தொல்குடி




கும்பமுனி: “அது சரி வே! முன்பின் நவீனத்துவ பிரம்மா! இந்தக்கதையை கொண்டுகிட்டு இப்பம் என்னத்துக்கு வந்தேரு?”
தவசிப்பிள்ளை: “எல்லாம் வெளிப்படையா பேச முடியுமா பாட்டா? படிமம்ணு ஒண்ணு நீரு கேள்விப்பட்டதில்லையா?”
கும்பமுனி: “இதுக்குள்ள எங்க ஓய் படிமம் இருக்கு? கேப்பையில நெய் வடியிண்ணா கேக்கப்பட்டவனுக்கு மதி வேண்டாமா?”
படைப்பாளி: “இந்த தெலுக்கானா-சீமாந்திரா பத்தி யோசிச்சேன் பாட்டா… எங்கூரு நடப்பு ஒண்ணு ஓர்மைக்கு வந்தது பாத்துகிடும்.”
கும்பமுனி: “அத கட்டுடைச்சி, தகவமைச்சி, அதுக்குள்ளே நுண் அரசியல் பண்ணீட்டேரா?”
தவசிப்பிள்ளை: “இதத்தான் தும்பைவிட்டு வாலைப் புடிக்கதுண்ணு சொல்லுகது”
புலைமாடன்: “என்னத்த கதை எளுதுகானுவோ! நீ எந்திருட்டி. நாம வேற இடம் பார்ப்போம்!..”
கைலாசம் பண்ணையார் செயலோடு இருந்த காலத்திலேயே தனது மகனுக்கும் மகளுக்கும் என இரண்டு வீடுகள் தனித்தனியாக கட்டினார். பொதுவாக மேலத்தெருவை முன்னிருத்தி கிழக்குப் பார்த்த வாசல். ஆனால் சுற்றுக்கட்டுச்சுவருக்கு உள்ளே இரண்டு வீடுகளும் எதிரெதிர் பார்த்துக் கொள்வதைப் போல, தெற்குப் பார்த்து ஒரு வீட்டுக்கு வாசல், வடக்குப் பார்த்து இன்னொரு வீட்டுக்கு வாசல். பொதுவான, கல்வரிகள் பாவிய நடுமுற்றம். நீள அகலம் கோல்களில் சொன்னால் உங்களுக்கு அர்த்தமாகாது. எனவே இருபத்திநாலுக்குப் பதினாறு என்று அடிகளில் சொல்கிறேன், அனுமானித்துக் கொள்ளுங்கள். இரண்டு வீடுகளுமே முற்றத்தில் இறங்கும் வாசல். மேற்குக் கரையில், கிழக்குப் பார்த்து புலைமாடன் பீடம். புலைமாடன் குடும்பக் காவல் தெய்வம்.

இரண்டு வீடுகளுக்கும்,வாசல் படிகள் தவிர்த்து, சுற்றி ஓடும் கல் பாவிய படிப்புரை. ஓராள் குறுக்கே நீட்டிப் படுக்கலாம். முழுப்பனைமர வைரத்தில் கடைந்த தூண்கள், கருமையும் மழமழப்பும் ஊறி உமிழ்ந்தபடி.இரண்டு வீடுகளையும் வளைந்து பொதுவான சுற்றுக்கட்டு கல்லுச்சுவர். புறவாசலில் தனித்தனிக் கிணறு. புறவாசல் சாய்ச்சிறக்கி நிழலில் பதிக்கப்பட்ட அம்மி, ஆட்டுரல். உரல்,நெற்றுத் தேங்காய், உமிச்சாக்கு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, சாம்பல் தவிடு மூடைகள் கிடக்கும் புரை. ஒரு மூலையில் பூவரச மரத்தில் கடைந்த உலக்கைகள். கழுத்து உலக்கை,தீட்டு உலக்கை, குப்பிப் பூண் உலக்கை என வகை வகையாக, மூன்றங்குல விட்டத்தில், ஆளுயரத்தில் பார்க்கும் எவரும் தோதகத்தி மரமோ என ஐயுறுவர். கரு நீலப் பளபளப்பில் சிவபெருமானின் கண்டத்து மணி போல.
புலைமாடன் சின்ன கல்பீடம். ஒடுக்கத்திய வெள்ளிகளில், மாசப் பிறப்புகளில் சின்னப் படுக்கை உண்டு, தேங்காய் பாளையங்கோட்டன் பழம் என்று.கல்லாக நின்றாலும் புலை மாடனும் புலை மாடத்தியும் குடும்ப உறுப்பினர்களே! கொடை என்று கழிப்பதில்லை. சிறப்பு கழித்தால் கருஞ்சேவல் பலி உண்டு.
கைலாசம் பண்ணையார் மக்களில், அண்ணனுக்கு ஆண்மக்கள் இருவர், தங்கச்சிக்கோ பெண் மக்கள் இருவர். தகப்பனார் காலத்திலேயே மகனின் ஆண்மக்கள் இருவரும் மகளின் பெண்மக்கள் இருவரையும் மணமுடித்து கொண்டனர். ஆனால் இங்கு,‘முறையே’என்றொரு சொல்லைப் பெய்ய ஏலாது.ஏனெனில்,சாதகப் பொருத்தம் இல்லாத காரணத்தால் அண்ணன் அத்தையின் இரண்டாவது மகளையும் தம்பி மூத்த மகளையும் வதுவை புரிந்தனர்.
அன்னவயல் புதுவை ஆண்டாள் மொழிந்தபடி:
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
தோரணம் நாட்டி,
பாளை,கழுகு பரிசுடைப் பந்தல் கீழ்,
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து,
மந்திரக் கோடி உடுத்தி,
நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து,
காப்பு நாண் கட்டி,
கதிர் ஒளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மத்தளம் கொட்ட,வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்,
வாய் நல்லார் நல்ல மறை ஓதி, மங்கல நாண் கட்டி,
தீ வலம் செய்து, அம்மி மிதித்து,
குங்குமம் அப்பி,குளிர் சாந்தம் அட்டித்து
மங்கல வீதி வலம் செய்து,
மஞ்சனம் ஆடி
-வதுவை புரிந்தனர்.
ஒரே நாளில்,ஒரே முழுத்தத்தில்,அடுத்தடுத்த மணமேடைகளில், இரண்டு கல்யாணங்கள். பன்னிரெண்டு செம்பு அரிசி வைப்பு என்றனர்.மூன்று பிரதமன்,போளி, செவ்வாழைப்பழம்,யானைக்கால் பப்படம் என்றார்கள். கல்யாணப் பந்தியில் சிறுபயறு, சக்கை,பால் பிரதமன்கள் என்றால் இரவு நாலாம் நீர்ப் பந்திக்கு அடைப் பிரதமன் என்றார்கள் ,மறுநாள் ஏழாம் நீர்பந்திக்கு கடலைப்பருப்பு பிரதமன்,ஏத்தன் பழப்பிரதமன் என்றார்கள்.
காலம் யாருக்கையா காத்து நிற்கும்? அஃதென்ன அறநிலையத்துறை அறங்காவலனா,பூரண கும்பம் வைத்து அமைச்சன் எனில் எதிர்கொண்டு அழைக்க? தாத்தா போனார், ஆத்தாள் போனாள், தகப்பனார் தாயார் போயினர்,அத்தை மாமா போனார்கள், அண்ணனும் தம்பியும் அருமை மனையாட்டிகளுடன் ஈற்றுக் கண்டனர். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
புலைமாடன் : “சரி டே! கதைக்கு வா! சும்மா சுத்திச் சுத்தி வந்து கும்மி அடிக்காதே!”
அண்ணன் தன் சின்னக் கொழுந்தியுடன் தாம்பத்தியம்.விள்ளல் இல்லை,விரிசல் இல்லை,தொய்தல் இல்லை, துவளல் இல்லை. மனைவி,‘இன்னைக்கு கொளுக்கட்டை’ என்றால், கணவன், நானும் அதைத் தான் நினைச்சேன்“ என்பான். ‘இன்னைக்கு புருத்திச் சக்கை புளிசேரி வையேன் என்றால்,மனைவி ‘நானும் நெனச்சேன். வறுத்தரைச்சு தொவையலா,சீவக்கிழங்கு பொரியலா?’ என்பாள்.
தம்பிக்கு,தனது மூத்த கொழுந்தியாளுடன் இல்லறம் என்றாலும், அண்ணனுக்கு மனைவியாக ஆகிவிட்ட போதிலும்,இளைய கொழுந்தியாள்தான் மனதில் முதலில் செந்தூரம் தீற்றியவள்.இட்டும் தொட்டும் நெய்யுடை அடிசில் ஊட்டியவள்.தொட்டும் தடவியும் மோந்தும் முந்தியும் முன் விளையாடல் செய்தவன் அவன். திருமணத்துக்ப் பின்னும் அவளுக்கு வழக்கில்லை என்றபோது களவும் காதலும் கலந்து மிடைந்து காட்டாறாய் ஓடியது.
புலை மாடத்தி: “அண்ணன் பொண்டாட்டி அரைப்பொண்டாட்டி தானே!” பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான்.தமக்கை கையில் தாமாகச் சிக்கினார்கள். புதைந்து புதைந்து,சாடைப் பேச்சாகி,சமரசம் தோற்று,பெருந்தீ பற்றிக்கொண்டது.காரணம் என்ன என்று வெளியே சொல்ல நீதமுண்டா?
புலை மாடன்: “நாம எல்லாத்துக்கும் மௌன சாட்சி, வயத்தைக் கெட்டியாச்சி. வாயையும் கெட்டிட்டானுக.”
பொறுத்துப் பொறுத்து,சித்தப்பாவிடம் போய்ச் சொத்தை பிரித்து தரக்கேட்டுக்கொண்டான் அண்ணன்.பிரிக்க முடியாத சொத்து ஒன்று வீட்டில் வளர்வது அறியாமல்.
“சொத்தைப் பிரிச்சுத் தாருங்கோ சின்னையா!”
“அது எதுக்கு லே இப்போ? ராமன் லெச்சுமணன் மாரி இருந்துக்கிட்டு?”
“இல்ல சின்னையா பிரிச்சுக்கொடுங்கோ”
“என்னலே இது வல்லடி வழக்கா இருக்கு? ஊருக்குள்ளே பந்திரண்டு ஒரு சேந்து அடிக்கது உங்களுக்குத்தான். உங்க தொழுத்து மாட்டை அவுத்து விட்டா தெருக்கொள்ளாமப் போகும். எந்தப்பாவி மட்டை உனக்கு இந்த ஆலோயனை சொன்னான்?”
“அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்லே சின்னையா! அப்பா ஸ்தானத்துல இருந்து,பொது நியாயமா பிரிச்சுக் கொடுத்திடுங்க..”
“எலே! எங்க அண்ணன் இருந்தா இப்பிடிப் பேசுவியாலே!அவன் மனசு என்ன பாடு படும்லே?தப்புலே மக்கா.”
அண்ணன் அடங்க மாட்டேன் என்று நின்றான்.
பொது முற்றத்துப் படிப்புரையில் சித்தப்பா அமர்ந்திருந்தார், மறுநாள் மாலையில். இடக்கைப்பக்கம் வெற்றிலைச் செல்லம்.பெரிய செம்பு நிறைய நுரை பறிய ஆற்றிப் பால்விட்ட கருப்பட்டிக் காப்பி. குனிந்து,முற்றம் எட்டாமல் தொங்கிய கால் பெருவிரல் நகங்களைக் கூர்ந்து பார்த்தார்.
“சரி டே,பெரியவனே! ஒந் தம்பியையும் அவன் சம்சா ரத்தையும் கூப்பிடு” என்றார் சித்தப்பா.
தம்பியும் சம்சாரமும் வந்து நின்றனர். “என்ன சின்னையா! கூப்பிட்டேளா?”
“என்னலே, உனக்க அண்ணன் சொத்தைப் பிரிக்கணும்ங்கான்”
“அது என்னத்துக்கு சின்னையா? அவுனுக்கு கிறுக்கு புடிச்சிற்று. நான் வேற,அவன் வேறயா? அவன் பிள்ளையோ வேற,என் பிள்ளையோ வேறயா?”
புலை மாடத்தி:“ ஆமலே! இதையும் சேர்த்துச்சொல்லு, அவன் பொண்டாட்டி வேற,எம் பொண்டாட்டி வேறாயாண்ணு”
“பின்னே எதுக்குடே பெரியவனே! ஒண்ணாக் கெடந்துட்டுப் போட்டுமே!” – சித்தப்பா.
“எண்ணைக்கிண்ணாலும் பங்கு வச்சுத்தானே ஆகணும் சின்னையா?அதை முன் கூட்டியே செஞ்சுட்டோம்ணா அவனவன் பாட்டை அவனவன் பாத்துகிடலாம்லா?”
“சரி டே!எதுக்கும் நல்ல ஆலோசிச்சு சொல்லுங்கோ எல்லாம் இந்தப் பூ அறுப்படிப்பு முடியட்டும்!”
“ஆலோசிக்கத்துக்கு ஒண்ணும் இல்லே எப்பிடியும் செய்துதான் ஆகணும்,அதை எதுக்கு தள்ளிப்போடணும்?”
“சரிப்பா. இப்பிடி புடிச்ச புடியா நிண்ணா யாரு என்ன செய்ய முடியும்? எதுக்கு பொறவு வம்பு, வழக்கு, கோர்ட்டு,கேசு நல்லபடியா,சமாதானமா பிரிச்சு எடுத்துக் கிடுங்கோ ..எங்கயாம் பராதி உண்டும்ணா எங்கிட்ட சொல்லுங்கோ”
மறுநாள், காலையில் சித்தப்பா தலைமையில் கட்டப்பஞ்சாயத்து. ஊர் கோயில் முதலடி, மற்றும் இரண்டு வயசாளிகள், முன்னிலையில் வாய் வார்த்தையாகப் பாகப்பிரிவினை நடந்தது.இன்றைய கட்டைப் பஞ்சா யத்து போல, குரங்கு அப்பம் பங்கு வைத்த கதையாக இல்லாமல், நேர்மையான தீர்வு,வாதம், பிரதிவாதம்,பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம், திருகல் வாதம், திருத்தல் வாதம், பக்க வாதம், பாரிச வாதம், இளம்பிள்ளை வாதம் எதும் இன்றி நடந்தது..
“சரி டே! அப்பம்,எல்லாம் பேசினபடி சமாதானமாத் தீத்திருக்கு. இண்ணுமுதல் ஆளுக்கு ஒரு வீடு,இப்ப இருக்கப்பட்ட வீட்டிலே அவனவன் இருந்துக்கிட வேண்டியது.மூத்தவனுக்கு வயலு நாலரை ஏக்கர், சின்னவனுக்கு நாலு ஏக்கர்.தென்னந்தோப்பு, மூத்தவனுக்கு ரெண்டு ஏக்கர், சின்னவனுக்கு ரெண்டரை ஏக்கர். வீட்டுக்குப் பொறத்த கெடக்கப்பட்ட மனை,தொழுவு, ஆளுக்குப் பாதிப் பாதி. பாத்திரப் பண்டமெல்லாம் பப்பாதி தரம்போல..உழவு மாடு,வண்டி மாடு,பால் மாடு,கண்ணுக்குட்டி எல்லாம் தரம் பார்த்து பிரிச்சுக்கிடணும் என்னா? ஒரு கரைச்சல் கேக்கப் பிடாது…”
புலை மாடன்: “நாங்க ரெண்டு பேரு கெடக்கமே, மூணுதலைமொறையா? இப்பம் யாருக்குப் பங்குலே?”
அண்ணனின் தர்ப்பைப்புல் சிநேகிதர் பக்கத்தில் நின்ற அவர் தர்மபத்தினி சொன்னாள்- “தொழுத்திலே இருந்து முத்தம் வரைக்கும் நெடு நீளமா குறுக்குச் செவுரு கெட்டீரலாம் சின்னையா!”
புலைமாடத்தி: “இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்”
புலைமாடன்: “கம்ப ராமாயணம் எப்பம் படிச்சே நீ?”
சித்தப்பா: “ நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இருப்பியா சாலாச்சி. அது என்னத்துக்கு செவுரும் கிவுரும்? எத்தனை கலியாணத்துக்கு மணவறை போட்டிருக்கு? தாத்தா, அப்பா, அம்மா, அத்தை, மாமாண்ணு எத்தனை பேரு பிரேதம் போட்டுக் குளிப்பாட்டின முத்தம் இது?என்னமெல்லாம் பாத்திருக்கு?”
புலைமாடன்:“குளம் எத்தன குண்டி பாத்திருக்கு? குண்டி எத்தனை குளம் பாத்திருக்கு?”
”இல்லை சின்னையா! அது சரியாவாது!குறுக்குச் செவுரு வைக்கணும்” என்றான் அண்ணன்.
“எல,கிறுக்குப் பயலாட்டுல்லா இருக்கே! சொன்னாக் கேக்கணும் என்னா?அப்பிடி இப்பம் உங்களுக்குள்ளே என்னலே வெட்டுப்பழி,குத்துப்பழி? கொஞ்சம் அடங்கு என்ன? என்றார் சித்தப்பா.
“வேண்டாம் சின்னையா! இனி மொக தரிசனமே வேண்டாம்”-அண்ணன்
“அதான் என்னத்துக்குண்ணு கேக்கேன்?மொதல்ல காரியத்தைச் சொல்லு..” அண்ணன் முறுக்கிக் கொண்டு நின்றான்,பூ எடுக்க நிற்கும் புலைமாடன் சாமி கொண்டாடி போல.தம்பிக்கு காரணம் தெரியும்.வாய் திறக்க நீதம் இல்லை. சகோதரிகள் செக்கு உலக்கை போல் நின்றார்கள்.
சித்தப்பா சலித்துக்கொண்டே எழுந்தார்.“என்னுண்ணாம் போங்கோ.இதுக்கு மேலே,நான் இங்கின இருக்கத்திலே அர்த்தமில்லே.”
ஒத்து தீர்ப்பு ஆயத்தின் முடிவு போல எல்லாம் அதனதன் போக்கில் சின்னாட்கள் சென்றன. தனித்தனியாக ஏர்மாடுகள் உழப்போயின. தனித்தனியாக சகோதரிகள் பித்தளை வாளி தூக்கி நடந்தனர் சாப்பாடு கொண்டு.களைபறி,உரமிடல்,தண்ணீர் பாய்ச்சுதல் யாவும் தனித்தனியாகத் தோப்பின் வேலிகள் ஈர்க்கு இடைபுகாமல் செப்பனிடப்பட்டன. மாட்டுத்தொழுவங்கள் சீர்பார்க்கப்பட்டன.
கோடிக்கலப்பை,தொழிக்கலப்பை,நுகங்கள்,கோடி மண்வெட்டி,களை மண்வெட்டி,எலிக்கலயங்கள் எல்லாம் பாகமாகி விட்டன.பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வெள்ளையடிப்பு ஆனது. இனி முற்றத்துச்சுவர்களில் காவிப்பட்டை அடிக்க வேண்டும். அதற்கு முன் சித்தப்பா வீட்டுக்குப் போனான் மூத்தவன்.
“சின்னையா,ஒரு எட்டு,சாயந்திரம் வீடு வரைக்கும் வந்திட்டுப் போங்க என்னா?
“என்னலே? உங்க அப்பனுக்கு தெவசம் குடுக்கது எப்படீண்ணா?”
“அதெல்லாம் இல்லே!”
“பின்னே என்னாண்ணு சொல்லு!”
”நீங்க வாருங்க எல்லாம் நேரிலே சொல்லுகேன்!”
விளக்கு வைக்கும் மூவந்திக் கருக்கல் நேரம்.சித்தப்பா போய் முற்றப் படிப்புரையில் உட்கார்ந்தார்.அம்மன் கோயில் சாயரட்சை பூசைக்கு காண்டாமணி அடித்தது.வானில் நாரைக்கூட்டம் ஒன்று மேற்கு நோக்கிப் பறந்தது.பக்கத்து வீட்டில் கைப்பிள்ளை அழும் ஓசை.யார் வீட்டிலோ விருந்தாளி வந்திருப்பார் போல,அவல் தாளிக்கும் மணம்.
“காப்பி குடிக்கேளா மாமா?” என்றாள் மூத்தவன் சம்சாரம்.“வேண்டாம்மா! குடிச்சிட்டுத்தானே வாறேன் எட்டீ நீங்க கூட மூச்சு விடமாட்டங்கியோ பார்த்தேளா? எல்லாரும் பேசி வச்க்கிட்டு நம்மளப் பைத்தியாரன் ஆக்குகியோ பார்த்தேளா? ஓன் வீட்டுக்காரனுக்கு மூலத்திலே என்னம்மா கிருமி கடி?”
புலை மாடத்தி: “ நல்ல சொன்னா! படிச்ச கள்ளியில்லா இவ!”
“ரெண்டு மூணு நாளா ஒரே எழவு தான் மாமா.
முத்தத்துக்கு குறுக்க செவுரு வய்க்கத்துக்கு நாலு வண்டி செங்கலு,மணலு எல்லாம் அடிக்கணுமாம். ரெண்டு அடுப்பும் பக்கத்துல போட்டு,கெழக்க பார்த்து பொங்கலு விடுகதுதான் நமக்கு வழக்கம். இனி மேக்க பாத்தா பொங்கலு விடுகது?”
தோப்புக்குப் போய்விட்டு அண்ணன்காரன் படியேறிவந்தான். தலைமுண்டில் முடிந்திருந்த கொய்யா மணத்தது. சற்று நேரத்தில் தம்பியும் வந்தான், கையில் பருத்த இரண்டு மாங்காய்களுடன். “சின்னையாவுக்கும் சேர்த்து காப்பி போடுட்டீ” என்றான் அண்ணன் பொண்டாட்டியிடம். அதற்குள் தம்பி
சம்சாரம் காப்பி லோட்டாவைக் கொண்டு மாமா பக்கத்தில் வைத்தாள்.
“சரி,காரியத்தை சொல்லுடே! எனக்கு வேலை கெடக்கு” என்றார் சித்தப்பா.
“நாளைக்கு செங்கலு,மணலு,சிமெண்டு எல்லாம் வருது சின்னையா, நீங்க இப்பமே முத்தத்தை அளந்து சாக்கு கட்டியிலே வரைஞ்சுட்டுப் போய்டுங்க. பொறவு வழக்கு வேண்டாம்!”
புலை மாடன் திரும்பி புலமாடத்தியைப் பார்த்தார்: “எட்டீ,நீ தம்பி பங்கிலேயும் நான் அண்ணன் பங்கிலேயும் போயிடுவோம் போலிருக்கே!”
புலை மாடத்தி: “போனா,நீரு மதிலெட்டிச் சாடி வரதுக்கு வழி தெரியாதவரா?”
புலை மாடன்: “ அதுக்கில்லே!ஆனா நம்ம தோளுக்கு மேலேயில்லா மதுலு கெட்டு வரும் .”
புலை மடத்தி: “வரட்டும் பாத்துக்கிடலாம்.நம்ம சத்தியைக் காட்டி தெனமும் மதுலைத் தள்ளி விட்டுருவோம்”
சித்தப்பாவுக்கு சினம் தலைக்கு ஏறியது.காப்பி லோட்டாவை இடக்கையால் முற்றத்தை தட்டினார்.கணீரெனச் சத்தமும் முற்றமெல்லாம் காப்பியின் மணமும்.
“எலே,சொன்னா கேக்க மாட்டையா? சொத்ததான் பிரிச்சாச்சு,இனி காத்தையும் சூரிய வெளிச்சத்தையும் பிரிக்க முடியுமாலே? என்ன மனுசம்லே நீ?
“கோவப்படாத சின்னைய்யா. அது சரியாவாது!”
“என்னத்தைச் சரியாவாது?நாளைக்குப் பொங்கலு விடாண்டமாடே? பொல மாடனுக்கு ஒரு செறப்பு களிக்காண்டாமா?” – சித்தப்பா
“எம் முத்தத்திலே ஒரு கண்டார ஓளியும் பொங்கலு விடப்படாது” அண்ணன்.
“அண்ணன்னு பாக்க மாட்டேன்.. தாய்ளி மண்டையை அடிச்சிப் பொளந்திருவேன். நாக்கை அடக்கிப் பேசணும். பொது முத்தத்திலே பொங்கலு விடதுக்கு எந்த நாய்க்கு சிவாரிசு வேணும்?”- தம்பி
“பொது முத்தத்திலே பொங்கலு விட்டா,நான் ஒரு முத்தத்திலே உக்காந்து பேலுவேன்” – அண்ணன்.
“ச்ச்சீ என்ன பேச்சுப்பா பேசுகே?” – சித்தப்பா
“இவன் பேண்டாலும் பேலுவான் சித்தப்பா சொந்த வீட்டிலே உலை அடுப்பிலே பேலக்கூடிய பய!” – தம்பி
“என்னலே சொன்னே தாய்ளி? அந்த வெட்டுக்கத்தியை எடுத்தாடீ தேவ்டியா!” என்று அண்ணன் பாய்ந்தான்.
“வாலே செறுக்கி விள்ளே ஓன் சங்கக் கடிச்சு ரெத்தம் குடிக்காட்டா,நான் எனக்கு அப்பனுக்குப் பொறக்கல்லே.” – தம்பி
கை கலப்பு,தள்ளு முள்ளு,தெரு வாசலில் பெருத்த குரல்கள் கேட்டுத் தலைகள்
முளைத்தன.. மனைவியர் பதறியபடி முற்றத்தில் இறங்கினர்.
“இன்னாருங்கோ ..” “போங்க அந்தாலே.” “சொன்னாக் கேக்க மாட்டேளா?” “இப்ப வாறேளா,அரிமாணையைத் தூக்கிட்டு வரவா?” என மனைவியர் காச்சு மூச்சு ..
மூசுமூசென்று சண்டைச்சேவல்கள் போல இருவரும் பிரிந்து நின்றனர்,ஒருவரைப் பார்த்து ஒருவர் உறுமியபடி. சற்றும் ஆவேசம் தணியாமல் தன் வீட்டினுள் ஓடிய மூத்தவன்,உக்கிராணப் புரை மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு உலக்கைகளையும் நெஞ்சோடு சேர்த்தணைத்து தூக்க முடியாமல் தூக்கி வந்து நடு முற்றத்தில் எறிந்தான்.படிப்புரையில் நின்று கத்தினான்.
“உனக்க எல்லா உலக்கையும் கொண்டாந்து முத்தத்திலே போடுலே.எல்லாத்தையும் நட்டக்குத்தற ரெண்டு ரெண்டாக கீறித்தான் பங்கு வைக்கணும்.அப்பிடி நீ எனக்கு அப்பன் சம்பாத்தியத்திலே சுகிக்காண்டாம்”
புலை மாடத்தி: “அப்பம் அண்டா, குண்டா, நெலவா, உருளி,மைசூர் சருவம், வடை சட்டி, அப்பச் சட்டி,புட்டுத்தோண்டி,சட்டுவம்,கண்ணாப்பை எல்லாம் கொண்டாட்டு உடைக்காண்டாமா?”
சித்தப்பா வடசேரித் துவர்த்தை உதறித் தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார்.. “வெறும் வெட்டுக்கத்தியை வச்சிக்கிட்டு உலக்கயை வகுந்து போட முடியாதப்பா.பெரிய உளி வேணும்,சீப்புளியும் சித்துளியும் வேணும். நான் போகச்சிலே தச்சாரியைச் சத்தம் காட்டீட்டுப் போறேன், தாய்ளி எம் பேச்சுக்கே அடங்க மாட்டம்ங்கான் .இனி கோர்ட்டுக்கு போலே. அவன் குலமறுத்து குண்டீலே தீயை வச்சு அனுப்புவான் அப்பத் தாம்லே அடங்குவே, நல்லகாலமா எனக்கு அண்ணன் செத்துப்போனான் முன்னக்கூட்டியே!” புலம்பிக்கொண்டே எழுந்து போனார்.
கும்பமுனி:“அது சரி வே!முன்பின் நவீனத்துவ பிரம்மா!இந்தக்கதையை கொண்டுக்கிட்டு இப்பம் என்னத்துக்கு வந்தேரு?”
தவசிப்பிள்ளை:“எல்லாம் வெளிப்படையாப் பேசமுடியுமா பாட்டா? படிமம்ணு ஒண்ணு நீரு கேள்விப்பட்டதில்லையா?”
கும்பமுனி:“இதுக்குள்ளே எங்க ஓய் படிமம் இருக்கு?கேப்பையிலே நெய் வடியிண்ணா கேக்கப்பட்டவனுக்கு மதி வேண்டாமா?”
படைப்பாளி:“இந்த தெலுக்கானா – சீமாந்திரா பத்தி யோசிச்சேன் பாட்டா..எங்கூரு நடப்பு ஒண்ணு ஓர்மைக்கு வந்தது பார்த்துகிடும்”
கும்பமுனி:“அதைக்கட்டுடைச்சி, தகவமைச்சு, அதுக்குள்ளே நுண் அரசியல் பண்ணீட்டேரா?
தவசிப்பிள்ளை: “இதைத்தான் தும்பைவிட்டு வாலைப் புடிக்கதுண்ணு சொல்லுகது”
புலைமாடன்: “என்னத்தைக் கதை எளுதுகானுவோ! நீ எந்திரிட்டி. நாம வேற இடம் பார்ப்போம்!..
புலைமாடத்தி: ‘’இப்ப நிண்ணாப்பிலே,மூணு தலைமுறையா குடியுருந்த எடத்த விட்டுட்டு எங்க போறது?”
புலைமாடன்:“வா பார்ப்போம் எங்கிணயாம் பொறம்போக்குலே ஆலமரம் வேப்பமரம் நிக்கான்னு பார்ப்போம்”
– அந்திமழை, ஏப்ரல், 2014.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |