நல்ல சேதி – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,039
திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையே என்று மாலாவுக்கு மிகவும் கவலை. அவளுடைய கணவன் பாபு, ஒரு தனியார் உடற் பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வந்தான்.
கணவன் காலையில் வேலைக்குக் கிளம்பும்போது மாலா, “இன்னைக்கி என் அம்மாவை அழைச்சிக்கிட்டுப் போய் டாக்டர் சொன்ன டெஸ்ட்களை எடுக்கப்போறேன்” என்றாள்.
“சரி” என்ற பாபு வேலைக்குப் போய்விட்டான்.
அன்று இரவு கணவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மாலா. அவர் கருவுற்றிருக்கிறாள் என்று பரிசோதனை முடிவுகளை வைத்து டாக்டர் சொன்னதே காரணம்.
வேலை முடிந்து பாபு, திரும்பி வந்தான். அவன் கொண்டு வந்த பையில் நிறைய இனிப்புகள் இருந்தன. வியப்புடன் அவனைப் பார்த்து, “”நானே நல்ல சேதி சொல்லணும்னு காத்திருந்தேன். நீங்களே ஸ்வீட் வாங்கிட்டு வந்திட்டீங்க” என்றாள் மாலா சிரிப்புடன்.
அந்த நல்ல செய்தியை அவளை முந்திக் கொண்டு பாபு சொன்னான். எப்படித் தெரியும்?” வியப்புடன் கேட்டாள்.
ஆஸ்பத்திரியில் உனக்கு எடுத்த டெஸ்ட்கள் எல்லாம் எங்க லேப்புக்குத்தான் வந்தன” என்றான் பாபு.
– ராமு, திண்டுக்கல் (பிப்ரவரி 2012)