தேவதையின் கணவன்




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்படி வந்து நேரும் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. சந்தர்ப்பம் அப்படி வாய்த்தது. இருட்டு, மழை, இடி என்றாலே, அவளுக்குப் பயம். தாழ்வாரத்தில் விளக் கில்லாவிட்டால் தலை போனாலும் அவ்வழி போக மாட்டாள்.
ஐப்பசி மாசம் அடை மழை’ என்பார்களே, அன்றைய மழைக்கு, இது நன்றாய்ப் பொருந்தும். அப்படித் தாரை தாரையாய் வானம் உடைப்பெடுத்தாற்போல்.ஊற்றியது. பகல் பத்து மணியான போதிலும், அவள் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி மேஜையின் மீது வைத்துவிட்டாள். ஆனால் அவ்வொளியில் அவள் எதிர்பார்த்த தென்பு அவளுக்குக் கிட்டவில்லை.
சுவர் ஓரமாய், ஒரு பிரம்பு நாற்காலியில்,பூனைபோல், கால்களை மடித்துப் போட்டுக்கொண்டு, மழைக்குப் பயந்து அவள் பதுங்கிக்கொண்டிருந்தாள். அங்கே இருந்தும் இல்லாதவனாகவே நிற்கும் தன் கணவனை, அவளது கண்கள் சஞ்சலத்துடன் நோக்கின.
என்ன காத்திரம்! கால்களைச் சற்று விரித்து அழுத்த மாய் ஊன்றிக்கொண்டு, பின்புறம் கைகளைக் கட்டிய வண்ணம், சிலையடித்தாற்போல் அவன் நின்றான். அவனது கண்கள்கூட அதிகம் இமைக்கவில்லை; ஜன்னல் கண்ணாடி மேல் வழியும் மழை ஜலத்தையும், அதற்குப் பின்னால் எதிரில் ஓங்கி நிற்கும் குன்றுகளிடையில் இன்னமும் திரளும் மேகங்கள் கவிந்து குவிந்து ஒன்றுடனொன்று குழைவதை யும், பார்த்துக்கொண்டிருந்தான். இம்மழைத் திரையின் பின்னால் பதுங்கும் ஏதோ ஒன்றை, அவன் பார்வை தேடி யலைந்தது. அவன் அங்கே இருந்தும் இல்லை.
சொடேர்! –
சாட்டையடி போன்றதொரு மின்னல் வீசியது; அதைத் துரத்திக்கொண்டே உருண்டு சென்ற ஓர் பேரிடி மொள மொள வென நொறுங்கியது.
‘வீல்’ என்று ஒரு அவறு அலறி, ஒரு துள்ளுத் துள்ளி, தன் கணவன்மேல் அவள் துடித்து விழுந்தாள்
எங்கேயோ, ஒரு கண்ணாடி உடைந்த சத்தம்…
அவன் கைகள், அவளைக் கீழே விழவொட்டாமல் தாங்கின. அவன் கண்கள் அவளது பயத்தைக் கண்டு புன்னகை பூத்தன. அவ்வளவுதான் –
கலியாணமானது முதல் இதுதான் அவளுடைய முதல் ஸ்பர்சம். இதுவரையில் உள்ளேயே குமுறிக்கொண்டிருந்த அவளது ஆசை வெள்ளம், திடீரென்று பொங்கிப் பெருக் கெடுத்துவிட்டது. அவள் தன்னை மறந்தாள். வெறி பிடித்தவள்போல், அவனை இறுக அணைத்தாள்.
அவன் கண்களில் புன்னகை மலர்ந்தது.
க்ரீச்!
அவன் போட்ட கத்தல் ஆகாசத்தைக் கிழித்தது. திடீரென்று, அவன் தலை ஆடியது. யாரோ கன்னத்தில் அறைந்தாற்போல, மறுகணம், அவன் வாயோரத்தினின்றும் ஒரு இரத்த நூல் அரும்பி வழிவதை அவள் கண்டாள். கீழே விழவிருந்தவன், சமாளித்துக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தான்.
“கண்ணம்மா,இருக்கிறாயா?” என்றான். அவனுக்குக் கலியாணமானது முதற்கொண்டு, அவளுக்கு நினைவு தெரிந்து, அவன் வாயினின்று வந்த முதற்பேச்சு அதுதான்.
ஆனால், கண்ணம்மா?- அந்தக் கண்ணம்மா யார்?
அவன் சாவதானமாய் இரத்தத்தை வழித்து, எழுந்து, ஜன்னலைத் திறந்து, மழை ஜலத்தில் கையை அலம்பிக் காண்டு, மறுபடியும் வந்து நாற்காலியில் உட்கார்ந்தான்.
அவளுக்குத் திடீரென்று உடல் வெலவெலத்தது. இரத்தத்தைக் கண்ட பயம், துக்கம், சந்தோஷம் இந்த மட்டுக்கும் அவன் வாய் திறந்தானேயென்று. ஆனால் ஒன்றுமே புரியாததினால் ஒரு திகைப்பு – இத்தகைய பல உணர்ச்சிகள் அவளை ஒரே சமயத்தில் தாக்கவே, அவளுக்கு கடைசியில், அழுகைதான் வந்தது. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போலிருந்தது. அவன் கைகள், தன்னை யணைக்க விரும்பினாள். அவளது கண்களை அவன் துடைத் தால்தான் அவளுக்குத் தைரியம் வரும்.
“வா, இப்படி உட்கார்” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்லலானான்: “நான் உனக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன்- என் கதை — நீ அதை எவ்வளவு தூரம் நம்புவாயோ, அது எனக்குத் தெரியாது. ஆனால், என் வரைக்கும், அது நிஜமாய் நடந்ததுதான் – நீ இதைத் தெரிந்து கொள்வதும் அவசியந்தான். கண்ணம்மாளின் வார்த்தை அப்படித்தான்.”
அவன் குரலில் மது மயக்கத்தின் இனிப்பு – கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. அவன் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ?
“நான் சிறு வயதில் மக்கு-ஒரு பதினைந்து வருஷத் துக்கு முந்தின சமாசாரத்தைச் சொல்கிறேன். எனக்கு. ‘மொத்து’ என்று ஒரு செல்லப்பெயர்கூட உண்டு. வாஸ்தவமாய், என் சொந்தப் பெயரைக் கூவி, ‘தேவராஜா என்று கூப்பிட்டால், சுருக்கப் புரியாது. அம்மா, ஆசையாய் மொத்துக் குட்டீ’ என்றுதான் அழைப்பாள்.
“உடம்பு கொழு கொழுவென்று இருப்பேன். அவ்வளவு தான். மற்றபடி, மூளை மஹா மந்தம். சூக்ஷ்ம சக்தி சூன்யம். ஏழு, எட்டு வயதான பிறகுகூட, இந்தச் ‘சாமி வைத்து வளையாடுதல்”, புருஷன் பெண்டாட்டி விளை யாட்டு இம்மாதிரியான சில்லறை விளையாட்டுக்கள்தான் தெரியும்.
“பழையதைப் போட்டுப் பள்ளிக்கூடம் போகச் சொன் னால், ஸ்லேட்டையும் புஸ்தகத்தையும் எடுத்துக்கொண்டு எங்கள் ஊருக்கருகில் ஒரு மாந்தோப்பு உண்டு – அதில் ஒரு மரத்தின் கிளையில் தொங்க விட்டுவிட்டு. நான் பாட்டுக்கு ஒரு கல்லையோ ஒடிந்த கிளையையோ வைத்துக்கொண்டு, என்னத்தையோ உளறிக்கொண்டு, அந்தத் தோப்பி லிருக்கும் கண்ணம்மாள் கோவிலில் விளையாடிக் கொண்டிருப்பேன்.”
“கண்ணம்மா கோவில், தெருக்கோடியில் காணும் பிள்ளையார் கோவில்மாதிரி,சின்னதாய்த்தான் இருக்கும். கண்ணம்மா எங்கள் ஊர்க் கிராமதேவதை. கிரமமான பூஜை கிடையாது. ஒரு நாளில் ஏதாவது ஒருவேளை- வாரத்துக்கு இரண்டு முறை இருக்கும்- பூசாரி வந்து. விக்ரஹத்தின் தலையில் ஒரு சொம்பு தண்ணீரைக் கொட்டி விட்டு, நைவேத்யம்கூட வைக்காமல் போய்விடுவான்.வழிப் போக்கர் யாராவது, தேங்காய் உடைத்தால் உண்டு, விளக்குப் போட்டால் உண்டு. வருஷத்துக்கு ஒரு தடவை எண்ணெய் முறை உண்டு – உம் – கோழிப் பலிகூட உண்டு – அவ்வளவுதான். கண்ணம்மா கோவில் திறந்தேயிருக்கும் சதா, அதுதான் எனக்கு ரொம்பவும் பிடித்தமான விளை யாட்டு ஸ்தலம்.”
“ஒருநாள் காலை 10, 10-30 மணியிருக்கும். தோப்புக்கு விளையாடச் சென்றேன். எனக்கு அன்றைக்கு என்னவோ குஷி ; காரணம் தெரியவில்லை. நான் ‘பொய்ப் பூணூல் போட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாள் ஆவணி அவிட்டம். அதை, தவறாமல் நாளைக்கு இரண்டு வேளை, சந்தனம் அரைத்துக் குழைத்து அதில் தோய்த்துப் போட்டுக் கொண்டேன். இடம் வலம்கூடத் தெரியாமல். அது நன்றாய் ஊறி. மஞ்சள் மசேலென்று, கம்மென வாசனை வீசிக்கொண்டிருந்தது…வழியில் அடிக்கடி முகர்ந்து பார்த்துக் கொண்டே போய், கோவிலில் உட்கார்ந்து கொண்டேன்.”
“கதவு திறந்திருந்தது. யாரோ, அகலில் திரியை ஏற்றிவிட்டுப் போயிருந்தார்கள். கண்ணம்மாளின் அதிர்ஷ்டம்,நாயோ, எலியோ. எண்ணெயைக் குடிக்காமல் விட்டிருந்ததில், திரி சற்று நின்றே எரிந்தது… திடீரென்று கீச் கீச்’ என்று கத்திக்கொண்டே, ஒரு மூஞ்சூறு கண்ணம்மா மீது ஓடியது. அது எனக்கு ரொம்பவும் தமாஷாயிருந்தது. உஷ் உஷ்’ என்று அதை விரட்டிக்கொண்டே, விக்ரஹத்தை நெருங்கினேன். அப்பொழுது என்ன நேர்ந்ததோ தெரிய வில்லை. அந்தச் சின்னஞ் சிறு அகலொளியில், கண்ணம்மா வின் முகத்தைப் பார்த்ததும், எனக்கு ஏதோ ஒருவிதமாய்ச் சந்தோஷமாயிருந்தது. செதுக்கிய அந்த வாய் என்னைப் பார்த்துச் சிரித்தது. எனக்கு என்னவோ தோன்றிற்று. சிரித்துக்கொண்டே, என் பூணூலைக் கழற்றி விக்ரஹத்தின் கழுத்திலிட்டேன். எனக்குத்தான் அன்றைக்கு என்று மில்லாத ‘குஷி’ என்றேனே!- கண்ணம்மாவின் கழுத்தில் அந்தக் கயிறு மஞ்சள் மசேலென்ற தோற்றத்துடன், கம்மென வாசனை வீசியது… அப்புறம் திடீரென்று அந்த விளையாட்டு சப்பிவிட்டது. வேறு எதிலோ கவனம் ஆழ்ந்து விட்டது.பூணூலை எடுக்கக்கூட மறந்து ஓடிப்போய் விட்டேன்..
“நாட்கள் சென்றன. ஆனால் அன்று முதல், நான் வளர ஆரம்பித்துவிட்டேன். நான் சொல்வது புரிகிறதா? வளர்ச்சி என்றால், வெறும் உடல் வளர்ச்சி அல்ல – அறிவின் வளங்கூடத் திடீரென்று அதிகரித்து. நான் புதுக்காந்தி யுடன் விளங்கினேன். என் அறிவு வளர ஆரம்பித்து விட்டது. திடீரென்று அதன் மந்தம் மறைந்து, அது அற்புத மான பக்குவமடைந்தது. அம்மு வீட்டுத் தேவராஜன், அப்பி வைத்த மண்சுவர் மாதிரி இருப்பானே; அவன் எப்படி இவ்வளவு துடியானான்!’ என்று எல்லோரும் ஆச்சரியமடை யும்படியாயிற்று. என் புத்தியின் வளர்ச்சி. எனக்கு என்ன உடம்போ, ஏதோ என்றுகூட, அம்மா பயந்துவிட்டாள். நான் பழைய ‘மொத்துக் குட்டியா’யில்லையே இப்பொழுது! எனக்கே என் திடீர்ச் சுறுசுறுப்பைக் கண்ட பிரமிப்பில் ஒரு பீதியும் கலந்திருந்தது. நாளுக்கு நாள் நான் வளர வளர, அதுவும் அதிகரித்துக்கொண்டே வந்தது.
“நாட்கள்,வாரங்கள், வருஷங்கள் சென்றன. இடையில் அப்பா இறந்துவிட்டார். எனக்கு இப்பொழுது இருபத்து இரண்டு வயது. எனக்கு என்னையே அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. பன்றி மயிர்மாதிரி கட்டையாயிருக்கும் என் மயிர் ஒரே சுருள் கொத்தாய், கரும்பட்டுப்போல், பள பளவென்று மின்னியது. என் கண்கள், விரிந்து, பரந்து ஜ்வாலை வீசின. என் நடையுடை பாவனை எல்லாவற் றிலும், ஒரு தனிக் கம்பீரம், ஒரு தனி அழகு – சீ, என் காலில், நானே விழுந்து கொள்வதுபோல் இருக்கிறதே என் பேச்சு! இருந்தாலும், நான் சொல்வதெல்லாம் மெய், மெய், மெய்.”
“ஒருநாள் நள்ளிரவு. பௌர்ணமி தினம். அற்புதமான நிலவு. திடீரென்று விழித்துக்கொண்டேன். என்னை ஏதோ ஒரு குரல் தட்டியெழுப்பியது.
“தேவராஜ்”
“ஆம், மறுபடியும் அதே குரல்தான்; ஆனால் ஒரு முகமும் தெரியவில்லை. வெறும் குரல்தான்… தேன் சொட்டும் குரல். அவ்வழைப்பை எதிர்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. கயிற்றுக்கட்டிலை விட்டுஎழுந்து, குரல் கேட்கும் திசையை நோக்கி, கைகளை நீட்டிக்கொண்டு, வாசலைக் கடந்து சென்றேன். அதுவும். இடையில் சப்தித்து எனக்கு வழி காட்டிக்கொண்டு முன் சென்றது, வழியெல்லாம் தேனைச் சொரிந்துகொண்டு…”
“சந்திரிகையென்றால், அன்றிரவின் சந்திரிகைதான் சந்திரிகை. அதுவும், அந்தப் பாதி ராத்திரியில், அந்த நிசப்தமான வேளையில், வழியில் கிடக்கும் ஒவ்வொரு கல்லையும், ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்களில் தேங்கி யிருக்கும் தண்ணீரையும் – அன்று சாயந்திரம் திடீரென்று ஒரு சிறு மழை பெய்திருந்தது – தன் குளிர்ச்சியான நிலவால் அபிஷேகித்துக்கொண்டு, அங்கங்கே தரையில் வெள்ளைப் புள்ளி வைத்துக் கோலமிட்டாற்போல், மர இலைகளின் நிழலிடையில், தனி ஒளியைச் செலுத்தியவண்ணம், சந்திரன் பரிபூர்ண அரசு செய்த காட்சி ஊஹும், என்னால் சொல்ல முடியவில்லை – கண்டுதான் அனுபவிக்க முடியும் அவ்வழகை!-
“நான் மாந்தோப்பையடைந்து, கண்ணம்மா கோவிலை அணுகிவிட்டேன். கோவிலினின்றும் ஒரு உருவம் குதித் தோடி வந்து, கைகளை வீசி, என்கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு, முகம், கண், வாய், மூக்கு, கன்னம் எல்லாம் மாறி மாறி முத்தமிட்டது. எனக்கு மூச்சுத் திணறி நினைவு தெளியவே சற்றுநேரம் சென்றது……
“பதினைந்து, பதினாறு வயதுதான் இருக்கும். அவள் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் யௌவனம் வழிந்தது. சர்வாபரண பூஷிதை. அடர்ந்து வளர்ந்த மயிரை, அழுத்தி வாரி, தாழம்பூ வைத்த அவளது பின்னல், நீண்ட சர்ப்பம் போன்று, தொடைக்கும் கீழிறங்கி, தரையை இடிப்பது போல் தொங்கியது. முகத்தின் ஒவ்வொரு லட்சணமும் கடைந்தெடுத்ததுதான். அவளது கண்கள் வாதாம் பருப்பை யொத்திருக்கும்; சற்று மேட்டுவிழிகள், இமை மயிர்கள், நீண்டு, நுனியில் சுருண்டிருக்கும். அந்தக் கருவிழிகளில் கணத்துக்கு ஒரு புது ஒளி, புது அழகு தோன்றி, என்னை ஒரே மயக்காய் மயக்கி தன் மந்திரத்தில் கட்டிவிட்டது
“என் திகைப்பைக் கண்டு,புன்னகை புரிந்துகொண்டே, என் கையைப் பிடித்து இழுத்து, அங்கே கிடந்த ஒரு கல்லில் உட்காரவைத்து, தானும் என்னருகில் உட்கார்ந்து, என் கழுத்தை ஒரு கையால் கட்டிக்கொண்டு, அவள் என் முகத் தைப் பார்த்துச் சிரித்தாள். அவள்மேல் கமழ்ந்த நறுமணம் என்னைக் குடிமயக்கத்தில் அழுத்தியது.
“இந் நள்ளிரவில் – நீ யார்?” என்றேன்.
“தெரியாதா – நான்தான் கண்ணம்மா – உன் ஸ்திரீ- நீ என் கணவன் – இதோ பார்.. “
“சிரித்துக்கொண்டே, என்மேல் குனிந்து, தன் கழுத்தி லிருந்த ஒரு நூலை, என் கண்களில் ஒற்றினாள். மஞ்சள் மசேல் என்றிருந்த அது சந்தனமணம் கமழ்ந்தது… எனக்கு ஞாபகம் வந்தது.
“ஓ, உனக்காக நான் எத்தனை நாள் காத்துக்கொண் டிருந்தேன் தெரியுமா! நீயும் நன்றாய்த்தான் இருக் கிறாய்!’ என்று சொல்லி, என் கன்னத்தில் ஒரு தட்டுத் தட்டிச் சிரித்தாள். குடத்தில் தண்ணீர் தளும்புவதுபோல் இருந்தது. அந்தச் சத்தத்தின் இனிமை.
“கண்ணம்மா இம்மாதிரியே, ஒவ்வொரு இரவும், என்னை அழைப்பாள். அவளுடைய அற்புதமான மயக்கை என்னால் உதற முடியவில்லை. என் மனம் இரண்டாய்ப் பிளந்து, ஒன்றுடன் ஒன்று போராட ஆரம்பித்துவிட்டது கண்ணம்மாளின் சகவாசம் பொல்லாது’ என்று ஒரு குரல் அலறியது. ஆனால், நான் அவளது ஆசை வலையில் சிக்கியதால் நேர்ந்த மதோன்மத்தம், அதை அமுக்கிக் கொன்றது. அதோடு என்ன செய்ய முடியும்! நான்தான் என் வசமேயில்லையே! விளக்கினிடை விட்டிற்பூச்சியாய் அன்றோ எரிந்தேன்!-
“கண்ணம்மாள், தன் ஆசையைக் காண்பிக்க ஆரம்பித்து: விட்டாளானால், அதன் இன்பத்தின் துன்பத்தை ஸஹிக்க முடியாது. அவ்வானந்தமே, பயங்கரமாயிருக்கும். விண் விண்! என்று நெருப்புப்பொறி போன்று அவள் என்னைத் தஹித்தாள்.”
“ஒவ்வொரு இரவும் என்னைக் கண்டால் வருஷக் கணக் காய்ப் பிரிந்து கூடியதுபோல்தான் அவள் என் கழுத்தில் தன் கைகளைக் கோத்து இறுகக் கட்டும் வேகத்தில், எனக்கு மூச்சுத் திணறும். முகத்தோடு முகம் பதித்து, அவள் முத்த மிடும்பொழுது, என் உடலின் இரத்தமெல்லாம், ஒருங்கே மண்டையில் ‘குபீல்’ என்று பாய்ந்து, மூளை குழம்பும். திடீரென்று கீழே உட்கார்ந்து என் கால்களைத் தன் மார்பில் சோர்த்துக் கட்டிக்கொண்டு, ‘நான் மானிடப் பிறவியல்ல, நான் தேவதை – எனக்கு அநேக சக்திகள் உண்டு- ஆனால்நான் உன் அடிமை- நீ என் பர்த்தா-நீ எனக்குச் சொந்தம்… என்றெல்லாம் அவள் பிதற்றுவாள்.
“அவளுடைய மூர்க்கமான வாத்ஸல்யத்தின் வேகத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் திடீ ரென்று இளைக்க ஆரம்பித்தேன். அதுவும் இராத்திரி யெல்லாம் தூக்கம் கிடையாது.
“நான் என் அனுபவங்களைப்பற்றி வீட்டில் சொல்ல. வில்லை; சொல்லவேண்டுமென்றே தோன்றவில்லை. சொன் னாலும் யார் நம்பப்போகிறார்கள்? அம்மாதான் நம்பு QUIT GIT . ஆனால், அவளைப் பயப்படுத்த எனக்கு இஷ்ட மில்லை. அவள் சுபாவமாகவே சற்று கோழை. தவிர, நாலைந்து மாதமாய், ஏதோ வைத்தியத்துக்குப் பிடிபடாத வியாதி அவளைப் பீடித்து, கொஞ்சங் கொஞ்சமாய்த் தின்றுகொண்டிருந்தது…அவளுக்கு வயதாகிவிட்டது… தேற மாட்டோமென்று அவளுக்கும் தெரிந்துவிட்டது. அவ்வளவு தான். தான் போகுமுன், எனக்குக் கலியாணம் செய்து பார்க்க வேண்டுமென்று வீம்பு பிடிக்க ஆரம்பித்துவிட்டாள். கொஞ்ச நாட்களாகவே அவளுடைய மனதிலே ஊறிக் க் கொண்டிருந்த இவ்வெண்ணம், இப்பொழுது முற்றித் தீர் மானமாகிவிட்டது.எனக்குப் பெண்ணும் தேடவேண்டுமா? எங்கள் வீடு கொஞ்சம் பணக்கார வீடு. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அப்புறம் சொல்ல வேண்டுமா?- உன்னை முடித்து வைத்தார்கள்.
“அம்மா காலையில் வார்த்தை சொன்னாள் சாயந் திரம், நிச்சயதாம்பூலமாகி லக்னப் பத்திரிகையும் வாசித்தாகிவிட்டது.
“அன்றிரவு வழக்கம்போல் கண்ணம்மா என்னைக் கூப்பிட்டாள். அச்சமயம், சந்திரன் வளர்பிறையிலிருந்த போதிலும், அந்தப் பன்னிரண்டு மணி வேளையிலே கும்மிருட்டுத்தான். கண்ணம்மாள் என்னை ஓடிவந்து அணைத்தபொழுது. அவள் காதிற் குண்டலமும் மூக்குத்தி யும் பளீர் பளீர் என மின்னின். இன்று அவள் என்றுமில் லாப் பொலிவுடன் விளங்கினாள்.
“இருவரும் கல்லின்மேல் உட்கார்ந்தோம். அவளது ஆசைப் பிதற்றலெல்லாம் ஒருவாறு ஓய்ந்தபின் ஏதோ பேச்சுவாக்கில், வேற்று மனுஷ்யர் – நாலைந்து புருஷர்களும், இரண்டு மூன்று ஸ்திரிகளும் – இந்தப் பக்கமாய்ப் போனார்கள் – வேற்றூர் என நினைக்கின்றேன் என்றாள்.
“ஆம், எங்கள் வீட்டுப் புது சம்பந்தம்” என்றேன்.
“அப்படி என்றால்?-?-”
“அவர்கள் பெண் வீட்டார் – எனக்கு இன்றைக்கு மூன்றாம் நாள் கலியாணம்” என்றேன்.
“ஒரு இரண்டு கணத்துக்கு உலக அந்தியில் மௌனம் -”
“திடீரென்று கண்ணம்மாள் ஒரு சீறு சீறினாள் பார், அசல் சர்ப்பமென்றே நான் பயந்துவிட்டேன். அவளுடைய கண்கள். அந்த இருட்டில், மரகதப் பசுமையாய் மாறுவ தைக் கண்டேன்- கொடிய விஷநாகத்தின் அழகுதான் அவள் அழகு அச்சமயம்.
“மோசம் பண்ணினாயா?” – என்றாள், மெதுவாய் இரண்டே வார்த்தை.
“கண்ணம்மா- இதோ என்னைப் பார்”.
“நான் ஒன்றும் பார்க்கவும் மாட்டேன் கேட்கவும் மாட்டேன் – நீ என் புருஷன் – நீ என்னைத் தொட்டுத் தாலி கட்டினாய் – நீ எனக்குச் சொந்தம். இதோ பார், கட்டிய சரடு என் கழுத்தில் தொங்குகிறது. பார்த்தாயா, பார்த்தாயா?”
“கண்ணம்மா. இதில் அர்த்தமில்லை — நான் நான், நீ-”
கண்ணம்மா பளீர் என்று கல்லின்மேல் ஒரு அறை அறைந்தாள். ஒரு நீல ஜ்வாலை, அவளது விரல் நுனி களினின்றும் புறப்பட்டு, இருட்டில் மின்னென மறைந்தது.
“எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை – என்னைத் தொட்டுத் தாலி கட்டின உன் கையால், இன்னொருத் திக்கும் அதைக் கட்டுவதைப் பார்த்துக் கொண்டிரு என்ன? (அவள் சிரிப்பு புகைந்தது) என்னைக் கண்டு. அதற்குள் சலித்துவிட்டதா? – ராஜா – சொல் அதற்குள் வெறுத்துவிட்டதா?
“எங்கேயோ ஒரு பிரதேசத்தில், அற்புதமான ழகுடன் ஒரு மான் சஞ்சரிக்கிறதாம்; யாராவது வழிப் போக்கர் போனால், வெகு சகஜமாய்ப் பக்கத்தில் வந்து கையை நக்குமாம். அது நக்கும் ஆனந்தம் சொல்லமுடியா தாம். நக்கி நக்கி இரத்தம் பீறிட்டுக்கொண்டேயிருந்த போதிலும், அதன் மாய வலையில் அகப்பட்ட ஆள் உட லெல்லாம் திருப்பித் திருப்பிக் காண்பித்துக்கொண்டே யிருப்பானாம். கடைசியில், அது கையை நக்கி, உடலை நக்கி, சதையை நக்கி, இரத்தத்தை நக்கி, அந்த ஆள் ஒரே மாமிசப் பிண்டமாகி, கொஞ்ச நஞ்சம் துடித்துக்கொண் டிருக்கும் உயிர் ஒருவழியாய்ப் போமளவும், அந்தப் பிண்டம் திருப்பித் திருப்பிக் காண்பித்துக் கொண்டேயிருக்குமாம்…
“அதேமாதிரி தான் இருந்தது கண்ணம்மாளின்மேல் எனக்கு இருந்த உணர்ச்சி. அது வெறுப்போ,விருப்போ..
“கண்ணம்மா இம்மாதிரியெல்லாம் பேசாதே- எங்கம்மா – இன்றைக்கோ நாளைக்கோவென் று அவள் உயிர் ஊசலாடுகிறது – அவளிஷ்டம் இது-”
“நான் உன்னை நம்பி மோசம் போனேன்….உன் மேலிருந்த மோஹத்தில் நான் முழுகியதில், சற்று அயர்ந்து விட்டேன். நீ சமயம் பார்த்து, நழுவப் பார்க்கிறாய்- ஆனால் உனக்குத் தெரியாது நான் யார் என்று– நான் கண்ணம்மா – நான் தேவதை – நான்-“
“அவள் உடலிலும் முகத்திலும் திடீரென்று பாய்ந்த ஒளியை நினைத்தால்- பார், என் உடல் மயிர்க்கூச்செறிகிறது.
“அப்படியானால், என் தாயாரைத் தெளிவி – அவள் வியாதியைப் போக்கிவிடு – இந்தக் கலியாணம் ஒத்திப் போகும்” என்றேன்.
“அவளுடைய முகத்தில் விசனம் நிறைந்தது. அவள் விஷயத்தில் நான் தலையிட முடியாது; அவள் ஆயுள் எல்லையை அடைந்துவிட்டாள். இன்னும் மூன்று நாள் தான் அவளுக்கு-ஆயுளை நீட்ட – என்னால் இயலாது ஆனால் ஒன்று செய்யலாம்” என்று யோசனையுடன் இழுத்தாள்.
“என்ன?-” என்றேன் ஆவலுடன்
“அவளது முகத்தில் குரூரம் பொங்கியது. ஆயுளைக் கொல்லலாம்; அது தன் எல்லையை அடையுமுன், இடையில் அதை ஒடிக்கலாம்- அந்தச் சக்தி எனக்கு உண்டு” என்றாள் கண்ணம்மாள், என் உடல் நடுங்கியது; அம்மாவைக் கொல்லப் போகிறாயா?”
“அவள் சலிப்புடன் புன்னகை புரிந்தாள். அவளைப் பற்றி உனக்குக் கவலையில்லை-என்னை ஏமாற்றிவிட்டு, உன்னையாளக் காத்துக்கொண்டிருக்கிறாளே – அவளை – என்றாள். என் அடிவயிறு சுருண்டது, ‘கண்ணம்மா, கண்ணம்மா-‘
“அவள் சற்று வெறுப்புடன் என்னை நோக்கினாள்; நீ எனக்குச் சொந்தம்” என்றாள்.
“அப்படியானால், என்னைக் கொன்றுவிடு-”
“உன்னைக் கொன்றால் எனக்குப் பிரயோசன மில்லை- உன் உயிர் என்னைச் சேராது- என்னிலும் மேலதிகாரிகளிடம் சென்றுவிடும் – நான் கைம்பெண்ணா வேன் – ராஜா! மோசம் பண்ணினாயே! கண்ணம்மாளின் கண்ணீர் என்மேல் விழுந்தது, என் எலும்பை உருக்கியது.
“ஒரு கணந்தான். மறுபடியும் அகங்காரம் புகுந்து அவளை ஆட்டியது. கிளுக்கென்று வெற்றியுடன் சிரித் தாள் – ” சரி, நீ அவளைக் கலியாணம் பண்ணிக்கொள். ஒருவழியாய் இவ்விஷயமும் தீர்மானமாக வேண்டியது தான் – ஆனால், நீ என்னிடமிருந்து தப்பமாட்டாய். இனி மேல் ரொம்பவும் கண்ணாயிருப்பேன். உன் விஷயத்தில் நீ எங்கே போய் ஒளிந்தாலும் என்னிடமிருந்து தப்பமுடி நீ யாது. உங்கள் இருவருக்கும் சரியான தண்டனை வைத் திருக்கிறேன் – கொன்றுவிடுவதில் சுவாரஸ்யமில்லை- விஷயம் சட்டென்று முடிந்துவிடுகிறது-”
“அவள் மறுபடியும் கலகலவெனச் சிரித்தாள். நான் ன்றும் புரியாமல் திகைப்புடன் நின்றேன். அவள் திடீ ரென்று, என்னை அணைத்து, என் வாயில் ஒரு முத்தமிட்டு என்னைத் தள்ளினாள்.
