தேவதைகளின் நல்கை




அவள் குடித்திருக்கிறாள் என்பதை வண்டிக்குள் ஏறிக்கொண்ட கணத்திலேயே உணர்ந்துகொண்டேன். அவளிலிருந்து Baccardia + Caramel லின் கூட்டுக்கந்தம் விட்டுவிட்டுக் கமழ்ந்தது. குடிக்காதவர்களை மட்டுந்தான் ஏற்றிக்கொள்வது என்கிற கோட்பாட்டை டாக்ஸிக்காரர்கள் வைத்துக்கொண்டால் எம்தொழில்முறையில் அது வேலைக்காகாது. அதுவும் வாரவிடுமுறை/விடுமுறை தினங்களில் வரும் வாடிக்கையாளர்களில் செவ்விகிதத்தினர் குடித்துவிட்டே தம் பயணங்களைத் தொடர்வர். குடித்ததனாலேயே டாக்ஸியை நாடுபவர்களுமுண்டாம். சில உற்பாதங்களைச் சகித்தே தீரவேண்டும்.
அதொரு கோடைகாலம், அவளுக்கு முப்பது வயதிருக்கும், நல்ல மொழு மொழுவென்று தசைப்பிடிப்பான தேகம். அதை ஒப்புவிக்கும் கட்டையான களிசானும், மிகையாக சித்திரத்தையல் வேலைகள்செய்த நீளமான வெள்ளை மேற்சட்டையும் அணிந்திருந்தாள். தலையிலிருந்து குரங்குவாலன் பயற்றங்காய்கள்போலச் சிறுகுண்டுமணிகள் சேர்த்துப் பின்னிய பின்னல்கள் பல ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்ணத்தில் தொங்கின. தேகம் முழுவதும் ஹனா வரைந்ததைப்போல பலவர்ணங்களில் Tattoos குத்தியிருந்ததுடன் ராஜஸ்தானத்து நாடோடிப்பெண்களைப்போல நிறைய வெள்ளிநகைகளும் சூடியிருந்தாள். பத்துவிரல்களிலும் விரல்கள்நிறையக் கம்பியுருவிலான மோதிரங்களைக் கொளுவியிருந்தாள். ஹிட்லர் ஜூதருடன் சேர்த்து சிந்தி- ரோம நாடோடிகள் நிறையப்பேரை அழித்துவிட்டிருந்தாலும் இங்கே அவர்களின் சந்ததியினர் இன்னும் பலர் வாழ்கிறார்கள். அவள் பேசுவதற்குப் பிரியப்பட்டவள்போலத் தெரிந்தாள். முதல் உபச்சாரமாக “வொட்கா குப்பியிருக்கு ஒன்று அடிக்கிறியா”வென்றாள் வெகுஇயல்பாய். ஆனால் சம்பிரதாய அரட்டையிற்கூட தெளிவான ஜெர்மன் பேசினாள். ஆக இவள் நாடோடியாக இருக்க வாய்ப்பில்லை.
“அம்மணி…வாகன ஓட்டுனர்கள் பணியின்போது Zero – milli யில் (ஒரு திவலைகூட அருந்தாமல்) இருக்கவேண்டும் என்பது உனக்குத்தெரியாதா” என்றேன்.
“சரி உன்னை யார்தான் சோதிக்கப்போறா……. இஷ்டமில்லேன்னா நான் வற்புத்தல ”
இரண்டு நிமிடங்கள் மௌனமாகக் கழிந்திருக்கும் தன் தோட்பையுக்குள் கையைவிட்டுக்கொண்டே
“உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் ஒரு மிடறை விழுங்கவா……” என்றாள் ஏதோ அதற்குமுதல் மணந்தே பாராதவள்போல.
“தாராளமாக விழுங்கு……அது உன் திரவம், நீ விழுங்கப்போறே……, ஆனால் அளவுக்கதிகமாக ஏற்றிக்கொண்டேயானால் Kumpel Nest டில் (கிளப்) உன்னை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் தெரியுமல்லவா……” என்று லேசாக எச்சரித்தேன்.
“நான் இன்றைக்கு அத்தனை சந்தோஷமாக இருக்கிறேன் மெஸுயு…செக்கியூறிட்டி எவனையாவது கட்டி ‘உம்மா’ கொடுத்தாலொழிய யாரும் கண்டுபிடிக்க மாட்டான்” என்றவள் எனக்குக் கண்ணடிப்பது கண்ணாடியில் தெரிந்தது..மின்னல் வேகத்தில் பச்சைமுட்டை குடிப்பதைப்போல் ஒரு சிறு குப்பியைத் திறந்து வாய்க்குள் கொட்டினாள்.
“இயல்பிலேயே நான் எப்போதும் சந்தோஷமாக இருக்கிற பொண்ணுதான்……… ஆனால் இன்றைக்கு எனக்கு டான்ஸ் ஆடவேணும்போல இருந்திச்சு, அதுதான் புறப்பட்டேன்”
“அம்மணி இன்றைக்கு இத்தனை குஷியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நானும் தெரிஞ்சுக்கலாமா…”
“நிறையவே இருக்கு மெஸுயு……அதில ஒண்ணு……நான் இப்போ விடுமுறையில இருக்கேன்…இரண்டு நான் வாற வியாழக்கிழமை மலாக்காவுக்கு விடுமுறையைக் கழிக்கப் போறேன்”
“தனியாவா……நண்பர்கள் கூடவா…”
“ இப்போ எனக்கு நண்பர்கள் எவருமில்லை ஃப்றீயா ஜொலியா இருக்கேன்”
“ஏன் நீயுங்கூட வாறியா…?”
“அம்மாடியோவ்……எனக்கொரு அழகான மனைவி இருக்கா.”
“அப்ப என்னை அழகில்லே என்கிறே…சரி” என்றவள் அவ்விஷயத்தை மேலே தொடவில்லை.
“மூணாவதா…இன்னிக்கு நகைகள் வித்தவகையில எனக்கு நிறையப் பணம் கிடைச்சுது”
“என்ன உன் நகைகளை விற்றாயா…”
ஜெர்மனியருடன் உரையாடும்போது மற்றவரைப் பிடித்துப்போனால் அடுத்த நிமிஷமே அவர்கள் ஒருமையில் உரையாடத்தொடங்கிவிடுவது இயல்பான விஷயம்.
“ஆமாமா……எமக்கு நாங்க பார்க்கிற தொழிலால அப்பப்போ நிறைய நகைகள் வந்து சேர்ந்திடும்”
‘தொழிலால நகை கிடைக்கும் தொழில்’ என்ன என்பது என்சிறு மூளைக்குப்பிடிபடவே இல்லை. ஊகங்கள் எல்லாம் ஓரளவுக்குமேல் செல்ல மறுத்தன..
“என் தொழில் கொஞ்சம் விநோதமானதுதான், ஆனாலும் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, சந்தேகப்படாதே” என்றாள்.
ஒருவேளை ‘பொருட்பெண்’ என்பாளோ, இருந்தாலும் அவர்களுக்கு எவன்தான் கிரயத்தை நகையாகக் கொடுப்பான்…நான் குழம்பித்தவித்தேன்.
“நகைகள் கிடைக்கக்கூடிய சட்டரீதியான தொழிலும் ஒன்று உலகத்தில இருக்கென்பது இன்றுவரை எனக்குத் தெரியாது மாம்….. “ அவளிடம் நான் சரணாகதியடையவும்………
”Ich bin eine Bestatterin” (நான் ஒரு வெட்டியாள்/Undertaker) என்றாள்.
“இல்லை…… இல்லை…… நீ என்னைச் சும்மாதானும் கலாய்க்கிறாய்………. நானும் 30 வருடங்களுக்கு மேலாய் இந்த ஜெர்மனியில்த்தான் வாழ்கிறேன், ஆண்கள் செய்யும் எல்லாத்தொழில்களுக்கும் போட்டிபோடும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு முறையாவது ஒரு வெட்டியாளைக் கண்டதில்லை. பார்த்த அனைவருமே வெட்டியான்கள்தான்,” (அதாவது ஆண்கள்தான்) என்றேன்.
“நாங்கள் ஆண்களைப்போலச் சீருடை அணிவதில்லை, அதனால உனக்கு வேறுபாடு தெரிந்திராது…இன்னுமொன்று நாங்கள் எந்த இறுதிச் சடங்கிலும் பங்கெடுப்பதுமில்லை”
‘என்ன இறுதிச்சடங்குகளில் பங்கெடுக்காத வெட்டியாளா………’ என்னை அவள் மேலும் குழப்பினாள்.
“அப்போ வெட்டியாளா என்னதான் செய்வீர்களாம்”
“பார்லர்களில் வைத்து இறுதிச்சடங்களுக்கு உடல்களை மணப்பெண்கள் / மாப்பிள்ளைகள்போல அலங்கரித்துத் தயார்ப்படுத்துவது யார் நாமதானே……….. எம் அலங்காரங்களுக்குப் பிறகுதான் அவை தேவாலயங்களுக்கோ கல்லறைகளுக்கோ தகனபீடங்களுக்கோ எடுத்துச்செல்லப்படும். இறந்தவர் பெண்ணாயின் அவர்கள் மரிக்கையில் அணிந்திருக்ககூடிய நகைகள் அனைத்தும் எங்களுக்குத்தான், அவற்றைப்பற்றி, குடும்பத்தினரோ , உறவினரோ மறந்துபோயிருப்பார்கள். அல்லாவிடினும் எமது கொம்பனியுட்பட எவரும் அதற்கு உரிமை கோருவதில்லை. சிலர் தங்கள் இணையர் இருந்தாலும் இறந்தாலும் தம் கல்யாண மோதிரங்களைக் கழற்றுவதில்லை. சிலரது தோடுகள், கொண்டையூசிகள், புறோச்சுகள் வெள்ளியாயிருந்தாலும் அவற்றில் வைரமன்ன ஜாதிக்கற்கள் பதித்திருக்கும், மழை / குளிர்காலத்தில் எண்ணிக்கையில் அதிகமாக மரிக்கும் கிழவிகள்தான் எமக்குச் சௌபாக்கிய தேவதைகள். இறப்பது இளம்பெண்கள் என்றால் இப்பத்தான் இளசுகள் கண்டகண்ட இடங்களில் எல்லாம் வளையங்களை மாட்டுகிறார்களே……” என்றவள் நிறுத்தி என்னை மேற்கண்ணால் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்துவிட்டு. “அவையெல்லாம் நமக்குத்தான்.” என்றாள்.
“இரண்டொரு மாதங்களில் சேகரமாகும் நகைகளை எல்லாம் சேர்த்துவைத்து தங்கம் / வெள்ளி வியாபாரிகளிடம் மொத்தமாக விற்போம். அது வெட்டியாள்களுக்கான வரியற்றதொரு உபரி வருமானம்.”
எனக்கு இறுதி அலங்கரிப்புக்கான பணியாளர்களின் தேவையொன்று இருப்பதுவும் புதிதாக மனதில் உதித்தவேளை, கூடவே வேறொரு தமிழரின் இறுதிச்சடங்கு நிகழ்வும் நினைவுக்கு வந்தது.
இறந்தவரின் பிரியசகி ஊரறிந்தவொரு கஞ்சல் பிசினாறி, அவள் குடிகாரப் பதிக்கு வந்த மாரடைப்பில் திடீரென ஒருநாளில் குடிப்பதையும், மூச்சையும் ஒன்றாக விட்டுவிட்டான். இறுதிநாளில் சுற்றம் கண்ணீர்வராமல் அழுது அந்திமச்சடங்குகள் முடித்து உடல் மண்டபத்தில் மின்தகனத்துக்குத் தயாராக இருந்தவேளை, பிரியசகியோ தன் ஒரே மகனை அழைத்து அவன் காதுக்குள் இரகசியமாகக் கேட்டாள்: “300 இயூரோவுக்கு வாங்கின சூட்டல்லே. மகன்…அநியாயமாய் எரிக்கப்போறாங்கள் அதை மெல்லக் கழற்றியெடுப்பமே மகன்…”
வாயில்விரலைவைத்து ‘உஷ்ஷ்க்………’ என்று அவன்விட்ட ஆவியில் மௌனியாகினாள் சகி. எரிகிறவீட்டில பிடுங்கிறது லாபம், எரிக்கப்படப்போகிற பிணத்திலகூட உடுப்பை உருவிக்கொண்டால் லாபம் என்றெண்ணுகின்ற சகியோட வாழ நேர்ந்தவன் குடிக்காமல் என்ன பண்ணுவான்? இத்தனை பலதரப்பட்ட குணங்களூடைய மானுடர்களையும் கலவையாகத் தாங்கிக்கொண்டு தேமேயென்று உழல்கிற குவலயம்பற்றி என் தலைக்குள் ஓடிய Kopf – Kino வில் (ஒரு தனியனுக்கான சினிமா) நான் சஞ்சரித்திருக்க வேண்டும்.
“நீ பயந்திட்டாய் Alte ” என்று என்னைச் சமகால நிகழ்வுக்கு இழுத்தாள் வெட்டியாள் (Alte இது பரிச்சயமான நண்பர்களையே விளிக்கக்கூடிய ஒரு சொல், நேரிடையாக அதற்குக் ‘கிழவன்’ என்று பொருள்.)
“வேலை உன்னதாம்…அதை நீயே பண்ணுவியாம்……அதில பயப்பட எனக்கு என்ன இருக்கு…”
நினைவுகளின் நீச்சலோடு அவள் போகவிரும்பிய கிளப்பும் வரவும், நான் வண்டியை அதன் வாசலில் நிறுத்தினேன். “இல்லையில்லை………. இதுவல்ல அந்த டிஸ்கோ” என்றாள். “ இல்லை Kumpel Nest கிளப் இதுதான் வேண்டுமென்றால் இறங்கி வாசலில் நிற்கிற இளைஞர் கூட்டத்தில் யரையும் கேட்டுப்பாரேன் ” என்றேன். அவள் வண்டியைவிட்டிறாங்காமலே கைப்பைக்குள்ளிருந்த அலைபேசியை எடுத்து அதில் இலக்கங்களை ஒத்திப்பேசிய பின்னால் “பொறுத்தாற்றுக மெஸூயு…அது Club Sisyphos ஸாம்” என்றாள்.
“இது என் கடமைமுடிகிறநேரம், பரவாயில்லை அது என் வீட்டுக்குப்போகும் வழியிலதான் இருக்கு, நான் உன்னைக் கட்டணமில்லாமலே கொண்டுபோய் அங்கே விடுகிறேன் ” என்று மீட்டரை அணைத்துவிட்டு மீண்டும் வண்டியை உயிர்ப்பித்தேன்.
அந்த Club Sisyphos ஐ அடையவும் “உனக்குத்தான் கடமைமுடிகிறது என்றாயே……அப்போ எங்கூட உள்ளே வந்து கொஞ்சநேரம் ஆடிட்டுத்தான் போயேன்…” என்றாள்.
“நன்றி மாம், எனக்கு ஆட்டம் கொஞ்சங்கூடவராது”
“நான்தான் சொல்லிப்புட்டேனே வெட்டியாளென்று இனி நீ என்கூட எப்படி வந்தாடுவே…” என்றவள் சலிக்கவும் “சொன்னா நம்பணும்……இப்படித்தான் ஒருமுறை, ஒருபெண்கூட வில்லங்கத்துக்குப்போய் ஆடி அவள் காலை நான் மாறிமாறி மிதித்ததில் அவள் இரண்டு பாதஎலும்புகளும் விலகி ஆம்புலன்ஸ் வரவழைச்சாங்கன்னாப்பாரேன்…” என்றேன்.
“நல்லாத்தான் பேசுறே மெஸூயு” என்றவள் கைப்பையிலிருந்து 20 இயூரோ சொச்சமாகியிருந்த ஓட்டத்துக்கு 50 இயூரோவைத்தந்தாள், பழக்கத்தால் கைகள்வாங்கியதை என் வல்லுவத்துள் (பர்ஸ்) வைத்துக்கொண்டன.
என் வாடிக்கையாளர் ஒரு பொருட்பெண்ணாயின் அவள் தரும் வண்டிக்கான கிரயத்துள் அவளது பாடுகளும், சுமைகளும், வலிகளும் இருக்குந்தானேயென்று என் மனம் விசாரம் செய்யும்.
இவள் தந்த 50 இயூரோவுக்குள்ளும் செம்பகுதி யாரோ ஒரு பரதேவதையின் நல்கையில் கிடைத்த வெள்ளியோ தங்கத்தின் அணுக்களும் கலந்திருக்குமல்லவா…என்று என் மனம் வியர்த்தமானதொரு விசாரத்தில் இறங்கவும்…“இந்தா இதையும் சேர்த்து வைச்சுக்கோ Schatz(அன்பே)” என்றபடி சிருங்காரங்கலந்தொரு முத்தத்தைப் பறக்கவிட்டு மானெனெக் குதித்தோடி அந்தக் கிளப்பினுள் மறைந்தாள்…!
– ஞானம் சஞ்சிகை – 25 August 2021