நல்ல நோக்கம் வேண்டும்…
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,741
ஓர் எறும்புக்கு மனிதனைக் கண்டால் பிடிக்கவில்லை. தான் கடித்தவுடன் மனிதன் சாக வேண்டும் என்று நினைத்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று பல நாட்கள் யோசித்தது.
வெகுநாள் யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது.
கடவுளை நோக்கி தவம் செய்யலாம், அவரிடம் வரம் கேட்கலாம் என்பதுதான் அந்த எறும்பின் நினைப்பு.
ஒரு நல்ல இடமாகப் பார்த்துத் தேர்வு செய்து அமர்ந்து கொண்டு, கடவுளை நோக்கிக் கடுந்தவம் செய்ய ஆரம்பித்தது.
அதனுடைய கடுந்தவத்தைப் பார்த்து மனமிறங்கிய கடவுள் நேரில் தோன்றினார்.
“”உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்…”
கடவுளைப் பார்த்ததில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அந்த எறும்புக்கு.
“”சாமி நான் கடித்தால் சாக வேண்டும்…” என்றது அவசர அவசரமாக.
அதனுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்ட கடவுளும், “”அப்படியே ஆகட்டும்!” என்று வரம் தந்துவிட்டு மறைந்தார்.
அதுமுதல் எறும்பு, மனிதனைக் கடித்தவுடன், அவன் அந்த இடத்தை அழுத்தித் தேய்க்கிறான்… அந்த அழுத்தலில் கடித்துக் கொண்டிருந்த எறும்பும் இறந்து போகின்றது.
பிறரை அழிக்க வேண்டுமென்ற நோக்கமிருந்தால் என்னதான் கடவுளிடம் வேண்டினாலும் நிறைவேறாது.
எனவே நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும்.
– எஸ்.ஆறுமுகம், கழுகுமலை. (ஜூலை 2012)