நண்பருள் நடிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 2,705 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோவிந்தராஜு என்பவன் சில வருஷங்களுக்குமுன் நாடகக் கொட்டகைகளில் ஒன்றில் சேர்ந்து அதில் மிகவும் பிரக்கியாதி பெற்றுவந்தான். ஆங்கிலக் கவியாகிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் என்னும் நாட கத்தை முதல்முதல் இணையற்றதாக நடித்துக் காண் பித்த இர்விங் என்பவனைப்போல் தானும் உலகில் யாவ ராலும் கொண்டாடப் படவேண்டுமென்பதே அவனது பேராசை. அவன் ஏன் அவ்விதம் ஆவலுறவேண்டும் என் றால் ஆங்கிலேயர்களைப்போல் நாடகங்களில் வரும் பாத் திரங்களைப் பாவத்துடன் நடித்துக் காண்பிப்பதில் தங் கள் அறிவையும் மனத்தையும் செலுத்துவதைக் காட்டி லும், நாடகத் திரைகளிலும், ஆடை ஆபரணங்களிலும், மற்றும் சங்கீதத்திலுமே தம் ஊக்கத்தை நம் நாட்டில் அதிகம் செலுத்துகிறார்கள் என்னும் அவனது கொள் கையே காரணமாகும். அவன் வேறு விஷயங்கள் ஒன்றி லும் சிந்தையற்றவனாய், நாடகக் கொட்டகைகளில் மட்டு மன்றி வீட்டிலிருக்கும் நேரங்களிலும் அதைப்பற்றியே சிந்தித்தும் பேசியும் தன் பொழுதைக் கழிப்பானாயினான். தான் எவ்வேஷம் அணிந்தாலும் அதற்கு உகந்தவாறு நடித்து அதைச் சிறப்பித்துக் காண்பிக்க வேண்டுமென்பது அவன் முக்கிய கருத்து. இப்பொழுதும் அவன் இன்னும் இரண்டொரு தினங்களில் நடக்கப்போகும் ஓர் ஆட்டத் தில் வரும் கதாநாயகனின் முக்கிய சிநேகி தனாக நடிக்கப் போவதால் தன் பாகத்தை, ஒரு நிலைக்கண்ணாடியின்முன் நின்று அதற்குற்ற செய்கைகளுடனும் முகக்குறிகளுட னும் செய்து பார்த்துக்கொண் டிருந்தான். அந்நாடகத்தில் இவன் யாருடைய சிநேகிதனோ, அவனே இவனைத் தன் மனைவியின்பால் தகாத நட்புக்கொண்டு தனக்குத் துரோ கம் செய்துவிட்டதாக அபாண்டமாகத் திடீரெனப் பழி சுமத்திய பொழுது எவ்வித முகக்குறிகளாலும் செய்கைகளாலும் அப்பொழுது உண்டாகும் மன நிலைமையைக் காண்பிப்பது எனப் பலவாறு பாவனைகளைச் செய்துபார்த் தும் அவன் மனம் திருப்தியடையவில்லை. “இது மிகக் கடி னமே” என இரைந்து அதிருப்தியோடு கூறிக்கொண்டான். 

இச்சமயம் இவன் குரலைச் செவியுற்ற இவனுடைய வேலையாள், ”கூப்பிட்டீர்களா?” என்று மரியாதையோடு கேட்டுக்கொண்டு உள்ளே நுழையவும் கோவிந்தராஜ வுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. அவ்வேலை யாளைக் கடுமையாக நோக்கவும், அவன் இவனிடம் பலநாள் பழகி இவன் குணம் அனைத்தும் அறிந்தவனாதலால் பதில் பேசாமல் கதவைச் சார்த்தியவண்ணம் சென்றுவிட்டான். இவ்விதம் நடுவே நடுவே தொந்தரவு செய்வதற்காகத் தன் வேலையாளைத் தனக்குள்ளேயே வைதுகொண்டான். அச்சமயத்தில்தான் கவனியாமல் சுயேச்சையாக விட் டிருக்கும் தன் மனைவி இன்னும் சிறிது பொழுதில் வெளி யிலிருந்து வந்து ஊர் விஷயங்களைக் கூறித் தொந்தரவு செய்வாளே என்று நினைக்கவும் அவனுக்கு வந்த கோபத் திற்கும் வெறுப்பிற்கும் அளவே இல்லை. அவள் தன்னை உபத்திரவிக்காமல் இருக்கவேண்டியே இஷ்டப்படி எங்கு வேண்டுமாயினும் அவள் மாமன் மகனும் தன் பிரிய சிநே கிதனும் நம்பத் தகுந்த குணம் வாய்ந்தவனுமான ஞான சம்பந்தத்தின் பாதுகாப்பில் செல்ல இடம் கொடுத்திருந்தான். இருந்தும் அவள் இடையிடையே தன்னைத் தொந்தரவு செய்வதை நினைக்கும் போது வெறுப்போடு புருவத்தை நெறித்துக்கொண்டான். அச்சமயம் உடனே அவன் மனத்தில் ஓர் எண்ணம் எழவே அவன் முகம் மலர்ந் தது. ‘ ஏன்? நான் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக்கொண் டிருப்பதை என் சிநேகிதன் மூலமாகவே கண்டுகொண்டாலோ?’-கோவிந்தராஜு- ஆனந்தக் கூத்தாடினான். உண்மையிலே ஒரு நாடகம் நடிப்பதெனத் தீர்மானம் கொண்டான். வேலையாளை அழைத்து, உடனே தன் நண்பனை அழைத்துவரச் சொல் லுவோமென எண்ணினான். ஆனால் இப்பொழுது அவன் வீட்டிலிருப்பது சந்தேகம் என்பதும் தன் மனைவி வீடு திரும்பும் நேரம் ஆகிவிட்டது என்பதும் நினைவி ற்கு வரவே இப்பொழுது வேண்டாமென நிறுத்தினான். பிறகு அவன், ‘ஒரு சிறு கடிதத்தில் அவனை உடனே வரும்படி எழுதித் தபாலில் போடுவோம்; மறுநாள் கடிதம் கிடைக்கவும் அவன் தாமதமின்றி வருவான்’ எனத் தீர்மானித்து அவ் விதமே செய்து அன்றிரவை மிகுந்த உத்ஸாகத்துடன் கழித்தான். 

மறுநாள் பொழுது விடிந்ததும் தன் நண்பன் வரவை ஆவலுடன் எதிர்நோக்கித் தன் அறையில் உட்கார்ந் திருந்தான். தான் சிறிதும் சந்தேகியாத நண்பன்பேரில் சுமத்தப்போகும் பழியை நினைத்துப் புன்சிரிப்புக் கொண் டான். அப்பொழுது அவன் நடந்துகொள்ளப் போகும் மாதிரியைக் காண இவனுக்கிருந்த ஆவலில் சிநேகிதன் வருவதற்கு மிகுந்த நேரம் ஆவதுபோலத் தோன்றிற்று. கடைசியாக ஞானசம்பந்தமும் உள்ளே நுழைந்தான். 

அவன் நல்ல உயரமாகவும் கண்களில் காந்தப் பார்வை உடையவனாகவும் மிருதுவாகப் பேசக்கூடியவனா கவும் தோன்றினான். அவன், ”என்ன, கோவிந்தராஜு? இவ்வதிகாலையில் வருவது எனக்கு அசௌகர்யமாயினும் உன் கடிதம் இருந்த மாதிரியால் அதை அசட்டை பண் ணுவது சாத்தியமல்லவென்று தாமதமின்றிப் புறப்பட்டு வந்தேன்” என்றான். 

“ஆம், அது ஒரு முக்கியமான விஷயமே” எனக் கோவிந்தராஜ- கோபமாக மொழியவும், அவன் கடுமை யான சொற்களும், அவற்றின்படியே அவன் நடந்து கொண்ட மாதிரியும் ஞானசம்பந்தத்தைத் திடுக்கிடச் செய்தன. அவன் ”இதென்ன, ஏதாவது விசேஷம் நடந்ததா?” என்றான். 

இதற்குப் பதிலொன்றும் கூறாது கோவிந்தராஜ தன் நண்பனின் முகத்தை நோக்கி அதிலுண்டாகும் மாறு தல்களைக் கூர்மையாகக் கவனித்துக்கொண் டிருந்தான். ஞானசம்பந்தத்தின் முகம் வெளுத்தது ; கைகளும் தாமா கவே சிறிது நடுங்கின. என்ன விசேஷம் என்பதை மறுபடி யும் கேட்டான். “நீ சிறிது யோசித்தால் உன் மனச்சாட் சியே அதை உனக்குக் கூறக்கூடும்” எனக் கோவிந்த ராஜு தன்னை மீறி வரும் கோபத்தை அடக்கி மொழிவது போல் மொழியவே, “என்னைப் பார்; என் நண்பனே! இவ்விதம் ஏதோ ஒன்றை நினைத்துச் சும்மா வளைத்துக் கூறாதே. நான் ஏதாவது உன்னை வருத்தப்படுத்தக் கூடி யது செய்திருந்தால் அதை நீ கூறும் அக்கணமே அவ்வி தம் நான் செய்யவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டு வேன்” என்றான் ஞானசம்பந்தம். 

கோவிந்தராஜு மெதுவாகவே பேசவெண்ணி, “என்னை வருத்தப்படுத்தி இருக்கிறாய் ?” என்று சொல்லி ஒரு கோபச் சிரிப்புச் சிரித்தான். அவன் தன் பாவத்தைச் சாமர்த்தியத்துடன் நடித்ததோடு தோழனையும் நன்றாகக் கவனித்தான். 

“தயைசெய்து நீ தெளிவாகக் கூறமாட்டாயா? இல்லாவிட்டால் இவ்வாறு நீ புண்படுத்துவதை நான் சகித்துக்கொண்டிருக்கப்போவதில்லை ” என்றான். 

இவ்வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில் கோவிந்த ராஜு கிளம்பி எழுந்து கதவண்டை சென்று அதைத் தாழிட்டுவிட்டு, “நான் உன்னை உதைத்துத் தள்ளும்வரை யில் நீ இங்கேதான் இருக்கவேண்டும்” என்றான். 

“கோவிந்தராஜு! கோவிந்தராஜு-! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?” என்றான் ஞான சம்பந்தம். 

“இவ்விஷயம் அறியா தமுன்பு பைத்தியம் பிடித்திருப் பினும் நலமாக இருந்திருக்குமே” என்று கோவிந்தராஜூ வருத்தத்துடன் கூறி, சிநேகிதன் இரு தோள்களையும் பிடித்து நாற்காலியில் உட்காரவைத்து, “சிநேகத் துரோ கியே, முதலில் உட்கார்; நான் யாவையும் விளங்கச் சொல்லுகிறேன் ” என்றான். 

“எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே” என்று ஞான சம்பந்தம் தானே முணுமுணுத்துக்கொண்டான். 

“நான் சொல்வதைக் கவனி; நீயும் நானும், ஒருவன் மற்றொருவன் மனைவியுடன் ஓடிவிட்டதாகப் புத்தகங் களில் வாசித்தும் உண்மையாக நடந்ததாகக் கேள்விப் பட்டும் இருக்கிறோமல்லவா? ஆனால் நான் இது வரையி லும் அப்படிப்பட்ட துர்ப்பாக்கியமுள்ள கணவர்களில் நானும் ஒருவன் எனக் கனவிலும் கருதினதில்லை.”- இவ் விதம் கோவிந்தராஜு- சொல்லி வரும்பொழுதே ஞான சம்பந்தம் நாற்காலியில் நிம்மதியாக உட்கார முடியா தவ னாகி, ‘நீ என்ன சொல்லுகிறாய்? அதன் பொருள் என்ன?” என்றான். 

