நயினப்பன் அக்கரைக்கு போகிறான்!

0
கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2025
பார்வையிட்டோர்: 5,295 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ரொம்பவும் பழைய காலத்து லயம். ஒரு வரிசையில் பத்து  ‘காம்பிராவும்’ ஒரு நீண்ட பொதுவான இஸ்தோப்பும் (Verandah) 

கட்டப்பட்டிருந்தன. கூரைத் தகரத்தில் ‘தார்’ (Tar) பூசப்பட்டு கன்னங்கரேலென்று காட்சி தந்தது. செப்பனிடாத கற்களால் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன. பின்புறச் சுவரில் ஒவ்வொரு அறைக்கும் சிறு சிறு ஜன்னல்கள் இருந்தன. துயரத்தைப் பிரதிபலிக்கும் ஓர் மங்கலான பழுப்பு நிறத்தில் அந்த லயத்து அறைகள் காட்சி அளித்தன. 

சிலர் அவைகள் பேய்கள் நடமாட்டமுள்ள இடங்கள் என்றார்கள்! அங்கு குடியிருப்போர் எல்லோரும் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ‘கோடங்கி’காவல்காரன் ‘கூடை பின்னுகிறவன்’ நயினப்பன் கங்காணி ஆகியோர் அவர்களில் குறிப்பிடக் கூடியவர்கள். 

கூடைக்காரனைத் தவிர மற்ற எல்லோரும் அதிகாலையில் வேலைக்குப்போய் அந்திக் கருக்கலில்தான் வீட்டுக்கு வருவார்கள். 

அவர்கள் எல்லோரும் கடுகதி ரயில் பயணம் செய்யும் பிரயாணிகளைப் போல ‘பட்டாப்பரியாக’ இயங்கிக்கொண்டிருந்தார்கள். 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் ‘வேண்டா வெறுப்பாக’ சக மனிதரோடு நெருங்காமல் ‘ஒட்டி உறவாடாமல்’ பழக்கமின்றித் தனித்தனியே வாசம் செய்தார்கள். 

-கூடைக்காரன் 

அந்த லயத்து வாசலில் உட்கார்ந்து கூடை பின்னிக் கொண்டிருந்தான். ‘லைசன் கல்’ பாவிய வாசல் முற்றம் ‘நீர்’ குப்பைக் கூழங்கள் நிறைந்த கானின் வீச்சம், துர்நாற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாத கூடைக்காரன் மூக்கினால் ஒரு பழங்காலத்துப் பாடலை நொய், ஙொய், என்று முனகிக்கொண்டிருந்தான். அவனது மனமும் ஆத்மாவும் அவன் பின்னிக் கொண்டிருக்கும் வெற்றுக் கூடையில் லயித்திருந்தன. 

தொழிற்சாலைக் காவல்காரன் 5 மணி வரை அந்தப் படங்குக் கட்டிலில் குறட்டை விட்டுக் கொண்டிருப்பான். கோடங்கிக்காரன் ராத்திரி நேரத்தில் தான் தனது ஓய்வு நேரத்தை உபயோகிப்பான். உடுக்கை எடுத்தவன் காத்தவராயன் கதைப்பாடலை ஓங்காரமான குரலில் பாடிப்பாடி உடுக்கை அடிப்பான். 

இந்த விசித்திரமான சனங்கள் மத்தியில் நயினப்பன் கொஞ்சம் தனித்துவமாக விளங்கினான். அவன் அவனுக்காகவும் தன் மனைவிக்காகவும் என்று வாழப்பழகிக் கொண்டவன். நயினப்பனுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும். 

பழுப்பு நிற ராணுவ கோட்டை உடுத்தியிருப்பான். சிவப்புத் தலைப்பாகை ‘வாடி வதங்கித் தொங்கும் மெல்லிய கிருதா மீசை’ காதில் மங்கிய சிவப்பு நிறக் கல் பதித்த ஒரு ஜோடி கடுக்கன் இத்தியாதியாக நயினப்பன் தோற்றமளிப்பான். கணுக்கால்களுக்கு மேலே ‘வேட்டித்துண்டு’ அது எந்தக் கவலையுமின்றி அக்கடாவென்று அவன் உடம்போடு ஒட்டிக்கிடக்கும். அது வெள்ளை நிற வேட்டியா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது! 

நயினப்பன் மனைவி கருப்பாயிக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். ஒல்லியும் நெட்டையுமானவள். மூர்க்க குணமுள்ளவள். சிவப்பு நிறச் சேலையில் அதிக நாட்டம் கொண்டவள். 

நயினப்பன், வேலைக் காட்டிலும் சரி வீட்டிலும் சரி யாருடனும் தர்க்கத்துக்கோ சண்டைக்கோ போனது கிடையாது. தானுண்டு தன் வேலை உண்டு என்று ‘சிவனே’ என்றிருப்பவன். சண்டை சச்சரவுகளில் இருந்து எப்படி ஒதுங்கியிருக்க வேண்டும் என்று அறிந்திருப்பவன். வீட்டில் மனைவியோடு ஏதாவது சண்டை சச்சரவு மூண்டுவிட்டால் ‘சும்மாப் போடீ ஒன்னுக்கும் உதவாத பொம்பளை!’ என்று அவன். வேலையோடு ஒதுங்கி நின்றுகொள்வான். 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொந்தரப்பு காட்டுக்கு புல்லு வெட்டப் போய்விடுவான். ஐந்தாறு பையன்களைச் ‘சும்மா ஒதவிக்கு வாங்கடா’ என்று புல்லு வெட்டுக் காட்டுக்கு கூட்டிக்கொண்டு போவான்.’ 

கொந்தரப்பு காட்டில் ‘அஞ்சஞ்சி’ ‘ரஸ்க்’ விஸ்கோத்தும் காட்டுத் தண்ணீரும் தான் பகல் சாப்பாடு! ஐந்து மணிக்கெல்லாம் கொந்தரப்பு காட்டு வேலை முடிந்து வந்ததும் ஆளுக்கு ஐந்து பத்துச் சதக் குத்திகளைக் கொடுப்பான். ஐந்து எண் அவனது அதிர்ஷ்ட எண்ணாகும்! 

நயினப்பன் வீட்டுக்கு ஒரு நாள் அவனது மகளும் மருமகனும் ‘விருந்தாளி’யாக வந்திருந்தார்கள். 

இவர்கள் இரண்டு நாட்களுக்கு மேலாகத் தங்கிவிட்டால் ‘குடும்ப பட்ஜட் ஏறிப்போகுமே’ என்று நயினப்பன் யோசித்தான். 

உடனே மருமகனை கொந்தரப்பு காட்டுக்கு ‘சும்மா வாங்க மாப்பிள்ள காட்ட சுத்திப்பாத்திட்டு வருவோம்’ என்று கபடமாக இழுத்துச் சென்று புல்லு வெட்டு வேலையை முடித்துக்கொள்ள திட்டமிட்டான். 

நயினப்பன் புல்லு வெட்டும் சொரண்டிகளை சுனைப்பாகத் தீட்டி எடுப்பதற்குப் புறப்பட்டான். ஒரு துண்டு கோச்சு ரோட்டு இரும்பு அவனிடம் இருக்கிறது. அந்த இரும்புத்துண்டு மேலே சுரண்டியை வைத்து இருப்பக்க ஓரங்களை சுத்தியலால் ஒங்கி ஒங்கி தட்டினான். ‘கிளிங் கிளிங்’ என்று தாள இசைகளோடு சுரண்டிகள் கூர்மையாகின. 

சுரண்டியைத் தட்டிக் கொண்டே வீட்டுக்குள்ளே இருக்கும். வெற்றிலைப் பெட்டியை நினைத்தான். அந்தச் சிறிய தகரப்பெட்டிக்குள் வெற்றிலைகள் இருந்தன. நேற்று ராத்திரி ஒரேயொரு வெற்றிலையைத்தான் போட்டான். இவ்வளவு நேரத்துக்குள் கருப்பாயி, மகள், மருமகன், மூன்று பேரும் சேர்ந்து பன்னிரண்டு வெற்றிலைகளை முடித்திருப்பார்கள்…! வெற்றிலையை நினைத்தவனுக்கு திடீரெனச் சுருட்டுக் கட்டு ஞாபகம் வந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே ஒரு கட்டுச் சுருட்டு வாங்கி வைத்திருந்தான். 

அவன் தினசரி சுருட்டுக் குடிக்கமாட்டான். அவசர தேவைக்காக மட்டுமே மிக மிக அபூர்வமாக எடுப்பான். இப்போது….. மருமகன் வந்ததிலிருந்து கொஞ்சம் பயம்… 

கொந்தரப்பு காட்டுக்கு போவதற்கு நேரம் ஆகிவிட்டது. சகல மரியாதையுடன் மருமகனை கூப்பிட்டான். ‘தம்பீ! கொந்தரப்பு காட்டுக்கு போயிட்டு வருவங்களா? என்றான். 

மருமகன் புறப்பட்டான் மகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். முழு நாள் வேலை முடிந்தது. அந்தியில் வந்த நயினப்பன் ரொம்பவும் சந்தோஷப்பட்டான். ‘என்னா இருந்தாலும் சொந்த பந்தங்க வந்துப்போகணும்…… கொஞ்சம் வெத்தல…… செலவு போறது பெரிய காரியமில்ல!’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டான். 

அவர்கள் எல்லோரும் அந்திக்கு ஆறு மணிக்குத்தான் பகல் சாப்பாட்டை முடித்தார்கள். ராத்திரிச் சாப்பாடு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும்….. பொழுது போய்விடும். அங்கேயும் சிக்கனம்தான்! 

நயினப்பன் கருவாடு துண்டுகளைக் கவனித்தான். அவைகள் சரி சீராக வெட்டப்படாமல் பெரிசும் சிறுசுமாக வெட்டப்பட்டிருந்தன. இது மாபெரும்…… குற்றம்….. வீண்விரயம்…… செலவு…… என்று முணுமுணுத்தான். அவன் பாஷையிலேயே பொஞ்சாதியைக் கூப்பிட்டு புரிய வைத்தான். 

‘என்ன பொம்பளை! கருவாடு……. துண்டெல்லாம் வாயைவிட பெரிசா இருக்கு!’ 

அப்பனின் கஞ்சத்தனத்தைப் பற்றி தாயைவிட மகளுக்கு நன்றாகத் தெரியும். 

‘யம்மோவ்! அப்பாவுக்கு பெரியத்துண்டை குடுக்கலாமா? அவருக்கு பல்லெல்லாம் ஆட்டம் கண்டிருச்சி …… மருமகனுக்கு பெரியத்துண்ட போடு’ என்றாள். 

நயினப்பன் மனதுக்குள் எரிந்து சாம்பலானான்……. அவனது தத்துவம் திடீரென்று பேசியது. ‘அதுதான் சொல்லுவாங்க……. அளவுக்கு மீறினா அமிழ்தமும் நஞ்சு……. தெரியுமா? என்றான் ஆத்திரத்தோடு……. 

முடிந்த மாதம் வீட்டுக்கு ‘செலவு’ எடுத்து வந்தபோது……. கருவாடும் வாங்கி வந்திருந்தான். முழு கருவாட்டையும் வெளிச்சத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்து பார்த்தான். கருவாட்டின் பரப்பளவு, சதைத்துண்டின் தடிப்பம் எல்லாவற்றையும் எடைப்போட்டான். 

அவனுக்கு நன்றாகத் தெரியும்……. அதில் எத்தனை துண்டுகள் வெட்டலாம் என்று மனக்கணக்கு வைத்திருந்தான். அந்த முழு கருவாடு ஒரு மாதம் வரை தாக்குப்பிடித்திருக்கும்! 

இவ்வாறு நயினப்பன் கருவாட்டுத் துண்டுகள் மூலம் வாழ்க்கையைக் கணக்கிட்டு……பல ஆயிரங்களை சேமித்து வைத்திருந்தான். கருமியாக இருந்துகொண்டு அவன் தன்னையும் தன் மனைவியையும் கொள்ளையடிக்கின்றான் என்று அவன் ஒரு போதும் நினைக்கவில்லை தன்னுடைய சேமிப்புக்கு எந்தவித பங்கமும் நடந்து விடக்கூடாதென்று மிகமிகக் கண்ணும் கருத்துமாக இருந்தான். 

அவன் யாரிடமும் நட்பும் சகவாசமும் செய்து கொண்டது கிடையாது. இவையெல்லாம் வீண்செலவுக்குச் காரணமாகும்…..அவன் யாத்திரை போனது கிடையாது. சொந்த பந்தங்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டது கிடையாது. தேனீர் கூட அருந்தியதில்லை. 

பச்சைக் கருமியாகவே வாழ்க்கையைத் தள்ளினான். 

காலம் கடந்தது……. 

நயினப்பனுக்கு அறுபது வயது முடிந்துவிட்டது தோட்ட நிர்வாகம் அவனை ஓய்வு பெற வேண்டுமென்று வேலையிலிருந்து நிறுத்திவிட்டது. 

பென்சன் பணத்தை அக்கரைக்குப் போய் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை செய்து கொடுத்து அவன் பணத்தை பத்திரமாக சொந்த கிராமத்தில் போய் சேர்ந்துக் கொள்வதற்கு வழியை ஏற்படுத்தி கொடுத்தது. 

நயினப்பன் தன்னுடைய உடைமைப் பொருட்களையெல்லாம் ஒரு பழைய தகரப் பெட்டியில் அடைத்துக் கொண்டான். 

நயினப்பனை வழியனுப்புவதற்கு அவனது சகபாடிகளில் ஒருவராவது ரயில் நிலையத்துக்கு செல்லவில்லை. 

அவனை வாழ்த்தி ஆசீர்வதிப்பதற்குக் கூட எவரும் முன்வரவில்லை. நயினப்பன் கவலையில் ஆழ்ந்தான். அவனது மனைவி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்கோ அவளது துக்கத்தை பகிர்ந்துகொள்வதற்கோ யார் முன்வந்தார்கள்? 

அவர்கள் அந்த லயத்து அறையில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். அவர்களது பிரிவு…… தாங்கிக்கொள்ள முடியாதது. 

நயினப்பன் அக்கரைக்குப் போய் ஒரு மாதம் முடிந்துவிட்டது. 

ஒருநாள்……. அந்திநேரம்……. 

அடுத்த தோட்டத்திலிருந்து நயினப்பனின் மகள் தலைவிரிகோலமாக ஓடி வந்தாள். மார்பில் அடித்துக் கொண்டு பூட்டிக் கிடந்த வீட்டுக்கதவில் தலையை இடித்துக் கொண்டு கதறினாள்……. 

“இடி வந்து விழுந்ததென்ன எங்க 
அப்பனாரு வாசலிலே 
இடி வந்து விழுந்ததென்ன…… 
காத்தோடு போன தொங்க மூச்சு அத 
கைக்கோத்து புடிக்க
முடியலியே சாமீ!
பேசுங்க அப்பாவே! 
என் ராசாவே!
நீங்க குடி போன 
வீட்டுக்குள்ளே இருந்து 
பேசுங்க ராசாவே…!’ 

அவள் மூடிக் கிடந்த வீட்டுக் கதவை கைகளால் அடித்துத் தலையால் முட்டி மோதிப் புலம்பினாள்……. 

அவளுக்கும் அங்கே ஆறுதல் சொல்வதற்கு எவரும் இல்லை. 

பாவம்…… அக்கரைக்குப் போன நயினப்பன் தன் சொந்தக் கிராமத்தில் இறந்துவிட்டான் என்று தகவல் வந்திருந்தது.

– ஆங்கில தொகுதி: Nainappen goes to coast, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *