நண்பேன்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 1,730 
 
 

ஞாயிறு மாலை ஆறு மணி. இதமான கடல் காற்று வருடிக்கொடுக்கும் சென்னை மாலையில், கடந்த வாரம் நடந்த சம்பவங்களை அசை போட்டவாறே தன் பிரிய நண்பனுடன் வாக்கிங் கிளம்பினான் சபா என்கிற சபாபதி.

சபாவின் நண்பனுக்கு, வருகிற தை மாசம் 77 வயதாகிறது. வயதுக்கு ஏற்றாற்போல் தேக உபாதைகளும் அவனுக்கு ஏராளம். நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்தவன், வேகமாக நோய்களை சிநேகம் செய்துகொண்டு விட்டான். கண்களை சுற்றி வெள்ளை முடி. அவர்கள் தினசரி ஊர் சுற்றும் பொது, மூன்று வருடங்களுக்கு முன் எவரெல்லாம் அவனது கம்பீரத்தையும் துள்ளு நடையையும் பார்த்துப் பாராட்டினார்களோ அவர்களெல்லாம் இப்போது அவனது கிழட்டுத்தன்மையை விமர்சிக்க, சபா மனம் உடைந்து போனான்.

இதுபோன்று, அவன் இனிய நண்பனின் உருவத்தை, உடம்பின் தவிர்க்கமுடியாத மாற்றத்தை சகட்டு மேனிக்கு போவோரும் வருவோரும் விமர்சிப்பது சபாவுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. எனினும் என்ன செய்வது! ஆனால் நண்பனோ துளியும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. எப்போதும் போல் மகிழ்ச்சி பொங்கத்தான் இருந்தான்.

தன் உயிர் நண்பனோடு செலவிடும் காலம் இனி சொற்பமே என்ற எண்ணம், ‘மனசை உலுக்கிப் போட்ட அற்புதமான ஒரு திரைப்படமோ அல்லது ஒரு சிறப்பான கர்நாடக இசைக்கச்சேரியோ’ முடிவுக்கு வரப்போகிறது என்னும்போது தோன்றும் ஒரு சோகம் போன்றதொரு உணர்வு அவன் தொண்டையை அடைத்தது.

அன்று ஒரு அரை மணி நேரத்தில் திரும்பிவிட்டனர்.

இது முடிந்து சில வாரங்களில், மருத்துவரிடம் செல்வது அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து பற்கள், கால்கள் எனத் தொடர்ந்து ஏகப்பட்ட மருந்துகள், ஏகப்பட்ட செலவு. பாவம் நண்பனிடம் காசில்லை. சபாவை நம்பித்தான் அவன் வாழ்க்கை. அவனுக்கென்று யாரும் இல்லை. சபாவுக்கும் எவரும் இல்லாததைப் போலவே! சபா தன் நண்பனுடன் அதிக நேரம் செலவிடுவதை விரும்பாத அவன் மனைவி அவனை விட்டுச்சென்று ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.

உபாதைகள் குறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புப் போய், அன்றொருநாள் பேரிடி போல் ஒரு செய்து வந்தது. நண்பனின் ஒரு கண்ணை எடுக்கவேண்டும் என்றார் மருத்துவர். இதற்கு ‘எனுகிளியேஷன்’ என்று பெயராம். ஏனெனில் ஒரு கண், அவன் கபாலத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி அவனுக்கு மிகுந்த தலை வலியைத் தருகிறது என்றார். அவனுக்கு இவ்வலி பல நாட்கள் இருந்திருக்கும், பாவம் சொல்லத் தெரியவில்லை. எத்தனைதான் பொறுமை அவனுக்கு!

தனக்குள் பூட்டிப் பூட்டி வைத்திருந்த சோகத்தைச் சபா தன்னைப் போன்றே சோகப்பட்டுக் கொண்டிருக்கும் நண்பர்கள் கொண்ட குழுவில் பகிர்ந்துகொள்ள, அக்குழு அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னது. அவர்கள் சோகத்தையும் இவனிடம் சொல்லிக் கொண்டது.

நண்பன் இப்போது சபாவிற்குத் தன் குழந்தை மாதிரித் தோன்ற, இரவு பகலாக அவனை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தான். இன்னும் சில நாட்களில் மூட்டு வலி, தண்ணீர் குடிக்கத் தோன்றாத அளவுக்கு ஒரு மறதி என்று சில பல பிணிகள் பற்றிக்கொள்ள, சபாவை விட்டு ஓர் நாள் அவன் பிரிய நண்பன் பிரியா விடை பெற்றான். சபா அலுவலகத்திலிருந்து களைத்து வரும்போதும், சொந்த வாழ்க்கை சோர்வைத் தரும்போதும், சந்தோஷித்திருக்கும் நாட்களிலும், அவன் எப்படி இருந்தாலும்…அவனை ஒரே சீரான அதீத அன்புடன் நேசித்த சகா இன்று இல்லை!

கடந்த 77 வருடங்களாக சபாவின் வாழ்க்கையை ஒரு தீர்ப்பும் தோன்றாமல் மௌனமாகப் பார்த்த சாட்சி தன்னை விட்டுப் போனது அவனது தந்தை போனதைக் காட்டிலும் அதிக துக்கம் தருவதைப் போன்று விசித்திரமாக உணர்ந்தான்.

சபா வெடித்து அழுதான்.

செல்லப் பிராணிகளை அடக்கம் செய்யப் ப்ரத்தியேகமாகத் திறக்கப்பட்ட இடுகாட்டில் தன் நண்பனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு மெளனமாக வீடு திரும்பினான் சபா.

(பின் குறிப்பு: நாய்களின் வாழ்வில் ஒரு வருடம் என்பது தோராயமாக மனித வாழ்க்கையின் 7 ஆண்டுகளுக்குச் சமம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *