நர நாராயணன்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 5,097
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓவென்ற சுத்தவெளியில், இருளோ ஒளியோ தோன்றாத ஒரு பெரும் பாழில் உறங்கிய, பெயர் – உருவம்- தன்மை எதுவும் இராத பரம்பொருள் விழிப்புற்றுத் திடுமென நினைத்துக்கொண் டது. அதன் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது—’ ஆனந்தாத் ஏவ கலு இமாநி பூதாநி ஜாயந்தே’. விளையாட்டாக அந்தச்சூன்ய வெளியில் பல கோடி அண்டங்களைப் பண்ணி பறக்கவிட்டது. அந்த ‘பலூன்கள்’ சில வெடித்தன; சில அவிந்தன; சில நின்று சுழன்றன. அண்டத்திலிருந்து உண்டைகள் தாமாகவே சிதறிக் குட்டிலோகங்களாக மாறுவதைக்கண்டு பரம் பொருளான அந்த பயங்கரச் சிசுவுக்குப் பெருவியப்பாக இருந்தது. இன்னும் எந்த விதமெல்லாம் ஆகிறதோவென்று வேடிக்கை பார்த்தது.
“இவ்வளவு படைத்தோமே? எங்கோ ஒரு குறை இருக் கிறது?” என்ற நினைவு வந்தது அதற்கு. அந்த வேதனையினால் அதன் இதயத்தில் ஓரிடம் வீங்கியது. அது பழுத்த கனிபோல் விண்டு அதன் கையிலேயே விழுந்தது. அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டது, கடவுள்-சிசு. வெம்மையான மூச்செறிந்தது. இளகிய அந்த இதய உருண்டையில் அவருடைய கைரேகைகள் பதிந்தன. அணுச்செறிந்த நிலனும் அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வா காயத்தைத் தடவி வரும் காற்றும், அக்காற்றின் இடையே தலைப் பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமாக ஐந்துவகை பூத இயற்கைகள் அதில் தோன்றின.
‘பூநிலாய வைந்துமாய்ப் புனற்கணின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்’
அதுதான் நாம் இப்பொழுது வாழும் உலகு.
கடவுளுக்குப் பரம் திருப்தியாகிவிட்டது. இது மற்ற கோளங்களைப்போல் செந்நிறமாகவோ, வெண்ணிறமாகவோ இராமல் பச்சைப் பசேல் என்று கண்ணைப் பறித்தது –
‘பப்ரூம், க்ருஷ்ணாம் ரோஹிணீம்
விச்வரூபாம் த்ருவாம் பூமிம்’
சூரிய சந்திர நக்ஷத்திரங்களின் ஒளிபட்டு வானவில் நிறங்களை யும் அவ்வப்போது காட்டியது. கடவுள் – குழந்தை அந்தரத்தில் அவ்வதிசய ரசகுண்டைச் சுழற்றிவிட்டது. “சரிதான், இதைச் சிருஷ்டி செய்துவிட்டேனே, இதைப் பாதுகாக்க யாராவது வேண்டுமே? ‘” என்று பரம்பொருள் யோசித்தது.
‘அகடன் கடன் படீயஸியான (நடக்க முடியாததை நடக்க வைக்கும்) கடவுள் நினைத்தால் ஆகாதது ஒன்று உண்டோ? அவருடைய மானஸபுத்ரி வெளியே வந்தாள். அவள்தான். இயற்கை (ப்ரக்ருதி) தன் அருமைச் செல்விக்கு அந்த மணி உருண்டையைக் காட்டினார். அது நிரம்ப ஜோராக சுழன்று கொண்டிருந்தது, வானவீதியில். “எனக்குத் தா அப்பா ! என்று உதடு பிதுங்க அழுதாள் இயற்கை.
“அழாதே; அதை உனக்குத்தான் தரப்போகிறேன்’ என்ற தும் கடவுளார், தம் மகளை இப்புவியில் பிரதிஷ்டை செய்து விட்டார்.
இந்த உலகில் வந்து சேர்ந்ததும் தந்தையைக் காணாமல் ‘தர்திமாதா’ கோவென்று கதறினாள்—
“அப்பா, இங்கே எனக்கு விளையாட ஒன்றுமே இல்லையே’ பொம்மை ஏதாவது பண்ணி அனுப்பு”
தம் மானஸக்குழந்தையின் அழுகை அவர் இதயத்தைத் தொட்டது. அருள் சுரக்கும் கருணையில் மரம் செடிகளை உருவாக் கினார். அவற்றைத் தின்று வாழ விகடாகாரமான விலங்குகளை உண்டாக்கினார். ஊர்வன, பறப்பன, ஓடுவன, மிதிப்பன யாவும் காலக்கிரமத்தில் செய்து செய்து அனுப்பினார்.
மாநில மடந்தைக்கு எதை வைத்துக்கொண்டு விளையாடுவது என்று தெரியவில்லை. பிடிக்காத பொம்மையை உடைத்தெறிவாள்.
பிதாவின் குரல் கேட்டது — “பொம்மை போதுமா?”
அப்பா வேடிக்கையான பொம்மையெல்லாம் அனுப்பி வைத்தாய்….ஆனால்.. என்று இழுத்தாள் இயற்கை.
“இன்னும் என்ன?” என்றார் கடவுள்.
“ஏதோ ஒன்று வேண்டும்போல் இருக்கு. ஆனால் என்ன வென்று சொல்லத்தெரியவில்லையே ! ” என்றாள் கடவுளின் மகள்.
அவர் செய்து அனுப்பிய சாமான்கள் ஒவ்வொன்றும் அழகாகத்தான் இருந்தன. மரங்கள் எல்லாம் விசித்திரமாகப் பூத்தன. பைந்நிறக் காய்களுடன் குலுங்கின. செங்கனிகளைச் சிந்தின. விதவிதமாகப் புள்ளினங்கள் இறகு விரித்து ஆடின; தீங்குரல் எடுத்துப் பாடின. சிங்கத்தின் பிடரி, புலியின் உடற்கீற்று, மானின் விழி, யானையின் தும்பிக்கை, புல்லின் கடலின் நீலம், பனியின் வெண்மை, மேகத்தின் கருமை, அதனி டையே விளையாடும் மின்னலின் ஒண்மை எவ்வளவு இருந்தும் என்ன? கட வுளின் பெண்ணுக்கு மனசில் ஒரு பெருங் குறை இருந்து வந்தது.
“அம்மா, உன் வருத்தம் எனக்கு இப்போது புரிகிறது. இதேபோல் ஒரு சமயம் நானும் வேதனைப்பட்டேன். அதிலிருந்து பிறந்ததுதான் இம்மண்ணுலகு. என்னபண்ணுவது? கஷ்டப் பட்டுக் கண்ணீர் விட்டால்தான் எதுவும் கைகூடும்-
‘ஸ தபோ அதப்யத ஸ தபஸ்தப்த்வா
ஸர்வம் அஸ்ருஜத் யதிதம் கிஞ்ச’
இந்த மண்ணையும் உன் கண்ணீரையும் பிசைந்து உனக்கு எந்தமாதிரி இஷ்டமோ அந்தமாதிரி பொம்மை பண்ணிக்கொள் போ…!” என்றார் கடவுள்.
வழி ஏற்பட்டது; பொம்மைகளைச் செய்தாள் தர்திமாதா. எல்லாம் மனிதப் பொம்மைகளே, எத்தனையோமாதிரி; எத்தனையோ நிறம். சில குள்ளம், சில உயரம்; பூனைக்கண்கள் கொண்டவையும் இருந்தன. நீண்ட முகங்களும் அகன்ற முகங் களும் தென்பட்டன. எல்லோரையும் தன் தந்தையின் சாயலா கவே செய்திருந்தாள். தோற்றத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் யாவும் ஒரே அச்சில் அமைந்தவை. அப்பாவைக் கூவி அழைத்தாள் பூமிதேவி -“ஓடிவா! இதோ நீ சொன்ன படியே பொம்மைகளைச் செய்துவிட்டேன்….அப்பா, இவை அசைய மாட்டேன் என்கின்றன ஏன்?” என்றாள்.
தம் அருமை மகள் இயற்றிய கைவேலையைப் பார்த்துக் கடவுள் தம்மையும் மறந்து அந்த மனிதப் பதுமைகளுக்கு உயிரோடு கூட தம் அறிவின் ஒரு நுண்பொறியையும் தந்தார். அன்று தொட்டு மனித பொம்மைகள் இடம்விட்டு இடம் பெயர லாயின. யோசனைபண்ணத் தொடங்கின. நாக்கைக்கொண்டு விசித்திர மொழிகளைப் பேசலாயின.
‘ஜநம் பிப்ரதி பஹுதா விவாசஸம்
நாநா தர்மாணம் ப்ருதிவீ யதௌகஸம்’.
குட்டிக் கடவுளான இந்த மனிதர், கடல் காடு மலையெங்கும் பரவி புது மழையில் கலித்த பயிரினம் கதிருடன் ஆடுவது போலவும், இளவேனிலில் இலை செழித்துப் பூக்கும் மாஞ்செடி களைப் போலவும் எங்கும் கிளைத்துப் பெருகினர்.
கடவுளின் மகள், இம்மாநிலத்தின் தெய்வம், அப்பா என் இஷ்டம் பூர்த்தியாகிவிட்டது” என்றாள். இவளை மக்கள் பல உருவில் வழிப்பட்டனர். மாட கூடம் மலிந்த நகரங்களை எழுப்பி இவளுக்கு அணிகலமாகச் சாத்தினர். இனிய பொழிலும் நெடிய வயலும் போர்த்த கிராமங்களை உருவாக்கி இவளுக்கு மாலையாய்ப் போட்டனர். பாட்டும் கூத்துமாக மாந்தர் களிப்பெய்தினர்.
“அம்மா, உனக்கு நாங்கள் செய்யும் அலங்காரங்கள் எப்படி இருக்கின்றன ? ” என்று ஒருமுகமாகக் கேட்டனர் மக்கள்.
”பலே பேஷ். நீங்கள் எல்லாம் என் தந்தையைப் போலவே திறமை மிக்கவர்” என்கிறாள் அன்னை.
“நீதான் எங்கள் தெய்வம். அது யாரம்மா உன் தந்தை?” என்றனர் வியந்து.
இயற்கைதேவி, தாரகைகள் திரண்ட வானைக் காட்டி, “என் தந்தை புனைந்த கோலத்தை அதோ பார்த்துப் பிரமியுங்கள். வானில் சுழலும் அத்தனை லோகங்களும் அவர் இயற்றியவை” என்றாள்.
“அவர் எங்கே இருக்கிறார்? கண்ணுக்குத் தெரியவில்லையே?” என்றனர் மக்கள்.
மிகவும் சங்டமான கேள்விதான்! மனிதனுக்குத்தான் இந்த மாதிரி கேட்கத் தெரியும்! இயற்கையன்னையின் முகம் வாடியது.
“என் தந்தை இருக்கும் இடம் மனோவாக்குக் காயத்திற்கு எட்டாத ஓர் அதிசய நாடு. தூங்கும்போது என்னை அந்த இடத்தி லிருந்து கொண்டுவந்து இங்கே விட்டார். அதோ புகைபோல் தோன்றும் நக்ஷத்திரக்குவைக்கும் அப்பால்-
‘மேலோடு கீழாய் விரிந்தோன் காண்,
அந்தமும் ஆதியும் அகன்றோன்காண்,
பந்தமும் வீடும் படைப்போன் காண்,
நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்’
என்றாள்.
மண் உலகத்தவர் தம்மைக் காண விழைவதைப் பார்த்துக் கடவுளார் சிரித்தார். “என்னைக் காண ஆசைப்படுகிறீர்களா?” என்றார்.
உலகத்தவர் உள்ளத்தில் இக்குரல் கேட்டது. பெரும் கிளர்ச்சி மூண்டது. ‘கஸ்மை தேவாய ஹவிஷா விதேம’ (யாருக்கு இவ்வுணவு உரித்து) என்று வேதம் முழங்கியது.
“நான் இருக்கும் இடத்திற்கு வர உங்களுக்கு வழி தெரிய வில்லையா? ” என்றார் கடவுள்.
“ஆமாம், ஆமாம்” என்று மனித இனம் இருளில் தடுமாறியது. தெய்வீகக் குரல் வரும் திசை தெரியவில்லை.
“இதோ காட்டுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில் தான்” என்றார்.
“என்னவோ?” என்று ஏங்கியது மனித உள்ளம்.
“முதலில் உங்களையே நீங்கள் அடக்கியாளுங்கள். வென்று வாருங்கள். என் நாட்டுக்கு வர வழி திறக்கும்” என்றார்.
“அந்த அமோக சக்தி எங்களிடம் ஏது?’ என்றது மனித வர்க்கம்.
“உங்களிடமே மறைந்து இருக்கிறது, வெளிப்படுத்துங்கள்” என்றது கடவுள் வாணி.
மனித இனம் கடவுளின் திருவாசகத்தை வேறு விதமாக விபரீதமாகப் புரிந்துகொண்டது. மக்களிடையே யுகங்கள் தோறும் பெரும் பூசல் மூண்டது. குருதி வெள்ளம் உலகை மாசு படுத்தியது. ஜாதிப்போர், சமயச்சண்டை, உரிமைப் போட்டி, கடைசியில் நிறச்சண்டை ஒவ்வொன்றாக எழுந்து மனித சமுதாயத்தை அலைத்து உருக்குலைத்தன. சகடக்கால் போல் நீதியும் அநீதியும் மாறிச் மாறிச் சுழன்று வந்தன. ஊர்கள் பிணக்காடாயின. எலும்பு மேடுகள் மீது அழகிய நகரங்கள் தோன்றின. மக்கள் குலம் அழிவதும் தோன்றுவதுமாய், அரசர் கள் அட்டகாசம் புரிவதும் மஹாபுருஷர்கள் அமைதி தருவதுமாய் விரைந்தது காலம்.
யாருக்கும் எட்டாத இடத்தில் பரமன் வெறும் ஸாக்ஷிபூத் மாக இதையெல்லாம் கவனித்து வருகிறான்.
திடுமென ஒரு இடிக்குரல் உலகைக் குலுக்கிப் போடுகிறது. வல்லான் ஒருவன் வெற்றிக் கோலத்துடன் கடவுளை எள்ளி இதோ உன்னைவிட நான் எவ்வளவு பெரியவன், எவ்வளவு பலசாலி! என்னைப்பார்த்து நடுங்கு” என்று இரைகிறான்.
கடவுள் தனக்குள் சிரித்துக்கொண்டார்- “ அட அல்பாயுசே ! »’
“என் எதிரே பிரத்யக்ஷமாகுவாய்… ஒருகை பார்ப்போம்” என்றான் வல்லான்.
அண்டமெல்லாம் குலுங்கும்படி ஒரு நகைப்பு கேட்டது. ”நான் எங்கும்தான் வியாபித்து இருக்கிறேன். உன் ஊனக் கண்களுக்குத் தெரியாது. உன் அகத்திலும் புறத்திலும் பரவி இருக்கிறேன். உன் அகந்தையிலும் நான் குடிகொண்டு இருக்கிறேன்.
‘அஹமஸ்மி.’ என்னைக்காணவேண்டுமானால் மனிதன் தன்னைத் தானே வெல்லவேண்டும். இதுவே அதன் மர்மம்’ என்றார்.
‘ஹா ஹா, ஐயோ ஐயோ ‘ என்று உலகமே அரற்றியது. வல்லான் வாளையுருவி பெரும் எலும்புக் குவைக்கு மேல் நிற்பதைக் கடவுள் கண்டார். அவன் கீழே உலகமே நொறுக்குண்டு துளித் துளியாக நசுங்கியது. மனிதர் அவனையே கடவுளென வணங்கினர்.
“ஓய் கடவுளே! இப்போது பாரும். யார் பலசாலி, நீயா, நானா?” என்றான் வல்லான்.
“சரிதான், மனிதர் உண்மையில் இதை ஒப்புக் கொள் கிறார்களா? அவர்களை நீயே கேள்” என்றார் கடவுள்.
வல்லான் சீறியெழுந்தான். “உங்களில் யார் என்னை வழி படாதவன்?” என்று கர்ஜனை புரிந்தான்.
“எவரும் இல்லை, எவரும் இல்லை” என்றது மனிதன் நாக்கு. ஆனால் அவன் உள்ளம் மட்டும் இதை மறுத்தது.
கும்பலில் ஒரு குரல் தெளிவாக, ”நான் உனக்குத் தோற்க வில்லை” என்றது.
“யாருடைய குரல் அது ?’ என்று வல்லான் துள்ளிக் குதித்தான்.
“எங்கள் உள்ளத்தின் குரல். கடவுள்தான் அங்கிருந்து பேசுகிறார்” என்றது அதே குரல்.
“ஆ! தெரிகிறது எல்லாம். அந்தக் கடவுளின் சூழ்ச்சிதான். அந்தக் கடவுளையும் ஒரு கை பார்த்து விடுகிறேன். அடிமைகளே, அவனிடம் முறையிட்டுக் கொண்டீர்களா ? இதோ புழுவை நசுக்குவது போல் உங்களைக் கூழாக்கி விடுகிறேன்” என்றான் வல்லான்.
“இல்லை” என்றான் வல்லான்காலில் குழைபடும் ஓர் வீரன்.
“என்ன இல்லை?”
“இது கடவுளின் சூழ்ச்சியன்று. இதோ பயமின்றிக் கூறு கிறேன். என் உள்ளத்தில் எழுந்த உறுதி இது. நான் உனக்குத் தோற்கவில்லை” என்றான் அவ்வீரன்.
“ஜாக்கிரதை” -அணுகுண்டுபோல் வல்லானுடைய குரல் வெடித்தெழுந்தது.
“நாங்கள் அடிமையல்ல, அடிமையல்ல” என்ற ஓசை காற் றொலியில் கேட்டது.
சுற்றுமுற்றும் நோக்கி வல்லான், “யார் அது?” என்று பாய்ந்தான்.
கடவுள் ஏழைப் பங்காளனாக நின்று, “மனித உள்ளத்தின் அறைகூவல் இது; வேறில்லை” என்றார்.
“சரி, இவர்கள் உயிரை வதைப்பதோடு உணர்வையும் ஒடுக்கி ஆளப் போகிறேன் பார்!” என்று சவால் கொடுத்தான் வல்லான்.
அப்போது கடவுள் இடி இடியென்று நகைத்தார். இருண்ட வானிடையே நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன. பாரின் முதுகு நெளிந் தது. கடல் ஸிம்ஹாநந்த தாளம் கொட்டியது. வல்லவனுடைய கொடிய அடக்குமுறை தாண்டவமாடியது. மனிதர் உள்ளத்தில் குருத்துவிட்ட கொள்கைகளை இனவெறி பிடித்தவன் நசுக்க முயன்றான். சுதந்திர தேவதை குகைக்குள் பதுங்கிக் கொண்டாள். இருந்தும், நாற்றிசையும் “அச்சமில்லை, அச்சமொன்று மில் லையே!’ என்ற சப்தமே பேரிகைபோல் முழங்கியது. இது வெஞ் சிறையில் வாழும் சாத்வீகர்களின் இதயகீதம்! வரவர அந்த கோஷம் வலுத்தது. வல்லான் நெஞ்சினுள்ளும் திகிலை மூட்டி யது ; அவன் உடலை நடுக்குறச் செய்தது.
“இதோ என் கடைசி தண்டனை உங்களுக்கு” என்று கச்சை யைக் கட்டிக்கொண்டு எழுந்தான்.
“அச்சமில்லை, அச்சமில்லை” என்றான் அந்த சாத்வீகவீரன் சிறைக்குள்ளிருந்து.
வான், வையம், விரிகடல் எங்கும் இந்தத் தைரிய நாதம் எதி ரொலித்தது. எந்நாட்டினரும் இந்த மந்திரத்திற்குச் செவி சாய்த்தனர். அடிமை மக்கள், அடக்கப்பட்டோர், அகதியாக அழுவோர் உள்ளத்தில் நம்பிக்கைச் சுடரைக் கொளுத்தியது. இருள் விலகி உதயமாவதைக் காட்டும் பறவையின் குரல் போல் அஞ்சேல்!’ என்ற வாக்கு எவர் உள்ளத்திலும் பதிந்தது.
மக்கள் திரளாக எழுந்தனர். இன்முகமாக,
“இருளினின்று ஒளியை அடைவோம் ;
பொய்யிலிருந்து மெய்யினைக் கண்போம்;
மரணத்திலிருந்து அமரநிலை எய்துவோம்”
என்று பாடிக் கொண்டே தியாகத் தீயில் குதித்தனர்.
சிறைக் கூடங்கள் முறிந்தன. இரும்புத் திரைகள் விலகின. ஏகாதிபத்யத் தளைகள் விண்டன. வெற்றியை நோக்கி வீரர்கள் விரைந்தனர்.
வல்லான் எழுப்பிய அகந்தைக் கோட்டை தகர்ந்தது. யுக புருஷன் முன்னணியில் சென்றான். அவன் வேய்ங்குழல் அஹிம்சை ராகத்தை ஊதியது. படமெடுத்த அதிகார வர்க்கம் பணிந்து விட்டது. இன்றும் இருக்கிறதே கடைசிக் காட்சி பெரிய சோதனை, வகுப்புவாதம் வீறிட்டெழுந்தது. நாடுகள் கூரிடப் பட்டன. அன்பு நெறியில் செல்ல எல்லோரையும் அழைத்தான் சாத்வீகவீரன். வகுப்புவாதம் அவனைச் சுட்டது.
“இப்பொழுதாவது சொல் – நீ தோற்று விட்டாயா?”
“இல்லை.”
மறுபடியும் சுட்டது!
“இல்லை.”
மூன்றாவது முறையும் சுட்டது!
“இல்லை”- அப்பொழுதும்.
உலகத்தவர் ஒன்று கூடினர் ; இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தனர்; விழி நீர் பெருக்கினர்.
“உனக்கினி யம பயமேது? “
என்று ஒருவன் பாடினான்.
”யார் நீ?” என்றான் முடி தாழ்ந்த வல்லான்.
“பாட்டுக்கோர் புலவன்!”
“அப்படி யென்றால்?”
“அதுவா, நான் புதுமையைச் சொல்லும் குடுகுடுப்பை ஆண்டி,’”
“எதற்காக இந்தப் பாட்டு?”
“உடல் அழிந்தாலும் உயிர் அழியாது. இப்பெரு வெற்றி யால் மனிதர் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பீதி, அவநம்பிக்கை அசூயை யாவும் விலகின.”
வல்லான் கையிலிருந்து கொடிய அஸ்திரம் மண்ணில் விழுந் தது. அவனுக்கு என்புவரை நடுங்கியது.
ஓர் அபூர்வமான சுடர் தரையில் கிடக்கும் சாத்வீகப் போர் வீரன் மீது வட்டமிட்டது. மெல்லிய குரல் கேட்டது – ஹே ராம்! – நீ எங்கே–எங்கே!!
“தத் த்வம் அஸி – உள்ளத்தில் என் குரலைக் கேட்டவன் நீ ஒருவனே. அன்பு நெறியில் சென்ற உனக்கு நான் சிக்கினேன். உன் மூலமாக என்னை அடையும் வழியை மாந்தருக்குக் காட்டி னேன்” என்றது கண் காணாத குரல்.
உயிர் துடிக்கும் அந்தச் சாத்வீகவீரன், “அடுத்து ஒரு வேண்டுகொள், என் இதய ரத்தத்தை உன் விரலால் தொட்டு இந்த மாநிலத்தாயின் பாழும் நெற்றியில் அழியாததோர் திலகம் இடு..இவ்வளவு தான் என்றதும், சுடர்வட்டம் மறைந்தது.
இந்த அஹிம்சையின் சின்னம் லோக ஜனனியின் அம்சமான இந்தியத்தாயின் திருநுதலில் என்றென்றும் ஜொலிக்கும்!
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.