நன்றே செய்யும் நாயகன் இருப்பு
நித்யா வழமை போலவே, மனதினுள் ஆழப் பதிந்து போயிருந்த படிப்புக் கனவுடனேயே அந்த வாசிகசாலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள் அங்கு வந்திருப்பது கூடப் பிறரைப் போல புறம் போக்காக பொழுது கழிக்கவல்ல அந்த வாசிப்புக் கலை கூட வெறும் அனுபவம் மட்டுமே அவர்களுக்கு இதையும் தாண்டி வெற்றி வானிலே பறக்க, அறிவு ஆளுமைத் திறன் மேம்பட, இந்த வாசிகசாலையையும் ஒரு தவச் சாலையாகவே உணர்ந்தவள் அவள். வாசிகசாலை நூலகர் அவள் வருகையை உணர்ந்தவுடன் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தவர், நிமிர்ந்து பார்த்து அவளைக் கேட்டார்.
என்ன நித்யா? கதைப் புத்தகம் வாசிக்கவே வந்திருக்கிறாய்?
சேர்! நான் அதுக்கு வரேலை. நான் அதெல்லாம் வாசிக்கிறேலை எனக்கு படிப்பு முக்கியம்.கணிதத்திலை சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கு. இஞ்சை அதைக் கண்டு பிடிக்க எதும் புத்தகம் இருக்கா என்று தேடிப் பாக்கத்தான் இப்ப நான் வந்தது.
நீ இப்ப என்ன படிக்கிறாய்?
அட்வான்ஸ் லெவல் ஏ எல் படிக்கிறன் சேர் கணிதத் துறை தான் படிக்கிறன் அவர் அதைக் கேட்டு முகத்தை சுழித்தார் அவரும் ஒரு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர் தன்னை ஆசீர்வதிப்பார் என்று அவள் எதிர்பார்த்தற்கு மாறாக எதிர்மறையாக அவர் கூறிய பதில் அவளைத் திடுக்கிட வைத்தது.
அதைப் படிச்சால் அவ்வளவு தான் நீ, உன்ரை மூளை இறுக்கிப் போடுமே!
அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று கூறியவாறு அவள் படிப்பில் மூழ்கினாள். பிறகு அடியோடு அதை அவள் மறந்தே போனாள் படிப்பு படிப்பு அது ஒன்று தான் அவள் உலகம் அப்படியிருந்தவளுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை உலகமே தடம் புரண்டு விட்ட நிலை தான்.
அந்த நாள் மிகக் கொடிய நாள் ஒரு வேளை அவள் ஆன்மீக ஞானம் அடைந்திருந்தால், இந்த விபரீதம் நடந்திருக்காது. இதைக் கற்றுக் கொடுக்காமல் விட்டாது யார் குற்றம்? அவள் அம்மா மீது தான் இதற்கும் பழி போடும் இந்தப் பாவி உலகம். ஆனால் நடந்துது என்ன? அன்று நடேசு வாத்தியார் கூறிய ஒரேயொரு சொல் அவரின் பாழாய்ப் போன வாய் முகூர்த்தம் அன்று அவர் வேதம் சொல்லியிருந்தால் அவள் தலை மீது பூமாரியே பொழிந்திருக்கும். அவள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாள். மாறாக அவள் வாழ்க்கையே தொலைந்தது, பள்ளியில் ஒரு சின்ன மனக் குழப்பம் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலே தான் அவளின் படிப்புத் தவம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்தத் தவத்துக்கு இடையூறாக சாபமிட்டுச் சபித்தது போல் அந்தக் குரு மொழி. ஓர் ஆசானாக இருந்து வழி நடத்த வேண்டிய ஒரு வாத்தியாரே இப்படித் தடம் புரண்டு போனால், வேதம் கூறாமல் விட்டால் மொத்த மாணவ சமூகமே, குடி மூழ்கித் தான் போகும்.யார் எப்படிப் போனாலென்ன. வாய்க் கொழுப்புக் கொண்டு பேசுகிறவர்களுக்கு,. அன்பு வழிபாடு என்பதே, இங்கு தோற்றுப் போனமாதிரித்தான் ஒரு மனிதனின் மகா மோசமான நடத்தைப் பிற்ழ்விற்கு ஒரு முன்னுதாரணமாகவே, நடேசு வாத்தியார் இருந்திருக்கிறார். அவர் கூறிய அந்தக் கதையை ஏதோ ஒரு ஞாபகத் தில் வாய் தவறி அவள் அம்மாவிடமே சொல்லி விட்டாள். காலமெல்லாம் பாவிகளை எதிர்மறை பேச்சோடு எதிர் கொண்டே கழுவாய் சுமந்து அவள் இதைக் கேட்டு வெகுவாக நொந்து போனாள்.
அவள் திருமணமே இப்படியான ஓர் எதிர்மறை சங்கதி தான்.அதன் பிறகு சதா தீக்குளிப்புத்தான்.சாந்தி இழப்புத் தான் அன்பு நெறியும் அறிவு ஆளுமைத் திறன் கொண்ட புரிதலும் ஒருவரிடம் இல்லாமல் போனால் என்ன நடக்கும்.?அவளின் திருமண வாழ்க்கையென்ற நிழல் நாடகத்தை அறிய நேர்ந்தால், அவள் முழுவதுமாய் கழுவாய் சுமந்து இறந்து விட்டதே நிதர்ஸனமாய் தெரிய வரும்.நல்ல வேளை. அவள் இறந்ததெல்லாம் மனசளவில் தா.ன். அதையும் தாண்டி, உள்ளே ஒரு சாட்சி புருஷனாக ஒரு பார்வையாளனாக, இன்னும் அவள் இருக்கிறாளேயென்றால், இது யார் கொடுத்த வரம்? அவ்வப் போது அப்பா மட்டும் வேதம் சொல்லி,அவளை வழி நடத்தியிர்க்காவிட்டால், நடந்த கொடுமைகளுக்கு என்றோ அவள் பஸ்பமாகி விட்டிருப்பாள். இன்றும் அந்த வேதம் தான் அவளைக் காக்கிறது.
நித்யாவின் கதை வேறுவிதமாக முடிந்து போனதே..அதுவும் இலங்கையில் அப்போது யுத்த காலம், அவள் கல்லூரி போய் வர பஸ் கூடக் கிடைக்காது. அவள் படிக்கும் கல்லூரி யாழ் இந்து மகளிர் கல்லூரி. எத்தனை கனவுகளுடன் அங்கு போயிருப்பாள் அவள். அவள் வாழும் ஏழாலை கிரமத்திலிருந்து,, அது எட்டு மைல் கல் தூரத்திலிருந்தது..இவ்வளவு தூரம் சைக்கிள் ஓடிப் போக, அதுவும் நோஞ்சான் உடம்பை வைத்துக் கொண்டு அவள் என்ன பாடுபட்டிருப்பாள்.. இந்தப் பாழாய்ப் போன படிப்பு ஆசை மட்டும் வந்திருக்காவிட்டால், இந்தச் சரிவும் தான் அவளுக்கு நேர்ந்திருக்குமா?எல்லாம் படிப்பால் வந்த வினை. பாவம் வந்து வேரறுக்கிற இந்தக் கொடுமையை, யாரால் தான் நிவர்த்தி செய்ய முடியும்? எப்படி அந்தப் பாவ முதலை வந்து வாய் பிளந்து அவளை விழுங்க நேர்ந்தது? அழகு மாயமான ஒரு உலகம். அவள் கண் எதிரே, காட்சி கொண்டு நிற்கிறதே! அதைக் கூடப் படிப்புத் தவத்தில் மூழ்கி, அவள் கண் கொண்டு பார்த்தறியாள். அப்படி இருந்தவளுக்கு என்ன நேர்ந்து விட்டது.? இதோ அந்தக் காட்சி உலகம். அவள் சூழ்ந்து படிக்க வந்த மாணவியர்க்கு அதுவே உலகமாகி விட்டிருந்தது. அழகு தேவதைகளுக்கு மார்க் போட்டு அதையே வரிசைப் படுத்திப் பேச முனைகிற அவர்கள் முன்னால், பாவம் நித்யா எப்படித்தான் எடுபடுவாள். அவள் வெறும் நிழற் பொம்மை. காட்சிக்கு ஒவ்வாதவள்
ஒரு நாள் அவள் காலை வகுப்புக்கு வந்த, போது, ஆசிரியை அமர்கிற கதிரைக்கு முனால் போட்டிருந்த மேசையில் ஏறி அமர்ந்து கொண்டு காலுக்கு மேல் கால் போட்டபடி ஷோபனா,ஏனைய மாணவியர் சூழ்ந்து நிற்க, ஏதோ கதை அளந்து கொண்டிருந்தாள்..கதை என்னவாக இருக்கும்? எல்லாம் அழகு மாயமான உலகைப் பற்றியது தான். அந்த வகுப்பில் யார் முன்னிலை அழகு என்பதே அவர்களின் அப்போதைய கணிப்பீடாக இருந்தது.நித்யா அதைப் பொருட்படுத்தாமல், தானும் தன் படிப்புமாய், வாசலைக் கடந்து உள்ளெ வந்தவள், தனக்கான இடத்தில் அமர்ந்து கொண்டு புத்தகப் பையைத் திறந்து, கணிதக் கொப்பியை இழுத்து எடுக்கும் போது, அவள் இழுத்த இழுவையில் வேறொரு புத்தகமும் சடாரென்று கீழே வந்து விழுந்தது.அவள் சுதாரித்து அதை எடுக்கு முன்பே, சுபோஜனா அதில் எதையோ கண்டு விட்டு,விரைவாக அவளருகே ஓடி வந்தாள். அவள் வைத்த குறி தப்பவில்லை.
இப்போது அவளின் கையில் நித்யாவின் தபால் அஞ்சல் அட்டை எடுப்பதற்காக எடுத்த போட்டோ இருந்தது.அது வைத்திருந்த தபாலுறை கீழே கிடந்தது..அதைப் பார்த்தவுடன் கேலியாக முகம் சிரிக்க, குரலை உயர்த்தி அவள் சொன்னாள்.
நல்ல வடிவாயிருக்கு, பிரேம் போட்டு ஷோகேஸின் மேல் வையும்.
இதைக் கேட்டு வகுப்பு அதிர, எல்லோரும் கை தட்டி சிரித்தார்கள் நித்யாவுக்கு பேரிடி விழுந்த மாதிரி ஆயிற்று. ஒரு கணம் உல கமே இருண்டது. வெறும் கனவாகவே தோன்றி அழிந்து போகிற உலகத்தில் நிலையற்ற இந்த நீர்குமிழி போல் தோன்றுகிற, இந்த உடம்பைப் பார்த்து, இப்படியொரு பழிச் சொல்லை நான் ஏன் கேட்க நேர்ந்தது? ஒன்றும் புரியவில்லை..கையில் அவளை வைத்து யாரோ தட்டாமாலை சுற்றி, சுழற்றி எறிவது போல, வந்த மயக்கத்தில், அவள் முழுவதும் செத்தாள். அவளின் அப்படியான மரணத்திற்கும் மிகப் பெரிய வீழ்ச்சிக்கும் காரணமாகி விட்ட அந்தக் கொடும் பாதகி ஒன்றுமே நடவாதது போல, இன்னும் கனவுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்
அதன் பிறகு நித்யா முழுவதுமே மாறிப் போனள். அவளின் படிப்புலகக் கனவும் அதை எட்டுவதற்காக அவள் பூண்ட தவக் கோலமும்,, ஒரு வெற்றுக் கனவாகவே மறைந்தொழிய,ஒரு இருண்டயுகத்துக்கே, அவள் தள்ளப்படிருந்தாள். எல்லாம் அந்த நடேசு வாத்தியாரின் ஆசீர்வாத நன் கொடையாகவே, அதைக் கொள்ளலாம் அவர் கூறின மாதிரி மூளை இறுகினால் தடம் புரண்டு சகதி குளித்தால், என்னவாகும் என்பதற்கு இதற்கான பதிலாகத் தான் இன்று அவள் நிலைமை கொடி சாய்ந்து கிடக்கிறது
இது நடந்து ஒரு யுகமாகிப் போனது.அவளின் அம்மா சாந்தியைப் பொறுத்தவரை அவளோடு போராடியே அவள் வீழும் இருள் கனத்த ஒவ்வொரு பொழுதும் அவளை இரை விழுங்கியே சாகடித்தாலும், ஒன்றுமே நடவாதது போல, அவள் பூரண சரணாகதி சுத்த வெளி இருப்புடன் அவள் உயிர்த்து மீண்டு எழுந்து வருவது, ஓர் அதிசய நிகழ்வாகவே அவர்கள் வாழ்க்கைக் களத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தது..சிறிதும் இடையூறு விளைவிக்காத ஆத்ம அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு மேலான தவமாகவே அத் துயரம் மிகு அனுபவத்தை, அவள் ஏற்க முன் வந்தாள்.
ஒருநாள் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் நித்யா புத்தகப் பையை விரக்தியுடன் ஒரு மூலையில் வீசி எறி ந்து விட்டு,மனம் உடைந்து சாந்தியைக் கேட்டாள்.
அம்மா! நான் இனி எங்கை படிக்கிறது? அங்கை இனி நான் போகமாட்டன்.
ஏன் நித்யா? எதுக்கு இந்தக் கதை சொல்லுறாய்?
அவையள் என்ரை படத்தைப் பார்த்துப் பகிடி பண்ணிச் சிரிச்சவை.
எதுக்கு உன்ரை படத்தை அவையளுக்குக் காட்டினனி நீ.
நான் எங்கை காட்டினன்? பையைத் திறக்கேக்கை தவறிக் கீழே விழுந்திட்டுது. சுபோஜனா அதை எடுத்துப் பார்த்திட்டு பிரேம் போட்டு ஷோகேஸிலை வைக்கச் சொல்லி அவ சொல்ல, எல்லோரும் கைதட்டி சிரிச்சவை. அம்மா. நான் இனி எங்கை படிக்கப் போறன்? இது தான் இப்ப மண்டைக்குள்ளை நிக்குது என்று சொன்னவள் அறைக்குள் ஓடிப் போய்ப் பெரும் குரலெடுத்து அழும் குரல் கேட்டது.
யாராவது அழுது விட்டுப் போகட்டும். எனக்கென்ன வந்தது என்று இறுமாப்புடன் வாழ்ந்து மறைகிற நிழல் மனிதர்களைப் பொறுத்தவரை, ஒரு வெற்றுச் சங்கதி தான். இது.
நித்யாவின் மேல் நிலை வாழ்க்கை மீது ஆப்பு வைத்த, சுபோஜனாவும் அவள் தோழியர்களும் என்னவானார்களோ தெரியவில்லை. வாய்க் கொழுப்பு எடுத்துப் பேசினாலும் அவர்கள் வாழ்க்கை ஒன்றும் குடி மூழ்கிப் போய் விடாது, அப்படியானவர்கள் எந்தச் சரிவும் நேராமல் கொடி கட்டிப் பறப்பதை மண்ணில் இருந்து பார்த்தே, மனம் நொந்து போன சரித்திரம் தான் சாந்தியினுடையது. இது அவளுக்கு நேர்ந்த அனுபவமே தவிர நித்யாவுக்கு நேர்ந்ததல்ல. அவளை இந்த நிலைக்கு, ஒரு நடைப் பிணமாக ஆக்கியவர்களை, தெய்வம் நின்று கொல்லும் என்று சாந்தி மனம் தேறினாலும்,கண் எதிரே, ஒரு காட்சி பொம்மையாய் உருக்குலைந்து போன வெறும் நிழலாய், பல ஆண்டுகள் சென்றும், நித்யாவை எதிர் கொள்ள நேர்ந்த சந்தர்ப்பம் மிகக் கொடியது. இப்போது அவள் கை விலங்கு பூட்டப் பட்ட ஒரு சிறைக் கைதி போல இருக்கிறாள். இது நடந்து ஒரு யுகமே கடந்து போனது. சாந்தியைப் பொறுத்த வரை அது ஒரு யுகக் கணக்குத் தான். இருள் கனத்த அந்த நாட்களின் கொடூரத்தையும். அதனாலுண்டான வலியையும், அவள் ஒருத்தியே அறிவாள். கல்யாணச் சிறைக்குள் வந்த சவால்களே சரித்திரமாயின. அவளின் சத்திய இருப்புகே,கேள்விக் குறியாக எதிர் கொள்ள நேர்ந்த சவால் படு குழி. இதற்கு யாரும் பொறுப்பில்லை அவள் கொண்டு வினையாகவே, எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. கண் எதிரே சாம்பலாகிப் போன மகள். அவள் வாழ்க்கை போனது போனது தான். இந்த வீழ்ச்சியை நிவர்த்தி செய்ய, யாரும் வரப்போவதில்லை எந்தக் கொம்பன் வந்து இவளுக்கு, வாழ்வளிக்கப் போகிறான்? நல்லதே நினைத்தால்,நல்லதே நடக்கு.ம் அவளின் வாழ்க்கையும்,அதன் தொடர்பான அனுபவங்களும் இதற்கு எதிர்மறை தான். அவளுக்குத் தாலி கட்டி மணமுடித்த கணவனே அவளுக்கு, அவள் பிள்ளைகளுக்கு நல்லது நினைக்காத, போது, படுபாவி நடேசு வாத்தியும் சுபோஜனா போன்ற கேடு கெட்டஜென்மங்களும், நித்யாவுக்கு நல்லது நினைக்கவில்லையென்று அவள் தலையில் அடித்து ஒப்பாரி வத்து அழுதாலும்,,ஒன்றும் நடக்கப் போவதில்லை.
தன் மனநோய்க்கு மாத்திரைகள் போட்டுப் போட்டே நித்யா, முழுவதும் செயலிழந்து போனாளே! அவளின் இடது கை நடுங்குகிறது கால் வேறு இழுத்து இழுத்து நடக்கிறாள். ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. சரியான தூக்கமில்லை. இவளை ஒரு நடைப் பிணமாகப் பார்த்துக் கொண்டு, சாந்தியின் பொழுதும் நரகமாகவே கழிகிறது. இந்த அனுபவங்களை, வைத்து அவளால் வேதம் சொல்லத் தான் முடிகிறது. பற்றி எரிகிற பாலை வன வாழ்க்கை தான் அவளுக்கு. எனினும் நன்கு புடம் போடப் பட்ட ஒரு தபஸ்வினி போலவே, அவள் இருக்கிறாள் அவளின் உள்ளுலக இருப்பு எதிலும் பங்கப் படாத, ஒளி, மயமான ஒரு தனி உலகமாகவே மிளிர்கிறது. எல்லாம் அப்பா அவளுக்கு அருளிய வாழ்க்கை வரம். அப்பா சொல்லிக் கொடுத்த வேதம்.அதை ஒரு பிரகடனமாக,அந்தப் பாலை வெளி மேட்டில் ஏறி நின்றவறே, ஒலி பெருக்கி வைக்காமலே அவள் சொல்வது மட்டும் தான் பெரிசாய் காதில் விழுகிறது. நல்லதே நினையுங்கள். இது வெறும் வார்த்தப் பிரகடனம் மட்டுமல்ல. ஒரு தெய்வீக வாக்காகவே, எங்கும் கேட்கிறது.