில், நாகம் தீண்டி அவள் துர்மரணம் எய்திய சேதி கேட்டு, சித்தம் கலங்கி விரைந்து வந்து பார்க்கும்போதும் நீலம் பாரித்த அந்த முகத்தில் தங்கி நின்ற அதே பாவம்…
இப்போது…
அந்த இன்பத் திரட்சி சிமிழில் பெய்யும் உயிர்த் துளிகளாய் அவனையும் சூழ்ந்துகொண்டது.
ஒரு சில கணங்கள்…
தோள் பட்டையில் இப்போது அனுபவமான இனிய வலியுடன் அவன் ஏகாந்தமாய் உலாவிக் கொண்டிருக்கும்போது, அவன் மனைவி உட்பட வெளியுலகம் எழுப்பிய ஆரவாரம், மழைக்குப் பிந்திய தூவானத்தைப்போல் அவன் செவிப் புலனில் படரத் தொடங்கியது.
– 23.05.1976 – குமுதம் 12.08.1976.
– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.