நண்பா, மறந்துவிட்டாயா?
(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நட்பு என்பது உயர் உள்ளத்துப் பண்பிற்கு அடையாளம். அந்தத் தடம் புரளும்போது, அதனால் பாதிக்கப்பட்ட சங்கரன் என்ற மாணவனின் உள்ளம் படும் பாட்டை உணர்ச்சி நிறைந்த சிறுகதையாக்கி இருக்கிறார் விக்கிரமன் (வேம்பு).

உயிர் நண்பனாக சங்கரனால் நேசிக்கப்பட்ட மனோகரன் ஐ.சி.எஸ். தேர்வில் தேறி, கலெக்டர் பதவியேற்கும் தகுதியோடு வந்ததும், சங்கரை அறியாதவன் போல உதறித் தள்ளுகிற மன மாறுதலை இந்தக் கதையில் படித்துவிட்டு, ‘இப்படியும் ஒரு நண்பனா?’ என்று வேதனை ஏற்படுகிறது.
‘நண்பா! மறந்து விட்டாயா?’ என்று சங்கரன் எழுப்பும் கூக்குரல் எங்கிருந்தோ இப்போதும் கேட்கும் ஓர் உணர்வு கதை படிக்கும்போது உண்டாகிறது.
இந்த சிறுகதையையும் ‘மாலதி’ இதழில்தான் நான் வெளியிட்டேன். விக்கிரமனின் எழுத்தாற்றலுக்கு – அவருக்குப் பதினைந்து வயதிருக்கும் – அந்தக் காலத்திலேயே மகுடம் சூட்டிக் கொண்ட மற்றொரு படைப்பு இது. ‘விளையும் பயிர் முளையில் தெரியும்’ என்பதற்கு இதுவே ஒரு சான்று.
– நவீனன்
நண்பா, மறந்துவிட்டாயா?
அன்று எம்.ஏ. பரீட்சை முடிவு வரும் தினம்.
காலேஜ் பையன்களும் உபாத்தியாயர்களும் குதூகலம் கொண்டனர். சங்கானும், மனோஹரனும் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் களவிலும் விரோதம் செய்து கொள்ள மாட்டார்கள்.
காலேஜ் மாணவர்களில் சிலர் சங்கரனே பிரெசிடென்சியில் முதன்மை யாகத் தேறுவான் என்றார்கள். சிலர் மனோஹரனே வருவான் என்று பத்தயமும் கட்டினார்கள்.
‘ஹிந்து’, ‘மெயில்’ என்னு பத்திரிகை விற்கும் சிறுவன் கூவிக் கொண்டே சென்றான். காலேஜ் மாணவர்கள் 20 பத்திரிகைப் பிரதிகளை வாங்கிக் குதூகலத்துடன் பார்த்தனர்.
அதில் ‘சங்கரனே மாகாணத்தில் முதன்மை ஸ்தானம் பெற்றான்’ என்றிருந்தது.
சென்னைக் கடற்கரை. சங்கரனும் மனோஹரனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மனோஹரன் முகத்தில் மந்தஹாசம் தவழ்ந்தது.
சங்கரன் முதன்மையாகத் தேறினாலும் அவன் கவலையே உருவாயிருந்தான்.
மனோஹரன் சந்தோஷத்துடன், “என்ன சங்கர்? பிரெசிடென்சி ஃபர்ஸ்டா? நானோ பிரெசிடென்சி செகண்ட் என்றாலும் உன் முகத்தில் சந்தோஷம் காணோம்! ஸ்காலர்ஷிப் வேறு ஐ.சி.எஸ். படிக்கக் கிடைத்திருக்கிறது. அப்படியிருந்தும் ஏன் வருத்தமாயிருக்கிறாய்?” என்று இருவருக்குமிருந்த அமைதியைக் கலைத்தான்.
அதற்கு சங்கரன், “பிரெசிடென்சி ஃபர்ஸ்ட் இருந்தாலென்ன… இது சாப்பாடு போடுமா? என் மாமாவை இந்த க்ஷணத்தில் காப்பாற்றுமா? ஸ்காலர்ஷிப்பில் எம். ஏ. பாஸ் செய்தாகி விட்டது. வாழ்க்கையை நடத்த யார் ஸ்காலர்ஷிப் கொடுப்பார்கள்?” என்றான்.
மனோஹரன், “என்னப்பா… என்னமோ சொல்கிறாய்? அது சிடக்கட்டும்… ஐ.சி.எஸ். சேரப் போகிறாயல்லவா! அதிலும் ஃபர்ஸ்ட் அடித்து விடுவாயல்லவா?”
சங்கரன், “ஐ.சி.எஸ். யாருக்கு வேண்டும்? பணமுள்ளவர்களுக்கு… ஏழைகளுக்கல்லவே. நீ போய் வா. நான் வந்தால் என் மாமாவை யார் காப்பாற்றுவார்கள்? ஐ.சி.எஸ். போய் பாஸ் செய்து கலெக்டராகத் திரும்பி வருகையில் நான் ஏதாவது பிச்சையெடுக்க வருவேன். அப்போது ‘டாம்… நான்சென்ஸ்’ என்று விரட்டுவாய்!”
மனோஹர், “பார்த்தியா… இன்று இவ்வளவு நட்பு கொண்டவர் களாயிருக்கிறோம். அந்த நட்பு நாளைக்கு எங்கே போய்விடும்? வா… ரூமுக்குப் போகலாம்” என்று சமாதனப்படுத்தினான்.
இருவரும் வீட்டையடைந்தார்கள்.
அன்று வெள்ளிக்கிழமை. பம்பாய் எக்ஸ்பிரஸ் மனோஹரனை பம்பாய்க்குக் கொண்டு சென்றது. அவன் பம்பாயில் கப்பலேறி இங்கிலாந்து செல்லப் போகிறான்.
ஆண்டுகள் மூன்று சென்றன.
இருளடைந்த மதறாஸில் ஒரு சந்தில் சின்னஞ்சிறு வீடு. விளக்கின் கீழ் சங்கரன் எம்.ஏ. கிழிந்த உடையுடன் பரட்டைத் தலையுடன் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி ஆசிரியரிடமிருந்து திரும்பி வந்த கதைகள் குவிந்து கிடக்கின்றன.
சங்கரன் எழுதுவதை நிறுத்தி படுக்கையை விரித்து கையில் அன்று வந்த தினசரியுடன் படுத்து வாசிக்கலானான்.
ஒரு மூலையிலிருந்த ஒரு செய்தி அவன் கண்ணில் பட்டது.
‘மிஸ்டர் மனோஹர் எம்.ஏ., ஐ.சி.எஸ். சென்னை கலெக்டராக பிப்ரவரி 8ஆம் தேதி பதவி ஏற்க வருகிறார்’ என்றிருந்த செய்தியைப் பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்தது.
பிப்ரவரி எட்டாம் தேதி. சென்டிரலில் ஏகக்கும்பல். போலீஸ்காரர்கள் கலெக்டர் வருகையை எதிர்பார்த்த வண்ணமாக இருந்தனர்.
சங்கரன் மயிலாப்பூரிலிருந்து சிறிது வாரப்பட்ட பரட்டைத் தலையுடனும், அழுக்கடைந்த கதர் வேட்டியுடனும், ஒரு கிழிந்த கதர் ஜிப்பாவுடனும் கால் நடையாக நடந்து வந்து சென்டிரலில் தன் நண்பன் வருகையை எதிர்பார்த்தான்.
பம்பாய் மெயில் புகையைக் கக்கிக் கொண்டு ‘ஹோ’ என்னும் சப்தத்துடன் பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
மனோஹரனும் ஓர் ஆங்கில மாதுவும் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தனர்.
அநேக ரோஜா மாலைகள் அவர்கள் கழுத்தில் வீழ்ந்தன. அநேகர் அவனோடு கை குலுக்கினார்.
ஓர் உருவம் பரட்டைத் தலையுடன் – கிழிந்த உடையுடன்… கும்பலில் நெக்கி, அருகில் சென்று “மிஸ்டர் மனோஹர்… குட் ஈவினிங்… நீ வருவதைக் குறித்து மிகவும் சந்தோஷம்” என்றது.
அதைச் செவியுற்ற மனோஹர், “டாம்… நான்சென்ஸ்! யார் உன்னை இங்கே விட்டது? அந்நோன் பர்ஸன்… கெட் அவே” என்றான்.
இதைக் கேட்டதும் பலகைகளும், பல முரட்டுக் கரங்களும் சங்கரனை வெளியேற்றுவதில் ஆவல் கொண்டன.
இருளடைந்த சென்னையில் அதே சந்து; அதே வீடு.
சங்கரன் அதே கோலத்துடன் தெருத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு “நண்பா! ஐ.சி.எஸ். போய் வந்தால்… பிரயோஜனம்… நட்பை மறத்தல்… என்ன உலகம்? நண்பா, மறந்துவிட்டாயா?” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
– 1943, மாலதி.
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.