“ராஜா- இன்றைக்கு ஏழாம் நாள் உன் வாய் அடை பட்டுவிடும். நீ ஒருவருடனும் ஒரு வார்த்தையும் பேசமுடியாது. உன் ஆசை மனைவியுடன் ஒரு வார்த்தையும் ஆட முடியாது. அவளது உயிர்மேல் உனக்கு அக்கறையிருந்தால் அவளைத் தொடவே தொடாதே — அவளை நீ தொட்டதை நான் கண்டால், முதல் தடவை உன்னைத் தண்டிப்பேன்; மறுமுறை அவளையே கொன்றுவிடுவேன்-மறுபடியும் என் ஸ்பரிசம் உன்மேல் படும்வரையில், உன் வாய்ப்பூட்டு திற வாது. கடைசியாய், நீயாக என்னிடம் வரும் வரையில் நான் காத்துக்கொண்டேயிருப்பேன் – எனக்குச் சொந்தமானதை நான் லேசில் விடுகிறவளல்ல -நான் கண்ணம்மா-”
“கண்ணம்மா!” என்று அலறிக்கொண்டே அவளிடம் ஓடினேன். அவள் சிரித்துக்கொண்டே கோவிலுக்குள் புகுந்து மறைந்தாள். நான் துரத்திச் சென்று , கல்லில்தான் மோதிக்கொண்டேன். அவளைக் காணோம். அவளது சிரிப்புத்தான் ஒலித்தது.
“அப்புறம் நடந்த விஷயந்தான் அநேகமாய் உனக்குத் தெரியும். நம்மிருவருக்கும் மணம் முடிந்த அன்று சாயந்திரமே அம்மா இறந்துவிட்டாள். என்மீதுள்ள சாபம் பலிக்கும் வேளை நெருங்கிவிட்டதால், நான் ஊரைவிட்டுப் புறப்பட்டு, உன்னைக் கூட்டிக்கொண்டு இங்கே வந்துவிட்டேன். அப்படியிப்படி ஐந்தாறு மாதமும் கழித்துவிட்டோம். கடைசியில் கண்ணம்மாளே வெற்றி பெற்று விட்டாள்.”
அவன் பேசி முடித்து, சற்று அடங்கினான்.
மழை நிதானமாய் ஊற்றிக்கொண்டிருந்தது! மெழுகு வர்த்தி எரிந்து உருகி அடியில் இறங்கிவிட்டது. கொஞ்ச நேரம் அதையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான்.
“நான் நாளைக் காலை ஊருக்குப் போகிறேன்’ என்றான். கண்ணம்மாவிடம் போகிறேன். இம்மாதிரி வாழ்க்கை நமக்குச் சாத்தியமில்லை. ஒரு சமயம் இல்லா விட்டால், ஒரு சமயம் ஏமாந்துவிடுவோம் – நீ இங்கேயே இருப்பதென்றால் இரு, அல்லது வீடுபோய்ச் சேர்- என் சொத்தெல்லாம் உனக்குத்தான்.”
“அவன் எழுந்து போய், மறுபடியும் ஜன்னலண்டை நின்றான்,பின்புறம் கையைக் கட்டிக்கொண்டு.
“அவள் எழுந்திருக்கவும் சக்தியற்று, உட்கார்ந்த இடத்திலே சுருண்டு கிடந்தாள். அவனுக்கென்ன பைத்தியமா? அவள் இத்தனை நேரம் கேட்டதெல்லாம், அவனுடைய மூளைக்கோளாறின் கற்பனையா?
ஆனால், அந்த அறை?- கண்ணம்மா, அவன் கன்னத் தில், வாயில் இரத்தம் சிதறும்படி அறைந்த அறை? அது நிஜந்தானே?
இம்மாதிரி அவன் தனக்கு எட்டியும் எட்டாமலே இருக்கும் பயங்கரம் அவளுடைய உடலில் ஊற ஆரம்பித்த பொழுது, அவளது உடல்ரத்தம் சுண்டியது.
‘குப்!-‘
மெழுகுவர்த்தி அணைந்துபோயிற்று.
– சக்தி
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |