தொடுவானம்
துயர இழப்புகளே இருள் கனத்த நீண்ட ஒரு யுகமாகப் பழகிய பின்னும், வேணியின் இருப்பு வேறு. மிகப் பெரிய சண்டை மூண்டு சலன நினைவுகளோடு சம்பந்தப்பட்ட நிழல் வாழ்க்கையே பொய்த்துப் போகின்ற நிலைமையில், பூரண அன்பு நிலை கொண்டு அவளுக்கு அடி சறுக்கிப் போகாத இப்படியொரு மேலான வாழ்க்கைத் தவம் அவள் ஒரு தீவிர சமூக சேவகி. முப்பது வயதாகியும் இன்னும் கல்யாண வேள்வி காணாமல் புருஷ சுக நினைப்பின்றி உயிர் காப்பாற்றும், பொது நலத் தொண்டுக்காகவே முழு மூச்சாகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவள்
யாழ்ப்பாணம் தான் சொந்த இடமாக இருந்தாலும் பெரும்பாலும் வன்னியிலேயே அவள் பொழுது ஓர் அர்ப்பணிப்புத் தவ வேள்வியாகவே கழியும் செஞ்சிலுவையல்லாத வேறொரு தொண்டு நிறுவனத்திலேதான் இப்போது அவள் ஒரு பணியாளனாக இருக்கிறாள்.. செஞ்சிலுவைச் சங்கம் என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தின் மீது அவளுக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் பிள்ளயையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி வருவதாக அவள் நினைப்பு.
இதை அப்பாவே நேரிடையாக அவளிடம் பல தடவைகள், சொன்னதுண்டு அவரும் ஒரு மிகப் பெரிய சமூகத் தொண்டன் தான். அவரின் தியாக மனப் பாங்கே அவளையும் இவ்வழியில் புடம் போட்டு ஒரு மேலான சமூக சேவகியாகக் களம் இறங்க வைத்திருக்கிறது
அப்போது எல்லாம் இழந்து தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வன்னியில் இடம் பெயர்ந்து அலைந்து கொண்டிருக்கும் அகதிகளைச் சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறி அரவணைப்பதற்காக வன்னிக்கு வந்து சேர்ந்த நேரமது யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய போது ஏற்பட்ட நிகழ்வு. அவளுக்குத் துணையாகக் கண்ணனும் வந்து சேர்ந்திருந்தான். அவளைப் போலவே தன்னலம் கருதாத சமூக சேவையே, அவனின் தலை சிறந்த இலட்சியப் பணி. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாட்டசாட்டமான ஒரு கம்பீர இளைஞன் அவன்
அவள் எதையோ மிகவும் கவலையோடு யோசித்து மனம் வருந்தி நின்ற சமயம் அவன் ஆதரவாக அவளை அன்பு மேலிடப் பார்த்தவாறே, குரல் உயர்த்திக் கேட்டான்
“என்ன வேணி அழுகிறியே எதற்கு இப்ப இந்த அழுகை?”
“நான் என்னை நினைச்சு அழுகிறேனென்றா நினைக்கிறியள்?”
“”எனக்குத் தெரியாதா? அப்படி அழ நீ ஒன்றும் அவ்வளவு பெரிய சுயநலக்காரியில்லையே. . இப்படி அழுவதற்கு இஞ்சை என்னத்தைக் கண்டனி?”
“கண்ணன்! உங்களுக்கு இந்த அழுகுரல் கேட்கேலையே?
“கேட்குது குண்டு துளைச்சு ஒரு கைக் குழந்தை மோசம் போட்டுதாம்> அதோ பார் அந்த ஈனக் காட்சி அவலத்தை. இது தானே உன்ரை கண்ணிலை இப்படி உதிரம் கொட்டக் காரணம்..?”இஞ்சை வந்து இதையெல்லாம் பார்த்தால் அழுகை வரத்தான் செய்யும். அதற்காக இப்படியே? இப்படி எத்தனை சுடுகாடுகளைப் பார்த்திட்டம். மறந்திட்டியே?”
“ஒன்றையும் நான் மறக்கேலை. ஏன் இப்படி எல்லாம் நடக்குது கண்ணன்?”
“இதை எத்தனை தரம் தான் கேட்டிருப்பாய். எங்கடை தலை விதி. இல்லை சாபம் இதுக்கு மேலே. இன்னுமொரு முக்கிய காரணமும் இருக்கு. இப்ப அதைச் சொல்ல நேரமில்லை. பிறகு சொல்லுறேனே!”
அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆர்வத்தோடு கேட்டாள்
“ப்ளீஸ் கண்ணன் அது என்னென்று சொல்ல மாட்டியளே”
‘அது ஒரு பெரிய கதை. ஆரம்பத்திலிருந்து சொல்லாவிட்டால் உனக்கு விளங்காது.. இருந்தாலும் சுருக்கமாகவே சொல்லுறன். .இஞ்சை சண்டை எதுக்காக நடக்குது தெரியுமே?
“உரிமை பெறத் தானே”
‘ம்! அப்படியும் சொல்லலாம் இதுக்கு மேலேயும் ஓர் ஆழமான காரணம் இருக்கு ஒன்றுக்கொன்று சங்கிலிக் கோர்வை மாதிரி,இது பிணைந்து போயிருக்கு.. இது தான் இப்ப உள்ள நிலைமை ..இதுகள் அகதிகளாய் வந்தால் தானே அங்கை பருப்பு வேகும்”
“எங்கை?”
“என்ன வேணி இது கூடவா உனக்குத் தெரியாது?”
எனக்கு எவ்வளவோ மூளைக்குள்ளை இருக்கு. . நான் எதையென்று யோசிக்கிறது”
“இது அப்படியொன்றும் யோசித்துப் பார்க்கிற , அளவுக்குப் பிடிபடாத விடயமில்லை. எங்கடை ஒவ்வொரு தமிழனும் அங்கை அந்த வெள்ளைக்கார நாட்டிலே, அகதி முத்திரை குத்திக் கொண்டுதான் கொடி கட்டிப் பறக்க நேர்ந்திருக்கு. இதிலே எவ்வளவு பேர் கப்பல் விட்டுப் போகினம்.. கொழும்பிலே போய்ப் பார்த்தால் உனக்குப் பிடிபடும் வீடென்ன! வாசலென்ன! இந்த அதி உச்சக் கட்ட ஆடம்பர வாழ்க்கையென்ன! இதெல்லாம் ஆராலே> எப்படி வந்தது ? சொல்லு வேணி”
“என்ன கண்ணன் குழப்பிறியள்?”
“சரியான மக்கு நீ. இவ்வளவு தெளிவாகச் சொன்ன பிறகுமா உனக்கு விளங்கேலை’. சரி உனக்கு விளங்கிற மாதிரியே சொல்லுறன். எங்கடை கண்ணிலை வெளிச்சம் காட்டிக் கொண்டு நிற்குதே வெளிநாடு. லண்டன் கனடா என்று சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும். அங்கை அகதியென்று எடுபட்டால் தான் எங்களுக்கு வாழ்க்கை என்றாச்சு. இது நிலைத்து நிற்க வேண்டுமானால் இருளடைந்த காட்டிலே இந்த இருப்பும் இழப்புகளும் அவசியம் தான். இப்ப விளங்குதே ?ஏன் இந்த நிலையென்று”
அவள் அறிவுபூர்வமாகவே அதைப் புரிந்து கொண்ட பாவனையில் தலை ஆட்டினாள்
இதைப் புரிந்து கொண்டதற்காக மேளம் தட்டிக் கொண்டாடவா முடியும். அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. இதிலே சுய கெளரவம் எப்படிப் போனாலென்ன. நாடு இந்த மக்கள் என்ரை மண், எப்படிப் பற்றியெரிந்தாலென்ன. எங்களுக்குப் பணம் வேணு.ம் அதனால் தான் இதெல்லாம்.. ஒன்றுக்கொன்று தொடர்புபட்டதாய் இப்படியொரு ரணகளம். இது நின்றால் எங்கள் மூச்சும் நின்று போகும். இப்படியாகி விட்டதே எங்கள் நிலைமை”
“சொல்லுங்கள் கண்ணன் நீங்கள் போட்ட கணக்கு ஒன்றுக்கொன்று சரியாகத்தானிருக்கு வெறும் மனக் கணக்கு என்றால் மறந்து விடலாம். இது நமக்குக் கேவலமில்லையா?”
“நீ இப்படி நினைக்கிறாய்.. ஆர் இதைப்பற்றியெல்லாம் யோசிச்சிருப்பினம்… இப்படி அகதிகளாய்ப் போய் இறங்குவதை எங்கடை ஆட்கள் எவ்வளவு மனம் பூரிச்சுக் கதைச்சிருப்பினம் தெரியுமே.. இப்ப சண்டை நிற்க வேணுமென்று எவ்வளவு பேருக்கு மனப்பூர்வமாக விருப்பமிருக்கு? வெளிப்படையாகக் கூற முடியாவிட்டாலும் மனசுக்குள்ளை இதுதான் பிராத்தனையாக இருக்கு. . ஏதோ நீயும் நானும் ஆசைப்பட்டால் மட்டும் முடியப்போகுதே?
“என்ன சொல்லுறியள் கண்ணன்ப் நீங்கள் சொல்வதைக் கேட்டால் அவர்காள் வாழ இது அவசியமென்று தானே படுகுது ..காசு வேணும் தான்.. அதுக்காக இப்படியா?”
“சரி விடு. வேணி நாங்கள் இதை மறக்கப் பார்ப்பம். எது நல்லதென்று படுகுதோ அதைச் செய்து முடிப்பம் .வா வந்த காரியத்தைப் பார்ப்பம் “
அதன் பிறகு அவர்கள் பேசவில்லை பேச்சிழந்த மெளனமே இப்போதுள்ள நிலையில் சிறந்தததென்று பட்டது .அவர்கள் வழி அவர்களுக்கு. அதுவே முடிவுமானது”
– மல்லிகை (நவம்பர் 2008)