தேடுகிறவர்கள்





(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜமீலா பிளாட்பாரத்தில் கால் தடுக்கி விழுந்து உதட்டிலும், காலிலும் காயம் பட்ட விவரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான் பலராமன்.

‘நல்ல வேளை… நம்ம டாக்டர் ராமராவு ஒரு எம்.பி.பி.எஸ். காரர். ஆதலால் முதல் உதவி செய்ய முடிஞ்சுது…’
ராமாராவும், பிரபாகரனும், அஜீத்தும், மேலே பர்த்தில் அதற்குள் படுத்துக் கொண்டு தூக்கத்தை வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் மோகன்ராவும் பலராமன் நாடகீயமாய்ச் சொல்லும் முறையைக் கேட்பதில் சுவாரஸ்யமாய் ஈடுபட்டிருந்தார்கள்.
இவன் புன்முறுவல் பூத்தபடி, முந்திய நாள் ஹோட்டலில் வைத்து டாக்டர் ராமாராவு சொன்ன அசட்டு ரிஷியும், சிஷ்யையும் கதையை நினைத்துக் கொண்டிருந்தான்.
பிரபாகரன் சொன்னான்:
‘என்னவோ… இந்த ஊருக்கு நாம் வந்த நேரம் சரியில்லை போலிருக்குது… இந்த ரயில் புறப்படுவதுக்கு முந்திய ஐந்து நிமிஷ நேரத்தில் என்னவெல்லாம் களேபரங்கள்… லிக்கருக்குப் பைசா கொடுக்கலைன்னு பார் பையன் வந்து நிக்கிறான்… ஹோட்டல் கணக்கை முடிக்க முதலாளி கூப்பாடு போடு கிறான்… இதுக்கிடையில் இந்த கிரேட்டஸ்ட்ஃபால்… நம்ம ராமதாஸ் எங்கே என் பெட்டி… பிக்கட்ஸ் ஸூட்கேஸ் அப்படீண்ணு ரயிலில் ஒரு கால் பிளாட்பாரத்தில் ஒரு காலாய் நிண்ணுக்கிட்டு சத்தம் போடுகிறார்… இந்தக் களேபரத்திலும் தன் சொந்த வீர தீர பராக்கிரமங்களை அடிக்க வருவதைப்போல் மேல் ஸ்தாயியில் சத்தம் போட்டுச் சொல்லி ஹா… QMIT… என்று சிரிக்கும் மிஸஸ் பரமேஸ்வரி வைத்தியனாதன்… எப்படியோ ரயில் புறப்படும் முந்தி நாம் எல்லோரும் உள்ளே ஏறி விட்டதே பெரிய காரியம்…’
ஷட்டர் எல்லாம் சாத்தியிருந்தும் லேசாகக் குளிர்ந்தது. அஜித் சிகரெட்டைப் பற்றவைத்தான்… மோகன்ராவ் மேலே படுத்தபடி தலையை நீட்டி ‘மணி என்னாச்சு?’ என்று கேட்டார்.
‘ஒன்பதரை… அதுக்குள்ளே தூக்கமா…?’ என்றான் இவன். அவர் பதில் எதுவும் சொல்லாமல் கொட்டாவி விட்டார்.
‘இந்த பஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மென்ட் பூரா நம்ம டீம் தானே…?’ என்று கேட்டான் ராமாராவ்.
‘இல்லை… இது உட்பட நாலு அறைகளில் நம் நண்பர்கள் இருக்கிறாங்க…’
‘பாவம் அந்த கிருஷ்ணசிங்… பஸ்ஸில் வைத்து வழி நெடுக வாந்தியெடுத்துக்கிட்டே வந்தான்… இப்போ நல்ல டெம்பரேச் சர் வேறு இருக்குது… ட்டூரை டிஸ்கன்டின்யூ பண்ணி ஊருக்குத் திரும்பப் போவதாய் சொல்லிக்கிட்டிருக்கிறான். ‘
‘பழக்கம் இல்லாட்டி எதுக்குக் குடிக்கணும்?’ என்று பலராமன் சொன்னபோது, பிரபாகரன் அவசரப்பட்டுக்கொண்டு, ‘சே… அவன் ஒரு ஸிப்கூட குடிச்சிருக்க மாட்டான்… அதுவல்ல காரணம்… அவனுக்கு ஏற்கெனவே சைனஸஸில் ட்ரபிள் உண்டுமாம்… பஸ் யாத்திரை செய்யும்போது இப்படி வந்து விடுமாம்’ என்றான்.
‘அப்படீண்ணு நான் சொல்லலே… நம்ம மேனேஜர் மாடசாமிதான் சொல்லிக்கிட்டிருந்தார்…’ என்றான் பலராமன்.
இப்போது சாத்தியிருந்த கதவின் மறு பக்கத்தில் காரிடாரில் நின்றுகொண்டு கதவில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
‘எஸ்… கம் இன்…’ என்று சொன்னவாறு கதவோரத்தில் இருந்த பிரபாகரன் கதவைத் திறந்தபோது, கையில் நிறைந்த கோப்பை யுடன் பாஷா நின்று கொண்டிருந்தார். முகத்தில் அமுங்கி நிற்கும் புன்னகை… விழிகளில் அந்த ஒளி… பின்னால் தெரியும் ஹபீபின் வழுக்கைத் தலை…
‘வாங்கோ… உள்ளே வாங்கோ…’ என்று எல்லோரும் அவர்கள் இருவரையும் அமர்க்களமாய் வரவேற்றார்கள்.
‘நான் அந்த மாடசாமியைச் சும்மா விடப் போவதில்லை… நான் ஒரு பொயட்; அதோட டாக்டர் வேறு அலோ பண்ணியிருக் கார்… இவன் மட்டும் எப்படிக் குறுக்கே நிக்கலாம்…?’
ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக நிதானமாய், தெளிவாய் அவருக்கே உரித்தான கனவில் பேசும் தோரணையில் சொன்ன வாறு பாஷா உள்ளே நுழைந்து பிரபாகரன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார்.
ஹபீப் தலையைத் தடவியவாறு கண்ணாடிக்குள் குறுகுறுக்கும் விழிகளுடன் ராமாராவும், பலராமனும் உட்கார்ந்திருந்த ஸீட்டில் உட்கார்ந்து கொள்கிறார்.
‘வாஸ்தவம்… வாஸ்தவம்…’ என்று ஆமோதித்தான் பிரபாகரன். அவன் முகத்தில் வந்து விழும் தலை மயிரை மேலே தள்ளியபடி.
பாஷாவின் குரலில் ஏற்ற இறக்கம். அந்த விழிகளின் உள்ளே அமுங்கி நிற்கும் ஒரு ஸ்வப்ன அவஸ்தை… அந்த நிதானம், இவையெல்லாம் இவர் பிறவியிலேயே ஒரு கவிஞர் என்பதை அவனிடம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. அஜீத் திடம் இருந்து ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்து இழுத்தவாறு அவர் வார்த்தை ஒருவிதத் தாள லயத்துடன் பேசும் பாங்கில் இவன் லயித்திருந்தான்.
‘வறண்டு வெடித்த அந்தக் கட்டாந்தரை, பருபருத்த முரட்டுப் பாறையில் செதுக்கி வச்ச சிலைகள்… சீறும் கடல் இவையெல் லாம் ஊக்குவிக்க மகாபலிபுரத்தில் வைத்து ஒரு கவிதை எழுதினேன்’ என்று அவர் சொன்னபோது, ‘ஒங்க அந்தக் கவிதையைச் சொல்லுங்கள்… நாங்க கேட்கிறோம்’ என்றான் இவன்.
‘சொல்லுகிறேன்… ஆனா… உருது உங்களுக்குப் புரியாதே… பரவாயில்லை… ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறேன்… ஆனா அதுக்கு முந்தி இதை என்கூட ஏன் நீங்களும் பங்கு போட்டுக் கொள்ளக்கூடாது?’ என்று விட்டு கையிலிருந்த கோப்பையிலிருந்து ஒரு மடக்கு உறிஞ்சிவிட்டு அதைப் பிரபாகரனிடம் நீட்டினார். பிரபாகரன் ஒரு ஸிப் பானம் செய்து விட்டு, அஜீத்திடம், அஜீத் இவன் கையில், இவன் ஹபீபிடம், ஹபீப் பலராமனிடமும், பலராமன் ராமாராவிடமும், ராமாராவ் மறுபடியும் பாஷாவிடமும் கொடுக்கும்போது கோப்பையில் கொஞ்சம்தான் மீதியிருந்தது. அதையும் காலி பண்ணிவிட்டு மிக மெல்லிய குரலில் அவர் அந்தக் கவிதையை இசைக்கத் தொடங்கினார்.
இவன் விழிகளை மூடி, உதட்டில், தொண்டையில் லேசாய் அனுபவப்பட்ட கசப்பு, சிகரெட் புகை இவைகளின் ஊடே செவிகளில் கேட்ட அந்த வரிகளை அது தனக்குப் புரியாத மொழி என்பதுகூட ஞாபகம் வராமல் அந்தர்முகனாகி விட்டிருந் தான். ஆங்கிலத்தில் கருத்தை மொழிபெயர்த்து விட்டு மறுபடி யும் அவர் கவிதையைத் தாளமல்லாத ஒரு தாளத்தில் இசைக்கத் தொடங்கியபோது அதன் சப்த வீசிகள் இவனைத் தாலாட்டத் தொடங்கியது.
கடலின் இசையில்
லயித்திருந்தேன்…
யாரோ அழைத்தனர்…
திரும்பினேன்…
நீயா…?
ஊஹூம்…
என்னையும்
யாரோ
அழைத்தனர்…
நீயா?
ஊஹூம்…
இப்படியே அந்த வரிகளின் சப்த தாதுக்கள் இவன் நெஞ்சில் நிரம்பியதும் இவன் விம்மினான். ஒரு மூச்சு அழலாம்போல்… இவன் இதயத்தில் அமிர்த தாரையாய்.
யாரோ இவன் பெயரைச் சொல்லி ஒரு கவிதை சொல்லச் சொல்கின்றனர்.
இவனால் வாயைத் திறக்க முடியவில்லை.
இந்நாள் வரை படித்த பாடங்கள், எழுதிய எழுத்துக்கள் எல்லாம் மறந்துபோய் விட்டதுபோல்…
காலம் காலமாய்
யுக யுகாந்திரங்களாய்
சிலையில் கவிதையைக்
குடைந்தவனை
இவன் அகம் தேடிக் கொண்டிருந்தது
திறந்த வெளி ஹோட்டலில் வைத்து இழந்து போன இளமை யைக் குறித்து கவி பாடிய கனக குப்தாவின் ஏக்கக் குரல்….
தன்னைப் பேச வைத்துத் தன் தந்தி பாஷையில் தன் அக ஒளியைத் தரிசிக்க விழையும் சித்ரலேகா ஸ்ரீனிவாசன் ரமணிபாய்…
இவனுக்குத் திடீரென்று ஊர் ஞாபகம் வந்தது… அதோடு க்ஷேத்திராடனத்தின்போது பார்த்த மூலஸ்தானம் மறைக்கும் நந்தியையும்…
– 29.03.1976 – தீபம் 04.09.1976.
– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.