“நான் கூறுவது இதுதான். நாம் இருவரும் சிறுபருவம் முதல் நண்பர்களாய் இருந்துவருகிறோம். நான் உன் னிடத்தில் எவ்வளவு அன்புடன் இருந்தேனென்பது உனக்கே தெரியும்; எனக்குக் கல்யாணமான பிறகும் நீ என் வீட்டிற்கு முன்போலவே இஷ்டப்பட்டபோது வந்துபோகவும் என் மனைவியிடம் சுயேச்சையாகப் பழகி வரவும் நான் இடம் கொடுத்துவந்தேன். அதிகம் கூறுவா னேன்? நான் என்னினும் வேறாக உன்னை எண்ணவில்லை. நான் சொல்வது முழுவதும் உண்மையல்லவா?” என்றான். ஞானசம்பந்தம், “ஆம் உண்மையே” எனலும், “என் மனைவி, அவள் சிறுவயதில் எவ்விதம் இருந்தாளோ அவ்விதமே இப்பொழுதும் உன்னிடம் தாராளமாகப் பேசவும் உன்னோடு தனித்திருக்கவும் நான் விட்டிருந்தேன்” என்றான். “ஆம், அதுவும் உண்மையே” என்றான் ஞானசம்பந்தம். “ஆனால் நீ அத்துடன் சும்மாயிருக்கவில்லை. அவளிடமிருந்த உன் சிநேகத் தன்மை மாறி வேறு கெட்ட ஆசைகள் உன் மனத்தில் குடிகொண்டன.” கோவிந்த ராஜு இவ்வார்த்தைகளைச் சொல்லி நண்பனின் முகத்தில் உண்டாகும் ஒவ்வொரு மாறுதலையும் கவனித்தான். உடனே, “பேஷ்” என்று தன்னைத் தானே மெச்சிக் கொண்டான். ஆனால் இன்னும் முழுவதும் முடிந்த பாடில்லை. ஏனென்றால் தன் குற்றச்சாட்டை இன்னும் ஆழமாகப் பாயச்செய்து அதனால் தன் நண்பன் இன்னது செய்வது எனத் தெரியாமல் சொல்லொணாத உணர்ச்சிகள் மனத்தில் வந்து போராடத் தன் குற்றத்தை மறுக்க வேண்டுமல்லவா? அதல்லவோ அவன் வேண்டுவது! மறுபடி அவன் மேலே சொல்லத் தொடங்கி, “ஆம், நீ அத்துடன் திருப்தியடையவில்லை. உன் தகாத ஆசைகளை அவளிடம் மெதுவாக வெளியிட்டபொழுது…” 

“கோவிந்தராஜு–!” 

“வாயை மூடு, துரோகியே!” 

“நான் முழுவதும் கூறுகிறேன். என் மனைவி ஒன்றும் அறியாத பேதை. யார் எதைக் கூறினும் அதன் படி நடப்பவள். ஆம், எனக்குத் தெரியும். அவள் முதலில் அதைக் கேட்கவும் அஞ்சினாள். ஆனால், அந்தோ! முடி வில் அவள் அதற்குச் சம்மதித்துவிட்டாள்.” 

“கோவிந்தராஜ! நீ என்ன சொல்கிறாய்? நான்… நான்.. “

“சும்மா இருக்கமாட்டாயா ? நீ அதிகம் பேசினால் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று கோவிந்த ராஜு கோபாவேசத்துடன் கூறினான்: “அவள் அதற்கு இணங்கிய பின் நீயும் அவளும் அடிக்கடி சந்தித்து உல்லாசமா யிருந்தீர்கள். என் கண்களில் மண்ணைத் தூவிவிட்ட தாகவே நீங்கள் ஆனந்தமுற்றிருக்கையில் நான் விழித்துக் கொண்டு விட்டேன். உங்கள் நடத்தை யாவும் எனக்கு வெட்ட வெளிச்சமாகிவிட இப்பொழுது நீ அதன் பலனை அநுபவிக்கப் போகிறாய்” என்று கூறிச் சற்று நிறுத்தினான். அவன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. தன் நண்பன்பால் பல உணர்ச்சிகளால் உண்டாகும் முக மாறுதல்களையெல்லாம் சரியாகக் கவனித்துக் கொண்டான். இனி அவன் அதை மறுத்துக் கூறவேண்டியதே மிகுதியாய் நிற்கிறது. அதையும் அறிந்தபின் அவனைச் சமாதானம் செய்வது மிக எளிதான காரியமே. இவ் வெண்ணங்கள் அவன் குரலைத் தாமாகவே சற்றுச் சாந் தப்படுத்த, “இந்தக் குற்றத்தை மறுக்க உன்னால் கூடு மாயின் அவ்விதம் செய்யலாம் ” என்றான். 

ஞானசம்பந்தம் மெதுவாய் எழுந்து நின்றான். அவன் முகம் சவம்போல் வெளுத்திருந்தது. 

“நான் கூறப் போவது வேறொன்றும் இல்லை” என்று ஒருவிதப் பயம், கோபம், துக்கம், யாவும் கலந்த குரலில் சொல்லத் தொடங்கி, “இதைக் கூறிய பின்பு நான் உன் முகத்தி லும் விழிக்காமல் சென்று விடுகிறேன். உனக்கு நான் கனவிலும் துரோகம் நினைத்தவனல்ல. உன் மனைவியிடத் தில் நண்பன் என்பதை விட்டு வேறு நட்பு இல்லை. இது சத்தியம். யாரோ விரோதிகள் வேண்டுமென்றே உன் மனத்தைக் கலைத்து இவ்விதம் உன்னையும் என்னை யும் துன்பத்திற்கு ஆளாக்கியிருக்கிறார்கள் ” என்றான். 

இதுவரையிலும் அடங்கியிருந்த சந்தோஷமானது தாங்கமுடியாமல் போகவே இப்பொழுது அது சிரிப்பாக வெளிப்பட்டது. கோவிந்தராஜு சில நிமிஷங்கள் சேர்ந்தாற்போல் குலுங்க நகைத்தான். அப்புறம் அவன் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு தன் நடத்தையின் காரணத்தைச் சிநேகிதனுக்கு விசதமாகக் கூறி மன்னிக்கும்படி கேட்டான். “என்னை மன்னித்து என்னுடன் உணவருந்திவிட்டுப் போ” என்று அழைத்தான்.”உன்னை மன்னிக்கிறேன். ஆனால் இனி உன்னோடு எப்பொழுதும் போலிருக்க என்னால் முடியாது. நீ செய்த வேடிக்கை என்னை மிகவும் கலவரப்படுத்திவிட்டது. நான் சென்று வருகிறேன்” என்று ஞானசம்பந்தம் வேகமாய்க் கூறி அவ் விடம் விட்டுச் சென்றான். 

“சுத்தப் பைத்தியக்காரன். வேடிக்கையைப் பிரமாதமாகக் கருதுகிறான். எதுவாயினும் நாம் எண்ணிய எண்ணம் என்னவோ நிறைவேறிவிட்டது. இப்பொழுது இவனைச் சமாதானம் செய்ய ஒரு கடிதம் எழுதுகிறேன்” என்று பின்வருமாறு எழுதினான்:- 

“என் பிரிய சிநேகிதனே, 

நீ இதற்குள் என்னை முழுவதும் மன்னித்திருப்பாய் என்று நம்புகிறேன். விளையாட்டை வினையாக நினைப்பது உன்போன்ற புத்தியானுக்குச் சற்றும் அழகல்ல. நான் நாளை நாடகக் கொட்டகை சென்றுவர நேரம் ஆகுமாகை யால் என் மனைவி வீட்டில் தனித்திருப்பாள். நீ அவசியம் வந்திருந்து அவள் தனிமையைப் போக்குவாயென்று நம்பு கிறேன். இன்று நடந்த சங்கதியொன்றும் அவளிடம் கூறாதே. அவள் அதைப் பெரிதாக எண்ணி வருந்தக் கூடும். உன்னை முழுவதும் நம்பும், 

உன் பிரியமுள்ள நண்பன் 
கோவிந்தராஜு” 

இதை ஒரு முறை வாசித்தான். ‘என் மனைவி தனித் திருக்கும்பொழுது அவனை வரச்சொல்லி இருப்பதாலேயே எவ்வளவு தூரம் அவனை நம்பியிருக்கிறேனென்பது வெளியாகிறதல்லவா?’ எனத் திருப்திகொண்டு அக்கடிதத்தைத் தானே வெளியிற் செல்லுகையில் தபால்பெட்டியில் போட்டுச் சென்றான். 

மறுநாள் காலை கோவிந்தராஜவின் வீட்டில் ஓர் அறையில் அவன் மனைவியும் நண்பனும் உல்லாசமாகப் பேசியிருந்தனர். “நேற்று நடந்த ஒரு விந்தையை நினைக்கக் கோவிந்தராஜு அதை உன்னிடம் கூறவேண்டா மெனச் சொல்லியிருந்த போதிலும் சொல்ல வேண்டு மென்னும் ஆவல் உண்டாகிறது” எனக் கூறி நகைத்தான் ஞானசம்பந்தம். 

“அவன் அவ்விதம் விரும்பியிருப்பின் நான் அதை அவசியம் கேட்க வேண்டியதே” என்றாள் அவள். 

“அவ்விஷயத்தை அவனைப்போல் சுற்றி வளைத்துக் கூறித் தொந்தரவு செய்யாமல் சுருக்கிச் சொல்லுகிறேன்; கேள். என்னை அவன் நேற்று வரவழைத்து உனக்கும் எனக் கும் தகாத நட்பு இருந்துவருவதாகக் கூறி வைதான். முத லில் நான் இவன் எவ்விதம் அறிந்தானென மிகவும் பயந்து போனேன். ஆனால் அவன் நடத்தையில் எனக்குச் சற்றுச் சந்தேகம் தோன்றவே முன்பு நான் வாசித்த ஆங்கில வேஷதாரி ஒருவனுடைய கதை ஞாபகத்திற்கு வந்தது. அவ்வேஷதாரி தன் பாகத்தைப் பிசகில்லாமல் நடிக்க வேண்டி அக்கதையில் இம்மாதிரியான சந்தர்ப்பம் ஒன்றில் தன் நண்பனைத் தன் மனைவியிடம் காதல் கொண்டு ஒழுகுவதாகத் திடீரெனக் குற்றம் சாட்டினா னாம்” என்று ஞானசம்பந்தம் கூறி வரும்பொழுதே கோவிந்தராஜுவின் மனைவி பயத்துடன் கைகளால் அவன் கைகளை இறுகப் பிடித்து, “அம்மனிதன் என்ன பதிலுரைத்தான்?” என்றாள். ”அந்தக் கதையில் அம்மனி தன் ஒப்புக்கொண்டுவிட்டான். ஆனால் நான் இல்லை என்று மறுத்துவிட்டேன்” என்றான். 

“அது அவனுக்கு நம்பிக்கை உண்டுபண்ணிற்றா?” என்று அவள் நடுக்கத்துடன் கேட்குமுன், “நான் அவனுக்கும் மேற்பட்ட நடிகன் என்பதை அவன் அறியாது போனான்” என்றான் ஞானசம்பந்தம். 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *