நன்மை செய்தவன் நன்மை அடைவான்




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு ஐயரு, பெரிய பணக்காரரா இருந்தாரு. கொஞ்ச நாள்ல, ஐயரு, சொத்தெல்லாம் போயிருச்சு, அவரு இருந்த ஊர விட்டுட்டு, வேற ஊருக்குப் பொளைக்கப் போனாரு. பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு நடந்து போனாரு. நடந்து போகயில, பசி கூடுதலாயிருச்சு.
ஒரு ஆலாமரத்தடில, ரெண்டு பேரும் ஒக்காந்து, பழய வாழ்க்கயப் பத்திப் பேசிக்கிட்டிருக்ககாங்க. இப்டி வாழ்ந்திட்டு, இப்ப, இப்டி வந்து ஒக்காந்திருக்கமேண்டு நெனச்சுக்கிட்டு, ரெம்ப வருத்தமா ஒக்காந்திருக்காங்க.
அப்ப அந்தப் பாதயில, ஒரு வழி போக்க போறா. போறவ், அவம்பாட்டுக்குப் போகாம்,
நம்ம செய்யிறவன் – நம்ம அடைவான்
திம்ம செய்யிறவன் – திம்ம அடைவா – ண்டு
பேசிக்கிட்டே போறா. அவ் பாட்ல பேசிட்டுப் போனத, இவங்க நெனச்சுக்கிட்டே போறாங்க. போகயில, ஒரு பெரியஊரு, அந்த ஊரு ராசாகிட்டப் போறாங்க. ராசாகிட்டப் போயி,
நம்ம செய்யிறவன் நம்ம அடைவான்
திம்ம செய்யிறவன் திம்ம அடைவா – ண்டு ஐயரு சொன்னாரு. இதக் கேட்டு, அரச் ரெம்ப மகிழ்ச்சியடஞ்சு, ஐயருகிட்ட ஒரு சீட்டு எழுதிக் குடுத்து, கடயில போயி, என்ன வேணுமோ, பூராத்தயும் வாங்கிக்கண்டு ராசா சொல்லிட்டாரு.
அண்ணைக்கிருந்து நெதமும், ஐயரு அரமணக்கிப் போயி,
நம்ம செய்யிறவன் – நம்ம அடைவான்
திம்ம செய்யிறவன் – திம்ம அடைவா – ண்டு
சொல்றது. ராசாகிட்டயிருந்து சீட்டு வாங்கிட்டு வந்து, வேணும்ன்றத வாங்கிச் சாப்டுறது, ஐயரு வழக்கம், இப்டியே ஒரு வருசங் கழிஞ்சிருச்சு.
ஒருநா, அந்த அரமணயில வேல செய்யுற அம்பட்டயன், ஐயரு வீட்டுக்கு வந்தர். வந்து, ஐயரே! ஒனக்கு வசியம் பண்ணத் தெரியுமாண்டு கேட்டர். ஐயருக்கு, ராசா குடுக்குற சலுகயப் பாத்து, அம்பட்டயன், பொறாமப்பட்டு, ஏயா ஐயரே!
நம்ம செய்யிறவன் – நம்ம அடைவான்
திம்ம செய்யிறவன் – திம்ம அடைவா – ண்டு
சொல்லி, ராசாகிட்ட இருந்து சலுக வாங்கிப் பொளைக்கிறயில்ல, அதச் சோதிக்கணும்ண்டு, ராசாவும், மந்திரியும் பேசிக்கிட்டாங்க. எப்டிண்டா, ராசாவுக்கு மதிப்புத் தராம, நெருங்கி நிண்டு பேசுறயாம். அதனால ஒன்னய சிரச்சேதம் செய்யணும்ண்டு ராசா சொன்னாரு. அப்டியிருக்கயில, நாளக்கி நிய்யி அரமணக்கி போனா, பத்தடி தள்ளி நிண்டுபேசுண்டு, ஐயருகிட்ட, அம்பட்டயன் சொல்றா.
சொல்லிட்டு, அம்பட்டயன் அரமணக்கி வந்திட்டர் அரமணயில் வந்து, ராசாவப் பாத்து, ராசாவே! ஐயரு ஒங்களுக்கு மேல ஒசத்தியா வாழ்ந்தாராம். நீங்க ராசாவாப் பொறந்ததனாலதா, ஒங்கள மதிக்குறாராம். துர்நாத்தம்- கெட்டஎண்ணம் ஒங்ககிட்ட நெறயா இருக்காம். நாளக்கிருந்து, ஒங்க பக்கத்ல வந்து பேச மாட்டாராம். பத்தடி தள்ளி நிண்டுதர் பேசுவே, குடுத்தா வாங்குவே, குடுக்காட்டி வேற ஊருக்குப் போவேண்டு, ஐயரு சொன்னாருண்டு, அம்பட்டயன் ராசாகிட்டச் சொல்லிட்டா.
திண்டு கொழுத்தா, நண்டு செலவுல இருக்காதுண்றது சரியாப் போச்சு. இந்த ஐயருக்கு எந்தந்தண்டித் திமிறு, வரட்டும் பேசிக்கிறேண்டு நெனச்சுக்கிட்டு ராசா இருக்காரு.
மறுநா, காலைல, ஐயரு, அரமணக்கிப் போனாரு. போயி -, ராசாவப் பாக்கயில, துண்ட எடுத்து மணிக்கட்ல போட்டாரு. பத்தடி தள்ளி நிண்டு,
நம்ம செஞ்சவன் நம்ம அடைவான்
திம்ம செஞ்சவன் திம்ம அடைவா-ண்டு
ஐயரு சொன்னாரு. சொல்லவும், ராசா ரெம்பக் கோபப்பட்டு, அம்பட்டயன் சொன்னது சரியாப் போச்சுண்ட்டு, ‘ஐயர சிரச்சேதஞ் செய்யணும்ண்டு நெனச்சாரு. நெனச்சு, அண்ணைக்கெழுதுற சீட்ல, ‘இந்த சீட்டக் கொண்டு வர்றவன கொல்லணும்ண்டு, எழுதி ஐயருகிட்ட குடுத்திட்டாரு. வழக்கமா, அந்தச் சீட்டக் கூடப் படிக்காமக் கடயில கொண்டு போயி குடுக்கறவரு, அண்ணக்கி வாங்கிக்கிட்டு கடைக்குப் போனாரு.
சீட்ட வாங்கிக்கிட்டு ஐயரு வெளிய வரவும், சீட்டப் புடுங்கணும்ண்டு அம்பட்டயன் வெளிய காத்துக்கிட்டிருக்கர். வெளிய வரவும், அம்பட்டயன் புடுங்கிக்கிட்டர். புடுங்கிக்கிட்டு, ‘இண்ணக்கி சும்மா படு ஐயரே, நா வாங்கிச் சாப்டுறேண்டு சொல்லிக்கிட்டு கடைக்கு ஓடுறா. கடயில கொண்டு போயிக் குடுத்தா, சீட்டப் பாத்த கணக்குப்பிள்ள, அம்பட்டயனப்புடுச்சு காவலாளிக்கிட்ட ஒப்படச்சுட்டா. காவலாளிக கொண்டுகிட்டு போயி, கொலக்களத்ல வச்சு வெட்டிப்பிட்டாங்க.
மறுநா விடிஞ்சுச்சு, விடியவும், எந்திருச்சு குளிச்சுட்டுக் கிளிச்சுட்டு, ஐயரு அரமணக்கிப் போறாரு. போயி ராசாவப் பாத்து,
நம்ம செஞ்சவன் நம்ம அடைவான்
திம்ம செஞ்சவன் திம்ம அடைவா-ண்டு
சொன்னாரு. ஐயரப் பாத்ததும், ராசாவுக்கு ஒரே அதிர்ச்சியாப் போச்சு. என்னடா! இவனக் கொல்லச் சொல்லி ஓல குடுத்தோம். வி டிஞ்சு விடியுங்குள்ள வந்து நிக்கிறானேண்டு மனசுல நெனச்சுக்கிட்டு, காவலரிளிகளக் கூப்பிட்டாரு. ஐயர சிரச்சேதம் செய்யச் சொல்லி, அவங்கிட்டயே ஒல குடுத்தனே, நீங்க கொல்லலியாண்டு கேட்டாரு.
அதுக்கு காவலாளிங்க, அரசே! சீட்ட அம்பட்டயன் கொண்டு வந்தர். அவனக் கொண்டுபிட்டோம்ண்டு காவக்காரங்க சொன்னாங்க.
அதுக்குப் பெறகு ஐயரே! ஒனக்கும் அம்பட்டயனுக்கும் தகராறாண்டு ராசா கேட்டாரு. அதுக்கு ஐயரு, இந்த அம்பட்டயன் ஏ… வீட்டுக்கு வந்தர். வந்து, நிய்யி ராசா கிட்டத்ல நிண்டு பேசுற, கிட்டத்ல நிண்டு பேசக்கூடாது, பத்தடி தள்ளி நிண்டு பேசணும்ண்டு சொன்னர். சரிண்டு, நானும் அப்படியே, ஒங்க பக்ககத்ல நிண்டு பேசாம, பத்தடி தள்ளி நிண்டு பேசுனேண்டு ஐயரு சொன்னாரு.
சொல்லிட்டு: அண்ணக்கி நீங்க குடுத்த சீட்ட, ஐயரே! இண்ணக்கி சும்மா கெட, நா வாங்கிட்டுப் போறேண்டு சொல்லி, எங்ஙிட்டயிருந்து புடுங்கிட்டுப் போயிட்டர், ராசாவேண்டு சொன்னாரு.
சீட்ட அண்ணக்கி, அம்பட்டயன் புடுங்கிட்டுப் போயிறவும், நாங்க பட்னியாக்க கெடந்தோம்ண்டும் சொல்லிட்டாரு. சொல்லவும்,
நம்ம செஞ்சவன் – நம்ம அடைவான்
திம்ம செஞ்சவன் – திம்ம அடைவா – ண்டு
ராசா மனசுக்குள்ள சொல்லிக்கிட்டாராம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.