நல்லமுத்து




(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூலைக்கரைப்பட்டிப் பண்ணையார் வெயிலுகந்தநாத பிள்ளை கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அவ்விதம் ‘அட்டணக் கால்’ போட்டுத் திண்ணையிலமர்ந்துதெருவிலே போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதில் அவருக்கு எப் பொழுதுமே தனிமகிழ்வு.அதுவே அவரது பொழுது போக்கு. அதுதான் அவர் வேலை. அவருக்கு வேறே என்ன வேலையிருக்கு?’ என்று பலரும் சொல்வது உண்டு. அதிலும் உண்மை இருக்கலாம்.
‘பொண்ணாப் பிறந்தவங்க தெருவிலே போக நீத மில்லையம்மா. எப்ப பார்த்தாலும் செக்கடிப் பிள்ளையார் மாதிரி திண்ணையிலே உட்கார்ந்து கொண்டு, போறவங்க வாறவங்களை முழிச்சுப் பாக்கிறது. சிலசமயம் பல்லைக் காட்டி இளிக்கிறது’ என்பது அவ்வூர்ப் பெண்களின் பொதுவான குறைபாடு.
‘அவர் அப்படிப்பல்லிளிப்பது தான் தங்கப்பல் கட்டி யிருக்கிற பெருமையைக் காட்டத்தான். வேறே வித்தி யாசமாக ஒண்ணும் நினைக்கவேண்டியதில்லை’ என்று சிலர் சொல்வது உண்டு. ஆனாலும் அவர்கள் மனசுக்கே தெரியும், ‘இது வெறும் பூச்சுமான வேலை, பெண்கள் பேச்சில் தான் உண்மை இருக்கிறது’ என்பது.
பண்ணையார் வெயிலுகந்தநாதர் ஒரு மாதிரியான ஆசாமிதான். பணமும், சுகவாழ்க்கை வசதிகளும், போகாத பொழுதும் நிறைந்திருக்கும் பொழுது பண்ணையார் மகன் பண்ணையாராக வந்தவர் வேறு விதமாக வாழ விரும்புவார் என்று எதிர்பார்ப்பது தவறில்லையா? அவருக்கு வயது கிட்டத்தட்ட நாற்பது என்று தானிருக்கட்டுமே. ஆள் வாட்டசாட்டமாக ‘பார்த்தால் முப்பத்து நாலு முப்பத்தைந்து வயது தானிருக்கும்’ என்று மதிப்பிடும்படி ஜம்மென்றிருந்தார்.
அவர் இஷ்டம்போல் அலைவதற்கு முக்கிய காரணமே அவரது மனைவி சுத்த நோஞ்சல் பேர்வழியா நோய் பிடித்த எலும்புக் கூடாக – இருந்தது தான் என்று அபிப்பிராயப்பட்டார்கள். அதிலும் உண்மை யிருக்கலாம். ஆனால் அதுவே முழுமுதற் காரணமாகிவிட முடியாது. பண்ணையாரின் பண்பாடே அது என்று தான் சொல்லவேண்டும்.
ஸ்ரீமதி வெயிலுகந்தநாதர் என அழைக்கப்பட வேண்டிய நாச்சியாரம்மா காச நோயில் அடிபட்டு மிக வும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கொடு நோய் பற்றுவதற்கு முன்புகூட அவள் ‘உடலிலே சீவன் இல்லாதவள்’ தான். வானத்திலே மூடாக்குப் போட வேண்டியதுதான்; அவள் உடலைச் சாய்த்து விடுவாள் கீழே, ‘ஜலதோஷம் காய்ச்சல்’ என்று ஒன்றில்லா விட்டால் இன்னொன்று! அவளுடைய அம்மா அடிக்கடி சொல்லுவாள் ‘குற்றாலத்திலே சாரல் கட்டுதோ இல்லையோ, உடனேயே இங்கே நாச்சியாரு மண்டையிலே சாரல் கடுமையாகக் கவிந்து விடும்’ என்று.
‘நாச்சியாருக்கு நீர்க்கொண்டிருக்கு’ (அதுதான் ஜலதோஷம்) நம்ம வீட்டுப் பெண்ணுக்கு உடம்பு கத கதன்னு இருக்கு. காச்சல் வந்துவிடுமோன்னு பயமா ருக்கு என்றமாதிரிப் பேச்சு அவர்கள் வீட்டில் ஒலிக்காத காலம் மிகக் குறைவாகத்தானிருக்கும். ‘உன்மகளுக்குக் கல்யாணம் பண்ணி அனுப்பையிலே, கூட ஒரு தெரசரை யும் ஆஸ்பத்திரியையும் சேர்த்து அனுப்ப வேண்டியது தான்’ என்று வேடிக்கையாகவும் வினையாகவும் தொனிக்கும்படி பேசுவார் தந்தை. என்ன செய்வது, அவ பொறந்த நேரம் அப்படி!’ என்று தேற்றிக் கொள்வாள் தாய்.
நாச்சியாருக்கும் கல்யாணம் நடக்கத்தான் செய்தது. நல்ல இடத்துச் சம்பந்தம்தான். சொத்துச் சுகமெல்லாம் இருக்கிறபோது, ரொக்கம் நகை பண்ட பாத்திரங்கள் என்று பணத்தை அள்ளிக்கொடுக்கிறதுடன் நில்லாது பெண் பேருக்கு ஏராளமான நிலபுலன்க எழுதி வைக்க முன் வருகிறபோது, பண்ணையார் வீட்டுச் சம்பந்தம் தானா கிடைக்காது போய்விடும்? ராஜா மகன் கூட ‘வீட்டு மாப்பிள்ளையாக’ வந்து இறங்க முடியுமே! அப்படி ராஜா மகன் மருமகப்பிள்ளையாக வந்து சேர வில்லையே என்றால், அதற்குத் திருநெல்வேலி ஜில்லா விலே – அதிலும் ஸ்ரீமான் இளையபெருமாள் பிள்ளையவர்களின் இனத்திலே – ராஜா மகன் யாரும் இல்லாதது தான் காரணமே தவிர வேறல்ல.
அதனால் என்ன கெட்டுப் போயிற்று? பண்ணையார் வெயிலுகந்தநாதர் ஒரு ராஜா மா திரித்தான். தனக்குத் தானே ராஜா என்பதைச் சொல்லவில்லை. அக்குலத்திற்கே தனி ராஜா அவர். அத்துடன் அந்த ஊருக்கும் ராஜா தான். அவர் ஆக்கினைகள் செல்லுபடியாகும் அங்கே. அவர் பெயருக்கு ஒரு அந்தஸ்து, மதிப்பு,பயம்,பக்தி எல்லாமிருந்தன. ஆகவே அவர் தெருவில் உட்கார்ந்து போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி யாரும் ‘பேச்சு மூச்சு’காட்டப்படாது.அப்படிப் பேசிக் குறைகூறிக் கொண்டால், அது அவர் காதுக்கு எட்டக் கூடாது. அதுதான் முக்கியம். அந்த ஊர் ஜனங் களால் இம் முக்கிய விதியைக்கூடவா அனுஷ்டிக்க முடியாது!
பண்ணையாருக்கு வாழ்க்கைக் குறைவு எதுவுமில்லை. ஆனாலும் அவருக்கு வருத்தம் வருத்தம்தான். குலவிளக்காக வந்த மனைவி நோய் நொடியில்லாமல் வாழும் கட்டரசியாக இல்லையே என்று. அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்குப் பரிதாப உணர்ச்சியே மிகும். மனைவியிடம் பண்ணையாருக்கு அன்பு இல்லாம லில்லை. ஆனால் அன்பைவிட மூன்று மடங்கு அனுதாப மிருந்தது. அதை எவரும் எளிதில் உணர முடியும்.
‘சொத்து, நகை, பட்டு எல்லாம் எவ்வளவு இருந்தால்தானென்ன? அவற்றை வைத்து ஆண்டு அனுபவிப்பதற்கு வேண்டிய தேக சுகம் இல்லையென்றால் அப்புறம் வாழ்க்கையிலே என்ன இருக்கு? நாச்சியாருக்கு பிறந்த வீட்டிலும், புகுந்த இடத்திலும் இல்லாத சௌகரியம் கிடையவே கிடையாது. ஆனால் அவள் உடலிலே தெம்பு இல்லையே!’ என்ற அங்கலாய்ப்பு அவருக்கு. ‘அவள் தேகவாக்கு அப்படி’ என்று எண்ணிக்கொள்வார் அவர்.
மஞ்சளைத் தொட்டால் கூட அது கரியாக மாறிவிடு மாம். சிலர் கை ராசி அவ்விதமிருக்குமாம்! அதை அறிய வெயிலுகந்தநாதர் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் ஆசையாக வாங்கி மாலையாகத் தொடுத்த நல்முத்துக்களை நாச்சியார் ஆசையோடுதான் அணிந்து கொண்டாள்.
இளநிலவு எறியும் இனிய ஜாதிமுத்துக்கள் அவை. புதுமைப் பளபளப்பிலே மிகவும் வசீகரமாக விளங்கின. அந்த முத்துமாலையைப் பார்க்கும் யாரும் ஆசையுடன் வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு வெகுநேரம் கண்டு களிக்கவேணும் என்று எண்ணாமலிருக்க முடியாது. அழகிய கழுத்தை அரவணைத்துத் தொங்கினால் அம்மாலை யும் தானும் அதிக அழகு பெற முடியுமே என்ற எண்ணம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படுவது இயல்புதான். அழகி என்று தானே ஒவ்வொரு பெண்ணும் நம்பி வாழ்கிறாள்!
நாச்சியரம்மா ஆசையோடுதான் முத்து மாலையை அணிந்து கொண்டாள். குழிவிழுந்த தோளில், கொக்குக் கழுத்து மா திரி நீண்ட தொண்டையைச் சுற்றிக் கிடந்த முத்துமாலை அழகியின் புன்னகைபோல் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. போட்ட புதுசில் அப்படி. பிறகு நாளாக ஆக மங்கி வந்தது அப்புறமென்ன! ‘தெய்வ யானை கோயில் விளக்கு’ப் போல மினுக்குமினுக்கென்று அழுது வழிந்தது.
‘இது நல்முத்து இல்லை. அதுதான் மங்கிப் போச்சு’ என்று அடிக்கடி முனங்குவாள் ஸ்ரீமதி. பண்ணையார் எதுவுமே சொல்ல மாட்டார். அனுபவஸ்தர்களிட காட்டி அருமையான முத்துக்கள் என்று பாராட்டுப் பெற்றவைகளைத்தான் மாலையாசுக் கட்டச் செய்திருந் தார். பின்னே அவை ஒளியிழந்து போனதேன்? கட்டிப் போட்டு சரியாக ஒரு வருஷம் கூட ஆகவில்லையே!
சில முத்துக்கள் இப்படித்தான் காலப் போக்கிலே மங்கிப் போகும் போலிருக்கு’ என்று தம் மனதைச் சமாதானப்படுத்த முயன்றார் அவர். நாளுக்கு நாள் முத்து ஒளியிழந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது. அது என்ன கோளாறோ அவருக்குப் புரியவில்லை.
அன்று அதிகாலையில் எழுந்து வேப்பங்குச்சியும் கையுமாகத் திண்ணையிலமர்ந்து பல் துலக்கும் காரியத் தில் ஈடுபட்ட வெயிலுகந்தநாத பிள்ளை திடீரென முத்து மாலையைப் பற்றி எண்ண நேர்ந்தது. அதற்குரிய அவ சியத்தை உண்டாக்கியது-
வீதி வழியாகச் சென்ற ஒரு பெண்ணின் கழுத்திலே கிடந்த முத்து மாலைதான்.
மேற்கு திசையிலிருந்து கிழக்குத் திக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள். காலை இளம் வெயில் அவளுக்குத் தனிமெருகு பூசியது. ஆரோக்கியத்தின் அழகு நிலையமாக விளங்கிய அவள் உடல் உழைப்பினால் உ பதி பெற்றிருந்தது. இயற்கை வெளியிலேயே தங்கி இயற்கை வாழ்வு வாழ்கிறவள் அவள் என்பதை அவள் தோற்றமே தெரிவித்தது. நாடோடிக் கூட்ட மொன்றைச் சேர்ந்தவள் அவள். தழையத் தழையத் தழுவிப் புரண்ட பாவாடையும், மேலே தாவணியாகக் கிடந்த வர்ணத் துணியும், கூந்தலை அள்ளிச் செருகிப் ‘பங்கொண் டை’ போட்டிருந்த அழகும், சிரிப்பு தவழ்ந்த முகமும், குறு குறுத்த விழிகளும் ஒரு முறை பார்த்தவர்களின் கண்களைக் கவர்ந்து, மறு தடவையும், மற்றுமோர் முறை யும் பார்க்கும்படி செய்யும் தன்மை பெற்றிருந்தன.
துள்ளலும் துடிப்பும் நிறைந்த அந்தப் பெண் பண்ணையாரின் பார்வையையும் மனதையும் கவர்ந்ததில் வியப்பில்லை. அவர் கவனத்தை அதிகம் கவர்ந்தது அவள் கழுத்திலே கிடந்த முத்து மாலை. எதிர் வெயில் ஏற்றுத் தனி ஒளி தெறித்து மின்னியது அது. ‘அது கண்ணாடி முத்து வடமாக இருக்கும்’ என்று எண்ணினார். ‘கழைக் கூத்தாடிச்சி நிஜ முத்து மாலையா வாங்கிப் போட்டுக் கொள்ள போகிறா’ என்று று C தான்றியது அவருக்கு. ‘யாராவது பரிசாகக் கொடுத்திருந்தால்?’ எனும் சந்தேகமும் எழுந்தது.
அவர் தன்னையே வைத்த கண் வாங்காது கவனிப் பதைக் கண்டு அவள் சடக்கென நின்றாள். குறும்புச் சிரிப்புடன் என்னசாமி, ஏன் இப்படிப் பாக்கிறே?’ என்று கேட்டாள்.
இத்தகையை நேரடியான தாக்குதலை எதிர்பாராத வெயிலுகந்தநாதர் சிறிது திணறிப் போனார். பிறகு சமாளித்துக்கொண்டு ‘அந்தப் பாசிமணிமாலை பள பளன்னு அருமையாக மின்னுதே. அது மாதிரி விலைக் கிக் கிடைக்குமான்னு கேட்கலாமா என்று யோசித்தேன்’ என்றார்.
அவளுக்கு அவ்வளவு கோபம் பொங்கி வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ‘கண்ணாடிப் பாசியா? எது சாமி பாசிமணி? நீ முத்துமாலையே பார்த்ததில்லை போலிருக்கு. ஜாதி முத்து இது. இதைப் போயி கண்ணாடி வடம்கிறியே’ என்று எரிந்து விழுந்தாள் அவள்.
‘ஏ புள்ளே, ஏனிப்படி கத்துறே? முத்து மாலைக்கு இவ்வளவு பளபளப்பு எங்கேயிருந்து வந்தது?’
அவரை மேலே பேசும்படி விடவில்லை அவள். ‘ஏன் சாமி இப்படிப் பேசுறே? நல்முத்து பார்த்தாலே தெரியுமே கண்ணு பூத்துப் போச்சுதா உனக்கு? இந்தா இதைப் பாரு!’ என்று அவள் மாலையைக் கழற்றி அவரிடம் நீட்டினாள்.
பண்ணையார் அதை வாங்கிப் பார்த்தார். கையில் வைத்து உருட்டிப் பார்த்தார். கண்ணருகில் வைத்தும் எட்ட நீட்டியும் பலவிதமாகவும் கண்டு களித்தார். சந்தேகமேயில்லை. ‘ஆணிமுத்து என்பதில் கொஞ்சம் கூடச் சந்தேகமே கிடையாது. அருமையானமாலைதான்’ என்று பேசியது அவர் மனம்.
‘இது இப்பதான் புதுசாகச் செய்து போட்டதா?’ என்று கேட்டார்.
ஒயிலாகத் தலையசைத்து, நாட்டியமாடிய கண்களை மேலும் குதித்தாடச் செய்து, அமைதியென்பதையே அறியாதவள் போல் ஆடியும் அசைந்தும் நின்றுகொண் டே அவள் சொன்னாள்: ‘ஊஹூம் இது எனக்குக் கிடைச்சு ஒரு வருஷத்திற்கு மேலே ஆகுது. சிவகிரி ஜமீன்லே நாங்கள் கழைக்கூத்து ஆடிக் காட்டினபோது ஜமீன்தாரு இனாமாக் கொடுத்தாரு. அதிலேயிருந்து அது என் கழுத்திலேதான் கிடைக்குது.’
‘மங்கவே யில்லையா?’
‘மங்கவுமில்லை மாறவுமில்லை. என் மேலே கிடக்கிற முத்துமாலை எதுக்காக மங்கப் போகுது?’ என்றாள் அவள் கர்வமாக.
பண்ணையார் தன் மனைவி கழுத்தில் கிடந்த முத்து மாலை மங்கிவிட்டதைச் சொன்னார்.
எங்கே, அந்த மாலையைப் பார்க்கலாம்’ என்றாள் அவள்.
பண்ணையார் ஸ்ரீமதியைக் கூப்பிட்டார். நடமாடும் எலும்புக் கூடாக வந்து நின்றாள் அவள். கணவனின் கையிலிருந்த முத்து மாலையின் அழகொளி நாச்சியாரின் உள்ளத்தை வசீகரித்தது.
‘எங்கே பார்க்கலாம்’ என்று ஆசையுடன் கை நீட்டி வாங்கினாள்.
அவள் அணிந்திருந்த மாலையை வாங்கிப் பண்ணையார் கூத்தாடிப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் அதை நன்கு கவனித்தாள். நாச்சியாரம்மாளையும் பார்த்தாள். ‘இது ரொம்ப நல்ல முத்துதான் சாமி’ என்றாள்.
‘நல் முத்துதான். ஆனால் ஒளி மங்கிப் போச்சு. அதுக்குப் பழைய மினுமினுப்பு வர மாட்டேங்கிறதே’ என்று வருத்தமாகச் சொன்னார் அவர். ஸ்ரீமதியோ ஒளி மிகுந்த முத்துமாலையின் வனப்பிலே சொக்கி நின்றாள்.
நாடோடி மங்கை சிரித்தாள். அவள் சிரிப்பிலே கூட முத்து திரும் போலும் என்று தான்றியது அவருக்கு.
‘சாமி இந்த முத்துக்களுக்குத் திரும்பவும் பிரகாசம் வரணுமானால், இந்த மாலையை என்னிடம் கொடுத்து வையுங்க. பதிலுக்கு அந்த மாலையை நீங்களே வச்சிருங்க ஏழெட்டு மாசம் கழிச்சு நான் இங்கே திரும்பி வரும் போது முத்து எப்படி யிருக்கும்னு பாருங்க’ என்றாள்.
அவளது ஆடும் கண்களில், துடிக்கும் உதடுகளில் விழிபதித்துக் கிரங்கியிருந்த பண்ணையாருக்கு அவள் பேச்சில் சூது இல்லை என்று பட்டது. ‘அப்படியே செய்யலாமே!’ என்றார்.
‘அப்போ இந்த மாலையை நான் போட்டுக் கொள்ளலாமா?’ என்று ஆசையுடன் வினவினாள் நாச்சியாரம்மா.
‘ஆகா’ என்று தலையசைத்தாள் நாடோடிப் பெண், அவள் போவதற்கு முன்பு பண்ணையார் அவள் பெயரை விசாரித்தறியத் தவறவில்லை. பெயர் ‘சிங்காரம்’ என்று சொன்னாள் அவள். சிங்காரிக்கு ஏற்ற பெயர்தான் என நினைத்து மகிழ்ந்து போனார் அவர்.
பண்ணையார் வெயிலுகந்தநாதபிள்ளை திடீரெனவந்து போன கூத்தாடிப் பெண்ணை மறந்துவிடவில்லை. அவர் மனைவி அணிந்துகொண்ட முத்துமாலை மறந்து போகும் படி விடவுமில்லை. பளபளவென மின்னிய முத்துமாலை ஒன்றிரு மாதங்களிலேயே ஒளி குறைந்துவிட்டதாகத் தோன்றியது அவருக்கு. முதலில் அது வெறும் நினைப்பு தான் என்று எண்ணித் தன்னையே ஏமாற்றிக் கொள்ள முயன்றார் அவர். ஆனாலும் உண்மை கண்களை உறுத்தி நெஞ்சைக் குத்திக் குடைந்தது.
காலப் போக்கிலே முத்துமாலை மங்கி, நாச்சியார் முதன் முதலில் அணிந்திருந்த மாலை போலவே மாறி விட்ட டது. பண்ணையாருக்கு எவ்வளவோ வருத்தம். ‘அவள் ஏமாற்றியிருப்பாளோ’ என்ற சந்தேகமும் கூட.
‘சே, அப்படி நினைப்பதே தப்பு. நன்றாகக் கவனித் துப் பார்த்துத் தானே மா ற்றினேன்’ என்று தன்னையே கடிந்து கொள்வார் அவர். அவள் சொல்லிவிட்டுப் போனபடி திரும்பி வருவாளோ மாட்டாளோ என்ற கவலையும் பிறந்தது ‘நன்றாக இருந்த முத்துமாலை நாச்சியார் கை பட்டதும் ஒளியிழந்து போவானேன்? மந்திரமா, மாயமா? இல்லை, இவள் உடல் கோளாறு தானோ?’ என்று மனதைக் குழப்பிக் கொண்டிருந்தார் அவர்.
நாச்சியாரின் உடலைப் பற்றி எண்ணும் போதெல் லாம், வெயிலுகந்த நாதருக்குக் காலைப் பொன் வெயிலில் தகதகத்து நின்ற கட்டழகு மேனிக்காரி சிங்காரி தோற்ற மே கண்முன் நிற்கும். ‘அழகும் ஆரோக்கியமுமாக யிருக்கிறாள் அவள். இவளோ சுத்த நோஞ்சான்.எப்ப பார்த்தாலும் சீக்குதான்!” என்று முனங்குவார் அவர்.
பண்ணையார் வெயிலுகந்த நாதர் ஏமாறவில்லை. எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள். மழைகாலம், பனிக்கால மல்லாம் போய் கோடை ருமையான வெயிலுடன் முன்னேறியபோது, மரங்கள் பல இலை திர்ந்து மொட்டையாக நின்று பின் எழில் நிறைந்த இளந்தளிர்கள் தாங்கிப் புத்தம் புது வனப்புடன் மிளிர்ந்த பொழுது, விண்ணும் மண்ணும் மரங்களடர்ந்த சூழலும் பலவும் அற்புதக் காட்சிகளாக இலங்கிய நாட் களில் ஒருநாள் – பண்ணையார் வழக்கம் போல் வெயில் எங்கும் பூசிய ஒளி முலாம் கண்டு மகிழ்ந்திருந்தார்.
அவர் எதிர்பாரா வேளையிலே ‘சாமி, வந்துட்டேன்!’ என்ற களி துலங்கும் குரலில் கூவியபடி வந்து நின்றாள் சிங்காரம். திடுக்கிட்டு நோக்கிய பண்ணையார் திகைப்புற்றார். மகிழ்வடைந்தார். வியப்பினால் விரிந்த கண்களை மீட்டுக் கொள்ளாமல் அவள் வனப்பை ரசித்தபடி இருந்தார்.
‘பார்த்தியா சாமி! நீ கொடுத்த முத்துமாலை. இப்ப எப்படி யிருக்குது பாரு, தகதகான்னு அப்படியே சொக்க வைக்குதா!’என்று அவள் கூறியதுதான் அவள் கழுத்திலே கிடந்த மாலையைக் கவனித்தார் அவர். அவர் கண்களையே நம்ப முடியவில்லை. ஒவ்வொரு முத்தும் தனித்தனி நட்சத்திரம் போல் ஜொலித்துக் கொண்டிருந் தது. சிங்காரம் கூட முன்னிருந்ததை விடப் புதுமையான வனப்புடன் விளங்குவதாக நினைத்தார் அவர்.
‘சிங்காரம்,நீ பெரிய மந்திரக்காரி போலிருக்கு. இங்கே கொடுத்துவிட்டுப் போன முத்துமாலை ஒரேயடி யாக மங்கிப் போச்சு. அதனுடைய பளபளப்பெல்லாம் உன் கழுத்திலே கிடக்கிற மாலைக்கு வந்திருக்குதே. இது கூடு விட்டுக் கூடு பாய்கிற வித்தை மாதிரியல்லவா தோணுது. ஏதாவது சூனிய வேலையா சிங்காரம்?’ என்று பாதி விளையாட்டாகவும் பாதி நிஜமாகவுமே விசாரித்தார் அவர்.
‘மந்திரமுமில்லை, சூனியமுமில்லை சாமி நல்முத்து குணமே அது. தேகத்திலே பட்டுப் பட்டு, போட்டிருக் கிறவங்க ரத்தத்திலே யிருந்து சத்து ஏற்று மின்னும் ம்மா தேகத்திலே நல்ல ரத்தம் அது. உங்க வீட்டு அம்மா ே எங்கே யிருக்குது? அதனாலேதான் நல்ல முத்துக்கள் கூட மண்ணுருண்டை மாதிரி மாறிப்போகுது. நான்ஊரு சுற்றி உழைக்கிறேன். என் உடலிலே தெம்பு இருக்கு.முத்துக்கள் ஏன் மங்கப்போகுது. இந்தா சாமி உன் மாலை. இதை எடுத்துக்கிட்டு அந்த மாலையைக் கொடுத்திரு சாமி’ என்றாள்.
பண்ணையார் வெயிலுகந்தநாதர் என்னென்னவோ எண்ணினார். ரண்டு மாலைகளையும் அவளுக்கே கொடுத்து அவளைத் தன் ஆசை நாயகியாக ஆக்கிக் கொள்ளலாமே என்று கூட நினைத்தார். தன் ஆசையைச் சொல்லத் தயங்கினார். அதற்குள் அவள் அவசரப்படுத்தினாள்.
‘அந்த மாலையைக் கொடு சாமி. நான் போகணும். நான் ஊர் சுற்றுகிறவ. ஒரு இடத்திலே என்னால் இருக்க முடியாது.’ அவள் பாட்டிற்குப் பேசிக் கொண் டிருந்தாள். அவள் தன் கள்ள நினைப்பை எவ்விதமோ உணர்ந்து ட்டதனால் தான் அப்படிப் பேசுகிறாளோ என்று அஞ்சினார் அவர். உள்ளே சென்று சிங்காரத்தின் முத்துமாலையைக் கொண்டு வந்து கொடுத்தார். அவள் அதைப் பெற்றதும் துள்ளிக் குதித்தபடி போய் மறைந்தாள்.
அவள் போகும் அழகையே கவனித்து நின்ற பண்ணையார் பெருமூச்செறிந்தார். நல்ல புள்ளெ. கரளாக்கட்டை மாதிரி, கறுமெழுகிலே உருட்டித் திரட்டி யெடுத்த பொம்மைபோல இருக்கிறா. இயற்கை வெளி யிலே வாழ்ந்து வளரும் மணிப்புறா இவள். இவளே ஒரு நல்லமுத்துதான்’ என்று நினைத்தார்.மற்றுமொரு நெடு மூச்சு பொங்கி வந்தது. மீண்டும் அவர் பார்வை வீதி யிலே புரண்டபோது, வெயில் நிறைந்து கிடந்த தெரு சூன்யமாகத்தான் காட்சியளித்தது.
– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.